இந்தியாவில் உயர் வெப்ப அலையால் கிட்டத்தட்ட 200 பேர் பலியானதை அடுத்து கனமழையினால் நூறுக்கும் மேற்பட்டோர் மரணித்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

10 ஜூலை 2023 திங்கள் அன்று ஹிமாச்சலப் பிரதேசம், இந்தியாவின் குல்லு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பியஸ் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது மக்கள் கடக்கின்றனர். [AP Photo/Aqil Khan]

கடந்த இரு வாரங்களாக பெய்த கனமழை நூறுக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கு வழி வகுத்ததோடு வட இந்தியா முழுவதிலும் பேரழிவை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதை பல தசாப்தங்களில் பெய்த நாட்டின் மோசமான பருவமழை என காலநிலை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதே போன்ற மோசமான காலநிலை பாதிப்புக்குள் பல நாடுகள் அகப்பட்ட நிலையிலேயே இந்த மரணகரமான பருவமழை பெய்துள்ளது.

இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல் பிரதேஷ் இந்த கன மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 1,300க்கும் அதிகமான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு இதன் விளைவாக மாநிலத்தில் நாற்பது பில்லியன் இந்திய ரூபாய் மதிப்பிலான இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அஸாம், மேகாலயா, சிக்கிம், உத்தரகாண்ட், உத்தர் பிரதேஷ், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களும் இந்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தலைநகரான புது டெல்லியில் ஜூலை 10 அன்று 24 மணித்தியாலத்தில் 153 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இது 1982 ஜூலை மாதத்திற்கு பின்னர் ஒரு நாளில் பெய்த அதிக மழை ஆகும். டெல்லியில் உள்ள யமுனா நதியின் தண்ணீர் அளவானது 1978ல் பதிவான 207 மீற்றர் மட்டத்தை தாண்டியுள்ளது. பாடசாலைகள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் நீரால் நிரம்பியுள்ளதோடு அவை காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன.

இந்திய வானிலை துறையின் படி இந்த ஆண்டு பருவமழையில் வழமையை விட டெல்லி, பஞ்சாப், இமாச்சல ஆகிய மாநிலங்களில் முறையே 112, 100 மற்றும் 70 சதவீதமான மழை பெய்துள்ளது.

அதேநேரம், ஜூன் மாதத்தில் வட இந்தியாவில் தொடங்கிய வெப்ப அலை, நாட்டின் பெரும் பகுதிகளில் 45 பாகை செல்சியஸ்க்கு உயர்ந்தது. இதன் பின்னரே இந்த அதிகப்படியான மழைவீழ்ச்சி ஏற்பட்டது. 170க்கும் அதிகமான மக்கள் அந்த வெப்ப அலையால் மரணித்ததோடு வட பிரசேத்திலேயே அதிகமானோர் இறந்துள்ளனர்.

அதிகபடியான வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி நிகழ்வுகள், வறட்சி, கடல் மட்டங்களின் உயர்வு மற்றும் உக்கிரமான சூறாவளி ஆகியன, உப-கண்டம் முழுவதும் ஏற்படும் தொடர்ச்சியான சம்பவங்களாக உள்ளன. இவை மோசமான விளைவுகளுடனான காலநிலை மாற்றத்தின் தெளிவான சமிக்ஞை ஆகும்.

இந்தியாவில் 2020ல் 959 பேரும் 2021ல் 656 பேரும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். 1953 மற்றும் 2017 வரையில் நாடு முழுவதிலும் 107,480 பேர் அதிகமான மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக மத்திய நீர் ஆணையத்தால் தேசிய பாராளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவில் 2018ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நான்கு விஞ்ஞானிகளுடன் இணைந்து புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செலாளர் எம். ரஜீவனால் எழுதப்பட்ட இதழின் படி, கடந்த ஐம்பது வருடங்களில் வெப்ப அலையால் 17 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் கோடைகால மாதங்களான ஏப்ரல்-ஜூன் மாதங்களில் எப்போதுமே வெப்பமாக இருந்தாலும் கடந்த தசாப்தத்தில் வெப்பநிலை மிக அதிகளவான உக்கிரத்துடன் ஆபத்தாக மாறியுள்ளது.

2000-2009 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், வெப்ப அலைகளின் எண்ணிக்ககை 2010-2019 காலத்தில் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2000 மற்றும் 2019 க்கு இடையில் அதிக வெப்பநிலையால் ஏற்பட்ட இறப்புக்களின் விகிதம் 62 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்தப் பேரழிவுகளை ஊடகங்கள் ”இயற்கையானவை” என குறிப்பிட்டாலும், அவை உண்மையில், பிரதானமாக, பெரும் நிறுவனங்ளால் இலாபத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அழிவுகரமான உந்துதலால் உருவக்கப்பட்டவை ஆகும், அதாவது மனிதனால் உருவாக்கப்பட்டவை ஆகும். படிம எரிபொருட்களை பாதிக்கக் கூடியவாறு எரித்தலுடன் சேர்த்து திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் பிரதான காரணிகளாகும்.

கடந்த ஆண்டு, அதிதீவிர வானிலை நிகழ்வுகளைக் கண்காணிக்கும் புது டெல்லியைத் தளமாக கொண்ட பொது நல ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், அதன் ”இந்திய சூற்றுச்சூழல் நிலைமை அறிக்கை -2022“ என்பதை வெளியிட்டது.

வருடம் 365 நாட்களில் 314 நாட்கள் நாட்டில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டதாக அது வெளிப்படுத்தியது. இதன் அர்த்தம், இந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் இந்தியாவின் சில பகுதிகள் குறைந்த பட்சம் ஒரு கடுமையான வானிலை நிகழ்வு பதிவாகியுள்ளது என்பதாகும். இந்த நிகழ்வுகள் 2022ல் மூன்றாயிரம் மரணங்களையும் சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் பயிர்செய்கை பாதிப்பையும் 69 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடை சாவுகளையும் ஏற்படுத்தியுள்ளதோடு சுமார் 420,000 வீடுகளை நாசமாக்கியுள்ளது, என அந்த அறிக்கை முடிகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தால் முன்னெடுக்கப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வானிலை நிகழ்வுகளால் 233 பேர் உயிரிழந்துள்ளதுடன் 950,000 ஹெக்டயர் பயிர்ச்செய்கை சேதமடைந்துள்ளளன.

இந்த தொடர்சியான பேரழிவுகள் சமூகத்தின் வறிய பிரிவினரை மிகவும் கனமாகப் பாதித்துள்ளன. இந்தப் பாதிப்புகளின் போதெல்லாம் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதோடு முற்றிலும் பற்றாக்குறையான இழப்பீட்டு தொகையை வழங்குவதோடு நிறுத்திக்கொள்கின்றன.

பிரதமர் “நிலைமையை மதிப்பாய்வு செய்துள்ள” அதே வேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய உள்ளுர் நிர்வாகங்கள் செயலபடுகின்றன, என பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் ஒரு இழிந்த ட்வீட் செய்தியை ஜூலை 10 அன்று வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த பேரழிவு குறித்து கோபமாகப் பேசினர். பாரதிய ஜனதா கட்சியின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர் சிங்கை, ஹர்யானாவைச் சேர்ந்த ஒரு வயோதிப பெண் கண்ணத்தில் அறைந்ததை சமூக ஊடக காணொளி அம்பலப்படுத்தியது. ”நீ ஏன் இப்போது வந்தாய்?” என அந்தப் பெண் கேட்டார்.

காலநிலை மாற்றமும் புவி வெப்பமாகுதலும் வானிலை முறைகளை கடுமையாக மாற்றிகொண்டிருக்கும் அதே வேளை, மோடியும் அவரது இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கமும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான அதன் முன்னோடியைப் போலவே இந்தப் பேரழிவுகளின் மோசமான தாக்கத்தை தணிக்கவோ அல்லது போதுமான நிவாரணம் வழங்கவோக எந்தவொரு உண்மையான நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டது.

மாறாக, பெரும் வணிகர்களுக்கு பெரும் வரிச் சலுகைகளையும் பிற உதவிகளையும் வழங்கும் அதே வேளை, ஆளும் உயர் அடுக்கின் புவி-அரசியல் குறிக்கோள்களை முன்னெடுப்பதன் பேரில் இந்திய ஆயுதப் படைகளை மேம்படுத்த பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுகின்றது.

பல தசாப்தங்களாக, இந்திய ஆளும் உயரடுக்குகள் காலநிலை விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை செயற்படுத்த தவறிவிட்டன. அவர்கள் இந்த பேரழிவுகளுக்குத் தயாராகுவதற்கு தேவையான உள்கட்டமைப்பை கட்டியெழுப்ப மறுத்துவிட்டனர்.

காலநிலை மாற்றத்தாலும் புவி வெப்பமாவதாலும் ஏற்படும் அச்சுறுத்தலை அனுகுவதற்கு உலகளாவிய தீர்வு அவசியம். காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் மற்றும் உடனடியான உலகலாவிய பேரழிவின் மறுவருகையில் இருந்து பாதுகாக்க, ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பும் திட்டமிடலும் அவசியம் ஆகும். இவற்றை உலக சோசலிச ஒன்றியத்தின் பாகமாக தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதன் ஊடாகவே அடைய முடியும்.

கலிபோர்னியாவெள்ளமும் காலநிலை நெருக்கடியும்

ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு மத்தியில் மோடியின் பிரான்ஸ் பயணம், இந்தியாவின் இராணுவ அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது

ஒடிசா ரயில் பேரழிவிற்கு மூன்று வாரங்களுக்கு பிறகு: இந்திய அதிகாரிகள் சோகத்திற்கான தங்கள் பொறுப்பை மூடி மறைக்க தீவிரமாக உள்ளனர்