ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழுக்கள் ஐரோப்பிய தேர்தல்களுக்கு முன்னதாக தீவிர வலதுசாரிகளுடன் ஒத்துழைக்க தயாராகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூன் 6 முதல் 9 வரை நடைபெற இருக்கும் ஐரோப்பிய தேர்தல்களுக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி பிரதிநிதிகள் தீவிர வலதுசாரிக் கட்சிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு தயாராகி வருகின்றனர். இப்பொழுது வரை, பழமைவாதிகள், தாராளவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்ற குழுக்கள் - மற்றும் கணிசமாக பசுமைவாதிகள் -முக்கியமான முடிவுகளை எடுத்து தங்களுக்குள் முக்கிய பதவிகளை பகிர்ந்து கொண்டுள்ளன. ஆனால், ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகிய இரண்டிலும், தேர்தல்களுக்குப் பிறகு வலதுசாரி தீவிரவாதிகள் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். எப்போதும் ஒரு புனைகதையாக இருந்து வந்துள்ள தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக பெரிதும் பேசப்படும் ‘தடுப்புச்சுவர்’, ஐரோப்பிய தேர்தல்களுக்குப் பின்னர் நிச்சயமாக வீழ்ச்சியடையும்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், செவ்வாய்கிழமை, April 23, 2024.  [AP Photo/Jean-Francois Badias]

சமீப நாட்களில் நடந்த இரண்டு சம்பவங்கள் இதைத் தெளிவாக்கியுள்ளன. கடந்த வார இறுதியில், ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஓர்பானின் ஆதரவின் கீழ் சர்வதேச தீவிர வலதுசாரிகளின் உயரடுக்கு புடாபெஸ்டில் கூடியது. இதன் பின்னர் திங்கட்கிழமை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் (ECR) கட்சிகளின் குழுவுடன் சாத்தியமான ஒத்துழைப்பைக் கொண்டு வந்தார். இதில், இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி (Fratelli d’Italia), ஸ்பானிய வோக்ஸ் கட்சி, போலந்து சட்டம் மற்றும் நீதிக் கட்சி (PiS) மற்றும் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியினர் உட்பட பலர் உள்ளனர்.

பழமைவாதிகள் அரசியல் நடவடிக்கைக் குழுவின் (CPAC) ஹங்கேரிய கிளையின் மாநாட்டிற்காக, ஐந்து கண்டங்களில் இருந்து மூவாயிரம் பங்கேற்பாளர்கள் புடாபெஸ்டுக்குச் சென்றனர். ஸ்பானிய வோக்ஸின் தலைவரான சாண்டியாகோ அபாஸ்கல், டச்சு சுதந்திரக் கட்சியைச் (PVV) சேர்ந்த கீர்ட் வைல்டர்ஸ் மற்றும் பெல்ஜிய விளாம்ஸ் பெலாங்கைச் (Belgian Vlaams Belang) சேர்ந்த ரொம் வான் க்ரீகன் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரெஞ்சு தேசிய பேரணி கட்சியின் சார்பாக (RN), ஐரோப்பிய ஒன்றிய எல்லை நிறுவனமான Frontex இன் முன்னாள் தலைவரும் மரின் லூப்பெனின் கட்சிக்கான ஐரோப்பிய தேர்தல் வேட்பாளருமான பெப்ரிஸ் லேகாரி கலந்து கொண்டார்.

இத்தாலிய லீக் மற்றும் இத்தாலிய சகோதரர்கள் கட்சி ஆகியவையும் தமது பிரதிநிதிகளை அனுப்பின. ஜெர்மனியின் உயர்மட்ட உள்நாட்டு உளவு நிறுவனமான அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான கூட்டாட்சி அலுவலகத்தின் முன்னாள் தலைவரான ஹான்ஸ் ஜோர்ஜ் மாசென் பிரதிநிதியாக இதில் கலந்து கொண்டார். இவர் மதிப்புகளின் யூனியன் என்ற தனது சொந்த அதிதீவிர வலதுசாரி கட்சியை நிறுவினார். போர்த்துக்கலின் சேகாவின் ஆண்ட்ரே வென்ச்சுரா மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வீடியோ செய்திகளை அனுப்பியிருந்தனர். பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தனது மகன் எட்வர்டோவை அனுப்பியிருந்தார்.

இரண்டு தற்போதைய அரசாங்கத் தலைவர்களான ஓர்பன் மற்றும் ஜோர்ஜியாவின் ஈராக்லி கோபாகிட்ஸே ஆகியோரைத் தவிர, மூன்று முன்னாள் பிரதம மந்திரிகளான, போலந்திலிருந்து மத்தியூஸ் மோரவேக்கி, ஸ்லோவேனியாவிலிருந்து ஜேன்ஸ் அன்சா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து ரொனி அபோட் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர். அத்தோடு, இஸ்ரேலில் இருந்து, புலம்பெயர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமிச்சாய் சிக்லி மற்றும் உளவுத்துறை அமைச்சர் கிலா கம்லியேல் ஆகிய இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி, யூத-விரோதவாதிகளால் நிறைந்துள்ள ஐரோப்பிய வலதுசாரி தீவிரவாதிகளின் நிபந்தனையற்ற ஆதரவை நம்பலாம்.

“கடவுள், குடும்பம், தாய்நாடு” ஆகியவற்றுக்கான துதியும், மற்றும், அறிவியல், கருக்கலைப்பு, LGBTQ, தாராளமயம் மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரான பிற்போக்குத்தனமான தூண்டுதலுடன் மோசமான கலவையில், CPAC மாநாடு “குழப்பமான” காலத்தின் குரலாக தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டது.

“தாராளவாத மேலாதிக்கம் உலகை ஒரு மோசமான இடமாக மாற்றியுள்ளது. அங்கு அமைதி இருக்கும் இடத்தில் போரைத் தூண்டியது, ஒழுங்கு இருக்கும் இடத்தில் குழப்பத்தைக் கொண்டு வந்து, நாடுகளையும் குடும்பங்களையும் அழிக்க விரும்பியது, மேலும் நமது நாடுகளை பூமியின் முகத்திலிருந்து துடைத்தழிக்க விரும்பியது” என்று ஓர்பன் தனது தொடக்க உரையில் விளக்கினார்.

“ஒரு இறையாண்மையுள்ள உலக ஒழுங்கின்” விடியலில், “தேசிய நலன்கள் அரசுகளின் இயக்கத்தை தீர்மானிக்கின்றன” மற்றும் “ஒவ்வொரு சுதந்திர நாடும் அதன் சொந்த தேசிய நலன்களின் அடிப்படையில் செயல்படுகிறது” என்று அவர் கொந்தளித்தார்.

“சாத்தியமான அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், ஊடக மையங்கள், சந்தேகத்திற்கிடமான நிபுணர்கள் மற்றும் முட்டாள்தனமான கல்வியாளர்கள் ஆகியோர், எது சரி, என்ன செய்ய வேண்டும் என்று கூற மாட்டார்கள், ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள், அப்படியல்ல” என்று கூறிய அவர், “தலைவர் (führer)” என்ற வார்த்தை மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வெறுப்பூட்டும் மாநாட்டிற்கு அடுத்த நாள், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக, புதிய பதவிக் காலத்தை கோரும் உர்சுலா வான் டெர் லேயன், தீவிர வலதுசாரிகளுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். மாஸ்ட்ரிஜ்ட்டில் (Maastricht) நடந்த ஒரு விவாதத்தின் போது, ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் குழுவுடனான ஒத்துழைப்பை வழக்கம் போல் நிராகரிப்பாரா என்ற கேள்விக்கு அவர் “ஆம்” என்று பதிலளிக்கவில்லை. ஆனால், “அது பெரும்பாலும் பாராளுமன்றத்தின் அமைப்பு மற்றும் எந்தக் குழுவின் அங்கம் என்பதைப் பொறுத்தது” என்று பதிலளித்தார்.

எனவே பழமைவாத ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) பட்டியலில் உள்ள தலைவரான வான் டெர் லேயன், வலதுசாரி தீவிரவாதிகளின் வாக்குகளுடன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படத் தயாராக இருப்பார். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அரசியல் சலுகைகள் மற்றும் முக்கிய பதவிகள் போன்ற வடிவங்களில் அவர்கள் ஒரு விலையைக் கோருவார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஐரோப்பிய தேர்தல்களின் போது, தீவிர வலதுசாரிகள் கணிசமான அளவில் வலுவடையும் என்று கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. இரண்டு தீவிர வலதுசாரிக் குழுக்களான, ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் (ECR) மற்றும் அடையாளம் மற்றும் ஜனநாயகம் (ID) ஆகிய கட்சிகள், நான்கில் ஒரு பங்கு இடங்களை வெல்லும் என்று நம்புகின்றன. தற்போதைய நாடாளுமன்றத்தில் 126க்கு பதிலாக 710 ஆசனங்களில் 165 இடங்களை அவர்களால் கைப்பற்ற முடியும். இதனுடன் ஹங்கேரிய ஃபிடெஸ் (Fidesz) கட்சியிலிருந்து 12 பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் தற்போது இணைக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் குழுவில் அவர்கள் சேர வாய்ப்புள்ளது.

குறிப்பாக இத்தாலியில், ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் வலதுசாரி தீவிரவாதிகள் அரசாங்கத்தை அமைக்கிறார்கள், நெதர்லாந்தில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கீர்ட் வில்டர்ஸ் வெற்றி பெற்றார், ஜேர்மனியில், ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி (AfD) வாக்கெடுப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் பிரான்சில், வலதுசாரி தீவிரவாதிகளுக்கு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சில், தேசிய பேரணி ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சியை விட சுமார் 14 சதவீதம் முன்னிலையில் உள்ளது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மரீன் லு பென் அரச தலைவராக பதவியேற்க விரும்புகிறார்.

27 பிரதிநிதிகளை எதிர்பார்க்கும் தேசிய பேரணி, அடையாளம் மற்றும் ஜனநாயக கட்சியின் வலுவான கட்சியாக உள்ளது. இந்த குழுவில் ஜேர்மன் AfD, ஆஸ்திரிய FPÖ, இத்தாலிய லீக் மற்றும் பிற கட்சிகளும் அடங்கும்.

இவர்களில் சிலர் அதிக ரஷ்ய நட்புடன் இருப்பதாலும், ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரிப்பதாலும், அவர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. எனினும், இந்த பிரிவுகள் மீண்டும் ஒருங்கிணைக்கலாம் அல்லது மீண்டும் உருவாக்கலாம். தேசிய பேரணி, ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் பக்கம் மாறலாம் அல்லது அதன் சொந்த பிரிவை உருவாக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன.

தீவிர வலதுசாரிகளை எப்படி நிறுத்த முடியும்?

தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கான பொறுப்பு, தற்போது ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையை நிர்ணயிக்கும் கட்சிகளிடமே இருக்கிறது. “இடது”, பசுமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள், தாராளவாதிகள் மற்றும் பழமைவாதக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் தீவிர வலதுசாரிகளின் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியும் என்ற எண்ணம் ஒரு ஆபத்தான மாயையாகும். யதார்த்தம் அதற்கு நேர்மாறானது. தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டம் என்பது தேர்தல் எண் கணிதத்தின் பிரச்சினை அல்ல, மாறாக வர்க்க இயக்கவியல் பற்றிய பிரச்சனையாகும்.

மூன்றாவது, அணு ஆயுத உலகப் போரின் ஆபத்து, இன்று இருப்பதைப் போல் அதிகமாக இருந்ததில்லை. இலாபங்கள், மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கான அதன் பசியைப் பூர்த்தி செய்ய, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் மீண்டும் மோசமான குற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளன. 172 பில்லியன் யூரோக்களுடன், அவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைன் போரைத் தூண்டுவதற்கு அமெரிக்காவை விட அதிகமான பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் காஸாவில் நடக்கும் கொடூரமான இனப்படுகொலையை ஆதரித்து, அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைத்து வருகின்றனர்.

அவர்கள் போர் மற்றும் இராணுவவாதத்திற்கான செலவுகளை தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மீது சுமத்துகிறார்கள். பில்லியனர்களின் செல்வம் வீங்கிவெடிக்கும்போது, ​​உண்மையான ஊதியங்கள் மற்றும் சலுகைகள் வீழ்ச்சியடைகின்றன. லட்சக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர். கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் போய்விட்டது, கோவிட்-19 மற்றும் பிற தொற்றுநோய்களுக்கு எதிரான அனைத்து பாதுகாப்பும் லாபத்திற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலின் அழிவு வேகமாக முன்னேறி வருகிறது.

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை, பெட்ரோல் விலை உயர்வு, வருமான வீழ்ச்சி மற்றும் இனப்படுகொலையின் வேகம் ஆகியவற்றை எதிர்த்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர் அல்லது தெருக்களில் இறங்கியுள்ளனர். ஆனால், தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், தொழிற்சங்கங்களால் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றன அல்லது ஆட்சியாளர்களிடம் பிரியோசனமற்ற வேண்டுகோள்களை விடுத்துவரும் போலி-இடது குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வளர்ந்து வரும் எதிர்ப்புக்களை அடக்குவதற்கு, ஆளும் உயரடுக்கிற்கு வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் பாசிஸ்டுகள் தேவையாக இருக்கின்றன. அவர்களின் கட்சிகள் பிற்போக்குத்தனமான அரசியல் சூழலை உருவாக்குகின்றன, அதில் பாசிசத்தின் விதைகள் செழித்து, வலதுசாரி தீவிரவாதிகளின் வேலைத்திட்டத்தை ஏற்று, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து, இந்த செயல்பாட்டில் அவர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகின்றன. காஸா இன அழிப்புக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அகதிகள் மீதான துன்புறுத்தலின் மிருகத்தனமான அடக்குமுறையை விட, இது வேறு எங்கும் தெளிவாகத் தெரியவில்லை. இது முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக ஒரு பொலிஸ் அரசை நிறுவுவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வோன் டெர் லேயன் நீண்ட காலமாக, ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் (ECR) தலைவராக இருக்கும் ஜியோர்ஜியா மெலோனியுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார். மெலோனியுடன் சேர்ந்து, துனிசியாவிலிருந்து அகதிகள் வெளியேறுவதை வலுக்கட்டாயமாக தடுக்க சர்வாதிகார ஆட்சியாளரான கைஸ் சையிற்கு லஞ்சம் கொடுக்க துனிசியாவிற்குச் சென்றார். ஐரோப்பிய புகலிடச் சட்டத்தின் சமீபத்திய இறுக்கத்துக்கு எதிராக, அவரது சொந்த முகாமில் இருந்து சில டசின் கருத்து வேறுபாடு வாக்குகள் இருந்த போதிலும், மெலோனியின் உதவியுடன் அவர் அந்த சட்டத்தை அமல்படுத்தினார்.

ஐரோப்பிய மக்கள் கட்சி மற்றும் அதன் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், பவேரிய கிறிஸ்தவ சமூக யூனியன் கட்சியின் உறுப்பினருமான மன்ஃப்ரெட் வெபர், ஏற்கனவே 2022 இல் இத்தாலியில் தனது கட்சியின் கூட்டாளியான சில்வியோ பெர்லுஸ்கோனி, பின்பு மெலோனியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்தார். இதற்கிடையில், இத்தாலிய அரசாங்கத் தலைவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் அவர், மேலும் ECR மற்றும் EPP க்கு இடையேயான ஒத்துழைப்பிற்கான அவரது ஒப்பந்தத்தைப் பெற முயற்சித்தார். தீவிர வலதுபுறத்தில் இருந்து அவர் வைக்கும் ஒரே நிபந்தனைகள்: ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மற்றும் “சட்டத்தின் ஆட்சி”, இதன் மூலம் அவர் ஒரு போலீஸ் அரசை ஸ்தாபிப்பதை அர்த்தப்படுத்துகிறார்.

தொழிற்சங்கங்களும், செல்வந்த நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகளும் வலதுசாரிகளின் வளர்ச்சியில் குறிப்பாக இழிவான பாத்திரத்தை வகிக்கின்றன. தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் போர்க் கொள்கையை முழுமையாக ஆதரிக்கின்றன. வளர்ந்து வரும் வர்க்க மோதல்களை எதிர்கொள்வதில், அவர்களின் முக்கிய பணி “சமூக அமைதியை” பாதுகாப்பதாகும். அதாவது, வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதாகும். இதன் மூலம், பாசிஸ்டுகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை முடக்குகிறார்கள்.

எதிர்ப்பு போராட்ட அலையால், போலி-இடது கட்சிகள் எங்கெல்லாம் அரசாங்க பதவிகளுக்கு வந்தார்களோ, அங்கெல்லாம் தொழிலாள வர்க்கத்தின் உறுதியான எதிர்ப்பாளர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இது கிரேக்கத்தில் உள்ள சிரிசா மற்றும் ஸ்பெயினில் உள்ள பொடெமோஸ் மற்றும் ஜேர்மன் இடது கட்சிக்கும் பொருந்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நிராகரித்ததன் அடிப்படையில் 2015 இல் சிரிசா தேர்தலில் வெற்றி பெற்று, அரசாங்கத்தை அலெக்சிஸ் சிப்ராஸ் வழிநடத்தியபோது, வாக்காளர்களின் விருப்பத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கும் இடையில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து, மில்லியன் கணக்கானவர்களை மோசமான வறுமையில் ஆழ்த்திய கடுமையான சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தியதோடு, வலதுசாரிகள் அதிகாரத்திற்குத் திரும்புவதற்கு வழி வகுத்தது.

அப்போது கிரேக்க நிதி அமைச்சராக இருந்த யானிஸ் வரூஃபாகிஸ், இப்போது DiEM25 (அல்லது MERA25) கட்சியுடன் ஐரோப்பிய தேர்தல்களில் வேட்பாளராக உள்ளார். தீவிரமான வாக்கியங்களை உச்சரித்துவரும் அவர், ஐரோப்பாவின் “ஜனநாயகமயமாக்கலுக்கு” உறுதியளித்தார். என்ன முட்டாள்தனம்! ஐரோப்பிய ஒன்றியத்தை “ஜனநாயகப்படுத்த” முடியாது. சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலன்கள், ஆளும் வர்க்கத்தின் இலாபத்திற்கான பேராசை மற்றும் ஏகாதிபத்திய அபிலாஷைகளுடன் ஒத்துப்போக முடியாது.

வெகுஜனங்கள் அரசியல் விவகாரங்களில் சுதந்திரமாக தலையிட வேண்டும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளால் அது பிரதியீடு செய்யப்பட வேண்டும். முதலாளித்துவ அமைப்பை முறையை ஒழித்துவிட்டு, பெரும் செல்வந்தர்களின் இலாப நலன்களை விட சமூகத்தின் தேவைகள் முதன்மை பெறும் ஒரு சோசலிச அமைப்பைக் கொண்டு வராமல் எந்த பெரிய சமூகப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது.

ஐரோப்பிய தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சியானது (SGP) இந்தத் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அது தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவுள்ள சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் போராடி வருகிறது. இதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பகுதியான SGP, ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர அமைப்புகளுடன் நெருக்கமாக வேலை செய்து வருகிறது.