மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு, காங்கிரஸில் டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை, ஒரு ஜனாதிபதியிடம் இருந்து வந்த ஒரு உரையாக இல்லை. மாறாக, ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு முன்னால் ஹிட்லர் வழங்கிய உரையை விட சற்றே குறைந்த அலங்காரத்துடன், அதில் ஆர்வமுள்ள ஃபியூரரின் ஆவேசமாக இருந்தது. இந்த உரையானது, கொடூரமான, வன்முறையான மற்றும் ஒழுக்கக்கேடானதாக இருந்ததோடு, அமெரிக்காவின் கலாச்சார மற்றும் அரசியல் சீரழிவின் ஆழத்தை வெளிப்படுத்தியது.
முந்தைய காலகட்டத்தில், அமெரிக்க அரசியலில் பாசிச எல்லையை சேர்ந்ததாக அடையாளம் காணப்பட்டிருக்கக்கூடிய அனைத்துத் தொனிகளும் அதன் மையத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. தன்னலக்குழுக்களின் அரசாங்கத்தின் உருவகமான ட்ரம்பின் பில்லியனர்களின் அமைச்சரவை, குடியரசுக் கட்சி செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, ட்ரம்பின் ஒவ்வொரு வாக்கியத்தின் போதும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்று, “அமெரிக்கா! அமெரிக்கா!” என்று மீண்டும் மீண்டும் கோஷமிட்டனர்.
ட்ரம்ப் உமிழ்ந்த அத்தனை பொய்களையும் அம்பலப்படுத்த முயற்சிப்பது அவரது கருத்துக்களை ஏதோவொரு வகையில் கண்ணியப்படுத்துவதாக இருக்கும். அவரது உரை, தீவிர ஆய்வுக்கு உகந்த உரை அல்ல. மாறாக, பன்றியின் கத்தல்களும் நாயின் குரைப்புமாக தொடர்ச்சியாக இருந்தன. இப்படி கூறுவதற்கு இந்த அறிவார்ந்த பாலூட்டிகளிடம் தேவையான மன்னிப்பு கேட்க வேண்டும்.
இது டி.வி நேரடி நிகழ்ச்சிக்கும் அரசியல் காட்சிக்கும் இடையிலான ஒரு கோரமான திருமணமாகும். தனிப்பட்ட துயரங்களை வெறித்தனமாக சுரண்டிக் கொண்ட ட்ரம்ப், புலம்பெயர்ந்தோர் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளை குறிவைத்து, அதிக அரசு வன்முறையைக் கோருவதற்காக பாதிக்கப்பட்டவர்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, கேமராக்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்.
இவை அனைத்திற்கும் கீழே, ஒரு கருப்பொருள் தெளிவாக இருந்தது: ட்ரம்பின் உரை உலகத்தின் மீதும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் ஒரு போர்ப் பிரகடனமாக இருந்தது. அது தனது செல்வத்தையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள எதையும் நிறுத்தாத ஒரு தன்னலக்குழுவின் அறிக்கையாக இருந்தது.
ட்ரம்ப் கட்டுப்பாடற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைத்தார். அது, அமெரிக்கா எந்தவொரு கூட்டணிகள், ஒப்பந்தங்கள் அல்லது சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்படாது. அது, மூன்றாம் உலகப் போர் மற்றும் பாசிசத்திற்கு நேரடியாக இட்டுச் செல்லும் ஒரு பாதையான, வர்த்தகப் போர் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக அதன் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க உத்தேசித்துள்ள ஒரு ஆளும் வர்க்கத்தின் ஒரு அறிக்கையாக இருந்தது.
ட்ரம்பின் பொருளாதார தேசியவாதத்தின் மையத்தில் பெரும் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் இருந்தன. மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவை இலக்கில் வைக்கும் பாரிய புதிய வரிவிதிப்புகள் அமெரிக்க வேலைகளைப் பாதுகாக்கும் என்றும், விலைகளைக் குறைக்கும் என்றும் அவர் அபத்தமாக வாதிட்டார். யதார்த்தத்தில், இந்த நடவடிக்கைகள் பாரிய பணிநீக்கங்களையும், விலைவாசி உயர்வுகளையும் தூண்டிவிடும்.
தன்னிறைவு பெற்ற “அமெரிக்க கோட்டை” என்ற ட்ரம்பின் பார்வை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறை வெடிப்பிலிருந்து விளைகிறது. பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்றுவதற்கான தனது உறுதிமொழியை அவர் மீண்டும் கூறினார். இது, லத்தீன் அமெரிக்காவில் இராணுவத் தலையீட்டுக்கான வெளிப்படையான அச்சுறுத்தலாகும். “நமது தெற்கு எல்லைக்கு அருகிலுள்ள உள்ள பிராந்தியம்” என்று அவர் அழைத்த மெக்சிகோ, “முற்றிலுமாக குற்றகரமான போதைப்பொருள் கடத்தல்காரர்களால் மேலாதிக்கம் செலுத்தப்படுவதாக” அறிவித்தார். இது, போருக்கான ஒரு மறைமுகமான நியாயப்படுத்தலாகும். கிரீன்லாந்தை “ஏதோவொரு வகையில்” அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என்ற அழைப்புகளை அவர் புதுப்பித்தார்.
ட்ரம்ப், தனது நிர்வாகம் மத்திய கிழக்கில் “மிகவும் அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்தை” கொண்டு வரும் என்று வாதிட்டார்—காஸாவில் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட பத்தாயிரக் கணக்கானவர்களின் எலும்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒரு அமைதி, இது அவரது முன்னோடியால் முழுமையாக ஆதரிக்கப்பட்டு, இப்போது ட்ரம்பால் அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த உரை சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பராமரிப்பு, மருத்துவ உதவி இன்னும் பிற சமூகநலத் திட்டங்கள் மீதான வரலாற்றுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் பொய்களால் பிணைக்கப்பட்டிருந்தது. இதன் நோக்கம், மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் ஆழ்த்தும் அதே வேளையில், பணக்காரர்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் வரி விலக்குகளை வழங்குகிறது.
சமூகப் பாதுகாப்பு அமைப்பில் நடந்ததாகக் கூறப்படும் மோசடியை கடுமையாக சாடிய ட்ரம்ப், நலன்புரி சலுகைகளில் பாரிய வெட்டுக்களுக்கு வழி வகுக்கும் வகையில், துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் அபத்தமான மற்றும் ஜோடிக்கப்பட்ட உதாரணங்களை நீண்ட நேரம் மேற்கோள் காட்டினார். இலக்கு தெளிவாக இருந்தது: அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்புகளில் எஞ்சியிருக்கும் கடைசி தூண்களில் ஒன்றை அகற்றுவதே அந்த இலக்காகும்.
அதேநேரத்தில் ட்ரம்ப், தனது நிர்வாக உத்தரவுகளின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான கூட்டாட்சி அரசு தொழிலாளர்களை “தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரத்துவவாதிகள்” என்று வகைப்படுத்தி, அரசு தொழிலாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்ததாக பெருமை பீற்றிக்கொண்டார். வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை அழிப்பது “அமெரிக்க வரி செலுத்துவோருக்கு” ஒரு வெற்றி என்று அவர் அறிவித்தார். “சதுப்பு நிலத்தை வடிகட்டுவதற்கான” தனது உந்துதலின் ஒரு பகுதியாக, பெருமளவிலான பணிநீக்கங்களை அவர் முன்வைத்தார்.
இதில் உள்ள முரண்நகை சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது: உலகின் மிகப் பெரிய செலவந்தரும், அனைவரையும் விட “தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரத்துவவாதியுமான” எலோன் மஸ்க், ட்ரம்பின் அரசாங்கத் திறன் துறையின் (DOGE) தலைவராக இருந்து, இந்த பாரியளவிலான பணி நீக்கங்களுக்கு தலைமை தாங்கிக்கொண்டு, தனது அருவெறுக்கத்தக்க புன்னகையுடன் காங்கிரசில் கலந்து கொண்டார்.
ஜனநாயகக் கட்சியின் முழுமையான கோழைத்தனத்தையும் உடந்தையையும் சேர்க்காமல், இந்த நடவடிக்கைகள் பற்றிய எந்த விளக்கமும் முழுமையடையாது. ட்ரம்ப் மீண்டும் மீண்டும் அவர்களைக் கண்டித்த நிலையில், அங்கு கூடியிருந்த ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களும், பெண்களும் இளஞ்சிவப்பு சட்டைகளை அணிந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறிய அட்டைகளை ஏந்தியிருந்துகொண்டு, தங்கள் இருக்கைகளில் செயலற்ற நிலையில் அமர்ந்தனர்.
அவர்களின் சொந்த உறுப்பினர்களில் ஒருவரான பிரதிநிதி அல் கிரீன், ட்ரம்பின் கருத்துக்களை எதிர்த்ததற்காக அவையில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போதும் கூட, ஜனநாயகக் கட்சியினர் எதுவும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் கீழ் கலந்து கொண்டனர் என்ற உண்மையே கூட முதுகெலும்பற்ற தன்மையின் ஒரு முன்னெச்சரிக்கை அறிக்கையாகும்.
அவர்களின் தீவிர ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் காட்சி நடந்திருக்க முடியாது. ட்ரம்பின் பின்னால் நின்றவர் (சபைத் தலைவர் மைக் ஜோன்சன்) கடந்த ஆண்டு உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போருக்கு நிதியளிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஜனநாயகக் கட்சியினரின் வாக்குகளுடன் பதவியில் தக்கவைக்கப்பட்டார் என்பதை ஒருவர் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
ட்ரம்ப் பேசுவதைப் பார்த்த மில்லியன் கணக்கான மக்கள் வாந்தி எடுக்கும் வகையில் வெறுப்படைந்தனர். ஆனால், அவரது பாசிசக் கருத்துக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்த்தவர்கள், ஜனநாயகக் கட்சி ஸ்தாபனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மதிப்பு குறைந்த நபரான எலிசா ஸ்லாட்கினின் வெற்று, பிற்போக்குத்தனமான முட்டாள்தனத்தை எதிர்கொண்டனர்.
புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் சேவையாற்றிய ஒரு சிஐஏ முகவராக தனது நற்சான்றுகளை பிரகடனப்படுத்தி பேசத் தொடங்கிய ஸ்லாட்கின், கட்சியின் உத்தியோகபூர்வ மறுப்பை வழங்கினார். ட்ரம்பிற்கு எதிரான தனது எதிர்ப்பை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அல்லது தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றியது அல்ல, மாறாக வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள், குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரான போர் மீது மையப்படுத்தினார். முந்தைய நிர்வாகத்தால் உக்ரேனுக்கு ஒதுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன்களை ட்ரம்ப் குறிப்பிட்டபோது, புலம்பெயர்ந்தோர் மற்றும் சமூக நலத் திட்டத்திற்கு எதிரான அவரது கண்டனங்களின் போது அமைதியாக அமர்ந்திருந்த ஜனநாயகக் கட்சியினர் கைதட்டி பாராட்டினர்.
சமூகநலத் திட்டங்களை குழிதோண்டிப் புதைத்து சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அணுஆயுதப் போர் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்திய ஜனாதிபதி ரோனால்ட் ரீகனை ஸ்லாட்கின் வெளிப்படையாக முன்மாதிரியாகக் குறிப்பிட்டார். “பனிப்போர் காலத்தில் ஒரு சிறுமியாக, 1980களில் ட்ரம்ப் அல்ல, ரீகன் பதவியில் இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் அறிவித்தார்.
ரீகன், “அவரது கல்லறையில் புரண்டு படுத்திருப்பார்” என்று ஸ்லாட்கின் கூறினார். இதில், வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் உயிருள்ள “எதிர்க்கட்சியை” விட இறந்த ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் இருப்பதாக அவர் கூறினார். “உரிமைத் திட்டங்களில் வீணாவதைக் வெட்டிக் குறைப்பதை ஜனநாயகக் கட்சியினர் அனைவரும் ஆதரிக்கிறார்கள்” என்றும், அது “குழப்பமாக இருக்கக்கூடாது” என்பதை மட்டுமே வலியுறுத்துவதாகவும் ஸ்லாட்கின் மேலும் கூறினார். அதாவது, ஒரு சமூக வெடிப்பைத் தவிர்க்கும் விதத்தில் அது செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே அவர் வலியுறுத்தினார்.
ஊடகங்களைப் பொறுத்த வரையில், ட்ரம்பின் உரையை ஏதோவொரு வகையான நியாயமான அரசியல் விவாதத்தின் பாகமாக வழமைப்படுத்த அதனால் முடிந்த அனைத்தையும் செய்தது. CNN இன் ஜேக் டேப்பர் அதன் “மனதைத் தொடும் தருணங்களைப்பற்றி” குறிப்பிட்டார். ஒருவர் என்ன சொல்ல முடியும்?
செவ்வாய்க்கிழமை இரவு அரசியல் பாதாள உலகம் அதிகாரத்தில் இருப்பது அம்பலத்திற்கு வந்தது. — அது, சமூகத்தை ஆளும் அமெரிக்க தன்னலக்குழுவின் சுய உருவமாக உள்ளது. ட்ரம்ப் ஒரு தேர்வு செயல்முறை மூலம் உச்சத்திற்கு உயர்ந்துள்ளார். அதில், அவரது தனிப்பட்ட ஊழல், மோசடி மற்றும் குற்றவியல் தன்மை ஆகியவை பொருத்தமான சொத்துக்களாகும். ஜனநாயகக் கட்சியின் முதுகெலும்பற்ற தன்மை, அதுவும் அதே நிதி உயரடுக்கால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை பிரதிபலிக்கிறது.
“அமெரிக்க கனவை” புதுப்பித்தல் என்ற ஒரு புதிய “பொற்காலம்” குறித்த ட்ரம்பின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் இடையே, ட்ரம்பின் கருத்துக்கள், வன்முறை மற்றும் சர்வாதிகாரம் இல்லாமல், இனியும் ஆட்சி செய்ய முடியாத ஒரு ஆளும் வர்க்கத்தின் மரண ஓலமாக இருந்தன.
எதிர்ப்பு வெளிப்படும், உண்மையில் அது ஏற்கனவே வெளிப்பட்டு வருகிறது. பாரிய வேலைநீக்கங்கள், சமூகப் பேரழிவு மற்றும் ட்ரம்பின் பாசிச நிகழ்ச்சி நிரல் மீதான கோபம் என்பன அதிகரித்து வருகிறது. சர்வாதிகாரம், தன்னலக்குழு, பாசிசம் மற்றும் போருக்கு எதிராகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கமாக இது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டங்கள் பிரிக்க முடியாத, ஒரே அடிப்படைப் பிரச்சினையில் வேரூன்றியுள்ளன: அது முதலாளித்துவ அமைப்புமுறையாகும்.