மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வன்முறைக் கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் இரண்டாவது நாளுக்கு மத்தியில், பாகிஸ்தான் அதிகாரிகள் புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு துருப்புக்களை அனுப்பியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் இம்ரான் கான், ஆஜர்படுத்தப்பட்டபோது, கலகக் கவச உடைகள் அணிந்திருந்த சிறப்பு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் வேறு ஒரு தனி ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இம்ரான் கானின் கைது உடனடியாக நாடு முழுவதும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) அல்லது நீதிக்கான இயக்கத்தின் ஆதரவாளர்கள் தலைமையில் வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டியது.
செவ்வாயன்று குவெட்டாவில் ஒரு எதிர்ப்பாளர் கொல்லப்பட்டார் மற்றும் பெஷாவரில் குறைந்தது நான்கு பேர் புதன்கிழமை கொல்லப்பட்டனர்.
தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் மூன்றில் -பஞ்சாப், கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. மேலும், அரசாங்கம் நாடு முழுவதும் மொபைல் தரவு (data) சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இது பெரும்பான்மையான மக்களை இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அணுகுவதில் இருந்து ஆற்றல் வாய்ந்த முறையில் துண்டிக்கிறது, இதனால் போராட்ட எதிர்ப்புகள் மற்றும் அரசின் அடக்குமுறையின் அளவின் எல்லை பற்றிய தகவல்களை நசுக்குகிறது.
இஸ்லாமாபாத் மற்றும் பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும்- மற்றும் தற்போதைய பிரதம மந்திரி ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவரது முஸ்லீம் லீக் (நவாஸ்) ஆகியோரின் பாரம்பரிய அரசியல் கோட்டை--அரசாங்கம் குற்றவியல் சட்டத்தின் 'பிரிவு 144' ஐ அமுல்படுத்தியுள்ளது, இதன் மூலம் மேலும் மக்கள் கூடுவதை மற்றும் நான்கிற்கும் அதிகமானோர் ஒன்று கூடுவதையும் தடை செய்துள்ளது மற்றும் விருப்பப்படி போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
பஞ்சாபில் மட்டும் குறைந்தது 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் இதர இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்-இராணுவ அடக்குமுறையானது, போராட்டங்களை அடக்குவதில் தோல்வியடைந்துள்ளது, இந்த போராட்டங்கள் தற்போதைய கூட்டணி அரசாங்கத்தை குறிவைப்பது மட்டுமல்லாமல், முதலாளித்துவ அரசின் முதுகெலும்பாக இருக்கும் பாகிஸ்தான் உயர் இராணுவ அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் எதிரான வெகுஜனங்களின் கோபத்திற்கும் குரல் கொடுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை, பாகிஸ்தான் நேரம் மதியம் 2 மணியளவில் அல் ஜசீரா நிருபர் ஒசாமா பின் ஜா, “குறைந்தது ஏழு PTI ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதான செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம். போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுக்கும் படங்களையும் நாங்கள் பார்த்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட எதிர்ப்பாளர்கள் மீது நாட்டின் கொடூரமான, ஜனநாயக விரோத 'பயங்கரவாத எதிர்ப்பு' சட்டங்களின் கீழ் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ஷெரீப் அழைப்பு விடுத்தார். மேலும் நேற்று, 13 மாதங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், தற்காலிகமாக நீதிமன்றமாக மாற்றப்பட்ட போலீஸ் தலைமையகத்தில் ஆஜரானார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் இதையெல்லாம் புறக்கணித்து அவரை எட்டு நாட்கள் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டது.
ஏப்ரல்-ஜூலை 2022 இல், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் பாரிய இயக்கம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து துரத்தியதை அடுத்து, பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கம் இந்த எதிர்ப்புக்கள் ஒரு மாபெரும் தொழிலாள வர்க்க எழுச்சியைத் தூண்டக்கூடும் என்று அஞ்சுகிறது.
நடுத்தர வர்க்கத்தின் பரந்த பகுதிகள் உட்பட வெகுஜன மக்களுக்கு, பொருளாதார நிலைமை தாங்க முடியாத சுமையாக அதிகரித்து வருகிறது. ஆண்டு பணவீக்கம் இப்போது 35 சதவீதத்தை தாண்டியுள்ளது, மேலும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கடுமையான சிக்கன மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை கோருகிறது. பாகிஸ்தான் அரசு திவால்நிலையின் விளிம்பில் தத்தளித்து வரும் நிலையில், உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்கள் மற்றும் மூலப் பொருட்களுக்கு டாலரில் செலுத்த முடியாத காரணத்தால் உற்பத்தியைக் குறைக்கின்றனர். இது பரந்த அளவில் வேலையின்மையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
இம்ரான் கான் முதலில் பேச்சுவார்த்தை நடத்திய பிணை எடுப்புப் பொதியின் 1.1 பில்லியன் டாலர் தவணையை செலுத்துவதை IMF ஐ நம்ப வைப்பதற்காக, தற்போதைய பாக்கிஸ்தான் அரசாங்கம் மானியங்களை மேலும் குறைத்து வருகிறது. இருப்பினும், பல மாதங்களாக போராடிய போதிலும், IMF இன்னும் நிதியை வழங்கவில்லை. IMF இல் மேலாதிக்கம் செலுத்தும் வாஷிங்டன், நிதியை வழங்குவதற்கான முன்நிபந்தனையாக உக்ரேனுக்கு இரகசிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஏற்றுமதி உட்பட இஸ்லாமாபாத்தில் இருந்து பூகோள அரசியல் சலுகைகளை கோருகிறது.
இம்ரான் கான் ஒரு வலதுசாரி இஸ்லாமிய ஜனரஞ்சகவாதி. அவருடைய அரசியல் ஏற்றம் 2018 இல் அவரது தேர்தல் உட்பட, இராணுவத்தின் ஆதரவால் எளிதாக்கப்பட்டது. பதவிக்கு வந்ததும், அவரும் அவரது கட்சியான PTI யும் 'இஸ்லாமிய நலன்புரி அரசு' பற்றிய தங்கள் வாய்மொழி வாக்குறுதிகளை விரைவாகக் கைவிட்டு, நாட்டின் வரலாற்றில் மிகக் காட்டுமிராண்டித்தனமான IMF கட்டமைப்பு சரிசெய்தல் என்று கூறக்கூடிய திட்டத்தை திணித்தனர்.
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டின் முதல் மாதங்களில் IMF-ஆல் கோரப்பட்ட எரிசக்தி விலை உயர்வைத் திணித்ததில், வெகுஜனங்களின் கோபத்தின் முன்னே, இம்ரான் கான் பின்வாங்கிய பிறகு, இராணுவ உயர்மட்ட அதிகாரிகளும், ஆளும் வர்க்கத்தின் பெரும்பகுதியும் இம்ரான் கான் மீது வெறுப்பை வெளிப்படுத்தினர். நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன் போரின் முதல் வாரங்களில் மாஸ்கோவுடன் நெருங்கிய உறவுகளைத் தேடுவதற்கான சமிக்கைகளை செய்ததன் மூலம், ஏற்கனவே வாஷிங்டனுடன் இருந்த விரிசலான உறவை மேலும் மோசமாக்கினார்.
வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட மற்றும் இராணுவத்தால் திட்டமிடப்பட்ட ஒரு பாராளுமன்ற ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் 13 மாதங்களுக்கு முன்பு அவர் பிரதம மந்திரி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார், அதிலிருந்து, இம்ரான் கான் IMF சிக்கன நடவடிக்கை, வாஷிங்டனின் மிரட்டல் மற்றும் இராணுவத்தின் சூழ்ச்சிகள் ஆகியவற்றை எதிர்ப்பவராக தன்னை காண்பித்து வாய் வீச்சுகள் செய்து வெகுஜன ஆதரவை அணிதிரட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
PTI க்குள்ள மக்கள் ஆதரவின் முக்கிய அடித்தளம் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தில் உள்ளது. ஆயினும்கூட, ஆளும் வட்டாரங்களில் பெரும் அச்சம் உள்ளது, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இம்ரான் கானின் தேர்தல் அழைப்புகள் பிளவுகளை உருவாக்கலாம், இதன் மூலம் உழைக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நீண்டகாலமாக அடக்கப்பட்ட கோபமும் எதிர்ப்பும் வெடிக்கக்கூடும்.
குறிப்பாக இந்த உயரடுக்குகளின் கவலையாக இருப்பது, இராணுவ உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மீதான இம்ரான் கானின் தாக்குதலால் நிலைகுலையச் செய்யும் தாக்கமாகும் – இராணுவம் பாகிஸ்தானிய முதலாளித்துவ அரசின் அரணாகவும், பாகிஸ்தானிய முதலாளித்துவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான பல தசாப்த கால பிற்போக்குத்தனமான கூட்டணியின் அச்சாணியாகவும் இருக்கிறது.
ஒருபுறம், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள், மறுபுறம் இதே சக்திகளுக்கும் இம்ரான் கானுக்கும் இடையேயான உறவுகள் சமீப மாதங்களில் பெருகிய முறையில் விரிசல் அடைந்துள்ளன. கடந்த செவ்வாயன்று நீதிமன்றத்தில் இம்ரான் கானை கைதுசெய்வதற்கான முடிவு, கடந்த நவம்பரில் அவரைக் காயப்படுத்திய ஒரு படுகொலை முயற்சிக்கு உயர்மட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் பைசல் நசீர் பொறுப்பு என்று மீண்டும் குற்றம் சுமத்த இம்ரான் கான் எடுத்த முடிவால் தூண்டப்பட்டது.
புதன்கிழமை ஒரு தலையங்கத்தில், பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான டான் (Dawn), இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளானது, பாகிஸ்தானிய முதலாளித்துவ அரசுக்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஆழமான எதிர்ப்புக்களை விரைவுபடுத்துகிறது என்ற கவலையை வெளிப்படுத்தி இருந்தது. 'காட்சியில் இருந்து திருவாளர் கானை நீக்குவது எதையும் தீர்க்காது. அதற்கு பதிலாக, நேற்றைய போராட்டங்கள் காட்டியது போல், அவரை கைது செய்வது மக்களுக்கும் நாட்டின் ஆயுதப்படைகளுக்கும் இடையிலான வரலாற்று நெருக்கத்தை ஆழமாக உடைத்திருக்கலாம்' என்று டான் அறிவித்தது.
அது மேலும் தொடர்ந்தது:
வன்முறை மற்றும் மோதல்கள் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வாக இருக்காது, குறிப்பாக பொருளாதாரம் செயற்கை சுவாச சாதனத்தில் இருக்கும்போது மற்றும் மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை வரையறுக்கும் விரக்தியில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த முற்படுகின்றனர்.
ஆத்திரமூட்டலான திரு கானின் கைது, அரசாங்கத்தையும் ஸ்தாபனத்தையும் சர்ச்சைக்குள் ஆழமாக இட்டுச் சென்றது தான் மிச்சம் மற்றும் அவர்களின் கொள்கைகள் குறித்து இன்னும் பெரிய அளவில் பொது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். நாட்டிற்குத் தேவையான கடைசி விஷயம் இதுதான், அது முழுவதுமாக இயல்புநிலையின் விளிம்பில் இருந்து வீழும் நிலையில் உள்ளது. … தேர்தல்கள் தொடர்ந்து ஒத்தி போடப்படும் வரையில் மற்றும் பொதுமக்கள் மவுனமாக்கப்படும் வரையில் தொடரும் மோதல்கள் மக்களுக்கும் அரசுக்கும் இடையே மேலும் மேலும் பிளவைத் தான் ஏற்படுத்தும்.
இராணுவம் அரசியல் நெருக்கடியில் உள்ளது. கடந்த புதனன்று அது, மே 9 ஐ 'கறுப்பு நாள்' என்று கண்டனம் செய்து 'இராணுவத்துக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், இராணுவத்தின் சொத்துக்கள் மற்றும் நிறுவப்பட்ட அமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
'அனைத்து சட்ட அமுலாக்க முகவர், இராணுவ மற்றும் அரசு நிறுவல்கள் மற்றும் சொத்துக்கள் உட்பட பாகிஸ்தானை ஒரு உள்நாட்டுப் போருக்குள் தள்ள விரும்பும் குழுவிற்கு எதிராக கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்' என்று அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்தது.
பாகிஸ்தானின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும், இந்த போராட்டங்களுக்கு எதிரான மிருகத்தனமான ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி, நாட்டின் வரலாற்றில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் வாஷிங்டனின் ஆதரவுடன் நேரடியாக பாகிஸ்தானை ஆட்சி செய்த இராணுவம், தற்போதைய நெருக்கடியை அதன் அடக்குமுறை எல்லை மற்றும் அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காக பயன்படுத்த முயல்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல், பொருளாதார மற்றும் பூகோள அரசியல் நெருக்கடியின் சங்கமம், ஏகாதிபத்தியம் மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிட்டு, கிராமப்புற உழைப்பாளர்களை அதன் பின்னால் அணிதிரட்டுவதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இஸ்லாமிய அரசியல்வாதியாக மாறிய ஒரு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான் ஒரு மோசடியாளர், அவர் தனது அரசியல் வாழ்க்கையில் அமெரிக்கா, IMF மற்றும் இராணுவத்தை பலமுறை விமர்சித்து அடுத்த நாளே அவர்களை அரவணைத்து வருகிறார். அவர் 2018 இல் ஒரு வெளியாளாக இருந்து அரசாங்கத்தை வென்றார், பின்னர் உடனடியாக முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் குழுவை உடனடியாக தனது சொந்த அரசாங்கத்திற்கு உயர்த்தினார். இன்று, அரசியல் ரீதியாக கையாளப்பட்ட 'ஊழல் எதிர்ப்பு' நிறுவனமான தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர் விமர்சிக்கிறார். இருப்பினும், அவர் ஆட்சியில் இருந்தபோது, அதை பயன்படுத்தி தனது அரசியல் எதிரிகளை சிறையில் அடைக்கவும், அமைதியாக்கவும் பயன்படுத்தினார்.
முந்தைய காலத்தில் 'இடது' என்று பல தசாப்தங்களாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியை பொறுத்தவரை, அது பூட்டோ குடும்பத்தின் தலைமையிலான வம்சாவழி கட்சியாக இருக்கிறது. அது IMF இற்காக வேலை செய்ததுடன் மற்றும் வாஷிங்டனுக்கு ஆதரவளித்தது. இதில் முஷாரப்பின் ஸ்தாபக சர்வாதிகார ஆட்சிக்கு ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஒரு 'ஜனநாயக' முகத்தை வழங்க உதவ முயற்சித்ததும், 2009 இல் தொடங்கி பாகிஸ்தானின் வடமேற்கின் சில பகுதிகளை நாசமாக்கிய ஒபாமாவின் ஆளில்லா விமான போருக்கு பச்சை விளக்கு காட்டியதும் இதில் அடங்கும்.
பாகிஸ்தானில் முக்கால் நூற்றாண்டு சுதந்திர முதலாளித்துவ ஆட்சி லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. காலதாமதமான முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளில், ஏகாதிபத்தியத்தில் இருந்து உண்மையான சுதந்திரம் உட்பட உழைக்கும் மக்களின் மிக அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானியப் பிரிவாக ஒரு புரட்சிகர தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.