பழமைவாத, புதிய ஜனநாயக கட்சி பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில், கிரேக்கத்தில் சிரிசா மேலும் வலது பக்கம் நகர்கிறது 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

25 யூன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்ற கிரேக்கத்தின் இரண்டாவது சுற்று பொதுத் தேர்தலில், பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சி (ND) வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதம் நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில், சிரிசாவை விட (தீவிர இடதுசாரிகளின் கூட்டணி) 20 சதவீத வாக்கு வித்தியாசத்தில் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்ற போதிலும், பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் கட்சி 300 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்த பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களையே பெற்றிருந்தது.

இடமிருந்து வலமாக சிரிசா-முற்போக்குக் கூட்டணித் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ், கிரேக்கத்துக்கான தீர்வு என்ற கட்சியின் தலைவர் கிரியாகோஸ் வெலோபௌலோஸ் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோர் மே 24, 2023 புதன்கிழமை அன்று ஏதென்ஸில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினர். மே 21 தேர்தலில் முதல் மூன்று கட்சிகளின் தலைவர்கள் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று கூறி, ஆட்சி அமைப்பதற்கான ஆணையை திருப்பி அளித்தனர். [AP Photo/Thanassis Stavrakis]

இரண்டாவது சுற்றுத் தேர்தலில், புதிய ஜனநாயகக் கட்சி இதேபோன்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதன் முன்னிலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கருத்துக் கணிப்புகளில், சராசரியாக புதிய ஜனநாயகக் கட்சிக்கு 42 சதவீதமும், சிரிசாவுக்கு 20 சதவீதமும் உள்ளது. ஒரு நெகிழ் அளவிலான இருக்கை போனஸுடன் அரை விகிதாசார பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வரவிருக்கும் சுற்றில் புதிய ஜனநாயகக் கட்சி முதல் இடத்தைப் பிடித்தால், அதற்கு 50 கூடுதல் இடங்கள் வரை ஒதுக்கப்படும்.

அடுத்த பாராளுமன்றத்தில் புதிய ஜனநாயகக் கட்சி 155-166 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கூட்டணி பங்காளிகளின் தேவை இல்லாமல் மிட்சோடாகிஸ் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்கிறது. இந்தச் சுற்றில் புதிய ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இடங்களை உறுதிப்படுத்தவில்லை என்றால், மிட்சோடாகிஸ் தான் ஒரு கூட்டணியை அமைக்க முயலமாட்டேன் என்றும், அதற்குப் பதிலாக ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் மூன்றாவது சுற்று வாக்கெடுப்புக்கு அனுமதி அளிப்பதாகவும் கூறினார்.

டெம்பி பள்ளத்தாக்கு ரயில் விபத்தில் 57 பேரின் தடுக்கக்கூடிய மரணங்கள் குறித்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் உணரப்பட்ட பரவலான சீற்றத்தின் காரணமாக அரசாங்கம் மே மாதம் நடக்கவிருந்த தேர்தலை ஒரு மாதம் தாமதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிகழ்வை அரசியல் மூலதனமாக மாற்ற சிரிசா முயன்ற போதும், நாற்றமடைந்த இந்தக் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி போன்று இரயில் போக்குவரத்து வலையமைப்பில் பாதுகாப்பின் தரத்தை சீர்குலைத்ததில் சம்பந்தப்பட்டது என்பதை மக்கள் அறிந்திருந்ததால் தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

உண்மையில், சிரிசா தான் 2017 ஆம் ஆண்டில் பொது இரயில் அமைப்பை விற்றது. அது, முந்தைய ஆண்டுகளில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாக வைத்திருந்ததோடு, அடிமாட்டு விலையில் வாங்கிய லாபம் ஈட்டுபவர்களுக்கு இந்த ஒப்பந்தத்தை முடிந்தவரை லாபகரமாக மாற்றியது.

சமூக நெருக்கடி மிகவும் கடுமையாக இருக்கும் கிரேக்கத்தின் அரசாங்கம் மிகவும் மிருகத்தனமான இருக்கிறது. ஜூன் 14 அன்று கிரேக்கத்தின் கடல் பகுதியில், கூட்ட நெரிசல் மிகுந்த படகில் 500 அகதிகளுக்கு மேல் நடந்த மற்றொரு பாரிய மரணங்கள், இந்த தேர்தல் சுற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 14, 2023 புதன்கிழமை அன்று, கிரேக்க கடலோரக் காவல் படை வழங்கிய கையேடு படம், தெற்கு கிரேக்கத்தில் மூழ்கிய மீன்பிடி படகின் ஒவ்வொரு தளத்திலும் கிட்டத்தட்ட மக்கள் நிறைத்திருப்பதைக் காட்டுகிறது. ஐரோப்பாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இந்த மீன்பிடிப் படகு புதன்கிழமை கிரேக்க கடல் பகுதியில் மூழ்கியது, இந்த ஆண்டு நடந்த இந்த மோசமான பேரழிவில் குறைந்தது 79 பேர் இறந்தனர் மற்றும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். [AP Photo/Hellenic Coast Guard via AP]

இந்த குற்றத்தில் கிரேக்க கடலோரக் காவல்படையின் குற்றத்தை சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில், அரசாங்கம் இதுபற்றி கிட்டத்தட்ட எந்த தகவலையும் வெளியிடவில்லை. (இதர அகதிகளின் வருகையை தடுப்பதற்காக கடலோரக் காவல்படையினரால் படகு மூழ்கடிக்கப்பட்டதாக, உயிர் பிழைத்த சிலர் கூறியுள்ளனர்) தப்பிப்பிழைத்த 104 பேரின் பெயர்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால், கடலில் இருந்து மீட்கப்பட்ட 80 உடல்களில் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

சுற்று வேலியிடப்பட்ட வளாகத்திற்குள் அடைக்கப்பட்டுள்ள உயிர் தப்பியவர்கள் முதலில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான அணுகலுடன் விடப்பட்டனர். ஸ்பெயின் நாளிதழான El Pais இந்த வாரம் கடலோரக் காவல் படைத் தளபதி, ''உயிர்பிழைத்தவர்கள், கப்பல் விபத்துக்குள்ளானவர்களுக்கான உதவி மையத்தை விட, சிறையின் பொதுவான வரம்புகளுக்கு'' ஏன் உட்படுத்தப்பட்டனர் என்பதை தெளிவுபடுத்தவில்லை என்று குறிப்பிட்டது. அகதிகள் இப்போது ஏதென்ஸுக்கு அருகிலுள்ள தடுப்பு முகாமில் இதேபோன்ற அடக்குமுறை நிலைமைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான அகதிகளின் மரணம் வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டியது, (கடந்த தசாப்தத்தில் மத்தியதரைக் கடலில் இறந்த ஆயிரக்கணக்கானவர்களில் சமீபத்திய சம்பவம்) பல்லாயிரக்கணக்கானோர் ஏதென்ஸ் மற்றும் நாட்டிலுள்ள 20 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிரேக்க கடலோரக் காவல்படையைக் கண்டிக்கும் பதாகைகளில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் புரான்டெக்ஸ் எல்லைப் பாதுகாப்புப் படையை 'கொலையாளிகள்' என்று எழுதி வைத்திருந்தனர்.

சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் கலாமாட்டாவிற்கு வருகை தந்து உயிர் பிழைத்தவர்களிடம் பேசுவதன் மூலம், அவர் மீண்டும் இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயன்றார். பாராளுமன்றத்தில் இறந்தவர்களைப் பற்றி பேசும்போது, அவர் மேலும் முதலைக் கண்ணீர் வடித்தார்.

ரயில் விபத்து மரணங்களைப் போலவே, 2015 முதல் 2019 வரை சிரிசா ஆட்சியில் இருந்தபோது, அதன் ஐரோப்பிய கோட்டையின் தலைமை சிறைக் காவலராக வகித்த சிரிசாவின் பாத்திரம் மற்றும் குடியேற்றத்திற்கான அதன் எதிர்ப்பு நிலை போன்றவற்றால், சிப்ராஸ்சின் இந்த மோசடி நடவடிக்கைகயை யாரும் பொருட்படுத்தவில்லை.

அதன் குடியேற்ற எதிர்ப்புத் நிகழ்ச்சி நிரலை இரட்டிப்பாக்குவதன் மூலம், புதிய ஜனநாயகக் கட்சி அரசாங்கம், சிரிசா செய்த கேவலமான வேலையைத் தொடர்கிறது. துருக்கியுடனான கிரேக்கத்தின் 192 கிமீ எல்லையின் கிட்டத்தட்ட முழு நீளத்தையும் மறைப்பதற்கு ஐந்து மீட்டர் உயரமுள்ள இரும்பு வேலியை நீளமாக்குவதற்கான உறுதிமொழியை மிட்சோடாகிஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைத்துள்ளார், 2026 ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 கி.மீ நீட்டிப்பதற்கு ஒப்பந்தம் செய்வதாக உறுதியளித்தார். இது முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்படும் என்று தான் நம்புவதாக ஒரு பிரச்சார பேரணியில் கூறிய பிரதமர், ஆனால் ‘‘Evros இல் அமைக்கப்படும் வேலி ஐரோப்பிய பணத்துடன் அல்லது இல்லாமலேயே முடிக்கப்படும்’’ என்று கூறினார்.

சிரிசா மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவை ஒரே எல்லை மூடல் கொள்கையைப் பகிர்ந்து கொள்கின்றன. சிரிசாவிடம் மிட்சோடாகிஸ் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், ‘‘நாம் ஏற்கனவே கட்டிய சுவரை இடிப்பார்களா? மற்றும் திறந்த எல்லைக் கொள்கைக்கு திரும்புவார்களா? அல்லது அவர்கள் அதைக் காப்பாற்றி  கிரேக்கத்தின் எல்லைகளைப் பாதுகாக்க உதவுவார்களா? இந்தக் கேள்விகளுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சிரிசாவின் துணைத் தலைவர் டிமிட்ரிஸ் பாபாடிமௌலிஸ் பதிலளித்தார்: ‘‘நாங்கள் எதையும் இடிக்கப் போவதில்லை... மேலும் இரவு நேரத்தில் பார்க்கும் கேமராக்கள் மற்றும் கடலோரக் காவல் கப்பல்கள் போன்ற எல்லைப் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியை பெறுவதை நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

2015ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு உணர்வுக்கு சிரிசா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது. ஆட்சிக்கு வந்த பின்பு அதன் வாக்குறுதிகளை கைவிட்டு, தான் மாற்றியமைத்த அரசாங்கங்களை விடவும் கூடுதலான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்திய பின்னர், கட்சி தனது அதிகாரத்திற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றிய எந்த ஒரு பொது விவாதத்தையும் கூட அனுமதிக்க மறுத்தது.

தேர்தல் இறுதிச் சுற்றுக்கு முந்தைய வாரங்களில், பழமைவாத கிரேக்க நாளிதழான கதிமெரினி பின்வருமாறு அறிவித்தது: ''2012 மற்றும் 2015 க்கு இடையில் சிரிசாவின் கொந்தளிப்பான காலகட்டத்துடன் தொடர்புடைய அனைத்து பணியாளர்களும் கட்சியின் தலைவரால் [சிப்ராஸ்} மற்றும் அதன் பத்திரிகை அலுவலகத்தால் ஒரு குறிப்பிட்ட  விசாரணைக்கு உட்பட்டுள்ளனர். கட்சியின் முன் அனுமதி இல்லாமல் அவர்கள் ஊடகங்களில் தோன்ற முடியாது''. மே மாதம் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்த மையவாத பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் முயற்சியில் இது அவசியம் என்று அந்த பத்திரிகை கூறியது.

இந்தத் தொகுதியில், குறிப்பாக வலதுசாரி சிக்கனச் சார்பு சமூக ஜனநாயக PASOK கட்சியின் வாக்காளர்களுக்கு அழைப்புவிடுக்கும் முந்தைய முயற்சியில், (எதிர்காலத்தில் அவர்களுடன் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு) சிரிசா 2019 இல் தீவிர இடது-முற்போக்குக் கூட்டமைப்பின், கூட்டணி என்று அதன் பெயரை மாற்றியது.

மே மாதம் நடந்த தேர்தலில் சிப்ராஸ் தனது கட்சியின் தோல்விக்கு மற்றொரு படி வலதுபுறத்திலிருந்து பதிலடி கொடுத்தார். கம்யூனிச எதிர்ப்பு அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியருமான நிகோஸ் மரான்சிடிஸ், ஜூன் மாத வாக்கெடுப்புக்கு சிரிசாவின் தகவல் தொடர்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். மரான்சிடிஸ் முன்னர் முதலாளித்துவ சார்பு, ஐரோப்பிய ஒன்றிய-ஆதரவு பொடாமி (The River) கட்சியின் ஆதரவாளராக இருந்ததோடு, கிரேக்கத்தில் வலதுசாரி வரலாற்றாசிரியர்களின் போக்கில் முன்னணி நபராக இருந்தார்.  

வரவிருக்கும் தேர்தல்களில் பல எதிரிகள் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கின்றனர். கிரேக்கத்தில் தொழிலாளர் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் மாற்று எதுவும் இல்லாததால், மேலும் நான்கு ஆண்டுகள் அதிகாரத்தில் பரவலாக வெறுப்புக்குள்ளான புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சியை அமைக்கிறது. கடந்த தசாப்தத்தில் சிரிசாவின் துரோகங்கள் மற்றும் கூர்மையான வலதுசாரி மாற்றத்தின் விளைவாக, மே மாத தேர்தல்களில் புதிய ஜனநாயகக் கட்சி அனைத்து மக்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்கு முடிந்தது.

கிரேக்கத்தில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் (2019 மற்றும் இந்த ஆண்டு மே) 40 சதவீதமான வாக்காளர்கள் வெறுப்புடன் வாக்களிக்கவில்லை. ஆனால், அரசியல் உயரடுக்கின் குற்றங்களுக்கு எதிரான எதிர்ப்பின் அளவு எதுவாக இருந்தாலும், (டெம்பி மரணங்கள் மற்றும் அகதிகள் பெருமளவில் நீரில் மூழ்கியதற்கு காரணமான கொலைகாரக் கொள்கைகள் மீதான வெறுப்பில் வெடித்த இயக்கங்கள் சாட்சியமாகும்) சோசலிச முன்னோக்கு மற்றும் அமைப்பு வடிவம் இல்லாத நிலையில் இவை தவிர்க்க முடியாமல் சிதறிவிடும்.

அதிகாரத்தில் இருக்கும் போலி-இடதுகளின் மூலோபாய படிப்பினைகள் உட்பட, கடந்த தசாப்தங்களின் அனைத்து அனுபவங்களும் கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் சொந்த புரட்சிகர கட்சியை, குறிப்பாக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கிரேக்கப் பகுதியை, கட்டியெழுப்ப வேண்டும்.