மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நிறப்பாகுபாட்டை சமாதானமான முறையில் தூக்கி எறிவதற்கான வார்த்தையளவிலான தீவிர பிரதிநிதி முன்னாள் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு டிசம்பர் 26 அன்று தனது 90வது வயதில் காலமானார்.
பல்வேறு ஏகாதிபத்திய அயோக்கியர்கள் அவரை ஒரு உத்வேகமானவராக அறிவித்தபோது, பாசாங்குத்தனத்தின் ஒரு அலை கட்டவிழ்த்து விடப்பட்டது. தென்னாபிரிக்காவின் 'தார்மீக திசைகாட்டியின்' 'கிறிஸ்தவ மதிப்புகள்' 1994 இல் கறுப்பின பெரும்பான்மை ஆட்சிக்கான சமாதானமான மாற்றத்தை உறுதிப்படுத்த உதவியதாக அவை குறிப்பிட்டன.
ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசியல் முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் டுட்டுவின் மதரீதியான தார்மீகம் மூடிமறைத்தது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) தலைவர் சிரில் ராமபோசா, டுட்டுவை 'உலகளாவிய சின்னம்' மற்றும் 'சிறந்த தார்மீக மனிதன்' என்று விவரித்தார். அவர் ஏழு நாட்கள் உத்தியோகபூர்வ துக்க அனுஸ்டானத்துடன் கேப் டவுனில் உள்ள செயின்ட ஜோர்ஜ் தேவாலயத்தில் இரண்டு நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அரசாங்க இறுதிச் சடங்கினை ஒழுங்கு செய்தார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், டுட்டுவின் மரணத்தால் தான் 'மிகவும் வருந்துவதாக' கூறினார். 'நிறவெறிக்கு எதிரான போராட்டத்திலும், புதிய தென்னாபிரிக்காவை உருவாக்கும் போராட்டத்திலும் ஒரு முக்கியமான நபர்' என்று விவரித்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா டுட்டுவை 'எனக்கும் இன்னும் பலருக்கும் ஒரு வழிகாட்டி, நண்பர் மற்றும் தார்மீக திசைகாட்டி' என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஜோ பைடென் அவரை 'கடவுள் மற்றும் மக்களின் உண்மையான ஊழியர்' என்று கூறி அவருடைய 'தைரியமும் தார்மீக தெளிவும் தென்னாபிரிக்காவில் அடக்குமுறை நிறப்பாகுபாட்டு ஆட்சியை நோக்கிய அமெரிக்க கொள்கையை மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை ஊக்குவிக்க உதவியது' என்றார்.
1980 களில் கறுப்பினத்தவரின் நகரங்களில் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நாட்டை உள்நாட்டுப் போரின் விளிம்பிற்கு கொண்டு சென்றபோது ஜனாதிபதி P.W. போத்தாவின் கொடூரமான நிறவெறி முதலாளித்துவ ஆட்சி தத்தளித்தது கட்டுப்பாட்டை இழக்கும் ஒரு அங்குலத்திற்கு அருகாமையில் வந்தபோது, 1980 களில் தென்னாபிரிக்காவில் முதலாளித்துவ உறவுகளை பாதுகாப்பதில் திருச்சபையின் இந்த மனிதர் ஆற்றிய பங்கைத்தான் அவர்கள் உண்மையில் பாராட்டினர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (COSATU) மற்றும் ஸ்ராலினிச தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இந்த சாத்தியக்கூறுதான் உண்மையில் வெள்ளை சிறுபான்மை ஆட்சியின் நிறவெறி ஆட்சிக்கான பாதுகாப்பை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் கைவிடுமாறு நம்ப வைத்தது. இந்த புதிய அரசியல் உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டபோது, டுட்டு ஒரு மதிப்புமிக்க இடைத்தரகர் ஆனார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட ராபன் தீவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டுட்டுவை தென்னாபிரிக்கா மற்றும் கண்டம் முழுவதிலும் உள்ள சமூகப் புரட்சியின் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாக கண்டார்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மக்கள் முன்னணி அரசியலில் ஒரு முக்கிய நபர்
அவரது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஆசிரியரான பின்னர், டுட்டு 1961 இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார் மற்றும் ஆறு ஆண்டுகள் பிரிட்டனில் படித்து வேலை செய்தார். அங்கு அதற்காக அவர் புகழ்பெற்ற புனிததோற்றமுடைய ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டார். தென்னாபிரிக்காவுக்கு திரும்பிய அவர், தேவாலயப் படிநிலையின் மூலம் உயர்ந்து 1978 இல் தென்னாபிரிக்க தேவாலய சபையின் பொதுச் செயலாளராக ஆனார்.
1980 களில் கறுப்பின இளைஞர்களுக்கும் படையினருக்கும் இடையே அதிகரித்துவரும் உயிராபத்தான மோதல்களுக்கு மத்தியில் வன்முறையைப் பயன்படுத்துவதை எதிர்த்து, நிறப்பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியாக வன்முறையற்ற எதிர்ப்புகளையும் சமரசத்தையும் டுட்டு ஏற்றுக்கொண்டார். அவர் படைகளுக்கும் நகரங்களை ஆட்சிபுரிய முடியாததாக்கிய எதிர்ப்பாளர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்தார். வன்முறையற்ற, ஜனநாயக மாற்றத்தை கொண்டு வருவதற்கு வெளிநாடுகளின் அழுத்தத்தை பிரயோகிக்கும் வழிமுறையாக தென்னாபிரிக்கா மீதான புறக்கணிப்பு மற்றும் தடைகளை அவர் ஆதரித்தார்.
டுட்டு, ஸ்ராலினிச இரண்டு-கட்ட தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கு நெருக்கமாக இருந்தார். அதன் அரசியல் முன்னோக்கு நிறப்பாகுபாட்டிற்கு முடிவிற்கு கொண்டுவருவது ஒரு ஜனநாயகப் புரட்சி என்றும் மற்றும் சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கு முன்னரான ஒரு தனித்த மற்றும் அவசியமான கட்டம் என்று அறிவித்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நோக்கம் தனது வெள்ளை இன பங்காளிகளுடன் இணைந்து குறைந்த பொருளாதார பலத்தைக் கொண்டிருந்தாலும் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு கறுப்பு முதலாளித்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஸ்ராலினிச நிலைப்பாடு, நீண்ட காலமாக மாஸ்கோவால் கட்டளையிடப்பட்டதுடன் மற்றும் மார்க்சிசத்திற்கும் சர்வதேச சோசலிசத்திற்கும் எதிரானதும் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நோக்கத்தை கைவிட்டதுமாகும். ட்ரொட்ஸ்கி, தனது நிரந்தரப் புரட்சிக் தத்துவத்தில், ஏகாதிபத்திய சகாப்தத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதலாளித்துவப் புரட்சியுடன் தொடர்புடைய ஜனநாயகப் பணிகளை உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே பூர்த்திசெய்யப்பட முடியும் என்று விளக்கினார்.
இதற்கு எதிராக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சியின் கொள்கையை முன்னெடுத்தது. அது அடிப்படையில் முதலாளித்துவ அரசு அமைப்பை அரசியல் சீர்திருத்தம் செய்யும் ஒரு வேலைத்திட்டமாகும். இந்த நோக்கத்திற்காக அவர்கள் தென்னாப்பிரிக்காவிற்குள்ளேயே முதலாளித்துவ வர்க்கம் உட்பட அனைத்து வர்க்கங்கள் மத்தியிலும் 'முற்போக்கு' சக்திகள் என்று கூறப்படும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்திய அரசுகளிலும் கூட்டணிகளை உருவாக்க முற்பட்டனர். இவை அனைத்தும் கறுப்பினத் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட சோசலிச சொல்லாடல்களால் அலங்கரிக்கப்பட்டன.
ஆங்கிலிகன் திருச்சபையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான டுட்டு, தென்னாபிரிக்காவின் மற்ற தேவாலயங்களுடன் சேர்ந்து நிறப்பாகுபாட்டு ஆட்சிக்கு மறைமுக ஆதரவைக் கொடுத்து இந்த போலியான முன்னோக்கை உருவகப்படுத்தினார். 1980களில், மண்டேலா மற்றும் ஜேக்கப் ஜூமா போன்ற பெரும்பாலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததால் அல்லது தபோ எம்பெக்கி மற்றும் ஒலிவர் தம்போ போன்றவர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்ததால், பல கறுப்பின தென்னாபிரிக்கர்கள் டுட்டுவை நிறப்பாகுபாட்டு எதிர்ப்பு இயக்கத்தின் பகிரங்க நபராக கண்டனர்.
இந்த சுய-விளம்பர மற்றும் காற்றடைத்த பையானது நிறப்பாகுபாட்டு எதிர்ப்பு இயக்கத்தின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவராக ஆனார். குறிப்பாக அமெரிக்காவில், அவர் உத்தியோகபூர்வ கம்யூனிச எதிர்ப்பு மற்றும் அவரது பாதிரியார் ஆடைகளால் பயனடைந்ததுடன் மற்றும் பெரும்பாலும் மார்ட்டின் லூதர் கிங்குடன் ஒப்பிடப்பட்டார்.
1984 ஆம் ஆண்டில், 'தென்னாபிரிக்காவில் நிறப்பாகுபாட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பிரச்சாரத்தில் ஒரு ஐக்கியப்படுத்தும் தலைவர்-உருவமாக அவரது பங்கிற்காக' டுட்டுவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், டுட்டு கேப் டவுனின் முதல் கறுப்பின பேராயர் ஆனார். இதன் விளைவாக தென்னாபிரிக்காவின் ஆங்கிலிகன் தேவாலயங்களின் ஆன்மீகத் தலைவராகவும், தேவாலயங்களின் அனைத்து ஆபிரிக்க மாநாட்டின் தலைவராகவும் இருந்தார். கறுப்பினத் தொழிலாளர்கள், மனிதர்களின் சகோதரத்துவத்தை தழுவ வேண்டும் என்று அவர் தனது நிலைப்பாட்டை பயன்படுத்தி வலியுறுத்திக்கொண்டு, ஜனாதிபதி போத்தாவின் மிருகத்தனமான ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்.
கறுப்பு பெரும்பான்மை ஆட்சிக்கு மாற்றம்
டுட்டுவின் மீது வாஷிங்டன் மற்றும் இலண்டன் வைத்த முதலீடு பலனளிப்பதற்கு வெகுகாலமாகவில்லை. 1989 அளவில், அப்போதைய ஜனாதிபதி F.W டி கிளார்க், சர்வதேச மற்றும் தென்னாபிரிக்க சுரங்க நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து, மண்டேலா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அரசியல் இணைப்பு மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்திற்கு உயிர்ப்பாதுகாப்பை வழங்க முடியும் என்று தயக்கத்துடன் முடிவுக்கு வந்தார். அவர்களின் உதவியின்றி, தென்னாபிரிக்காவில் முதலாளித்துவம் நிலைத்திருக்க முடியாது மற்றும் அதன் சரிவு ஏகாதிபத்திய சக்திகளின் அனைத்து முன்னாள் காலனிகளிலும் அரசியல் மற்றும் சமூக மோதல்களின் வெடிப்பைத் தூண்டியிருக்கும்.
பெப்ரவரி 1990 இல், டி கிளார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தார் மற்றும் நிறப்பாகுபாட்டு மற்றும் வெள்ளை சிறுபான்மை ஆட்சியின் முடிவிற்கு சைகை காட்டினார்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், ஆளும் தேசியக் கட்சி மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே பெரும்பான்மை ஆட்சிக்கு மாறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஏகாதிபத்தியத்தின் உரையாசிரியராக டுட்டு முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருந்தது. 27 ஆண்டுகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், மண்டேலாவுக்கு நம்பகமான வழித்தடமாக அவர் மிகவும் பயனுள்ளதாக இருந்தார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மாதங்களுக்குள், மண்டேலா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, நியூயோர்க் நகரம் மற்றும் பொஸ்டனில் வெகுஜன பார்வையாளர்கள் முன்னிலையில் பேசினார். ஜனாதிபதி ஜோர்ஜ் H. W. புஷ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் பேக்கர் ஆகியோரைச் சந்தித்து, உத்தியோகபூர்வமாக அமெரிக்காவின் தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்த போதிலும், காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றினார்.
நியூயோர்க் நகரின் முதல் ஆபிரிக்க-அமெரிக்க மேயர் டேவிட் டின்கின்ஸ், மண்டேலாவை நகரத்திற்கு வரவேற்று ஆளும் உயரடுக்கு மண்டேலாவை பாராட்டுதற்கான காரணத்தை தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், “அவரைப் போலவே நான் 27 வருடங்கள் சிறையில் இருந்திருந்தால், அவர் எப்படி நடந்துகொண்டாரோ அப்படித்தான் நான் நடத்தப்பட்டிருந்தால், எனக்குள் ஒரு கோபத்தை சுமந்திருப்பேன். ஆயினும்கூட, நெல்சன் மண்டேலாவைப் பற்றிய மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் கசப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை.
டுட்டுவின் 'வானவில் தேசம்' என்ற உருவகம் தமது வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளை மூடிமறைத்த மண்டேலா மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைமையிலான நிறப்பாகுபாட்டிற்கு பிந்தைய ஆட்சிக்கான அரசியல் முழக்கத்தை வழங்கியது.
அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின்னர், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வங்கிகள், சுரங்கங்கள் மற்றும் பெரிய தொழில்களை தேசியமயமாக்கும் வாக்குறுதிகளை கைவிட்டு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் தடையற்ற சந்தைக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் தென்னாபிரிக்காவை சர்வதேச மூலதனத்திற்கு திறப்பதற்கும் இரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. உற்பத்தியின் பூகோளமயமாக்கல், முன்னாள் சோவியத் ஒன்றியம் உட்பட, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசியல் உத்வேகத்தை வழங்கிய அனைத்து தேசியவாத ஆட்சிகளையும், பொருளாதார தன்னிச்சையான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட செய்ததுடன், நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பொருளாதார மேலாதிக்கத்தை பலப்படுத்த சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட அதே நடவடிக்கைகளை செயல்படுத்தத் தூண்டிய நிலைமைகளின் கீழ் அது அவ்வாறு செய்தது.
நிறப்பாகுபாட்டு குற்றங்களை சுத்தப்படுத்துதல்
நிறப்பாகுபாட்டிற்கு பின்னர் டுட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (TRC) தலைவராக இருந்து தென்னாப்பிரிக்க முதலாளித்துவத்திற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் மிகப்பெரிய சேவை செய்தார்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த மண்டேலா, ஆணைக்குழுவின் தலைவராக டுட்டுவை தேர்ந்தெடுத்தார். 1996 இல் அமைக்கப்பட்ட அதன் நோக்கம், நிறப்பாகுபாட்டின் கீழ் பல்லாயிரக்கணக்கான கறுப்பினத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மரணம் மற்றும் சித்திரவதைகளுக்கு காரணமானவர்கள் மீதான விசாரணைகளுக்கான பரந்த கோரிக்கைகளை திசைதிருப்பிவிடுவதாகும்.
டி கிளார்க் மற்றும் அவரது தேசியக் கட்சி முதலில் நிறப்பாகுபாட்டின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்கு பொது மன்னிப்பு கோரியது. அது இல்லாமல் பாதுகாப்புப் படைகள் கலகம் செய்யும் என்று அச்சுறுத்தியது. பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவர் ஒரு சமரசத்திற்கு ஒப்புக்கொண்டார். இதன் மூலம் 'குற்றவாளிகள் உண்மையை வெளிப்படுத்தும் நிபந்தனையின் பேரிலும் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் இருந்தன என்பதை நிரூபிக்கும்போதும் ஒரு ஆணைக்குழு தனிப்பட்ட மன்னிப்புகளை வழங்கும் முடியும்.' உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் இந்த அரசியல் மோசடிக்கான களமாக இருக்கும். மேலும் 1960 மற்றும் டிசம்பர் 1993 க்கு இடையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளின் 'துஷ்பிரயோகங்களை' கூட பக்கசார்பற்ற முறையில் விசாரணை செய்யும்.
1998 இல் வெளியிடப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் ஐந்து-தொகுதி அறிக்கையின் அறிமுகம், ஆபிரிக்காவில் 'கம்யூனிச அச்சுறுத்தல்' போல் காட்டப்பட்ட சமூகப் புரட்சியின் பயத்தால் தூண்டப்பட்ட இனவெறி பெருகிய முறையில் கொடூரமாக திணிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. நிறப்பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான முடிவு தென்னாபிரிக்காவின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜனப் புரட்சியை தடுப்பதை நோக்கமாகக் கொண்டதும் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் எடுத்த பாதை அத்தகைய புரட்சியைத் தடுக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு விளக்கியது:
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதன் ஆசிரியர்களின் நோக்கங்கள் எதுவாக இருந்தபோதிலும், நிறப்பாகுபாட்டின் மீதான குற்றச்சாட்டை விட அதிகமான ஒன்றாகும். தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கம் அவர்களின் அடக்குமுறையாளர்களுடன் கணக்குத் தீர்த்துக்கொள்வதை தடுப்பதில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆற்றிய பங்கை இது உறுதிப்படுத்துவதுடன் மற்றும் உண்மையான சமத்துவத்தை நிறுவுவதற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தின் வடிவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
அறிக்கைக்கு அவரது [டுடுவின்] அறிமுகம், ஆபிரிக்க தேசிய காங்கிரஸால் பின்பற்றப்பட்ட போக்கு ஒரு புரட்சியைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. அவர் எழுதுகிறார், 'பேச்சுவார்த்தை தீர்வு என்ற அதிசயம் நிகழவில்லை என்றால், தென்னாபிரிக்காவிற்கு தவிர்க்க முடியாத முடிவு என்று கிட்டத்தட்ட அனைவரும் கணித்த இரத்தக்களரியால் நாங்கள் மூழ்கியிருப்போம்.'
டுட்டு, பாதிக்கப்பட்டவர்களும் குற்றவாளிகளும் சித்திரவதை மற்றும் படுகொலையின் இரத்தம்தோய்ந்த விவரங்களை விவரிக்கையில் உண்மையிலேயே கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுடன் சமரசம் செய்ய அழைப்பு விடுத்தார். 1960 இல் ஷார்ப்வில் படுகொலைகள், 1976 இல் சோவெட்டோ மற்றும் 1985 இல் லங்காவில் (Langa) நடந்த கொலைகள் மற்றும் மோசமான விளாக்பிளாஸ் முகாமில் கொலைப் படைகள் உட்பட அட்டூழியங்களை ஆணையம் பட்டியலிட்டது. பெரும்பான்மையான மனித உரிமை மீறல்களுக்கு பெருவணிகத்தாலும், நீதித்துறை, ஊடகம் மற்றும் திருச்சபையின் ஆதரவுடன் ஆளும் தேசியக் கட்சி அரசாங்கமும் அதன் படைகளுமே பொறுப்பு என்று முடிவு செய்தது.
ஆயினும்கூட, அத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிப்பதை விட ஆதாரங்களை சேகரிப்பதற்கும் தகவல்களை வெளிக்கொணருவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தபோதிலும் இந்த ஆணையம் ஒரு கண்துடைப்பாகும்.
இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் எவ்வித தண்டனையுமின்றி ஆணைக்குழுவுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். 1996 ஆம் ஆண்டு வரை ஆவணங்களை அழிப்பதைத் தொடர தேசிய புலனாய்வு அமைப்பு அனுமதிக்கப்பட்டது. படைகளின் சில கீழ்மட்ட உறுப்பினர்கள் பொதுமன்னிப்பை பெறுவதற்கு ஈடாக கொலைகள் மற்றும் சித்திரவதைகளை ஒப்புக்கொண்ட அதேவேளையில், 1980கள் மற்றும் 90களின் முற்பகுதியில் உண்மையான அரசாங்கத்தை அமைத்த உள் அமைச்சரவையான அரச பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள், ஒரு அமைச்சரவை மந்திரி செய்தது போல் தமக்கு இவை பற்றி தெரியாது என்று ஏமாற்றி, நடந்தவற்றிற்கு தங்களின் கீழ் உள்ளவர்களை குற்றம் சாட்டுகின்றனர்.
1978 முதல் 1984 வரை பிரதம மந்திரியாகவும், 1980 களில் அரச பாதுகாப்பு குழுவின் தலைவரும் மற்றும் 1984 முதல் 1989 வரை ஜனாதிபதியாக இருந்த P.W. போத்தா உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை ஒரு வித்தைகாட்டல் என்று கண்டனம் செய்து மற்றும் சாட்சியமளிக்க மறுத்துவிட்டார். அதே நேரத்தில் நிறப்பாகுபாட்டு எதிர்ப்பு மற்றும் தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (COSATU) அலுவலகங்கள் மீதான குண்டுவீச்சுக்கு டி கிளார்க் உத்தரவிட்டது பற்றி இறுதி அறிக்கையில் மாற்றியமைக்கப்பட்ட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தினார்.
நிறப்பாகுபாட்டு அரசாங்கத்திற்கு எதிரான டஜன் கணக்கானோரை தூக்கிலிட்ட விளாக்பிளாஸ் கிளர்ச்சி எதிர்ப்புக் குழுவின் தளபதியான Prime Evil என்று அழைக்கப்படும் ஒய்கேன் டி கோக் (Eugene de Kok) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட மிக உயர்ந்த பதவியிலிருந்த நபர் ஆவார். இவர் 1996 இல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக 212 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
போத்தா உட்பட கொலைகார ஆட்சிக்கு தலைமை தாங்கிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தவர்கள் என இந்த அறிக்கை கண்டுபிடித்த எவரும் அவர்களின் குற்றங்களுக்காக தண்டிக்கப்படவில்லை. குவாசுலுவில் படுகொலைகளுக்கு உத்தரவிட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மேக்னஸ் மாலன் விடுவிக்கப்பட்டார். அவரை விசாரணை செய்த அரச வழக்குரைஞர், நிறப்பாகுபாட்டு ஆட்சியில் இருந்து வந்த எச்சங்களான நீதித்துறையின் பெரும்பகுதியுடன் சேர்ந்து, அரசாங்கத்தால் நடத்தப்படும் கொலைப் படைகள் எப்போதாவது இருந்தனவா என்று முன்னர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஏப்ரல் 2002 இல் கடைசி பெரிய வழக்குகளில் ஒன்றான “டாக்டர். கொலை” என்று அறியப்பட்ட அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை சேவைகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் இரசாயன மற்றும் உயிரியல் போர் திட்டத்திற்கு தலைமை தாங்கிய டாக்டர். வோட்டர் பாஸனுக்கு (Dr. Wouter Basson) எதிரானது தோல்வியடைந்தது. அதன் திட்டங்கள் கறுப்பின மக்களை மட்டுமே குறிவைத்து, மண்டேலாவுக்கு விஷம் கொடுத்து, கறுப்பினப் பெண்களின் கருவுறுதலைக் குறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களில் சிலர் அல்லது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தினால் பொதுமன்னிப்பு மறுக்கப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. முன்னாள் சட்டத்திற்கும் ஒழுங்கிற்குமான அமைச்சர் அட்ரியன் வ்லோக் உட்பட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றத்திற்கு புறம்பாக செயல்முறை மூலம் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது. 'மனித உரிமைகளை மீறும் நபர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று இவ்வறிக்கை அழைப்புவிட்டுள்ளது. ஆனால் 'இந்த நடவடிக்கையை தொடர பரிந்துரைக்க வேண்டாம் என்று ஆணைக்குழு முடிவு செய்துள்ளது' என்று அறிக்கை கூறியது.
இறுதியாக, இனப்பாகுபாடு மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முடிவு செய்த போதிலும், இனப்பாகுபாட்டுக் குற்றத்திற்காக எவர்மீதும் வழக்குத் தொடரப்படவில்லை. இருந்தபோதிலும், டுட்டுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு தென்னாபிரிக்க மக்களுக்கு மண்டேலா அழைப்பு விடுத்தார்.
தென்னாபிரிக்காவின் 'தார்மீக திசைகாட்டி' குற்றவாளிகளை பாதுகாப்பதை இனப்பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விலையாகக் கருதுகின்றார். தண்டிக்கும் வழக்குகள் பற்றி பேசுகையில், 'நிகழ்வுகளின் இயல்பிலேயே மிகவும் வலுவான உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளைப் பற்றி கேட்பதற்கு பல வருடங்களை ஒதுக்குவது எதிர்விளைவுள்ளதாகவே இருந்திருக்கும். அது மிக நீண்டகாலத்திற்கு படகை பாரியளவில் உலுக்கியிருக்கும்'.
1999 இல் டுட்டு ஓய்வு பெற்றதைக் குறிக்கும் ஒரு நன்றி செலுத்தும் சேவையில், மண்டேலா அவருடைய பங்கு மற்றும் திருச்சபையின் பங்குக்கு அஞ்சலி செலுத்தி பின்வருமாறு குறிப்பாட்டார். 'ஆர்ச் பிஷப் டுட்டு நமது வானவில் தேசத்தைக் கொண்டாடுவது மற்றும் அவரின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சக்திவாய்ந்த குணப்படுத்தும் வழிகாட்டுதல் ஆகியவற்றினால் நம் தேசத்தை நல்லிணக்கப்படுத்தும் இந்த மிக முக்கியமான பணியில் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கின்றார்” என்றார்.
டுட்டுவின் மரபு: அரசாங்கத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
முன்னாள் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது 'உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் ... மனித உரிமைகளை மதிக்கும் கலாச்சாரத்தால் குணாதிசயப்படுத்தப்படும் ஒரு புதிய மற்றும் ஜனநாயகக் காலகட்டம்' என்று டுட்டு மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உறுதியளித்தனர்.
ஆனால் உலக சோசலிச வலைத் தளம் சரியாக முன்னறிவித்தபடி:
மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் தென்னாபிரிக்காவில் இனப்பாகுபாட்டு ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க எதுவும் செய்யவில்லை. உண்மை என்னவெனில், அது வாதிடும் நல்லிணக்கம் சாத்தியமற்றது. ஏனெனில், நிறவெறியின் முடிவால் வழங்கப்பட்ட ஜனநாயகத்தின் மெல்லிய போர்வையின் பின்னால், தென்னாபிரிக்கா இன்னும் பயங்கரமான வறுமை மற்றும் சமத்துவமின்மையால் குணாதிசயப்படுத்தப்படுகிறது.
ஊழல் நிறைந்த கறுப்பின கோடீஸ்வரர்களை கொண்டிருக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தொடர்ச்சியாக பதவிக்குவந்த அரசாங்கங்கள், தாம் உருவாக்கப்போவதாக குறிப்பிட்ட நாட்டில் வாக்குறுதியளிக்கப்பட்டதில் இருந்து வெகு தொலைவில், நிறவெறி ஆட்சியைக் காட்டிலும் சமூகரீதியாக சமத்துவமற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப சுமார் 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன.
15-30 வயதுடையவர்களில் 46 சதவீத வேலையின்மையுடன், மொத்த வேலையின்மை 35 சதவிகிதம் என்ற புதிய மட்டத்தை எட்டியுள்ளது. வேலையில்லாதவர்களில் 10 சதவீதம் பேர் பல்கலைக்கழக பட்டதாரிகளாவார். 2020 இல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டு அறிக்கை (HDR), தென்னாபிரிக்காவின் 60 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 11 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 28 ராண்டுக்கும் (Rand) குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள். இது ஒரு ரொட்டி மற்றும் ஒரு லீட்டர் பாலுக்குமே போதுமானது. நான்கு மில்லியன் மக்கள் 'பல்பரிமாண வறுமையில்' வாழ்கின்றனர். அதாவது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மோசமான ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டு, சுத்தமான தண்ணீர் மற்றும் போதுமான சுகாதார வசதியின்றி மற்றும் பரிதாபகரமான குடிசைகளில் வாழ்கின்றனர்.
மில்லியன் கணக்கான கறுப்பினத் தொழிலாளர்களின் சமூக நலன்களை முன்னெடுப்பதில் அரசியல் தலைமையை எதிர்பார்த்தவர்களிடையே, ANC தோல்வியடைந்ததில் ஆழ்ந்த ஏமாற்றம் உள்ளது. அதிகாரப்பூர்வமாக 91,000 உயிர்களைக் கொன்ற தொற்றுநோய், தடுப்பூசி விநியோகம், மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை மற்றும் உள்ளூர் ஊழல் ஆகிய பேரழிவை கையாள்வது தொடர்பாக அரசாங்கத்திற்கான ஆதரவு குறைந்துவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு தென்னாபிரிக்க தொழிலாளர்களை எப்போதையும் விட அதிகமாகச் சுரண்ட அனுமதிப்பதற்கான கைக்கூலிகளாகவும் ஆதரவாளர்களாகவும் 'கறுப்பு பொருளாதார அதிகாரமளித்தல்' மூலமான நன்மைகளை அறுவடை செய்த கறுப்பு முதலாளித்துவத்தின் சிறிய அடுக்கில் அது பெருகிய முறையில் தங்கியுள்ளது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஏனைய இடங்களில் உள்ள தேசிய விடுதலை இயக்கங்களில் உள்ள அதன் சகாக்கள் போலவே அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் அது பில்லியன் கணக்கானவர்களை வறுமை மற்றும் துயரத்திற்கு உள்ளாக்கும் முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கிறது.
தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கம், தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதற்கும், முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும் மற்றும் ஒரு உலக சோசலிச சமுதாயத்தை ஒழுங்கமைப்பதற்கும் ஒரு சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் உள்ள அதன் அடிவருடிகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமான ஒரு கட்சியை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தன்னை விடுவிக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை தென்னாபிரிக்காவிலும் உலகம் முழுவதிலும் கட்டியெழுப்புவதுதான் தீர்க்கமான அரசியல் பிரச்சினையாகும்.
மேலும் படிக்க
- தென்னாபிரிக்காவின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சியை எதிர்கொள்வதற்கான புதிய நடவடிக்கைகளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிராகரிக்கிறது
- டி கிளர்க்கின் மரணத்தால் அதன் மோசமான வரலாறு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்தல் தோல்வியை சந்திக்கிறது
- கினியாவில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஜனாதிபதி ஆல்பா கொடேயின் பதவியைக் கவிழ்க்கிறது
- ருவாண்டாவில் மக்ரோன்: பிரெஞ்சு ஏகாதிபத்தியம் புதிய குற்றங்களைத் தயாரிக்க கடந்த கால குற்றங்களை மூடி மறைக்கிறது