ரஷ்யா மீதான நேட்டோ போரை அதிகரிக்க பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து பாரிஸில் உச்சிமாநாட்டை நடத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூன் 12 அன்று, போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா, ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் பற்றிய உச்சிமாநாட்டிற்காக பாரிஸில் சந்தித்தனர். நேட்டோ கூட்டணியின் 74 ஆண்டுகால வரலாற்றில், நூற்றுக்கணக்கான போர்விமானங்களுடன் உக்ரேனில் இருந்து ஐரோப்பா முழுவதும் பரவி வரும் ரஷ்யாவுடனான போரை உருவகப்படுத்தி, மிகப்பெரிய வான்வழி போர் ஒத்திகையை நேட்டோ துவக்கியபோது, இவர்களது சந்திப்பு பாரிசில் நடந்துள்ளது. 

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா, இடதுபுறம், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், மையம் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஜூன் 12, 2023 திங்கட்கிழமை பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் [AP Photo/Sarah Meyssonnier]

டுடா, ஷோல்ஸ் மற்றும் மக்ரோன் ஆகியோரின் சந்திப்பு, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரை அதிர்ச்சியூட்டும் வகையில், விரிவாக்குவதற்கான அதன் திட்டங்களுடன் முழுமையாக இணைந்துள்ளது. ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், அவர்கள் ஒரு பெரிய அணு ஆயுத நாடான ரஷ்யாவுடன் முழுமையான போருக்கு வழிவகுக்கும் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். அத்துடன், உக்ரேன் நேட்டோவில் சேர்வதற்கு அழைப்பு விடுத்த அவர்கள், ரஷ்யா நிரந்தரமாக நிராயுதபாணியாக்கப்பட்டு, எந்த அண்டை நாட்டுக்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலாயக்கற்றதாக ஆக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஜூன் 29-30 ஐரோப்பிய கவுன்சில் உச்சிமாநாடு மற்றும் வில்னியஸில் ஜூலை 11-12 நேட்டோ உச்சிமாநாட்டிற்கு தயாராக இருப்பதாக விளக்கிய மக்ரோன், செய்தியாளர் மாநாட்டை அறிமுகப்படுத்தி வைத்தார். ரஷ்ய படையெடுப்பால் 'உக்ரேனை வெற்றிகொள்ள முடியாது' என்று எதிர்வு கூறிய மக்ரோன், ‘‘இந்த துரதிர்ஷ்டவசமான முயற்சியிலிருந்து ரஷ்யா வெற்றிபெறாது என்பதை மட்டும் உறுதி செய்வோம், ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்ய முடியாது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான போர் ஐரோப்பாவை மறுசீரமைப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஷோல்ஸ் வாதிட்டார். 'உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு நமது காலத்தின் மத்திய வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினையாக உள்ளது. மேலும் அது, இன்று நமது சந்திப்பின் மையக் கருப்பொருளாகவும் இருக்கும். ரஷ்யப் போரால் குறிப்பிடப்படும் திருப்புமுனை ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நமக்கு விளைவுகளை ஏற்படுத்தும். பூகோள அரசியலில், நாம் இன்னும் கூடுதலான ஒன்றுபட்ட, இன்னும் வலிமையான மற்றும் இறையாண்மை கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவோம்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

உக்ரேனியப் படைகளுக்கு கவச வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதாக மக்ரோன் உறுதியளித்த பிறகு, ஷோல்ஸ் இவற்றுடன் சேர்த்து பீரங்கி மற்றும் வான் பாதுகாப்புப் பிரிவுகளையும் உக்ரோனுக்கு வழங்க உறுதியளித்தார்.

போலந்தின் அதிதீவிர வலதுசாரி ஜனாதிபதிதான் இந்தக் கொள்கையின் தாக்கங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யாவை நசுக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கூட்டணி என்று வரையறுத்தார். ‘‘ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை என்னவென்றால், ரஷ்ய ஏகாதிபத்தியம் நசுக்கப்பட வேண்டும் என்பதாகும். இது, இதர அரசுகளின் செல்வத்திற்கு அல்லது அவர்களின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், ரஷ்யாவிற்கு மற்றொரு அரசை தாக்கும் அல்லது அதன் செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்தும் சாத்தியத்தை இல்லாமல் ஆக்குகிறது’’ என்று குறிப்பிட்டார்.

போலந்து, உக்ரேனுக்குள் நேரடியான நேட்டோ இராணுவத் தலையீட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் பெலாரஸுடன் மோதலாம் என்ற பெருகிவரும் ஊகங்களுக்கு மத்தியில், ரஷ்யாவை நசுக்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியக் கொள்கை, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது என்பதை டுடா தெளிவுபடுத்தினார். ‘’அணு ஆயுதங்களுடன் கூடிய ரஷ்ய அணு ஏவுகணைகள் பெலாரஸுக்கு அனுப்பப்படும். இது ஜூலையில் நடக்க இருக்கிறது. ஆகவே இந்த நடவடிக்கை, ஒரு தெளிவான நேட்டோ பதிலடிக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன், மேலும் இது மக்ரோன் மற்றும் ஷோல்ஸ் உடனான எனது பேச்சுக்களில் நான் விவாதிக்கும் மற்றொரு விஷயமாகும்' என்று டுடா தெரிவித்தார்.

கியேவில் நேட்டோ-சார்பு ஆட்சிக்கு எதிராக, இப்போது ரஷ்யப் படைகளால் பிடிக்கப்பட்டுள்ள கிரிமியா போன்ற உக்ரேனின் அனைத்து ரஷ்ய மொழி பேசும் பகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற டுடா அழைப்பு விடுத்தார். ‘‘எனது பார்வையில், வெற்றி என்பது ரஷ்ய இராணுவப் படைகள் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும், சர்வதேச சட்டத்தால் உக்ரேனிய பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உக்ரேனிய பிரதேசங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் என்பதைக் குறிக்கும். … ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நேட்டோவில் உக்ரேனின் எதிர்கால உறுப்பினருக்கான யதார்த்தமான முன்னோக்குகளை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி இங்கு பேசுவோம்’’ என்று டுடா தெரிவித்தார்.

டுடா, ஷோல்ஸ் மற்றும் மக்ரோன் ஆகியோரின் போர்வெறியின், தற்கொலைக்கு ஒப்பான பொறுப்பற்ற தன்மையானது, முழு நிகழ்விலும் தொங்கிக் கொண்டிருக்கும் உண்மையின்மை என்ற நச்சுக் காற்றில் மட்டுமே பொருந்தியுள்ளது. அங்கிருந்த ஊடகவியலாளர்களில் எவரும், இந்த அரச தலைவர்களிடம், அவர்களின் அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளால் எழுப்பப்பட்ட வெளிப்படையான பிரச்சனைகள்பற்றிய கேள்விகளைக் கேட்க துணியவில்லை. குறிப்பாக, ரஷ்யாவுடனான போருக்கான இந்த தலைவர்களின் திட்டங்கள் என்ன ? அத்தகைய போரில் எத்தனை மில்லியன் மக்கள் இறப்பார்கள் என்பதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்ற கேள்விகள் முக்கியமானவைகளாகும்.

நேட்டோ உக்ரேனை இணைத்துக் கொண்டால், போலந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளையும் ரஷ்யாவுக்கு எதிராக போருக்குச் செல்லுமாறு, நேட்டோ உடன்படிக்கையின் பிரிவு 5 ஐ, உக்ரோன் செயல்படுத்த முடியும். ரஷ்யாவை நசுக்குவதற்கான போராக நேட்டோ சக்திகளால் நடத்தப்படும், உலகின் முக்கிய அணுசக்தி நாடுகளுக்கு இடையேயான இத்தகைய போர், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டினால் நிறுத்தப்படாவிட்டால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் போருக்கு தவிர்க்க முடியாமல் இட்டுச் செல்லும்.

உண்மையில், பெலாரஸில் அணு ஆயுதங்களை புட்டின் நிலைநிறுத்துவதற்கு எதிராக, நேட்டோவின் பதிலடி தாக்குதலுக்கு டுடாவின் அழைப்பு, மிகவும் பயங்கரமான கேள்விகளை எழுப்புகிறது. பாரிஸ் உச்சிமாநாட்டில், ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த, பிரான்ஸ் அனுமதிக்கும் என்று மக்ரோன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டுடா கோரினாரா? மக்ரோன் இந்த உத்தரவாதங்களை அவருக்கு அளித்தாரா ? மேலும் நேட்டோவில் உள்ள மற்ற அணு ஆயுத சக்திகளான அமெரிக்காவும் பிரிட்டனும் அவ்வாறு செய்தனவா?

டுடா கோரிய உத்தரவாதங்களின் அடிப்படையில் ஒரு அணு ஆயுத யுத்தம் தொடங்கினால், மக்கள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை பற்றி பிரெஞ்சு மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பை மக்ரோன் உணர்ந்தாரா ? ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வாஷிங்டன் அணுகுண்டுகளை வீசிய 78 ஆண்டுகளில், ரஷ்ய மற்றும் நேட்டோ நாடுகளின் அணு ஆயுதங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக வளர்ந்துள்ளன. 50 மில்லியன் தொன் டி.என்.டி சக்தியுடன் வெடிக்கும் 12 வெடிகுண்டு ஏவுகணை காவிகளுடன் கூடிய ஒரு ரஷ்ய ஆர்.எஸ்-28 சர்மட் ஏவுகணை, ஐரோப்பாவின் பரப்பளவில் மிகப்பெரிய நாடான பிரான்ஸ் அளவுள்ள மேற்பரப்பில் ஒட்டுமொத்தமாக மனித உயிர்களையும் துவம்சம் செய்ய போதுமானதாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய அரசாங்கங்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகளால் இத்தகைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பது முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டின் உலகப் போர்களைப் போலவே ஒரு நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. அத்துடன், உக்ரேனில் ரஷ்யாவை நசுக்கும் போரை ஐரோப்பிய ஒன்றியம் தழுவியிருப்பது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு பின்பு, கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததின் பிற்போக்குத்தனமான தாக்கங்களின் நச்சு வெளிப்பாடாகும்.

உண்மையில், ரஷ்யாவை நசுக்கி, அதனை நிரந்தரமாக நிராயுதபாணியாக்குவதற்கான அழைப்பைபற்றி டுடா குறிப்பிடுகையில், ‘‘இன்றைய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று, 1989ல் இரும்புத்திரை விழுந்தபோது, வளர்ந்த ஒரு துருவமாக இதை சொல்கிறேன். நமது மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்கு நன்றி, கம்யூனிசத்தை தோற்கடித்த நாங்கள், அந்த நேரத்தில் போலந்து மக்களின் விருப்பத்தை உணர்ந்தோம். நாங்கள் ஜனநாயக நாடுகளின் சமூகத்தின் உறுப்பினர்களானோம், மேற்கத்திய நாடுகளுடன் நாங்கள் எப்போதும் கலாச்சார ரீதியாக சேர்ந்தோம். ஆனால், பின்னர் நாங்கள் அரசியல் ரீதியாக மேற்குலகில் இணைந்தோம். இப்போது, ​​உக்ரேனியர்களும் அதையே விரும்புகிறார்கள்’’ என்று டுடா கூறினார்.  

இது ஒரு பிற்போக்கு அரசியல் விசித்திரக் கதையாகும். முதலாவதாக, 1989 இல் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தது போலந்து ஸ்ராலினிச ஆட்சியை ஊக்குவிப்பதற்காக அல்ல. மாறாக, ஒரு சிறிய அதி-செல்வந்த முதலாளித்துவ தன்னலக்குழுவைக் கட்டியெழுப்புவதற்காக, கம்யூனிசத்தை தோற்கடிக்க விடுக்கப்பட்ட அழைப்பாகும். ஆகவே, ரஷ்யாவிற்கு எதிராக ஒரு முழுமையான போருக்கு, 1989ல் போலந்து தொழிலாளர்களிடையே பரவலான ஆதரவு இருந்திருக்கவில்லை. இருப்பினும், மேற்கு ஐரோப்பாவையும் நேட்டோவையும் 'ஜனநாயகம்' என்று டுடா புகழ் பாடுவது, கடந்த 34 ஆண்டுகளில் அவற்றின் பரிணாம வளர்ச்சியால் முற்றிலும் முரண்படுகிறது.

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, மாலி போன்ற நாடுகளில் ஆக்கிரமிப்பு அல்லது ஆட்சி மாற்றத்திற்கான போர்களை நடத்தி, அதற்கு அப்பால் மில்லியன் கணக்கான உயிர்களை படுகொலை செய்துள்ளன. அத்தோடு இதே சக்திகள், டிரில்லியன் கணக்கான டொலர்கள் மற்றும் யூரோக்களை இந்தப் போர்களுக்கும், மீண்டும் மீண்டும் முதலீட்டு வர்க்கங்களின் வங்கிப் பிணை எடுப்புகளுக்கும் கொட்டியதுடன், சமூக சமத்துவமின்மையை ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் ஒத்துப்போகாத நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.

உக்ரேனின் நேட்டோ கைப்பொம்மை ஆட்சியானது, 2014 இல் கியேவில் நேட்டோ ஆதரவு ஆட்சி கவிழ்ப்பில் நிறுவப்பட்ட ஜனநாயகமற்ற ஆட்சியாகும். இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் தோற்கடிக்கப்பட்ட நாஜி மற்றும் ஐரோப்பா கண்டத்தின் கூட்டு முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இடையேயான கூட்டணியில் நேட்டோவின் வரலாற்று தோற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்த ஆட்சியானது, நாசிசத்துடன் உக்ரேனிய ஒத்துழைப்பில் இருந்து வந்த அதிதீவிர வலதுசாரி தேசியவாத ஆயுதக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இது நூறாயிரக்கணக்கான உக்ரேனிய துருப்புக்களை போர் முனையில் கொல்வதற்கு அனுப்புகிறது, அரசியல் கட்சிகளை தடை செய்கிறது, பத்திரிகையாளர்களை சிறையில் அடைக்கிறது, ரஷ்ய மற்றும் பிற சிறுபான்மை மொழிகள் பேசுபவர்களை துன்புறுத்துகிறது.

கம்யூனிசத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு ரஷ்யாவிற்கு எதிரான போரை டுடா பாராட்டுகிறார் என்பது, தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் போருடன், இந்தப் போர் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வசந்த காலத்தில் ஓய்வூதியங்களை குறைப்பதன் மூலம் பிரெஞ்சு இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு 126 பில்லியன் யூரோக்களை திரட்டும் மக்ரோனின் முடிவு, பெரும் மக்கள் எதிர்ப்பையும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களையும் மீறி, இந்தக் கருத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நேட்டோ சக்திகள், மக்களின் விருப்பத்தையும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களையும் காலில்போட்டு மிதித்து ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்துகிறது.

ருமேனியாவில் பாரிய ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள், செக் குடியரசு மற்றும் போர்த்துக்கலில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், ஜேர்மனி மற்றும் பிரிட்டனில் பணவீக்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களுடன், பிரான்சிற்கு அப்பால் ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா, உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர்கள் இயக்கத்தில் அணிதிரண்டு, இந்தப் போரை நிறுத்துவதற்கான சக்திகளாக இருக்கின்றனர். அத்தகைய இயக்கம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மரபுகளின் அடிப்படையில் மட்டுமே போராட்டத்தை தொடர முடியும். ஐரோப்பாவையும் உலகையும் மற்றொரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான சமரசமற்ற சர்வதேச போராட்டம் அவசியமானதாகும்.