மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் காஸா பகுதியை இன ரீதியாக சுத்திகரித்து, மக்கள்தொகையை குறைத்து, அதனை இணைப்பதற்கான ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டினார்.
ட்ரம்பின் இந்த திட்டத்தின் கீழ், காஸாவில் எஞ்சியிருக்கும் மக்கள் அவர்களின் மூதாதையர் வாழ்ந்த தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாலைவனத்தில் அல்லது தொலைதூர நாடுகளில் அல்லது தீவுகளிலுள்ள முகாம்களில் சிதறடிக்கப்பட்டு, துயரத்தில் வாழ்ந்து இறக்க நேரிடும். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி புதைக்கப்படாத பல்லாயிரக்கணக்கான உடல்கள், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், அவர்களின் வீடுகளின் சிதைந்த துண்டுகளுக்கு மேல் உழுது தள்ளப்பட்டு, அடித்துச் செல்லப்படுவார்கள்.
மேலும், அழுகிய சடலங்களுக்கு மேல், ட்ரம்பும் அவரது அடிமையான பெஞ்சமின் நெதன்யாகுவும் ஹோட்டல்களையும் சூதாட்ட கேசினோக்களையும் கட்டுவார்கள். அங்கு அவர்களின் எடுபிடிகளின் செல்வம் மேலும் குவியும். நாங்கள் “அந்த இடத்தைக் கைப்பற்றப் போகிறோம், நாங்கள் அந்த இடத்தை அபிவிருத்தி செய்யப் போகிறோம்,” என்று ட்ரம்ப் எக்காளமிட்டார்.
ட்ரம்பின் திட்டங்கள், சர்வதேச சட்டம், ஆக்கிரமிப்புப் போர், பிராந்திய இணைப்பு, இனப்படுகொலை மற்றும் பாரிய படுகொலைக்கு எதிரான தடைகளை தெளிவாகவும் நேரடியாகவும் மீறுகின்றன. இவை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாஜிக்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட குற்றங்களின் வகையைச் சேர்ந்தவையாகும்.
ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை, நாஜி ஜேர்மன் மூன்றாம் பேரரசின் சான்சலரியால் கடைசியாக நடைமுறைப்படுத்தப்பட்ட அப்பட்டமான ஏகாதிபத்திய மூர்க்கத்தன வகைக்குத் திரும்புவதாகும். அமெரிக்கப் பேரரசின் புதிய மணிமகுடங்களாக கனடா, கிரீன்லாந்து, பனாமா மற்றும் காஸா ஆகியவை கைப்பற்றப்பட உள்ளன. இந்தப் புதிய உலக ஒழுங்கின் முன்மாதிரிகளாக, அடோல்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது கோலியாத்துக்கள் மட்டுமல்ல, மாறாக ரப்பரைப் கொள்ளையடிப்பதற்காக மில்லியன் கணக்கான ஆபிரிக்க கொங்கோலிய மக்களை சித்திரவதை செய்து, ஊனமாக்கி படுகொலை செய்த பெல்ஜியத்தின் இரண்டாம் லியோபோல்டு போன்று இருக்கின்றன.
1991 ஆம் ஆண்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அந்த ஆண்டில் இடம்பெற்ற ஈராக் மீதான படையெடுப்பு “ஏகாதிபத்தியவாதிகளால் உலகில் ஒரு புதிய பங்கீட்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது” என்று விளக்கியது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:
நேற்றைய காலனிகள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட உள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு சந்தர்ப்பவாத வக்காலத்து வாங்குபவர்களின் கூற்றுப்படி, கடந்த காலத்தைச் சேர்ந்ததாக இருந்த வெற்றிகளும் கைப்பற்றல்களும் மீண்டும் ஒருமுறை நிகழ்ச்சி நிரலில் உள்ளன.
1991 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடைந்த சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிறகு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, முடிவில்லா மற்றும் விரிவடைந்து செல்லும் போர் நடந்து வருகிறது. 1917 அக்டோபர் புரட்சி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் பாரிய காலனித்துவ எதிர்ப்பு எழுச்சிகள் இல்லாதிருந்தால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், தாங்கள் நினைத்தபடி உலகை உருவாக்க முனைந்திருப்பார்கள்.
முதலாம் மற்றும் இரண்டாம் வளைகுடா போர்கள், யூகோஸ்லாவியாவின் கலைப்பு, ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு, சிரியா மற்றும் லிபியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போர் அனைத்தும் இந்த நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக உள்ளன.
ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் வெளியுறவு கொள்கை சர்வதேச சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்ற எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் கைவிட்டு வருகிறது. அதற்குப் பதிலாக, காட்டுச் சட்டம் பிரதியீடு செய்யப்பட உள்ளது. அதில் வலிமையானவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்வார்கள், பலவீனமானவர்கள் இதனை அனுபவிப்பதற்கு தள்ளப்படுவார்கள்.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்து வந்த ஏகாதிபத்திய “ஆட்சி மாற்றம்” மற்றும் பிராந்திய இணைப்புக் கொள்கையானது, குற்றவியல் தன்மையை தழுவிக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், துணை ஜனாதிபதியாக இருந்த டிக் செனி “நாம் இருண்ட பக்கத்தில் வேலை செய்ய வேண்டும்... நாம் நிழலில் பொழுதைக் கழிக்கப் போகிறோம்” என்று அறிவித்தார்.
செனி என்னத்தை அர்த்தப்படுத்தினார் என்றால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குற்றத்தையும் சர்வதேச சட்ட மீறலையும் தழுவிக்கொள்ளும் என்பதாகும். சித்திரவதை, கொலை, கடத்தல் மற்றும் சட்டவிரோத கண்காணிப்பு ஆகியவை முதலில் வெளிநாட்டவர்களுக்கு எதிராகவும், பின்னர் அமெரிக்கர்களுக்கு எதிராகவும் சட்டப்பூர்வமாக்கப்படும்.
ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், “இருண்ட பக்கம்” அமெரிக்காவில் “வேலை செய்துள்ளது”. அசாதாரண சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக விதிவிலக்கான நிலை என்று நியாயப்படுத்தப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் விதிமுறையாகிவிட்டன. அரசின் குற்றவியல் நடவடிக்கைகள் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. அவை “சட்டபூர்வமான” ஜனநாயக மற்றும் சட்ட செயல்பாடுகளை நிராகரித்துவிட்டன. காஸாவில் இன அழிப்பைத் தழுவிக்கொண்டிருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் ஒரு சர்வாதிகாரத்தின் கட்டமைப்பை கட்டியெழுப்ப முனைந்து வருகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக “தாராளவாத” வக்காலத்து வாங்குபவர்கள், ட்ரம்பின் திட்டம் முந்தைய அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இருந்து ஏதோவொரு விதத்தில் பிறழ்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது அல்லது, எலிசபெத் வாரனின் வார்த்தைகளில் கூறுவதானால், “அமெரிக்க மதிப்புகளுக்கு முரணானது” என்று வாதிடுகின்றனர்.
கடந்த முக்கால் நூற்றாண்டாக செனட்டர் வாரன் எந்த அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவர் ஆதரித்த பராக் ஒபாமா “செவ்வாய்க்கிழமை பயங்கரம்” என்று அழைக்கப்படும் ஒரு வகையான அதிகாரத்துவ சடங்காக படுகொலைகளை மாற்றினார். செனட்டர் வாரன் ஆதரித்துவந்த பைடென், காஸாவில் குறைந்தது 70,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான படுகொலைக்கு நிதி, ஆயுதங்களை கொடுத்து படுகொலைகளை பாதுகாத்து வந்தவர் ஆவர்.
ட்ரம்பின் திட்டம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இருந்து விலகிச் செல்வதல்ல. மாறாக, நெதன்யாகுவின் வார்த்தைகளில், ட்ரம்ப் “நேரடியாக விஷயத்திற்கு” வருகிறார். ஏகாதிபத்தியம் தனது செயல்களை நியாயப்படுத்த தொடர்ந்து பயன்படுத்தும் புனிதமான பொய்களுக்கு, அனைவரும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய, ஆனால் யாரும் நம்பாத பொய்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேலிய போரின் நிஜமான நோக்கங்கள் என்ன என்பதை ட்ரம்ப் கூறியிருக்கிறார்: அது, மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் ஒரு பரந்த உலகளாவிய ஏகாதிபத்திய போரின் பாகமாக, பாலஸ்தீனர்களைக் கொன்று அவர்களின் நிலத்தைக் கொள்ளையடிப்பதாகும்.
2023 அக்டோபர் 7 ஆம் தேதியை, ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தி காஸாவில் உள்ள ஒவ்வொரு கட்டமைப்பையும் இடித்து தரைமட்டமாக்கி, முடிந்தவரை பலல்லாயிரக்கணக்கில் பொதுமக்களைக் கொல்வதே தனது இலக்கு என்று நெதன்யாகு பைடெனுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாத வார்த்தைகளில் தெளிவுபடுத்தியிருந்தார். நெதன்யாகுவுடனான தனது சந்திப்புகளை முடித்துவிட்டு வெளியேறும்போது பைடென், “இரண்டு-அரசு தீர்வு” மற்றும் ஒரு “போர்நிறுத்தம்” குறித்து முன்னர் தயாரிக்கப்பட்ட உரைகளை முணுமுணுத்தார். அதேவேளையில், அமெரிக்காவின் மிகப்பெரிய, 2,000 பவுண்டு குண்டுகள் இருந்த ஆயுதக்கிடங்குகளை காலி செய்த பைடென், காஸாவின் நகரத் தொகுதிகளை இடித்து தரைமட்டமாக்கி, டசின் கணக்கில் குழந்தைகளைக் கொல்வதே அவரது ஒரே இலக்காக இருந்தது.
CIA செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர்களைக் கொண்ட அடிமைத்தனமான அமெரிக்க பத்திரிகைகள், நெதன்யாகு மீது பைடென் எவ்வளவு “சீற்றத்துடனும்” “விரக்தியுடனும்” இருந்தார் என்பது பற்றிய தலைப்புச் செய்திகளை வெளியிட்டுவரும் அதே நேரத்தில், அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலையில் ஜனாதிபதியின் முழு ஒப்புதலையும் உடந்தையையும் மூடிமறைத்து வருகின்றன.
இப்போது, அமெரிக்காவின் பெரும் பில்லியனர்களால் வெள்ளை மாளிகையில் அமர்த்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ட்ரம்ப், பைடெனின் மனிதாபிமான சாக்குபோக்குகளை கைவிட்டு, அவர்களின் உண்மையான பெயர்களால் விஷயங்களைக் கூறியுள்ளார். ட்ரம்ப் சாராம்சத்தில், “பாலஸ்தீனியர்களிடம் நிலம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் இராணுவம் இல்லை, எனவே நாங்கள் அவர்களை விரட்டிவிட்டு எங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
கடந்த 15 மாதங்களில், காஸா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய போராட்டங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கெடுத்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் முயற்சி இல்லாததால் அல்ல, மாறாக முன்னோக்கு இல்லாததால் தோல்வியடைந்தன. போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் தவறை உணர்ந்து நெதன்யாகுவைக் கைது செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், ஏகாதிபத்தியவாதிகள் ஏன் தங்கள் அடிமையை “கைது” செய்ய வேண்டும்?
போராட்ட ஏற்பாட்டாளர்களின் அடிப்படை அனுமானம் என்னவென்றால், காஸா இனப்படுகொலை என்பது ஒருவித பிறழ்ச்சியைக் குறிக்கிறது, அது கொள்கையில் ஏற்பட்ட தவறு என்பதாகும். இல்லை, அது ஒரு தவறு அல்ல. இது தீவிர நெருக்கடி நிலைமைகளின் கீழ் முதலாளித்துவ சமூக ஒழுங்கின் மிக முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துகிறது.
லெனின் விளக்கியது போல், “ஏகபோகங்கள், தன்னலக்குழு, சுதந்திரத்திற்காக அல்லாமல் மேலாதிக்கத்திற்கான முனைப்பு, ஒரு சில பணக்கார அல்லது மிகவும் சக்திவாய்ந்த நாடுகளால் அதிகரித்து வரும் சிறிய அல்லது பலவீனமான நாடுகளைச் சுரண்டுவது” ஆகியவை, “முதலாளித்துவத்தின் மிக உச்சக் கட்டமாக இருக்கும் ஏகாதிபத்தியத்தின்” அத்தியாவசிய பண்புகளாகும்.
ட்ரம்பின் காஸா மீதான திட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கம் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் ஏகாதிபத்திய வன்முறையின் துணை விளைவாக, உள்நாட்டில் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்க்கப்படுகிறது. தன்னலக்குழு தனது செல்வத்தைப் பாதுகாக்கவும், அனைத்து எதிர்ப்பையும் அடக்கவும் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புகிறது.
இந்த காரணத்திற்காகவே, பாலஸ்தீனிய மக்களின் தலைவிதி தவிர்க்க முடியாமல் அமெரிக்க மற்றும் உலகத் தொழிலாளர்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு உலகத் தொழிலாள வர்க்கத்தைத் தவிர, வேறு எந்த வழியும் விமோசனம் கிடையாது. அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகள், வேலைகள், வாழ்வதற்கான ஊதியம் மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் சேர்ந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் காஸா இனப்படுகொலைக்கு எதிரான பதாகையை உயர்த்த வேண்டும்.
ஈராக் போர் தொடங்குவதற்கு முன்பு உலக சோசலிச வலைத் தளம் (WSWS) விளக்கியது போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் “பேரழிவை சந்திக்கும்” சூழ்நிலையை எதிர்கொள்கிறது. ட்ரம்பும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கமும், அமெரிக்கா மற்றும் உலகத் தொழிலாளர்களிடமிருந்து பாரிய எதிர்ப்பைச் சந்திப்பார்கள். ஆனால் போர், சர்வாதிகாரம் மற்றும் சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, இந்தப் பேரழிவுகளை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பைமுறையை ஒழித்துக்கட்டி, அதை சோசலிசத்தால் பிரதியீடு செய்வதாகும்.