பிரிட்டன் செவிலியர்கள் மறியல் போராட்டத்திலிருந்து பேசுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் ஜனவரி 18 மற்றும் 19 திகதியன்று இங்கிலாந்து முழுவதும் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் போது மறியலில் ஈடுபட்டிருந்த செவிலியர்களிடம் பேசினர். செவிலியர்கள் மற்றும் பிற தேசிய சுகாதார சேவை (NHS) ஊழியர்கள் கடந்த ஏப்ரலில் அரசாங்கம் திணித்த 1,400 பவுண்டுகள் ஊதியத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர், இது சராசரியாக வெறும் 4 சதவிகிதம் மட்டுமே மதிப்புடையது— இது பணவீக்கத்தின் RPI வீதமான 14 சதவீதத்தை விட மிகக் குறைவாகும்.

லண்டன்

லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் நடந்த மறியல் போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜூலி கூறுகையில், ‘’தற்போது நேர்சிங் இறுதியாண்டு படித்து வரும் நான், 20 ஆண்டுகளாக சுகாதார சேவை உதவியாளராக இருக்கிறேன், நல்ல சம்பளத்துடன் இந்த வேலைக்கு செல்ல விரும்புகிறேன். அதனால்தான் இன்று செவிலியர்களின் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறேன். சில நேரங்களில் ஊழியர்கள் NHS க்கு வருகிறார்கள், பின்னர் அவர்கள் அங்கிருந்த வெளியேறி தனியார் அல்லது ஏஜென்சிக்குச் அதிக சம்பளம் பெறுவதற்காக செல்கிறார்கள்’’ 

லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் மறியல் போராட்டம், ஜனவரி 19, 2023

'எனவே இந்த ஊழியர்களை வெளியே சென்று ஏஜென்சி வேலைகள் மற்றும் மேலதிக ஷிப்டுகளை வேறு எங்காவது செய்ய விடுவதற்கு பதிலாக, NHS இல் அதிக சம்பளம் கொடுத்து அவர்களை NHS இல் வைத்திருக்க வேண்டாமா? பின்னர் NHS ஆனது இந்த ஊழியர்களுக்கு அந்த பணத்தை செலுத்த வேறு ஒருவருக்கு (ஒரு ஏஜென்சி) பணம் கொடுக்கிறது - இது கேலிக்குரியது அல்லவா?

'உங்கள் செவிலியர்களை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், செவிலியர்கள் நோயாளிகளை எவ்வாறு கவனித்துக் கொள்ள முடியும்? உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாவிட்டால், நீங்கள் மன அழுத்தத்தில் வேலைக்கு வருவீர்கள், சரியான பராமரிப்பு கொடுக்க முடியாது.”

வேலைநிறுத்தங்களின் போது வணிக செயலாளரால் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வேலைக்கு வர வேண்டும் என்று கோருகின்ற கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் வேலை நிறுத்த எதிர்ப்புச் சட்டங்களின் வரைவு பற்றி கேட்டபோது, 'அவை மக்களின் மனித உரிமைகளை மீறுகின்றன. இந்த வேலை நிறுத்தம் எங்கள் குரலை கேட்க விடுவதாகும். எங்களுக்கு கொடுக்கப்பட்டதை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அரசு எங்களை மிரட்டுகிறது. மக்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதிக்கப்படாவிட்டால், NHS இல் நிலைமை மோசமாக இருக்கும், ஏனெனில் மக்கள் நோய்வாய்ப்படுவார்கள் அல்லது வேலைக்கு வேறு எங்காவது செல்வார்கள்' என்று ஜூலி கூறினார்.

'உயிர்களைக் காப்பாற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள், அரசாங்கம் உங்களைப் பற்றி கவலைப்படவில்லை. கோவிட் பெரும்தொற்றின் போது செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளை பாதுகாப்பு அளித்தனர். இவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.' என்று ஜூலி கூறினார்.

தொழிலாள வர்க்கத்திற்கு அரசு உதவவில்லை. நீங்கள் வேலை செய்கிறீர்கள், உங்கள் செலவுகளை கூட செலுத்த முடியாத நிலை. சிலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. எல்லாத் தொழிற்துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்கின்றன- அதைப்பற்றி என்ன சொல்கிறது?'

சமந்தா மற்றும் அவரது சகாக்கள்

ஒரு செவிலியரான சமந்தா கூறுகையில், 'ஊழியர்களின் நிலை மோசமாக இருப்பதால் நான் இங்கே வந்திருக்கிறேன். ஏழு பேர் இருக்க வேண்டிய வார்டுகளில் சில நாட்களில் செவிலியர்கள் இல்லை. மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நோயாளிகளை யார் கவனித்துக்கொள்வது? '

அரசாங்கத்தின் 4 சதவீத சம்பள சலுகை என்பது 'முகத்தில் அறைவது போல' என்று சமந்தா கூறினார். 'எங்களுக்கு நல்ல சம்பளம் வேண்டும். வேலையின் அளவு இருக்கும்போது, நாம் பெறும் சம்பளத்திற்கு, குறிப்பாக எல்லாவற்றின் விலையும் உயரும் போது யார் அதைச் செய்ய விரும்புவார்கள்?

'வாடகையை எப்படிச் செலுத்தப் போகிறோம் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் பணம் பெறுகிறீர்கள், அது வாடகையை மட்டுமே ஈடுசெய்யக்கூடும், பின்னர் உங்கள் பிற பயன்பாடுகளை ஈடுசெய்ய முயற்சிக்க நீங்கள் மேலதிக ஷிப்டுகளைச் செய்ய வேண்டும். நான் மேலதிக ஷிப்ட் எடுக்க வேண்டியிருந்தது. மேலும் நீங்கள் எவ்வளவு மேலதிக ஷிப்டுகளை எடுக்க வேண்டுமோ, அந்தளவுக்கு முன்னணியில் உள்ள கோவிட் மற்றும் புளூ காய்ச்சலினால் நீங்கள் தாக்கப்படுகிறீர்கள்.'

பரந்த வேலைநிறுத்த அலை பற்றி கேட்டபோது, அவர் பதிலளித்தார், 'அனைவருக்கும் நல்லது, ஏனென்றால் போதும் போதும். பொதுத்துறைக்கு நிதி தேவை. மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு, வெளிப்படையாக நிதி இல்லை என்பது அவமானகரமானது.

'அந்த PPE (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) பணம் எல்லாம் எங்கே போனது என்பதை நான் இன்னும் அறிய விரும்புகிறேன்.' பெருந்தொற்று நோய் முழுவதும் பெரும் பெருநிறுவனங்கள் ஈட்டிய பாரிய இலாபங்களை குறித்து எங்கள் நிருபர் கேட்டபோது, அதற்கு சமந்தா இவ்வாறு பதிலளித்தார், 'ஆனால் தொழிலாளர்கள் அல்ல. அது தொழிலாளர்களைப் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பேசுகிறது. '

'வேலை நிறுத்தம்- எல்லோரும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை என்றால், (பெரு நிறுவன முதலாளிகள்) அவர்களின் ஊதியத்தைப் பெற முடியாது, அவர்களின் ஈவுத்தொகையைப் (dividend) பெற முடியாது.'

மோலி தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர். அவர் தனது சகாக்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவசரகால நோயாளிகளுக்கு சேவை செய்ய அவர் கடமையில் இருக்க வேண்டியிருந்தது.

மோலி, ஜூலி மற்றும் அவர்களின் சகாக்கள்

'நாங்கள் அதிக ஊதியம் பெற வேண்டும் என்பதால் அதற்கான ஆதரவைக் காட்ட நான் இங்கு வந்துள்ளேன். அங்குள்ள செவிலியர் காலியிடங்களின் அளவு, முற்றிலும் பாதுகாப்பற்றது. அதனால்தான், நோயாளிகளின் பாதுகாப்புக்காக நாங்கள் வேலை நிறுத்தம் செய்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களிடம் குறைவான ஊழியர்கள் உள்ளனர். நீங்கள் எப்போதாவது ஒரு மேலதிக ஷிப்ட் எடுக்க வேண்டியிருந்தால், நீங்கள் இரண்டு முறை கேட்க வேண்டியதில்லை. ஒவ்வொரு துறையிலும் காலியிடங்கள் உள்ளன.

அனைத்து தொழிலாளர்களும் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதை மோலி ஆதரித்து இவ்வாறு தெரிவித்தார், 'இது இந்த நிலைக்கு வந்தது வருத்தமளிக்கிறது, ஆனால் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.'

'கொரோனா காலத்தில் இது கடினமாக இருந்தது. ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டனர், இது குறைவான ஊழியர்களுடன் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இது நிச்சயமாக எங்கள் மன ஆரோக்கியத்தை பாதித்தது. நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவருக்கும் இது ஒரு கடினமான நேரம்.

வாழ்க்கைச் செலவு நெருக்கடி எங்களை 'பெருமளவில் பாதிக்கிறது,' என்று அவர் கூறினார், 'இது அனைவரையும் பாதிக்கிறது. இது கடினம். எங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே நாங்கள் கூடுதல் மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

யோர்க்

யோர்க் மருத்துவமனையில் செவிலியர்கள் மறியல் போராட்டம், ஜனவரி 20, 2023

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மைக் 27 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். அவர் 20 ஆண்டுகளாக NHS செவிலியராக பணியாற்றியுள்ளார். வியாழனன்று யோர்க் மருத்துவமனையில் நடந்த மறியல் குறித்து அவர் கூறுகையில், 'யோர்க் இங்கிலாந்தின் மிகவும் விலையுயர்ந்த இடங்களில் ஒன்றாகும்; இங்கு வீடுகளின் விலையேற்றம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதியுள்ள பெரும்பாலான மக்கள் — மருத்துவர்கள், செவிலியர்கள் — யோர்க்கில் வசிக்க முடியாது.'

'நீண்ட காலமாக செவிலியர்களுக்கு முறையற்ற ஊதியம் வழங்கப்படுவதால் அவர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஊதிய உயர்வு,  பணவீக்க விகிதம் மற்றும் மற்ற எல்லாவற்றுடனும் ஒப்பிடும்போது மற்றைய கவுண்டிகளிலுள்ள பிற செவிலியர்களின் விகிதாச்சாரத்தில் அது நடக்கவில்லை.

'செவிலியர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீண்ட கால நோக்கில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், நோயாளிகளை பாதுகாக்க வேண்டும். அதைச் செய்ய உங்களுக்கு ஊழியர் விகித அளவில் தேவை, செவிலியர்களுக்கு பொருத்தமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்'.

'அவர்கள் [அரசாங்கம்] இந்த [NHS நெருக்கடியை] சுகாதார சேவையை தனியார்மயமாக்க பயன்படுத்தலாம். சுகாதார சேவை 1950 களில் நடைமுறைக்கு வந்தது, என்னைப் பொறுத்தவரை இது உலகின் மிகப்பெரிய ஒற்றை கண்டுபிடிப்பு என்று நான் நம்புகிறேன். முழு நாட்டிற்கும் ஒரு சுகாதார சேவையை வழங்குவது மிகவும் லட்சியமானது மற்றும் பெரியது. நான் அமெரிக்கா செல்லும்போது மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து சுகாதார கட்டணம் செலுத்துகிறார்கள்.

யோர்க் மருத்துவமனையில் மறியல் போராட்டத்தில் செவிலியர்கள், ஜனவரி 18, 2023

ஆறு ஆண்டுகளாக செவிலியராக இருக்கும் எம்மா, இரண்டு ஆண்டுகளாக யோர்க்கில் வார்டு செவிலியராக உள்ளார். 'முக்கிய விஷயம் [வேலைநிறுத்தத்தை ஏற்படுத்துகிறது] ஊழியர் பற்றாக்குறையாகும். ஊதியம் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் குறிக்கவில்லை. இது வேலை செய்ய பாதுகாப்பான பணியாளர் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளைப் பற்றியது. இது எப்போதும் சம்பளத்தைப் பற்றியது அல்ல, இது நாங்கள் பணிபுரியும் முழு செயல்முறையாகும். செவிலியர்களை ஈர்க்க இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும்.

'NHS இன் மையப்பகுதி பராமரிப்பாகும். நாங்கள் அன்றாடம் NHS இல் வேலை செய்வதால், NHS ஆனது ஆபத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஊழியர்களின் நிலைமைகள் மற்றும் அதிக ஊழியர்கள் NHS விட்டு வெளியேறுவதால் நிறைய செவிலியர் ஊழியர்களை நியமிப்பது மிகவும் கடினம்.

தனியார் மயமாக்கலுக்கு சாத்தியங்கள் உள்ளது. நான் NHS ஐ நேசிப்பதால் அல்ல, நான் என் வேலையை நேசிப்பதால், எங்களுக்கு அது தேவை. நீங்கள் செல்லும் ஒவ்வொரு சமூகத்திற்கும் இது இன்றியமையாதது, அது மக்களின் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதை மக்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும்.

அனைத்து செவிலியர்களும் இதர தொழிலாளர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று எம்மா கூறினார். பெப்ரவரி 1ம் திகதி சிவில் ஊழியர்கள், புகையிரத சாரதிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் குறித்து அவர் கூறுகையில், 'நாங்கள் ஏன் பெப்ரவரி வேலைநிறுத்தங்களில் ஈடுபடவில்லை என்பது எனக்குத் தெரியாது.'

ரோயல் செவிலியர் கல்லூரி, செவிலியர்களுக்கு முதலில் வழங்கப்பட்ட 19 சதவீத ஊதிய உயர்வுக்கு மாறாக, 10 சதவீத சம்பள ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியது குறித்து எம்மா கூறுகையில், 'பத்தொன்பது சதவீதம் ஒரு நியாயமான கோரிக்கை, கோரிக்கை குறைக்கப்பட்டிருப்பது எமக்கு ஏமாற்றமளிக்கிறது.”

செட்ரிக் மற்றும் எமானுவல் ஆகியோர் ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த செவிலியர்கள் ஆவர். செட்ரிக் கூறினார், 'நாங்கள் இங்கே இருக்கிறோம், ஏனென்றால், உண்மையில் அரசாங்கத்தால் எங்கள் குரல்கள் கேட்கப்பட வேண்டும். எங்களை பாதியில் சந்திக்க அவர்கள் தயாராக இல்லை. ஆகவே, வேலை நிறுத்தத்தை தொடர வேண்டும்.

பார்ன்ஸ்லே

பார்ன்ஸ்லி மருத்துவமனைக்கு வெளியே செவிலியர்கள் மறியலில் ஈடுபடுகிறார்கள், ஜனவரி 19, 2023

'அரசாங்கம் வழிவிடத் தயாராக இல்லை என்றால், நாங்கள் பின்வாங்கத் தயாராக இல்லை. இது சம்பளம் பற்றியது மட்டுமல்ல. பல செவிலியர்கள் NHS ஐ விட்டு வெளியேறுகிறார்கள், செவிலியர்கள் வருவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்' என்று இமானுவேல் கூறினார்.

தொழிற்சங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஆங்காங்கே, பிளவுபட்ட வேலை நிறுத்தங்கள் பற்றி செட்ரிக் கூறினார், 'தொழிற்சங்கங்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக வேலை செய்ய முடிந்தால், அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும், மேலும் அவர்களால் அரசாங்கத்தை சமாளிக்க முடியும்'.

எட்டு ஆண்டுகளாக செவிலியராக இருந்த ரசேல், பார்ன்ஸ்லே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிகிறார். NHS இலுள்ள நெருக்கடியானது 'ஊழியர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். இது ஏமாற்றமளிக்கிறது, ஏனென்றால் நோயாளிகளுக்கு நாங்கள் வழங்க விரும்பும் மற்றும் அவர்களுக்குத் தகுதியான பராமரிப்பு தரத்தை வழங்க முடியாது. 

'நோயாளி பராமரிப்புக்கு எது சரியானது மற்றும் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோமோ, அதற்காக நாம் எழுந்து நிற்க வேண்டிய நிலைக்கு இப்போது வந்துள்ளோம். போதுமான செவிலியர்கள் இல்லாததால் ஊழியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அதன் மறுபக்கம், மிகவும் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள், தொழிலை விட்டு வெளியேறுவதால், அந்த திறமையையும் அனுபவத்தையும் இழந்து வருகிறோம். இந்த வேலையில் புதிய ஊழியர்கள் சேரும்போது, அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லாததால், அவர்களை வளர்க்க முடியாதுள்ளது.

“உணவை மேசையில் வைப்பதற்கும், உணவு வங்கிகளைப் பயன்படுத்துவதற்கும் போராடும் செவிலியர்களை இப்போது நாங்கள் பெற்றுள்ளோம். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் அதிக அழுத்தத்தின் கீழ் அவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்க வேண்டும். நாங்கள் செவிலியர்களுக்கு நியாயமான முறையில் சம்பளம் வழங்கத் தொடங்கினால், இந்த செவிலியர்கள் அனைவரும் NHS ஐ விட்டு வெளியேறுவதை நிறுத்தலாம் மற்றும் அவர்களின் திறன் மற்றும் அனுபவத்தை இழப்பதையும் நிறுத்தலாம்’’ என்று அவர் கூறினார்.