பாகிஸ்தானில் அதிர்ச்சிகரமான தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஆளும் உயரடுக்கினுள் உள் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான பாகிஸ்தானில் கடந்த வியாழன் அன்று நடந்த தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் இராணுவத்தை, அதன் மிக சக்திவாய்ந்த அரசியல் செயற்பாட்டாளரை, அதிர்ச்சியூட்டும் வகையில் பகிஷ்கரிப்பதாக அமைந்துள்ளன.

நீதித்துறை மற்றும் அரச அதிகாரத்துவத்தின் ஆதரவுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (நீதிக்கான பாகிஸ்தான் இயக்கம் -PTI) கட்சியும், பாகிஸ்தான் ஸ்தாபன அரசியலில் குறிப்பிடத்தக்க காரணிகளாக இருப்பதில் இருந்து அகற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அசாதாரணமான மட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை கையாள்வதில் தலையிட்டிருந்தது.

மாறாக, பீ.டி.ஐ. அதன் சொந்த பதாகையின் கீழ் இயங்க அனுமதிக்கப்படாத நிலையில் அதனால் ஆதரவளிக்கப்பட்ட “சுயேட்சை” வேட்பாளர்கள் தேசிய சட்டமன்றத் தேர்தலில் முதலிடம் பிடித்தனர்.

பீ.டி.ஐ. மற்றும் பல கட்சிகள், வாக்குச்சீட்டு திணிப்பு மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் இந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகளின்படி, வியாழன் அன்று நடந்த தேர்தலில் 266 தேசிய சட்டமன்ற தொகுதிகளில் 93 இடங்களை பீ.டி.ஐ.-சார்பு சுயேச்சைகள் கைப்பற்றினர்.

தேர்தலுக்கு முன்னதாக, இராணுவமும் நீதிமன்றங்களும் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) (PML (N)) மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்தின. இருப்பினும், பீ.எம்.எல்.(என்) வெறும் 75 இடங்களை மட்டுமே வென்றது. பீ.எம்.எல்.(என்) இன் நீண்டகால கசப்பான போட்டியாளரான பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 தொகுதிகளை வென்று மூன்றாவது இடத்தில் அமர்ந்துள்ளது, மீதமுள்ள 45 ஆசனங்கள் சுயேட்சைகள் மற்றும் கிட்டத்தட்ட ஒரு டஸின் சிறிய கட்சிகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024 அன்று, பாகிஸ்தானின் கராச்சியில், நடந்து முடிந்த தேர்தல் பெறுபேறுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியதற்கு எதிராக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். [AP Photo/Fareed Khan]

பாக்கிஸ்தானின் இராணுவம், பரந்த அரசியல் மற்றும் பொருளாதார பலத்தைக் கொண்டுள்ளதுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான ஏழு தசாப்தங்கள் பழமையான, வழங்குனர்-பெறுனர் உறவின் அச்சாணியாக இருந்து வந்துள்ளது.

பாகிஸ்தானின் பீ.டி.ஐ. தலைமையிலான அரசாங்கம், உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யாவுடன் அமெரிக்க-நேட்டோ தூண்டிவிட்ட போரில் “நடுநிலை” கொள்கையை ஏற்கும் என்று கான் அறிவித்த பின்னரே. வாஷிங்டனின் தூண்டுதலுடன், 2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கானை பிரதமர் பதவியில் இருந்து அகற்ற இராணுவம் திட்டமிட்டது.

அவர் ஒரு வலதுசாரி இஸ்லாமிய ஜனரஞ்சகவாதி என்றாலும், கானும் அவரது பீ.டி.ஐ.யும் கடந்த மே மாதத்திலிருந்து சட்டப்பூர்வ பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளனர், நீதிமன்றத்தில் வைத்து துணை இராணுவப் படைகள் அவரைக் கைதுசெய்தபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இராணுவ நிலைகள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு சிரேஷ்ட அதிகாரியின் வீட்டின் மீதும் அவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். கான் மற்றும் பல சிரேஷ்ட பீ.டி.ஐ. தலைவர்கள், ஆயிரக்கணக்கான கட்சி ஆர்வலர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் போலியான “பயங்கரவாத” குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வியாழன் வாக்கெடுப்பு நெருங்கியவுடன், இந்த அடக்குமுறை தீவிரமடைந்தது. கானுக்கு மூன்று தனித்தனி வழக்குகளில் நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் தேர்தலில் நிற்க தகுதியற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பீ.டி.ஐ. தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதுடன், பீ.டி.ஐ. ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் அதன் கிரிக்கெட் மட்டை சின்னத்தை வாக்குச்சீட்டில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இது 40 சதவீத மக்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கும் நாட்டில் பெரும் இடையூறு ஆகும்.

அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக, பீ.டி.ஐ. ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முழுக்க முழுக்க இணையவழியாகவே பிரச்சாரம் செய்தனர். வாக்குப்பதிவு நாளில், வாக்களிக்கச் செல்வதில் வாக்காளர்களுக்கு வெறுப்பேற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கைத்தொலைபேசி சேவைகளும் அவற்றின் இணைய சேவைகளும் திடீரென நிறுத்தப்பட்டன.

வாக்குச்சீட்டு திணிப்பு மற்றும் பிற முறைகேடுகள் இல்லாமல் இருந்திருந்தால், 175 தொகுதிகளை வென்றிருப்போம் என்று பீ.டி.ஐ. கூறுகிறது.

உறுதியாகக் கூறக்கூடியது என்னவென்றால், இராணுவத்தின் பரந்த அதிகாரம் மற்றும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த பாரம்பரிய ஆளும் ஸ்தாபனத்தின் மீதுமான தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையாகவே மில்லியன் கணக்கான பாகிஸ்தானியர்கள் வாக்களித்துள்ளனர்.

இராணுவத்தினர் வாக்குச் சாவடிகளை கையாள்வதில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, வாக்குப்பதிவு வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறாயினும், 48 சதவீத வாக்குப்பதிவு 2018 தேர்தலின் 51 சதவீதத்தை விட சிறிதளவே குறைந்துள்ளதாக ஆரம்ப அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. பயப்படாமல், பல்லாயிரக்கணக்கானோர் வாக்குச்சாவடிகளில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்தனர். இது நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரிடையே கானின் பாரம்பரிய ஆதரவு தளத்திற்கு அப்பாற்பட்டு, மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க மக்களையும் கிராமப்புற உழைப்பாளிகளின் ஒரு பிரிவையும் உள்ளடக்கியிருந்தது.

கானை ஒதுக்கித் தண்டிப்பதற்கான ஸ்தாபனத்தின் முயற்சிகள் எதிர்த்தாக்குதலை ஏற்படுத்தி, பொதுமக்களின் அனுதாப அலையை உருவாக்கியதுடன் “அரசியல் வெளியாள்” என்று கவனமாக வடிவமைக்கப்பட்ட அவரது பிம்பத்தை சுரண்டிக்கொள்வதற்கு அவருக்கு உதவியது.

பாகிஸ்தானின் “அதிர்ச்சிகரமான தேர்தல்” பற்றிய மேற்கத்திய ஊடக அறிக்கைகளில் இதில் பெரும்பாலானவை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. அண்டை நாடான ஆப்கானிஸ்தானை நாசமாக்கி, பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் மில்லியன் கணக்கானவர்களை பல ஆண்டுகளாக ஆளில்லா விமானக் கண்காணிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு உட்படுத்திய அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் போர்களுக்கு விரோதமான வெகுஜன எதிர்ப்பை எதிர்ப்பை வடிவமைத்து, திரிபுபடுத்தப்பட்ட வெளிப்பாட்டை இந்த தேர்தல் வழங்கியது என்பதையே அவை சொல்லாமல் விட்டுள்ளன.

பாக்கிஸ்தானியர்கள் மத்தியில், காஸாவில் பாலஸ்தீனியர்களை அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததற்கு பரவலான சீற்றம் உள்ளது.

கான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையோ அல்லது 2018ல் அதிகாரத்திற்கு வருவதற்கு அவருக்கு உதவிய பாக்கிஸ்தானிய இராணுவத்தையோ எதிர்ப்பவர் அல்ல. ஆனால் நாட்டின் அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள அவரது போட்டியாளர்களைப் போலல்லாமல், அமெரிக்கா சதி செய்வதாகவும் பாகிஸ்தானின் இறைமையை நசுக்குவதாகவும் கான் சில சமயங்களில் வாஷிங்டனுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட காலமாக அரசியல் பின்னடைவில் இருந்த கான், கடந்த தசாப்தத்தின் முதல் பாதியில், அப்போது கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்த பழங்குடிப் பகுதிகளின் மக்களை பயமுறுத்தி, ஏராளமான மக்களை படுகொலை செய்த, பாக்கிஸ்தானில் ஒபாமா-பைடன் நிர்வாகத்தின் ட்ரோன் போரைக் கண்டிப்பதன் மூலம் தனது ஆதரவை கணிசமாக விரிவுபடுத்திக்கொண்டார்.

இராணுவம் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்கு திகைப்பூட்டும் வகையில், கான் பலமுறை பகிரங்கமாக வாஷிங்டன் தன்னை வெளியேற்ற உதவியது என்று குற்றம் சாட்டினார். பின்னர் தனது குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்கினார். குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தாலும், கான் மற்றும் அவரது முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பீ.டி.ஐ.யின் துணைத் தலைவருமான ஷா மஹ்மூத் குரேஷியும், கடந்த மாத இறுதியில் “அரசு ரகசியங்களை”, அதாவது கான் நாட்டின் தலைமையில் இருந்தால் இஸ்லாமாபாத்தை முடக்கிவிடுவோம் என்ற வாஷிங்டனின் அச்சுறுத்தல்களை விடுக்கின்ற பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதரின் தகவலை அல்லது குறிப்பை, கசியவிட்டதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் பூகோள மூலதனம் கோரும் சிக்கன மற்றும் பொருளாதார “மறுசீரமைப்பு” நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதில் திறானியற்றதாக மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் ஒரு பலவீனமான அரசாங்கத்தின் இயலுமையைப் பற்றிய அச்சத்தின் மத்தியில், இந்த தேர்தல் முடிவுகள் பாக்கிஸ்தானின் உயரடுக்கிற்குள் உள்ள உட்பூசல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

சனிக்கிழமையன்று, தேர்தல் கண்டனத்தின் அளவு தெளிவாகத் தெரிந்த பிறகு, பாகிஸ்தானின் ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் சையத் அசிம் முனீர், “அராஜகம் மற்றும் துருவமுனைப்பு அரசியலில் இருந்து முன்னேற தேசத்திற்கு நிலையான கைகளும் குணப்படுத்தும் தொடுதலும் தேவை” என்று வஞ்சத்தனமான முறையில் அறிவித்தார்.

பீ.டி.ஐ. அல்லாமல், பி.எம்.எல் (என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பீ.பீ.பீ.) தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு மற்ற கட்சிகளுடன் தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க இது அவ்வளவு நுட்பமான வேண்டுகோள் அல்ல. நவாஸ் ஷெரீப் மற்றும் பிரதானமாக இராணுவத்தினால் கட்டுப்படுத்தப்படுவதாக பேர்போன அமைப்பான பீ.எம்.எல் (என்) உடன் பீ.பீ.பீ. தன்னை மேலும் சமரசம் செய்து கொள்வதில் கவலை கொண்டிருந்தாலும், அத்தகைய பேச்சுக்கள் இப்போது நடந்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, பீ.பீ.பீ. தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்கத் தூதர் டொனால்ட் ப்ளோமைச் சந்திப்பதற்காக இஸ்லாமாபாத்திற்குச் சென்றார். தேர்தல் முறைகேடுகள் பற்றி கவலைப்படுவது போன்ற அறிக்கைகளை வெளியிட்டாலும் கூட, தனது பல போர்கள் உட்பட, தனது நலன்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யும் அரசாங்கத்தை ஒன்றிணைக்க, வாஷிங்டன் திரைக்குப் பின்னால் செயல்பட்டு வருகிறது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அதை இஸ்லாமாபாத் தொடர்ந்து பகிரங்கமாக மறுத்து வந்தாலும், பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை புதுப்பித்ததில் ஒரு முக்கிய அம்சமாக உக்ரைனுக்கு இஸ்லாமாபாத் ஆயுதங்களை ஒரு பின் வாசல் வழியாக வழங்கியது என்பது உறுதியானது.

பீ.டி.ஐ. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து சவால் செய்து வருவதுடன், ஜெனரல் முனீருக்கு பதிலளிக்கும் விதமாக, இம்ரான் கான் மற்றும் அனைத்து பீ.டி.ஐ. கைதிகளையும் விடுவிப்பதும் பீ.டி.ஐ.க்கு அரசாங்கத்தை வழிநடத்த மக்கள் ஆணை உள்ளது என்பதை ஸ்தாபனங்கள் ஏற்றுக்கொள்வதுமே உண்மையான “குணப்படுத்தும் தொடுதல்” என்றும் கூறியுள்ளது. ஆனால் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோஹர் அலி கான், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பீ.டி.ஐ-யின் முயற்சிகள் தோல்வியடைந்தால், அது எதிர்க் கட்சியாக இருக்கும் என்று கூறினார். இது, தேர்தல் முடிவுகளைப் பயன்படுத்தி இராணுவத் தலைமையிலான ஸ்தாபனத்துடன் இறுதியில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியை பிரேரிப்பதாகும்.

அரசியல் மோதலின் மேலும் ஒரு விடயம், பெண்களுக்கும், “மத சிறுபான்மையினருக்கும்” “ஒதுக்கீடாக” 70 தேசிய சட்டமன்ற ஆசனங்களை வழங்குவதாகும். இந்த ஆசனங்கள் கட்சிகளுக்கு அவர்கள் வென்ற தொகுதிகளின் படி விகிதாசாரப்படி வழங்கப்பட வேண்டும். ஆனால் பீ.டி.ஐ. உறுப்பினர்கள் “சுயேச்சைகளாக” தேர்ந்தெடுக்கப்பட்டதால், அத்தகைய ஆசனங்கள் அனைத்தும் மறுக்கப்படலாம்.

பொருளாதார, அரசியல் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளால் பாகிஸ்தான் சூழப்பட்டுள்ளது. சமீபத்திய மாதங்கள் குறிப்பிடத்தக்க சமூகப் போராட்டங்களின் அலைகளைக் கண்டுள்ளன. மின்சாரக் கட்டண உயர்வை கண்டனம் செய்வதற்கான வெகுஜன எதிர்ப்புக்கள், தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸை தனியார்மயமாக்குவது உட்பட தனியார்மயமாக்கல் அலைக்கு எதிர்ப்பு, மற்றும் “காணாமல் ஆக்கப்படுவதற்கும்” மற்றும் நீண்ட காலமாக தேசியவாத கிளர்ச்சி நடந்துவரும் பலுசிஸ்தானில் பாக்கிஸ்தானில் இராணுவத்தால் நிறைவேற்றப்பட்ட சுருக்கமான மரணதண்டனைக்கும் எதிரான “நீண்ட பேரணி” ஆகியவை இதில் அடங்கும்.

அடுத்த அரசாங்கம் பதவியேற்றவுடன் இஸ்லாமாபாத் அடுத்த கடன்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று ஆளும் வர்க்க வட்டாரங்களுக்குள்ளேயே கருதப்படுகிறது. தற்போது, நாட்டில் கையிருப்பில் 8 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது, இது இரண்டு மாதங்களுக்கும் குறைவான மதிப்புள்ள இறக்குமதிக்கு சமமான தொகையாகும்.

எவ்வாறாயினும், இது வெள்ளிக்கிழமை முதல் நாட்டின் பங்குச் சந்தையில் கூர்மையான சரிவில் பிரதிபலித்தது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர் இரத்தக் காட்டேரிகளை திருப்திப்படுத்த தேவையான சிக்கன மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை திணிப்பதற்கு அடுத்த அரசாங்கத்துக்கு உள்ள இயலுமையைப் பற்றிய அச்சங்கள் வெளிப்படுகின்றன.

“பலவீனமான கூட்டணி அரசாங்கம், பாகிஸ்தானை நிலையான வளர்ச்சி மற்றும் முதலீட்டின் பாதையில் வைக்க மிகவும் அவசியமான பரந்த அளவிலான பொருளாதார சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புகளை குறைக்கும். அடுத்த அரசாங்கம் சிறுபான்மையானதாக இருந்தால், பல கட்சிகளை திருப்திப்படுத்துவதில் பிழைப்பு நடத்தினால், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க கடுமையான மற்றும் அரசியல் ரீதியாக வேதனையான முடிவுகளை எடுக்க அதனால் முடியுமா?” என முன்னாள் பாக்கிஸ்தானிய இராஜதந்திரி மலீஹா லோதி திங்களன்று டௌன் பத்திரிகையில் ஒரு பத்தியில் புலம்பியுள்ளார்,

இஸ்லாமாபாத்தின் “எல்லா காலத்திலுமான” மூலோபாய கூட்டாளியான சீனாவிற்கு எதிராக அமெரிக்கா அதன் அனைத்துப் பக்க பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய தாக்குதலைத் தொடரும்போது, பாக்கிஸ்தானிய முதலாளித்துவம் எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் நெருக்கடியும் வெடிக்கும் குற்றச்சாட்டுகளால் நிறைந்துள்ளது; பாகிஸ்தானின் வரலாற்றுப் போட்டியாளரான இந்தியாவை, சீனாவுடனான போருக்கான அதன் தயாரிப்புகளில் இன்னும் இறுக்கமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வாஷங்டன் மூலோபாய உதவிகளுடன் இந்தியாவை ஆடம்பரமாக்குவதுடன் பாக்கிஸ்தானின் மேற்கு அண்டை நாடான ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. இவை விரைவாக முழுப் போராகச் வெடிக்கக் கூடும்.