இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
பல மாத தாமதங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு, உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான பாகிஸ்தானில் உள்ள வாக்காளர்கள், பெப்ரவரி 8, வியாழன் அன்று தேசிய மற்றும் மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர்.
பாக்கிஸ்தானிய அரசு, எல்லாவற்றிற்கும் மேலாக அதன் அமெரிக்க ஆதரவு இராணுவம், வன்முறை, மிரட்டல் மற்றும் வெளிப்படையான வாக்குச்சீட்டு திணிப்பு மூலம் தேர்தல்களை கையாளும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளை நிர்வகிப்பதற்கு இராணுவம் இதற்கு முன்னர் இந்தளவு தலையிடவில்லை.
இராணுவத்தின் உடனடி இலக்குகள் பதவி நீக்கப்பட்ட பிரதம மந்திரி இம்ரான் கானும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI, நீதிக்கான பாகிஸ்தான் இயக்கம்) ஆகும். அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டால், வாக்கெடுப்பில் முதலிடம் பெறுவார் என்று பரவலாக நம்பப்படுகிறது.
ஒரு வலதுசாரி இஸ்லாமிய ஜனரஞ்சகவாதியான கான், கடந்த எட்டு மாதங்களாக, அரசாங்க இரகசியங்களை காட்டிக்கொடுத்தார் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலும் அரசியல்ரீதியாக கையாண்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும் சிறையில் உள்ளார். வாக்குப்பதிவு நெருங்கி வருவதால், தேர்தல் களம் இறுக்கப்படுகிறது. கடந்த வாரத்தில், அவர் தனது உத்தியோகபூர்வ நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் சட்டவிரோதமாக ஆதாயம் பெற்றதற்காகவும், அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காகவும், விவாகரத்தின் பின்னர் 40 நாட்கள் ஆவதற்கு முன்பே மறுமணம் செய்துகொண்டதற்காகவும் முறையே 14, 10 மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். .
இதற்கிடையில், பி.டி.ஐ. தனது சொந்த பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சுயேச்சைகளாகத் தேர்தலில் போட்டியிடும் அதன் தலைவர்கள், பொலிஸ் சோதனைகள், வன்முறைகள் மற்றும் ஏனைய மிரட்டல்களுக்கும் இலக்காகியுள்ளனர்.
பாக்கிஸ்தான் பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் அரசியல் நெருக்கடிகளால் குமுறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இராணுவமும் முதலாளித்துவ மேலாதிக்கப் பிரிவுகளும், மக்கள் விருப்பத்தின் எந்த வெளிப்பாட்டையும் அனுமதிக்க முடியாது என்று முடிவு செய்துள்ளன. எவ்வாறாயினும், இந்த வெகுஜன எதிர்பார்ப்பு பாக்கிஸ்தானிய ஸ்தாபன அரசியலின் வலதுசாரி குணாதிசயத்தால் மட்டுப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது.
சமீப மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு (நவம்பரில் பணவீக்கம் 40 சதவீதத்தை எட்டியது) மற்றும் வேலை வெட்டுக்களுக்கு எதிராகவும் இராணுவத்தால் திட்டமிடப்படும் “காணாமல் ஆக்குதல்கள்” மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களின் அலை தலைதூக்கியது.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றியிருந்தால் நவம்பர் மாத தொடக்கத்திலேயே தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். எவ்வாறாயினும், இராணுவத்தின் நம்பிக்கைக்குரிய, வெகுஜனங்களின் அவலநிலை மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீதான தனது அலட்சியத்தால் இழிபுகழ்பெற்றவரான இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கார் தலைமையிலான காபந்து நிர்வாகம், அவற்றை ஒத்திவைக்க பல்வேறு சாக்குப்போக்குகளைக் கண்டுபிடித்தது. மேலதிக மூன்று மாதங்களும் கான் மற்றும் அவரது பீ.டி.ஐ.க்கும் எதிரான அடக்குமுறையை தீவிரப்படுத்தவும், இராணுவத்தின் விருப்பத் தேர்வான ஒரு பிரதமர் வேட்பாளருக்கான அரசியல் வழியை சிறப்பாகத் தயார் செய்யவும், இறுதியாக சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட பரவலான வெகுஜன எதிர்ப்புக்குள்ளான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. எரிசக்தி விலை மானியங்களில் பாரிய வெட்டுக்கள், வரி உயர்வுகள் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டமும் இந்த சர்வதேச நாணய நிதிய கட்டளைகளில் அடங்கும்.
மூன்று முறை பிரதமராகவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பி.எம்.எல்-என்) வாழ்நாள் தலைவராகவும் இருந்த நவாஸ் ஷெரீப் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பாக்கிஸ்தானிய இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் எல்லா முறையிலும் வழி வகுக்க முயன்றுள்ளனர். பாக்கிஸ்தானின் செல்வந்த குடும்பங்களில் ஒருவரான நவாஸ் ஷெரீப், 1980 களில் பாக்கிஸ்தானிய அரசியல் மற்றும் சமூகத்தின் “இஸ்லாமியமயமாக்கலுக்கு” தலைமை தாங்கிய அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரியும் படு பிற்போக்கானவருமான ஜெனரல் ஜியா உல்-ஹக்கினார் வழிநடத்தப்பட்டவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
கடந்த 2013 முதல் 17 வரை பிரதமர் பதவியில் இருந்த ஷெரீப், நாட்டின் இராணுவம், வெளியுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மீதான தனது கட்டுப்பாட்டை ஆர்வத்துடன் உறுதிப்படுத்தும் இராணுவத்துடன் தனது ஒத்துழைப்பைக் கொண்டிருந்தவர் ஆவார். எவ்வாறாயினும், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை “புத்துயிர்” பெறச் செய்யும் பொறுப்பை ஏற்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவராக, பி.எம்.எல்-என் தலைவருடனான தங்கள் கருத்து வேறுபாடுகளை அவர்கள் ஒட்டுப்போட்டு மூடிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருளாதார புத்துயிர்ப்பு என்பது, உண்மையான ஊதியங்களைக் குறைப்பதன் மூலம் முதலீட்டை அதிகரிப்பதும், பொது சொத்துக்களை விற்பதும் மூலதனத்தின் மீதான அனைத்து ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளையும் நீக்குவதுமாகும்.
அக்டோபரில், ஊழல் குற்றச்சாட்டில் சிறைதண்டனைப் பெறுவதிலிருந்து தப்பிக்க 2019 முதல் தான் வசித்து வந்த இங்கிலாந்தில் இருந்து ஷெரீப் நாடு திரும்பினார். சில வாரங்களுக்குள், நீதிமன்றங்கள் அந்த தண்டனையை இரத்து செய்து, அவர் மீதான மற்ற குற்றச்சாட்டுகளை தூக்கி எறிந்ததுடன் ஜனவரியில் உச்ச நீதிமன்றம் ஊழல் குற்றவாளி அரசியல்வாதிகள் பொது பதவியில் இருப்பதற்கான வாழ்நாள் தடையை நீக்கியது.
ஷெரீப் “பொருளாதார வளர்ச்சிக்கான” வேட்பாளராக பிரச்சாரம் செய்கின்ற அதே நேரத்தில் இராணுவத்திற்கு தனது ஆதரவை வலியுறுத்துகிறார். ஒரு நீதிமன்ற அறைக்குள் வைத்து துணை இராணுவத்தினரால் கான் சுற்றவளைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பீ.டி.ஐ. ஆதரவாளர்கள் நாடு பூராவும் பாதுகாப்புப் படையினருடன் மோதிக்கொண்ட 9 மே 2023 சம்பவங்களில் இம்ரான் கானின் “பேரழிவு” வகிபாகம் உட்பட, இராணுவத்திற்கு விரோதமான எதிர்ப்பை தூண்டியதற்காக இம்ரான் கானை அவர் பலமுறை கண்டித்துள்ளார்.
“இம்ரான் கான் என்ன செய்தார் என்பதும், அவருக்கு என்ன நடந்தது என்பதும் அவரது சொந்த தயாரிப்பாகும்” என்று ஷெரீப் இந்த வாரம் ஜியோ நியூஸிடம் கூறினார். 1998 ஆம் ஆண்டு அந்நாட்டின் அணுகுண்டு சோதனைகள் குறித்து அவர் குறிப்பிடுகையில், “பாகிஸ்தானை அணுசக்தி நாடாக மாற்றினோம்,“ என்றார். “மே 9 ஆம் திகதி நாங்கள் எங்கள் சொந்த இராணுவத்தைத் தாக்கவில்லை. நாங்கள் அமைதிக்கும் முன்னேற்றத்திற்காகவும் நிற்கின்றோம்,” என அவர் கூறினார்.
பி.டி.ஐ. தேர்தலில் இருந்து விளைபயனுடன் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், பீ.எம்.எல்.-என் இன் பிரதான எதிரி, முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுக்களின் வம்சக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பீ.பீ.பீ.) ஆகும். இதற்கு, பிரதமர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் ஜெனரல் ஜியாவால் தூக்கிலிடப்பட்ட சுல்பிகிர் அலி பூட்டோவின் பேரனும், இரண்டு முறை பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ ஸர்தாரி தலைமை தாங்குகிறார். பீ.பீ.பீ. ஒருமுறை தன்னை ஒரு “இஸ்லாமிய சோசலிஸ்ட்” கட்சியாக காட்டிக்கொண்ட போதிலும், கடந்த நான்கு தசாப்தங்களாக அது பதவியில் இருந்த போதெல்லாம் சர்வதேச நாணய நிதயித்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தியதுடன் வாஷிங்டனுடன் நெருங்கிய உறவுகளை தொடர்ந்தது.
ஏப்ரல் 2022 இல் கானின் அரசாங்கம் இராணுவத்தால் திட்டமிடப்பட்டு வாஷிங்டனால் தூண்டப்பட்ட பாராளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கவிழ்க்கப்பட்ட பின்னர், பீ.எம்.எல்.-என் மற்றும் பீ.பீ.பீ.யும் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தன. அதன் 15 மாத ஆட்சியின் போது, 2022 வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு மத்தியில் கொடூரமான மானிய வெட்டுக்களையும் ஏனைய வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களையும் சுமத்தி சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெற்றுவதில் வெற்றி பெற்ற கூட்டணி அரசாங்கம், வாஷிங்டனுடனான இஸ்லாமாபாத்தின் உடைந்த உறவுகளையும் சீர் செய்தது. இருப்பினும், பாகிஸ்தான் மக்கள் மத்தியில், அதன் ஆதரவு சரிந்தது.
நாட்டின் பாரிய வெளிநாட்டுக் கடன்களைக் கருத்தில் கொண்டு பாக்கிஸ்தானின் அரசாங்கம் மேலும் கடன்களை பெற பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கின்ற நிலையில், சர்வதேச நாணய நிதியமானது, “பரந்த அடிப்படையிலான” ஒரு அரசாங்கத்திற்கான அதன் விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வகையிலேயே பாக்கிஸ்தானிய மற்றும் பூகோள மூலதனத்தின் சார்பாக கொடூரமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான வெகுஜன விரோதத்தை அரசியல் உயரடுக்கினரிடையே பகிர்ந்து கொள்ள முடியுமே அன்றி, எந்த ஒரு பெரிய கட்சியும் அதை எதிர்ப்பது போல் காட்டிக்கொண்டு அரசியல் ரீதியாக ஆதாயம் தேட ஆசைப்பட முடியாது.
எவ்வாறாயினும், அவர்களுக்கிடையே உள்ள மோசமான வரலாற்று இரத்தக் கறைகளை கருத்தில் கொண்டு, பீ.பீ.பீ. மீண்டும் பீ.எம்.எல்-என் இன் அரசாங்கத்தில் கணிஷ்ட பங்காளியாக பணியாற்ற ஒப்புக்கொள்வது சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.
பீ.டீ.ஐ. என்பது ஒரு வலதுசாரி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்துள்ள கட்சியாகும். கான், 2018 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இராணுவத்திடமிருந்து திரைக்குப் பின்னால் இருந்து கிடைத்த ஆதரவிற்கு கடன்பட்டிருந்தார். பதவிக்கு வந்ததும், பாக்கிஸ்தானில் இதுவரை செயல்படுத்தப்பட்டிராத மிகக் கொடூரமான சர்வதேச நாணய நிதிய சிக்கன மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்றைத் திணிப்பதற்காக, “இஸ்லாமிய நலன்புரி அரசை” நிறுவுவது பற்றிய தனது ஜனரஞ்சக வாய்வீச்சை அவர் விரைவில் கைவிட்டார். அவரது கட்சிக்கும், இராணுவம் மற்றும் பாரம்பரிய அரசியல் ஸ்தாபனத்துக்கும் இடையேயான உண்மையான உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” கூட்டாளியான சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் கீழ் பணியாற்றிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அவர் தனது அமைச்சரவையில் அமர்த்தினார்.
இறுதியில், 2022 பெப்ரவரியில் கான் மாஸ்கோவுக்குப் பயணித்து அமெரிக்க-நேட்டோ தூண்டிய ரஷ்யாவுடனான போரில் பாகிஸ்தான் “நடுநிலை” வகிப்பதாக உடனடியாக விடுத்த அறிவிப்பு, ஏற்கனவே மோசமாக சிநைத்து போயிருந்து வாஷிங்டனுடனான இஸ்லாமாபாத்தின் உறவுகளை தேவையில்லாமல் மேலும் நாசம் செய்வதாக கருதியா இராணுவம், அவர் மீது கோபமடைந்து அவரை வெளியேற்றியது. அந்த கான், சர்வதேச நாணய நிதியத்தின் வற்புறுத்தலின் பேரில், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எரிசக்தி மானியங்களில் பாரிய வெட்டுக்களை அறிவித்து, பின்னர் வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுத்த நிலையில் பின்வாங்கியதால், அவரது அரசாங்கத்தின் மீதான ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையையும் மோசமாக சேதப்படுத்திக்கொண்டார்.
அவர் வெளியேற்றப்பட்டதில் இருந்து, கான், குறிப்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளில் பீ.டி.ஐ. இன் பாரம்பரிய அடித்தளத்தில், மக்கள் ஆதரவின் அளவைத் தக்கவைத்துக்கொள்ளவும், மீண்டும் பெறவும் கூடியவராக இருந்தார். பெருவாரியான மக்கள்தொகையைப் போலவே, சிறிய கடைக்காரர்கள் முதல் சமீபத்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் வரை இந்த அடுக்குகளும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய் மற்றும் பாரிய வேலையின்மை மற்றும் நிரந்தரத் தொழில் இன்மை உட்பட அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர் அரசியல் ரீதியாகவும் இயங்கிய பல ஆண்டுகளில், கான் ஒரு “வெளிநபர்” என்ற உருவத்தை வடிவமைத்துக்கொண்டு, தனது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதி சூழ்ச்சிகளுக்கு காரணங் காட்டவும் அவற்றை தோற்கடிக்கவும் அதை சுரட்டிக்கொண்டார். பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் உட்பட, தானும் பீ.டி.ஐ.யும் எதிர்கொண்ட சட்டப் பழிவாங்கல் மீதான மக்களின் சீற்றம் மற்றும் அனுதாபத்தையும், அதே போல், ஜனநாயக உரிமைகளை மிதித்து தள்ளி, பாகிஸ்தானின் பிற்போக்கு இந்தியப் பகைமை இராணுவ-மூலோபாய தேவைக்காக தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் பகுதிகளை வீணடித்ததுடன், இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் மூலம் பரந்த செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்துக்கொண்டுள்ள இராணுவத்திற்கு எதிராக குவிந்து வரும் வெகுஜன எதிர்ப்பையும் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி சுரண்டிக்கொண்டுள்ளார்.
இப்போது ஆளும் உயரடுக்கின் பெரும்பாலோரால் ஒரு தளர்ந்து போன பீரங்கி என்று இகழப்பட்டுள்ள கான், சில சமயங்களில் இராணுவத்தையும் அமெரிக்க அடாவடிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆயினும்கூட, அவர் மீண்டும் மீண்டும் அத்தகைய கருத்துக்களில் இருந்து பின்வாங்கி, இரு தரப்புடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதையும், அமெரிக்க-பாகிஸ்தான் மூலோபாய கூட்டணிக்கான தனது ஆதரவையும் தெளிவுபடுத்துகிறார். 1950 களின் முற்பகுதியில் உருவாக்கப்பட்ட அந்த கூட்டணியின் இயக்கமானது பென்டகனுக்கும் ராவல்பிண்டியை தலைமையிடமாகக் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான கூட்டாண்மையாகவே இருந்து வருகிறது.
பாக்கிஸ்தானின் அடுத்த அரசாங்கத்தின் அரசியல் உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும், அதன் இரண்டு மிக முக்கியமான மூலோபாய கூட்டாளிகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் அனைத்து சுற்று மூலோபாய மோதலில் வேரூன்றிய ஒரு தீர்க்க முடியாத புவிசார் அரசியல் நெருக்கடியை பேச்சுவார்த்தையில் சமாளிக்க முயற்சித்தாலும் அது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களுடன் கசப்பான மோதலுக்கு வரும்.
அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டாலும், வாஷிங்டனின் உத்தரவின் பேரில், பாக்கிஸ்தான் இராணுவம் உக்ரைனுக்கு ஆயுதங்களை பின் கதவால் வழங்குவதாக பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானின் மேற்கு அண்டை நாடான ஈரான் மீது முழுமையான போரைத் தொடங்கும் விளிம்பிற்கு வாஷிங்டன் இன்னும் நெருங்கி வருவதால், இஸ்லாமாபாத் ஒரு மூலோபாய சங்கடத்தின் உச்சத்துக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரப்படுகிறது. அமெரிக்காவும் மற்ற பாக்கிஸ்தானிய நட்பு நாடுகளும், குறிப்பாக இத்தகைய மோதலுக்குள் ஆரம்பத்திலிருந்தே இழுக்கப்படும் அபாயம் கொண்டுள்ள வளைகுடா நாடுகள், ஆதரவுக்காக இஸ்லாமாபாத்தை எதிர்பார்க்கும். மறுபுறம், சீனாவுடனான மோதலுக்குத் தயாராகும் வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் எரிசக்தி வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கை மறுசீரமைப்பதைத் தடுக்க, இறுதியில் இராணுவ வழிமுறைகள் மூலம் தடுக்க எதிர்பார்க்கும்.
பாகிஸ்தான் ஏற்கனவே தாக்குதல்கள் மற்றும் எதிர்த்தாக்குதல்களின் சுழலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து ஈரானுக்கு எதிராக செயற்படும் பலுச்சி பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்லாமாபாத் பதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் பிரிவினைக்காகப் போராடும் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கிழக்கு ஈரானில் உள்ள இலக்குகளை பாகிஸ்தான் தாக்கியது.
டிசம்பரில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், வாஷிங்டனுக்கு ஒரு வார காலப் பயணத்தின் போது, பிடென் நிர்வாகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களையும் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் உட்பட பென்டகன் அதிகாரிகளையும் சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றி பொதுவெளியில் எதுவும் கூறப்படவில்லை.
மேலும் படிக்க
- ஈரானை குறிவைத்து ஈராக் மற்றும் சிரியாவில், அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது
- இம்ரான் கான் மற்றும் அவரது இஸ்லாமிய ஜனரஞ்சக PTI ஆதரவாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் பழிவாங்கலை கட்டவிழ்த்துள்ளனர், பாகிஸ்தான் சர்வாதிகார ஆட்சிக்கு தள்ளப்படுகிறது
- பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானை ராணுவம் கைது செய்ததை அடுத்து, பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன