குவாண்டனாமோ புலம்பெயர்ந்தோர் சித்திரவதை முகாமை ட்ரம்ப் நிர்வாகம் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

குவாண்டனாமோ விரிகுடா கடற்படைத் தளத்தில் உள்ள முகாம் VI தடுப்பு மையத்திற்குள் உள்ள முள்வேலி வழியாக கட்டுப்பாட்டு கோபுரம் தெரிகிறது. கியூபா, ஏப்ரல் 17, 2019 [AP Photo/Alex Brandon]

கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் ஏறத்தாழ 30,000 ஆவணமற்ற மக்களை தடுத்து வைக்க உத்தரவிட்ட இரண்டு வாரங்களுக்குள், ட்ரம்ப் நிர்வாகத்தின் பரந்த இலக்கு தெளிவாகியுள்ளது. எந்தவொரு சட்டப்பூர்வ கட்டுப்பாடுகளும் இல்லாமல், ஒரு கடல்கடந்த சித்திரவதை முகாமிற்கு சமமான இடத்தில், தான் விரும்பும் எவரையும் சிறையில் அடைக்கும் அதிகாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் தனக்குத்தானே எடுத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்த செயற்கைக்கோள் படங்கள், இராணுவ சிப்பாய்கள் அந்த இடத்தில் 185 க்கும் மேற்பட்ட கூடாரங்களையும் தற்காலிக கட்டிடங்களையும் அமைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் 120 கைதிகளை தடுத்து வைக்கும் திறனையே இந்த வதைமுகாம் கொண்டிருந்தது.

தி போஸ்ட், குவாண்டநாமோ தடுப்பு முகாமைப் பற்றி நன்கு அறிந்த பல மனித உரிமை வழக்கறிஞர்களையும் பேட்டி கண்டது. இவர்கள், “சட்டபூர்வ எல்லைக்கு அப்பாற்பட்ட இடமாக” விவரிக்கப்படும்  குவாண்டநாமோ முகாமிற்குள், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் கொண்டு வரப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களின் பெயர்கள் கூட பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருவதாகவும் எச்சரித்தனர்.

“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்றழைக்கப்பட்ட காலத்தில், குவாண்டநாமோ ஒரு இராணுவ-சிஐஏ தடுப்பு முகாம் என்று இழிபுகழ் பெற்றிருந்தது. அங்கு உலகம் முழுவதிலுமிருந்து கடத்தப்பட்டு, கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான “பயங்கரவாத குழுக்களின்” உறுப்பினர்கள் கொடூரமான மற்றும் இழிவான சித்திரவதைகளுக்கும், துஷ்பிரயோக முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

வெள்ளை மாளிகை ஆரம்பத்தில் ஜனவரி 29 அன்று, ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. அதில், “எல்லை படையெடுப்பை நிறுத்தவும், குற்றவியல் கும்பல்களை அகற்றவும், மற்றும் தேசிய இறையாண்மையை மீட்கவும்” குவாண்டநாமோ புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் முகாமை “முழுத் திறனுடன்” விரிவாக்க உத்தரவிட்டது.

ஒரு சில நாட்களுக்குள், இராணுவ அதிகாரிகள் கியூபாவில் உள்ள குவாண்டநாமோ தளத்திற்கு கூடாரங்களை அமைக்கத் தொடங்கினர். பிப்ரவரி 4 அன்று 10 கைதிகளுடன் முதல் இராணுவ விமானம் அங்கு வந்து சேர்ந்தது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் ட்ரம்ப் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டுள்ள வெனிசுவேலாவை சேர்ந்த கும்பலான ட்ரென் டி அரகுவாவின் அறியப்பட்ட உறுப்பினர்கள் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) கூறியுள்ளது.

அதற்கடுத்த வெள்ளிக்கிழமை, தனிப்பட்ட முறையில் குவாண்டநாமோ விரிகுடாவிற்கு பயணித்த உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் கிறிஸ்டி நொயெம், “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார்: குவாண்டநாமோ விரிகுடா மிக மோசமானவர்களிலும் மோசமானவர்களைக் கொண்டிருக்கும்” என்று அறிவித்தார்.

இதுவரையில் சுமார் 50 பேர் ஐந்து இராணுவ விமானங்களில் இந்த தீவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். பென்டகன் செய்தித் தொடர்பாளரும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளருமான நோயெம் வார இறுதியில் புலம்பெயர்ந்தோர் ICE காவலில் (இராணுவத்தின் காவலில் அல்ல) “தற்காலிக தீர்வாக” வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் சொந்த நாடுகளுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் வரை, “உரிய நடைமுறை மற்றும் சர்வதேச மனிதாபிமான தரநிலைகள்” மதிக்கப்படுகின்றன என்றும் உறுதியளித்தார்.

ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றிய அனைத்து உறுதிமொழிகளும், மற்றும் கைதிகளாக இருப்பவர்கள் குண்டர் உறுப்பினர்கள் என்ற கூற்றுக்களும் அப்பட்டமான பொய்கள் என்று அம்பலப்படுவதற்கு சில மணி நேரங்களே பிடித்தன.

குவாண்டநாமோ சிறையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியின் வழக்கறிஞரான ஜே. வெல்ஸ் டிக்சன், போஸ்ட்டுக்கு விளக்குகையில், ஒரு இராணுவ தடுப்புக்காவல் மையத்தில் ICE காவலின் கீழ் வைக்கப்பட்டிருப்பது உண்மையானதல்ல என்று விளக்கினார். நாடுகடத்தப்படுபவர்கள் அனுப்பப்படும் முகாம் 6, “இராணுவ தடுப்புக்காவலுடன் பிரிக்கவியலாமல் பின்னிப்பிணைந்துள்ளது” என்று குறிப்பிட்டார். தற்போதுள்ள சட்டத்தின்படி, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே இராணுவக் காவலில் வைக்கப்பட முடியும்.

இந்த சிறைச்சாலை, “கைதிகளை உளவியல் ரீதியாக சிதைப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று டிக்சன் மேலும் கூறினார். நேர்காணல் செய்யப்பட்ட மற்றவர்கள் குவாண்டநாமோவில் உள்ள சுகாதாரமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை எடுத்துரைத்தனர். மேலும் புலம்பெயர்ந்தோர் மற்றும் இராணுவத் தளங்களின் ஒருங்கிணைந்த கொள்ளளவு 220 என்று குறிப்பிட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ட்ரென் டி அரகுவா கும்பலுடன் புலம்பெயர்ந்தோர் தொடர்பு வைத்திருப்பதாக பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு எழுந்த புகாருக்கு பதிலளிக்கும் விதமாக, மூன்று வெனிசுலா ஆண்களை குவாண்டனாமோவிற்கு நாடு கடத்துவதை அமெரிக்க மத்திய கூட்டாட்சி நீதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார்.

இறுதியாக, Migrant Insider என்ற பத்திரிகை, குவாண்டநாமோவிற்கு முதல் விமானத்தில் சென்ற 10 கைதிகளில் ஒருவர் சட்டபூர்வமாக வெனிசுவேலாவை சேர்ந்த தஞ்சம் கோரும் லூயிஸ் ஆல்பெர்டோ காஸ்டிலோ ரிவேரா ஆவார் என்பதை அம்பலப்படுத்தியது. அவருக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை. ஆனால், கிரீடத்துடன் கூடிய ஏர் ஜோர்டான் சின்னத்தை பச்சை குத்தியதற்காக ஒரு குண்டர் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, 23 வயதான அந்த நபர் குவாண்டநாமோ சிறைக்கு அனுப்பப்பட்டதை அவரது உறவினர்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மூலம் கண்டுபிடித்தனர். அதற்கு ஒரு நாள் முன்புதான், பெப்ருவரி 3 அன்று, தஞ்சம் கோரும் விசாரணை நிலுவையில் இருப்பதால் அமெரிக்காவிற்குள் விடுவிக்கப்படப் போவதாக அவர் தொலைபேசி அழைப்பில் தெரிவித்திருந்தார்.

இதை எழுதிக் கொண்டிருக்கையில், அவர் புளோரிடாவில் உள்ள பாதுகாப்பு ஏஜென்சியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை ICE வலைத் தளம் எடுத்துக்காட்டுகிறது. இது, பதிவுகள் சிதைக்கப்படுவதாகவும், கைதிகளைக் கண்காணிக்கும் திறன் நீக்கப்படுவதாகவும் எச்சரிக்கையை எழுப்புகிறது.

சட்டபூர்வ அந்தஸ்து என்னவாக இருந்தாலும், அமெரிக்காவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு கூர்மையான எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்: ட்ரம்ப் நிர்வாகத்தால் குறிவைக்கப்பட்ட எவரும் எந்த அடிப்படையிலும் கைது செய்யப்படலாம். வெளிப்படைத்தன்மை முழுமையாக இல்லாத நிலையில், இவர்கள் புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்ற கூற்றைக் கூட நம்ப முடியாது.

மேலும், அரசியலமைப்பு ரீதியான நடைமுறையை முற்றிலுமாக புறக்கணித்து, வரம்பற்ற நிர்வாக அதிகாரங்களை நாடுவதாக ட்ரம்ப் நிர்வாகம் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

எல் சால்வடோரின் பாசிச ஜனாதிபதி நயிப் புகெலே அமெரிக்க குற்றவாளிகளை அதன் பரந்த “பயங்கரவாத தடுப்புக்காவல் மையத்தில்” அடைத்து வைக்க முன்வந்ததை அடுத்து, அமெரிக்க குடிமக்களை எல் சால்வடோருக்கு நாடு கடத்துவதற்கான அப்பட்டமான, அரசியலமைப்பிற்கு முரணான சாத்தியக்கூறை ட்ரம்ப் தானே மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். அங்கு ஏராளமான சித்திரவதைகள் மற்றும் கைதிகளின் இறப்புகள் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த செவ்வாயன்று, “இந்த விலங்குகளை நம் நாட்டில் இருந்து வெளியேற்றி, யாரோ ஒருவரின் மேற்பார்வையின் கீழ் வேறு ஒரு நாட்டில் வைக்க முடியும்” என்று நம்புவதாக ட்ரம்ப் கூறினார். மேலும், “இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடுகடத்தப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்ட “இந்த மக்களின்” கால எல்லையை ட்ரம்ப் தெளிவுபடுத்தாத அதேவேளையில், தனது அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகளை எதிர்ப்பவர்களை, விசாரணை செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று ட்ரம்ப் பலமுறை தெரிவித்து வந்துள்ளார்.

புலம்பெயர்ந்தவர்களின் ஆபத்தான “படையெடுப்பு” என்ற முழு வெட்கக்கேடான கட்டமைப்பையும், தொழிலாளர் வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த போரை நியாயப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் குவாண்டநாமோ சிறைக்கு புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதையோ அல்லது ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான பொதுவான உந்துதலையோ எதிர்க்க ஜனநாயகக் கட்சி மறுத்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் ட்ரம்பின் அமைச்சரவை நியமனதாரர்களை காங்கிரஸ் உறுதிப்படுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினர் முக்கிய வாக்குகளை வழங்கியது மட்டுமல்லாமல், குவாண்டனாமோ உட்பட ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலின் பெரும்பகுதியைத் தயாரிப்பதற்கு, முந்தைய ஜனநாயக் கட்சி நிர்வாகங்களும் நேரடியான பொறுப்பாளிகளாக இருந்திருக்கின்றன.

1990 களில், பில் கிளிண்டனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் பல்லாயிரக்கணக்கான ஹைட்டிய மற்றும் கியூப புலம்பெயர்ந்தோரை குவாண்டனாமோ கடற்படை தளத்தில் தடுத்து வைத்தது. இது அவருக்கு முன்பு பதவியில் இருந்த குடியரசுக் கட்சிக்காரர் ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்ஷின் கீழ் தொடங்கிய ஒரு கொள்கையை விரிவுபடுத்தியது. அதே நேரத்தில் பாரக் ஒபாமா குவாண்டநாமோ சிறை வளாகம் முழுவதுமாக மூடப்படும் என்று உரத்த குரலில் அறிவித்த உறுதிமொழியை கைவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், குவாண்டநாமோ புலம்பெயர்ந்தோர் செயல்பாட்டு மையத்தை (“GMOC”) விரிவுபடுத்துவதற்காக பைடென் நிர்வாகம் அகிமா உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பரில் சர்வதேச அகதிகள் உதவித் திட்டம் (IRAP) வெளியிட்ட அறிக்கை, புலம்பெயர்ந்தோரை “மனிதாபிமானமற்ற” நிலைமைகளில் காலவரையின்றி ரகசியமாக வைத்திருப்பதை அம்பலப்படுத்தியது.

அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம் கரீபியனின் மத்தியில் உள்ள கூடார வதை முகாம்களுக்கு கைதிகளை இழுத்துச் செல்கையில், தொழிலாளர்கள் அறிந்திருக்க வேண்டிய ஏராளமான வரலாற்று முன் உதாரணங்கள் உள்ளன.

ஜனவரி 1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களுக்குள், ஒரு முன்மாதிரியாக, முதலாவது சித்திரவதை முகாம் ஜேர்மனியிலுள்ள டக்காவோவில் திறந்து வைக்கப்பட்டது. இது, ஆரம்பத்தில் அரசியல் எதிரிகளை, முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை சிறையில் அடைத்து வைக்க பயன்பட்டது. பின்னர் யூதர்கள், பிற சிறுபான்மையினர் மற்றும் நாஜிக்களால் குறிவைக்கப்பட்ட மற்றவர்களை சிறையில் அடைக்க விரிவுபடுத்தப்பட்டது.

1970 கள் மற்றும் 1980 களில், அமெரிக்காவுக்கு அருகிலுள்ள தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பெரும்பகுதி எங்கிலும் பாசிச இராணுவ சர்வாதிகாரங்களை நிறுவுவதற்காக, அமெரிக்கா அதற்கு ஆதரவளித்தது அல்லது நேரடியாகத் தலையீடு செய்ய திட்டமிட்டது. இந்த பாசிசவாத இராணுவ சர்வாதிகாரங்கள் நூறாயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடதுசாரிகளை கடத்தி, சித்திரவதைகளை மேற்கொண்டு படுகொலை செய்தன. இந்த நடைமுறை இப்போது பரவலாக “காணாமல் ஆக்குதல்கள்” என்று அறியப்படுகிறது.

சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோச்சேவின் கீழ் இருந்த சித்திரவதை கூடாரங்கள், முன்னாள் நாஜி அதிகாரிகள் மற்றும் சிஐஏ “ஆலோசகர்களுடன்” நெருக்கமான ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட மிகவும் இழிவான சித்திரவதை முறைகளைப் பயன்படுத்தின. ஜேர்மனியைப் போலவே, தென் அமெரிக்கா முழுவதிலும் இருந்த தடுப்புக்காவல் வதை முகாம்கள் பெரும்பாலும் அடிமை உழைப்புக்கு பயன்படுத்தப்பட்டன.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” மேலும் மேம்படுத்தப்பட்ட இந்த திரட்டப்பட்ட “அறிவைப்” பயன்படுத்தி, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உடனடி மற்றும் ஏற்கனவே வெளிப்பட்டுவரும் பாரிய எதிர்ப்பை முன்கூட்டியே அடக்குவதற்கு, அமெரிக்க தன்னலக்குழு முயற்சிக்கும் ஒரு தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்து இன்று உள்ளது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக மட்டுமல்லாமல், முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தின் வளர்ச்சியை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்து வருகிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், அதை உருவாக்கும் அமைப்புமுறையான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, அதைக் கட்டியெழுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.