முன்னோக்கு

கிரேக்க பொது தேர்தலில் சிரிசாவின் தோல்வி

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கிரேக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் பழமைவாத கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (ND) ஏறக்குறைய 41 சதவீத வாக்குகளுடன் பெருவாரியாக வெற்றி பெற்றது. 2019 இக்குப் பின்னர் 11 சதவீதப் புள்ளிகள் சரிவுடன் வெறும் 20 சதவீதத்தைப் பெற்ற மிகப் பெரிய எதிர்கட்சியான சிரிசாவுக்கு (“தீவிர இடதுகளின் கூட்டணிக்கு”) இந்தத் தேர்தல் ஒரு தோல்வியாக இருந்தது. 

புதிய ஜனநாயகக் கட்சியின் சமூக செலவினக் குறைப்பு திட்டநிரலுக்கும், ஆறு மில்லியன் நோய்தொற்று மற்றும் 36,000 இக்கும் அதிகமான மரணங்களுக்கு வழிவகுத்த அதன் கொலைபாதக பெருந்தொற்றுக் கொள்கைகளுக்கும், ரஷ்யாவுக்கு எதிராக இப்போது நடத்தப்பட்டு வரும் நேட்டோ போரின் மையத்தில் கிரேக்கத்தை அது நிலைநிறுத்தியதற்கும் தொழிலாள வர்க்கத்தில் பரந்த எதிர்ப்பு இருந்த போதிலும், புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பல தசாப்த கால வெட்டுக்கள் மற்றும் பணியாளர் குறைப்புகளால், பிப்ரவரியில் டெம்பி பள்ளத்தாக்கில் நடந்த இரயில் விபத்தில் குறிப்பாக 57 இளைஞர்களின் கோரமான மரணத்தைத் தொடர்ந்து நடந்த பல வார கால பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் கூட தேர்தல் முடிவுகள் அதனை பாதிக்கவில்லை.

கிரீஸின் தேர்தல் வரைபடம், புதிய ஜனநாயகக் கட்சியால் ஏற்பட்ட சிரிசாவின் தேர்தல் சரிவைக் காட்டுகிறது. சிரிசா வென்ற ஒரேயொரு மாவட்டம் சிவப்புக் குறியீட்டில் காட்டப்பட்டுள்ளது. [Photo: screenshot: Greek Ministry of Interior election page]

15 ஆண்டு கால சிக்கன நடவடிக்கைகளால் இரத்தம் வற்றிப் போய், தொழிலாளர்கள் கடுமையான சமூக வேதனையில் உள்ளனர். இத்தகைய நிலைமைகளின் கீழ், எந்தவொரு உண்மையான இடது மாற்றீடும் இல்லாததால் மட்டுமே புதிய ஜனநாயகக் கட்சியால் ஜெயிக்க முடிந்தது என்று மட்டுமே இதை விவரிக்க முடியும். சிரிசா, பாசொக் (PASOK) மற்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) என பெயரளவுக்கான உத்தியோகப்பூர்வ இடது கட்சிகளில் எதுவுமே, குறிப்பிடத்தக்களவில் புதிய ஜனநாயகத்தில் இருந்து வேறுபட்டவை இல்லை என்று தொழிலாள வர்க்கத்தின் பெரும் பெரும்பான்மையினர் தீர்மானித்திருந்தனர். சுமார் 40 சதவீத வாக்காளர்கள் மொத்தத்தில் வாக்களிக்கவே இல்லை.

2015 இல் இருந்து 2019 வரை சிரிசா பதவியில் இருந்த காலத்திலும், புதிய ஜனநாயகக் கட்சியால் அது முதலில் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிந்தைய ஆண்டுகளிலும், அது ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு கட்சியாக, அகதிகளுக்கான ஐரோப்பாவின் பிரதான சிறைக்காவலர்களில் ஒன்றாக செயல்பட்ட ஒரு கட்சியாக, ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ போருக்கு ஒத்துழைப்பதில் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்துள்ள ஒரு கட்சியாக, சிரிசா தன்னை எடுத்துக்காட்டி உள்ளது.

போலி-இடது போக்குகளின் முதலாளித்துவச் சார்பு கட்சிகளை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்களிப்பதன் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்யலாம் என்று உலகெங்கிலுமான போலி-இடது போக்குகளின் வாதங்கள் திவாலானவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில், சிரிசாவின் முன்வரலாறு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மூலோபாய அனுபவமாக உள்ளது. அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு சோசலிச போராட்டத்திற்கான அவசியத்தை மேலுயர்த்தி வருவதற்கு மத்தியில், தொழிலாளர்கள் இந்த அரசியல் பொறியை நனவுப்பூர்வமாக நிராகரிப்பது இன்றியமையாததாகும்.

கிரீஸ் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ், மே 27, 2019 இல், ஏதென்ஸில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் கட்சி உறுப்பினர்களுக்கு உரையாற்றுகிறார். [AP Photo/Yorgos Karahalis]

சிரிசாவுக்கு முன்பிருந்த PASOK மற்றும் ND அரசாங்கங்களின் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து ஜனவரி 2015 இல் சிரிசா பெரும்பான்மையோடு அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் அதற்கு மாறாக, அது ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை கோரிய குறைந்தபட்சம் ஏழு விரிவான சமூக செலவினக் குறைப்பு பொதிகளை அமுலாக்கியது. ஓய்வூதியங்களில் 15 வெட்டுக்கள், ஊதியக் குறைப்புக்கள், வரி உயர்வுகள், பணிநீக்கங்கள் மற்றும் பொது சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான வரவுசெலவு திட்டக்கணக்கு ஒதுக்கீட்டில் வெட்டுக்கள் ஆகியவை இதில் உள்ளடங்கி இருந்தன.

பல கிரேக்க தொழிலாளர்கள் இதுவரை மீள முடியாதளவில் 30 சதவீத வேலையின்மை உட்பட, முன்னெப்போதும் இல்லாதளவில் சமூக வறுமை மட்டங்களை சிரிசாவின் முதலாளித்துவ-சார்பு கொள்கைகள் ஏற்படுத்தி இருந்தன. இது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய ஜனநாயகக் கட்சிக்கு இருந்த பாரிய எதிர்ப்பில் இருந்து சிரிசா ஆதாயமடைய முடியாமல் செய்தது. அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் டெம்பி இரயில் விபத்தில் நன்கு நாடகமாடினார். 2017 இல் 6 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாக தனியார்மயமாக்குவதன் பாகமாக, இரயில்வே வலையமைப்பைத் தனியார்மயப்படுத்தி, சீரழிவு நிலைமைகளை உருவாக்கியதில் சிரிசா வகித்த பாத்திரத்தை யாரும் மறந்து விடவில்லை.

PASOK ஆதரவாளர்களிடம் ஆதரவைப் பெறும் ஒரு முயற்சியாக சிரிசா-முற்போக்கு கூட்டணி என்று அதன் பெயரை மாற்றி, 2019 இல் இருந்து உண்மையில் அது கூடுதலாக வலதுக்கு நகர்ந்துள்ளது. தனக்கு “நாட்டின் நிதி நிலைமைகள் குறித்து முழுமையாக தெரியும்” என்று சிப்ராஸ் அவருடைய முக்கிய தேர்தல் விவாதத்தில் அறிவித்தார்.

சுவீடன் மற்றும் பின்லாந்தை நேட்டோவில் இணைப்பதற்கான விண்ணங்களை ஏற்குமாறு, கடந்த செப்டம்பரில் ND மற்றும் PASOK உடன் சேர்ந்து சிரிசாவும் வாக்களித்தது. அனைத்திற்கும் மேலாக, பதவியில் இருந்த போது சிரிசா நேட்டோவின் ஒரு நம்பகமான பங்காளியாக இருந்தது. இப்போது ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சௌடா வளைகுடா (Souda Bay) கடற்படைத் தளம் உட்பட முக்கிய இராணுவத் தளங்களை அது நேட்டோ கூட்டணிக்கு வழங்கியது. 

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் சிரிசாவைப் போன்ற “பரந்த இடது” தேர்தல் வடிவங்களைக் கட்டியெழுப்புவதற்கு அதை ஒரு முன்னுதாரணமாக அறிவித்த எண்ணற்ற போலி-இடது குழுக்களும், சிரிசாவின் எல்லா அரசியல் காட்டிக்கொடுப்புகளுக்குமான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஸ்பெயினில் பொடெமோஸ், போர்ச்சுகலில் இடது அணி, பிரிட்டனில் தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினையும் சிலியில் கேப்ரியல் போரிக்கையும் சுற்றியுள்ள இயக்கங்கள் என இந்த கட்சிகளும் அதே அரசியல் காட்டிக்கொடுப்புகளையே நடத்தின. இவற்றுக்கெல்லாம், கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மூலமாக தொழிலாள வர்க்கம் விலை கொடுத்துள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக இராணுவவாதம் மற்றும் போர் வெடிப்பு மூலமாகவும் விலை கொடுத்துள்ளது.

சிரிசா பரவலாக மதிப்பிழந்த நிலையில், போலி-இடதின் சில பிரிவுகள் சிப்ராஸின் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வாரௌஃபாகிஸின் MeRA25 (ஐரோப்பாவின் யதார்த்தமான ஒத்துழையாமை முன்னணி) என்ற அரசியல் வாகனத்திற்கு ஆதரவை அறிவுறுத்தியதன் மூலம், அதே ஏமாற்றுத்தனத்தை நடத்த முயன்றன. இந்த வாக்கெடுப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் கூட, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்புடன் (DSA) சேர்ந்துள்ள ஜாகோபின் இதழ், சிரிசாவில் இருந்து உடைந்து வந்த மக்கள் ஐக்கியம் (Popular Unity) அமைப்புடன் சேர்ந்த MeRA25-Alliance for Rupture கூட்டணியின் ஒரு வேட்பாளர் மரியானா சிச்லி உடன் ஒரு நேர்காணல் நடத்தியது. 'கடந்த கால தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, நிகழ்கால சவால்களுக்கு விடையிறுக்கும், ஓர் ஒருங்கிணைந்த தீவிர-இடது களத்தை மீளக்கட்டியெழுப்புவதன் மூலம்' சிரிசாவின் 'பலியான பாரம்பரியத்தை' 'கடந்து வர முயல்வதாக' சிச்லி வாதிட்டார்.

வாரௌஃபாகிஸ் அத்தகைய எந்த மாற்றீட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல், சிரிசா காட்டுக்கொடுப்புகளின் இணை வடிவமைப்பாளராக இருந்தார். “தரமுறைப்பட்ட தாட்சரிச அல்லது ரீகனிக் பொருளாதார கொள்கைகளின்” அடிப்படையில் சற்றே மாற்றியமைக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அவர் திணிக்க விரும்பினார் என்பதையும், ட்ராய்காவின் அமைப்புகளுடன் அந்த அடிப்படையில் பேரம்பேசியதையும் 2015 இல் அவர் பதவியேற்ற போது அவரே குறிப்பிட்டிருந்தார்.

தொழிலாளர்கள் சிப்ராஸைப் போலவே அவரையும் அதேயளவுக்கு விஷத்தன்மை உள்ளவராக பார்த்ததால், 2019 இல் அது பெற்ற ஒன்பது இடங்களைக் கூட இழந்து, MeRA25-Alliance for Rupture கட்சி நாடாளுமன்றத்தில் நுழைய தேவையான 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. வாரௌஃபாகிஸ் அவருடைய சொந்த வலதுசாரி திட்டநிரலை வெளிப்படுத்திக் காட்டும் விதமாக, “மக்கள் உண்மையை, நிஜத்தை விரும்பவில்லை” என்ற உண்மை தான் அவர் தோல்விக்குக் காரணம் என்று பழிசுமத்தியுடன், “ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆதரவுடன் நான்காண்டு கால செலவு, செலவு, செலவு” என்று புதிய ஜனநாயகக் கட்சியை வலதில் இருந்து தாக்கினார்.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுந்தான் சிரிசாவின் வர்க்கத் தன்மை மற்றும் அரசியல் பாத்திரம் குறித்து உரிய நேரத்தில் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கைகள் வழங்கிய ஒரே கட்சியாக இருந்தது.   

ஜனவரி 27, 2015 இல், சிப்ராஸ் பதவியேற்ற போது, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:

சிரிசாவின் தேர்தல் வெற்றி, தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அரசியல் வளர்ச்சியையோ, ஒரு முன்னோக்கிய படியையோ, முன்னேற்றத்தையோ அல்லது அவ்விதமான எதுவொன்றையும் வெளிப்படுத்தவில்லை.

சிரிசா அதன் தோற்றுவாய், சமூக அமைப்பு மற்றும் அரசியல் அடிப்படையில், ஒரு முதலாளித்துவக் கட்சியாகும் — “நம்பிக்கை” மற்றும் “மாற்றத்திற்கு” வாக்குறுதிகள் அளித்து அதிகாரத்திற்கு வந்த பின்னர் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் கொள்கைகளைத் திணித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சி உட்பட பல முதலாளித்துவக் கட்சிகளில் அதுவும் ஒன்றாகும். சமூக கஷ்டங்களும் துயரங்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் விருப்பங்களை எரிச்சலூட்டும் விதமாக சுரண்டிக் கொண்ட அது, விரைவிலேயே, தவிர்க்கவியலாமல் காட்டிக்கொடுக்கும்… சிரிசா, கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் அதிக வசதியான பிரிவுகளின் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்துள்ளது. அது இன்னும் அதிக பலமான சக்திகளான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு அதன் முறையீடுகளைச் செய்கிறது.

ட்ராய்காவின் கட்டளைகளை நிராகரித்து பெருந்திரளான மக்கள் “வேண்டாம்” என்று வாக்களித்ததை நசுக்கி, சிரிசா அதன் சொந்த கட்சி வாக்கெடுப்பில் திரும்பக் கொண்டு வந்து, நாடாளுமன்றம் மூலமாக பாரியளவில் புதிய சிக்கன நடவடிக்கைப் பிணையெடுப்பை அது முன்நகர்த்திய பின்னர் எழுதப்பட்ட 'கிரீஸில் சிரிசா காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்' என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நவம்பர் 13, 2015 அறிக்கை பின்வருமாறு  விவரித்தது:

சிரிசா அரசாங்கத்தின் அனுபவம், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மிகப்பெரும் தோல்வியாக இருந்துள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறியாக வேண்டும்... இந்தத் தோல்விக்குப் பொறுப்பாக இருந்த கட்சிகள், பிரமுகர்கள் மற்றும் அரசியல் கருத்துருக்கள் மீது ஒரு சமரசத்திற்கிடமற்ற விமர்சனத்தின் அடிப்படையில், ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் மீளஆயுதபாணியாக்குவதுமே மத்தியப் பணியாகும். இது தான், கிரேக்க சம்பவங்கள் தொடர்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேற்கொண்டு வரும் வேலையின் முக்கியத்துவமாக உள்ளது.

கிரீஸிலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும், தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமாக, ஒரு சர்வதேசியவாத புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவத்தை ஒழித்து, ஓர் உலக சோசலிச சமூகத்தை ஏற்படுத்தி, தொழிலாளர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதை நோக்கி வழிநடத்தும் புதிய தொழிலாள வர்க்கக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சிரிசா பதவியில் இருந்த நான்காண்டு காலங்கள் மீதும் மற்றும் 2019 இல் அதன் தேர்தல் தோல்வி மீதும் முன்வைத்த அதன் மதிப்பீட்டில், உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிடுகையில், தொழிலாளர்கள் முழுக்க முழுக்க போலி-இடது அரசியலுடன் கணக்கைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வலியுறுத்தியது.

ஒரு திவாலான முதலாளித்துவ ஒழுங்கை எதிர்த்து ‘இடது ஜனரஞ்சக’ கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் கீழ் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி விடுவது சாத்தியமில்லை என்பதை இந்த அனுபவம் மறக்க முடியாத வகையில் எடுத்துக்காட்டி உள்ளது. வசதி படைத்த குட்டி முதலாளித்துவ அடுக்கு மீதான வர்க்க அடித்தளத்தில் வேரூன்றிய சிரிசா நடத்திய இதே காட்டிக்கொடுப்பு தான், இத்தகைய கட்சிகள் வேறெந்த இடத்தில் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் நடக்கும்.

பொருளாதார வாழ்வு மற்றும் அரசு அதிகாரத்தின் மீது கட்டுப்பாட்டை எடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முழுமையான தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியைப் புரட்சிகரமாக அணித்திரட்டும் தொல்சீர் மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கிற்குத் திரும்புவதே முன்னோக்கிய பாதையாகும்.

ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு புதிய புரட்சிகர திருப்பத்தின் பாகமாக, மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலாளர்களும் இளைஞர்களும், இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கிரேக்கப் பிரிவைக் கட்டியெழுப்புவதை நோக்கித் திரும்ப வேண்டும்.