இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஞாயிற்றுக்கிழமை முன்கூட்டியே நடந்த தேசிய தேர்தல்கள், அனேகமாக மக்கள் கட்சி (Popular Party – PP) கூட்டணியில் சக சிந்தனையாளர்களின் இளைய பங்காளிகளாக வெளிப்படையாகவே பிரான்கோயிச வொக்ஸ் கட்சியை (Vox) ஸ்பெயின் அரசாங்கத்திற்குள் கொண்டு வரக்கூடும்.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், சர்வாதிகாரியான ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரான்கோ மரணத்திற்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சியும் (PSOE) ஸ்பெயினின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் (PCE) ஸ்பானிய முதலாளித்துவத்துடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கணக்கீடுகளைத் தடுத்தன. 1978 அரசியலமைப்புடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ குடையின் கீழ், ஒரு பாராளுமன்ற ஜனநாயகம் பிறக்கும் என்று அவை உறுதியளித்தன.
பல தசாப்தங்களுக்குப் பின்னர், உலகளாவிய 2008 நிதிய நெருக்கடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்து வரும் நிதித்துறை சூறாவளிகள், ஆழ்ந்த மக்கள் விரோத சிக்கன நடவடிக்கைகளின் திணிப்பு, உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோ போரால் தூண்டப்பட்ட போர் வெறி ஆகியவற்றுக்குப் பின்னர், அந்த ஜனநாயக வாக்குறுதிகள், ஐரோப்பா எங்கிலுமான சமூக மற்றும் பொருளாதார சீரழிவுகளால் சிதைக்கப்பட்டுள்ளன.
ஏழு பிராங்கோயிச அமைச்சர்களால் நிறுவப்பட்ட மக்கள் கட்சியும் (PP), அதன் முன்னாள் உறுப்பினர் சாண்டியாகோ அபாஸ்கல் தலைமையிலான நவ-பாசிசவாத கட்சியான வொக்ஸ் கட்சியும், பிராங்கோவின் அரசியல் வாரிசுகளான இவை, இந்தத் தேர்தலில் ஜெயிக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆளும் கட்சியான சோசலிஸ்ட் கட்சியை விட (PSOE) மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது, இருப்பினும் ஒரு பெரும்பான்மையைப் பெறுவதற்கு வொக்ஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படும். மக்கள் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் பாகமாக இருப்பதை மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், வேறு எந்த ஏற்பாடுக்கும் தயாரில்லை என்றும் வொக்ஸ் கட்சி கூறியுள்ளது.
PSOE-பொடெமொஸ் கூட்டணி அரசாங்கம், மே மாதம் நடந்த உள்ளூர் மற்றும் பிராந்திய தேர்தல்களில் சரியான அடி வாங்கிய பின்னர், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் அதிகரித்து வரும் வேலைநிறுத்த அலை ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவை மூழ்கடித்துள்ள நிலையில், அது திட்டமிட்டவாறு நடக்க வேண்டிய தேர்தல்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்த தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தது. அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பால் பீதியடைந்துள்ள PSOE மற்றும் பொடெமொஸ் கட்சிகள், உள்நாட்டில் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை நசுக்கி, அன்னிய நாடுகள் மீதான போரை விரிவாக்குவதை ஓர் அதிவலது அரசாங்கத்தால் மட்டுமே வெற்றிகரமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், வேண்டுமென்றே இந்த முயற்சியை வலதுசாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றன.
முன்னாள் நீதிபதிகள், பொலிஸ் மற்றும் ஜெனரல்களை உள்ளடக்கி உள்ள வொக்ஸ் கட்சி, உடைபடாத பிரான்கோயிச வரலாற்று தொடர்ச்சியில் நிற்கிறது. ஸ்பெயின் உள்நாட்டு போரின் போது பிரான்கோவின் வெற்றி, 200,000 அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் இடதுசாரி தொழிலாளர்களின் பாரிய படுகொலையுடன் அடையப்பட்டது. அதற்கடுத்த நான்கு தசாப்தங்களில், ஆயிரக் கணக்கானவர்கள் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது படுகொலை செய்யப்பட்டனர். வேலைநிறுத்தங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன, ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டன. செய்தித்தாள்களும் புத்தகங்களும் தணிக்கை செய்யப்பட்டன. உயர் கல்வி மற்றும் நல்ல சுகாதார கவனிப்பு ஆகியவை தனிச்சலுகை கொண்டவர்களுக்கு மட்டுமே கிடைத்தன. பாரிய தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த ஆட்சி 1970 களில் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன.
ஸ்பெயினை மீண்டும் மையத்திற்குக் கொண்டு வரவும், பிரிவினைவாதக் கட்சிகளைக் குற்றகரமாக்கவும், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைச் சிறையில் அடைக்கவும் மற்றும் ஸ்பானிய பேரினவாதத்தைப் பரப்பவும், இராணுவம் மற்றும் பொலிஸ் வரவு செலவுத் திட்டக்கணக்குகளை அதிகரிப்பதன் மூலமும், அதேவேளையில், பாஸ்க் (Basque) மற்றும் கட்டலான் மொழிவாரி உரிமைகளை ஒடுக்குவதன் மூலமாகவும் மற்றும் புலம்பெயர்ந்தோரைப் பலிக்கடா ஆக்குவதன் மூலமாகவும், வொக்ஸ் கட்சி அன்னிய நாடுகளிலும் உள்நாட்டிலும் போரை விரிவாக்க முயல்கிறது. செல்வந்தர்களுக்கு, அது வருமான வரி, சொத்து வரி, மூலதன இலாபங்கள் மீதான வரிகள் மற்றும் பரம்பரைச் சொத்துரிமை மீதான வரிகளை ஒழிக்க முயல்கிறது. இந்த வேலைத்திட்டத்தின் எல்லா இன்றியமையாத அம்சங்களையும் மக்கள் கட்சி பகிர்ந்து கொள்கிறது என்றாலும், அதன் சொந்த வர்க்கப் போர் மற்றும் இராணுவாத திட்டநிரலுக்கு ஒரு கவுரவமான அலங்காரத்தை வழங்குவதற்காக மட்டுமே, அது வொக்ஸ் கட்சியின் மிகத் தீவிர வாய்வீச்சில் இருந்து ஒதுங்கி நிற்கிறது.
வொக்ஸ் கட்சியின் வளர்ச்சியில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஐரோப்பா எங்கிலும், பெருந்திரளான மக்கள் இடதை நோக்கி நகர்வதால், அவர்களைக் காட்டிக்கொடுக்கப்படுவதைப் பார்க்கவும் மற்றும் முன்முயற்சியை அதிவலதிடம் ஒப்படைக்கவும் மட்டுமே, “பரந்த இடது” கட்சிகளின் அமைப்புகள் உருவாக்கப்படும் போது, மீண்டும் மீண்டும் ஓர் அபாயகரமான வடிவம் தென்படுகிறது.
கிரேக்கத்தில், சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதாக வாக்குறுதி அளித்துப் பதவிக்கு வந்த சிரிசா, 2015 இல் இருந்து 2019 வரையில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த நிலையில், எதிர்கட்சியாக இருந்த அது கடந்த மாத தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டு, வலதுசாரி புதிய ஜனநாயக கட்சி பதவியேற்றது. புதிய பாராளுமன்றத்தில் இப்போது மூன்று அதிவலது கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை ஒரு பகுப்பாய்வாளர், “1974 இல் கிரேக்க ஜனநாயகம் மீட்டமைக்கப்பட்டதற்குப் பின்னர், மிகவும் பழமைவாத பாராளுமன்றம்” என்று விவரித்தார்.
இத்தாலியில், பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி சுட்டுக் கொல்லப்பட்டு 78 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது அரசியல் வாரிசுகளான, இத்தாலியின் சகோதரர்கள் அமைப்பு (Brothers of Italy), இரண்டாம் உலகப் போர் முடிவுக்குப் பின்னர் முதல்முறையாக, ஜியோர்ஜியா மெலொனியின் கீழ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
ஜேர்மனியில், ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றி 90 ஆண்டுகளுக்குப் பின்னர், மூன்றாம் குடியரசின் (Third Reich) குற்றங்களை மீண்டும் மீண்டும் குறைத்துக் காட்டும் அதிதீவிர நவ-நாஜிக்கள், யூத-எதிர்ப்புவாதிகள் மற்றும் இனவாதிகளுடன் இணைந்துள்ள அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD), கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியான சமூக ஜனநாயக கட்சியை விட முன்னிலையில், பழமைவாத CDU இக்கு அடுத்ததாக, இரண்டாவது மிகப் பலமான கட்சியாக உள்ளது.
பிரான்சில், வரலாற்று ரீதியில் இரண்டாம் உலகப் போரின் போது மார்சல் பெத்தனின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியுடன் பிணைந்திருந்த, மரீன் லு பென்னின் தேசிய பேரணி (National Rally) கட்சி 2017 இக்குப் பின்னர் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல்களில் முக்கிய போட்டியாளராக இருந்துள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, இன்று தேர்தல்களை நடத்தினால், லூ பென் அதிபர் இமானுவல் மக்ரோனைத் தோற்கடித்து விடக்கூடும்.
போர்த்துக்கலில், நவ-சலாஜரிஸ்ட் சேகா (போதும்) கட்சி (Chega - Enough) கடந்த ஆண்டு நடந்த தேசிய தேர்தல்களில் ஒரு இடத்திலிருந்து 12 இடங்களுக்கு வளர்ந்தது. இது, 13.2 சதவீதத்துடன் போர்த்துக்கலின் மூன்றாவது அரசியல் சக்தியாக ஆகுமென கணிக்கப்படுகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஆளும் சோசலிஸ்ட் கட்சி முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தால், சேகா கட்சி வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும். அப்படி நடந்தால், 1974 செம்பூ புரட்சிக்கு (Carnation Revolution) மத்தியில் பாசிசவாத எஸ்டாடொ நொவொ ஆட்சியின் தோல்விக்குப் பின்னர் முதல்முறையாக அதிவலது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக இருக்கும்.
வரலாற்றில் மறதிக்குத் தள்ளப்பட்டிருக்க வேண்டிய அரசியல் போக்குகள், மீண்டும் தலை தூக்குகின்றன. பாசிசத்தின் கொடூரமான பயங்கரங்களால் பாதிக்கப்பட்ட ஒரு கண்டத்தில் இது எப்படி சாத்தியமாகிறது? அனைத்திற்கும் மேலாக, இந்தக் கண்டம் எங்கிலும் 1970 களில் இருந்து மிகப்பெரிய வேலைநிறுத்த அலை ஏற்பட்டிருந்ததற்கு மத்தியில், வெளிநாடுகள் மீதான ஏகாதிபத்திய போர் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போர் ஆகிய ஒட்டுமொத்த முதலாளித்துவ உயரடுக்கின் திட்டநிரலுக்கு ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஆழமடைந்து வரும் எதிர்ப்பில் இருந்து, அதிவலது, அதிக அரசியல் ஆதாயமடைந்தவர்களாக ஆவது எப்படி சாத்தியமாகிறது?
இதற்கான பதில், 1930 களைப் போலன்றி, இத்தகைய அரசியல் சக்திகள் மீது விழவில்லை. இவை மக்கள் இயக்கத்தின் ஆதரவைப் பெற்றவை இல்லை. ஒவ்வொரு சம்பவத்திலும், அது கிரேக்கத்தில் சிரிசா ஆகட்டும், பிரான்சில் புதிய முதலாளித்துவக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, போர்த்துக்கல்லில் இடது அணி அல்லது இத்தாலியில் கம்யூனிஸ்ட் மறுசீரமைப்பின் மிச்சமீதிகள் ஆகட்டும், இந்த போலி-இடதுகள் தான் அதிவலதுகளின் உதவியாளர்களாக செயல்பட்டுள்ளன.
எதிர்கட்சியாக இருந்தும் சரி அரசாங்கத்தில் இருந்தும் சரி, இந்தச் சக்திகள் சிக்கன நடவடிக்கைகளை ஆழப்படுத்தி உள்ளன. அத்துடன் இவை, ஏகாதிபத்திய போரை ஆதரித்துள்ளதுடன், தலைமைக்காக இவற்றைத் திரும்பிப் பார்த்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களைச் சிதறடித்து காட்டிக்கொடுக்க முனைந்துள்ளன. இந்த போலி இடதுகள், தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை மாறாக நடுத்தர வர்க்கத்தின் செல்வசெழிப்பான அடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இந்த சமூக அடுக்கு, நிதிய தன்னலக் குழு தலைமையில் சமூக செல்வ வளத்தை மேல்தட்டுடன் மறுபங்கீடு செய்வதில் இருந்து ஆதாயமடைந்துள்ளன. விரிவடைந்து வரும் வர்க்கப் போராட்டங்களை எதிர்கொண்டுள்ள இவை, அவற்றின் சமூக பாசாங்குத்தனங்களைக் கைவிட்டு விட்டு, அவற்றின் சமூகத் தனிச்சலுகைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கூர்மையாக வலதை நோக்கி நகர்ந்து வருகின்றன.
ஸ்பெயினில், பப்லோ இக்லெசியஸ் தலைமையில் பப்லோவாத முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் மற்றும் பல்வேறு ஸ்ராலினிச பேராசிரியர்களால் 2014 இல் பொடெமொஸ் நிறுவப்பட்டது. இந்தக் கட்சி, 2008 உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒரு காலக்கட்டத்திற்குப் பின்னர், 2011-2012 இல், “அரபு வசந்தம்” எனப்பட்ட கொந்தளிப்பான சம்பவங்கள் மற்றும் எகிப்திய இராணுவ ஆட்சியின் வீழ்ச்சியின் போது கட்டவிழ்ந்த, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கொதித்தெழுந்த M-15 போராட்டங்களில் இருந்து நேரடியாக உருவெடுத்தது.
பப்லோவாத ஐக்கிய செயலகத்துடனான கூட்டணியில், இக்லெசியஸ் மற்றும் அவரது ஸ்ராலினிச கூட்டாளிகளுக்கும், வெனிசுவேலாவில் ஹூகொ சாவேஸ் (Hugo Chavez) மற்றும் பொலிவியாவில் எவொ மொராலெஸின் (Evo Morales) முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகளில் இருந்து தருவிக்கப்பட்ட பொடெமொஸ், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதற்கு எதிராக தன்னை நிறுத்தியது. இடதில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கவும் மற்றும் மக்கள் ஜனநாயகத்தின் புதிய சகாப்தத்திற்கும் வாக்குறுதி அளித்து, “பரந்த இடது” ஜனரஞ்சக அமைப்புகளின் ஒரு புதிய சகாப்தத்தில் பாரம்பரிய “மேலிருந்து கீழ்நோக்கிய” தலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அது அறிவித்தது, ஆனால் இறுதியில் பிரோன்கோவுக்குப் பின்னர் ஜனநாயகத்திற்கு மாறுவதற்கான “ஜனநாயக” பணிகளை அது நிறைவேற்றவே இல்லை. 1980 களுக்குப் பின்னர் இருந்து முதலாளித்துவ ஆட்சியின் முன்னணி கட்சியாக இருந்து வந்துள்ள சமூக ஜனநாயக PSOE இக்குப் பின்னாலும் மற்றும் தொழிற்சங்க எந்திரத்திற்குப் பின்னாலும் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப் போடவே அது தொடர்ந்து முயன்று வந்தது.
2018 இல், மக்கள் கட்சிக்கு எதிராகவும் மற்றும் கட்டலானில் அதன் ஒடுக்குமுறை கொள்கைகளுக்கு எதிராகவும் அதிகரித்து வந்த மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், பொடெமொஸ் ஒரு பாராளுமன்ற உபாயத்தை ஒழுங்கமைத்து, மக்கள் கட்சியை வெளியேற்றி, அதனிடத்தில் ஒரு சிறுபான்மை PSOE அரசாங்கத்தைக் கொண்டு வந்தது. பொடெமொஸ் ஆதரவிலான PSOE அரசாங்கம், மக்கள் கட்சியின் சிக்கன வரவுசெலவு திட்டக் கணக்கையே தொடர்ந்ததுடன், இராணுவத்திற்குப் பில்லியன் கணக்கில் யூரோக்களை வாரியிறைத்தது, புலம்பெயர்ந்தோரைத் தாக்கியதுடன், அதன் பல்வேறு போலி-இடது துணை அமைப்புகள் கட்டலான் பிரிவினைவாதிகளின் எதிர்விரோதமான முதலாளித்துவ-சார்பு திட்டநிரலை ஆமோதித்த போதும் கூட, கட்டலான் தேசியவாதத்திற்கு எதிராக வலதுசாரிகளின் ஒடுக்குமுறை பிரச்சாரத்தைத் தொடர்ந்தது.
2018 இல் வொக்ஸ் கட்சி ஸ்பானிய பேரினவாத உணர்வை முடுக்கி விட்டு, வெற்றிகரமாக அதை மூலதனமாக்கி, ஆண்டலூசிய பிராந்திய தேர்தலில் 12 சட்டமன்ற இடங்களை வென்று, முதல்முறையாக ஒரு பிராந்திய சட்டமன்றத்தில் நுழைந்தது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர், 2019 தேர்தல்களில், வொக்ஸ் தேசியளவில் 15 சதவீத வாக்குகளுடன், 52 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, பொடெமொஸை மிஞ்சி, மூன்றாவது மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது.
அதே ஆண்டில், பொடெமொஸ் PSOE தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்தது. அதற்கடுத்து வந்த நான்காண்டுகளில், அது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரின் பாதுகாவலராக ஆனதுடன், ஓய்வூதியங்கள் மற்றும் கூலிகளை வெட்டியது, கோவிட்-19 பெருந்தொற்றின் போது உயிர்களை விட இலாபங்களே என்ற கொள்கையைப் பின்பற்றியதுடன், இராணுவ வரவுசெலவுத் திட்டக்கணக்கைப் பாரியளவில் உயர்த்தியது, முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்குப் பிணையெடுப்புகள் வழங்கியது. ட்ரக் ஓட்டுனர்கள் மற்றும் உலோகத்துறை தொழிலாளர்களைக் கண்மூடித்தனமாக தாக்கிய அது, விமானச் சேவை சிப்பந்திகளுக்குக் கடுமையான குறைந்தபட்ச சேவைகளைத் திணித்ததுடன், புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி சாகட்டுமென அவர்களைக் கைவிட்டது.
பொடெமொஸிற்கு ஆதரவான ஊடகங்கள் ஆளும் கட்சிகளின் தேர்தல் தோல்வியை வலதுசாரி ஊடகங்கள், போலி செய்திகள் மற்றும் பெண்ணிய விரோத “ஆணாதிக்க” அலையின் விளைவாக ஏற்பட்டதாகச் சித்தரிக்கின்றன, ஆனால் உண்மை என்னவென்றால் அது பதவியில் இருந்த நான்காண்டுகளில் தொழிலாளர்கள் அவர்களின் நுகர்வு சக்தியில் 8 சதவீதத்தை இழந்துள்ளனர், அடமானக் கடன்களும் வாடகைகளும் 50 சதவீதம் அதிகரித்துள்ளன மற்றும் மிகப்பெரும் ஸ்பானிய பெருநிறுவனங்கள் சாதனையளவுக்கு இலாபங்களை அறுவடை செய்து வருகின்றன. அப்போது வெளியுறவுத்துறை செயலராகவும் ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலராகவும் இருந்த பொடெமொஸ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ரிக் சாண்டியாகோ (Enrique Santiago) கூறுகையில், “ஸ்பெயின் வரலாற்றிலேயே, இந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தளவுக்கு மிகப் பெரியளவில் அரசு சொத்துக்கள் தனியார் நிறுவனங்களுக்கு யாரும் கைமாற்றியதில்லை,” என்று பெருமையாக கூறினார்.
இந்த தேர்தல்களுக்கான 15 கட்சிகளின் தேர்தல் களத்தில், இப்போது சுமர் கட்சி (Sumar) என்று பெயர் மாற்றப்பட்டுள்ள பொடெமொஸ் வகிக்கும் பாத்திரம், போலி-இடது குழுக்களும் ஸ்ராலினிசவாதிகளும் உருவாக்கி பாதுகாக்கும் “பரந்த இடது” கட்சிகளுடன், தொழிலாள வர்க்கத்திற்கு மற்றொரு கசப்பான அனுபவத்தைக் குறிக்கிறது.
தொழிலாளர்களிடம் இருந்து முழுமையாக வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஓர் அணுஆயுதப் போராக விரிவடைய அச்சுறுத்துகின்ற, உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோ போரில் ஸ்பெயினின் பங்கேற்பை எதிர்ப்பதற்காக, அல்லது கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மூலமாக வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் பணம் வழங்குவதற்கான 140 பில்லியன் யூரோ பிணையெடுப்பை எதிர்ப்பதற்காக, அல்லது ஸ்பெயினில் 160,000 உயிரிழப்புகளுக்கும் மற்றும் 12 மில்லியன் நோய்தொற்றுகளுக்கும் வழி வகுத்த கோவிட்-19 பெருந்தொற்றின் போது உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அரசியல் கணக்கீடுகள் செய்ததை எதிர்ப்பதற்காக, அவர்கள் யாருக்கு வாக்களிக்க முடியும்?
ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரை அது ஆதரிப்பதையும், ஆயுதங்களுக்காக நூறு மில்லியன் கணக்கான யூரோக்களை அது தொடர்ந்து அனுப்ப விரும்புவதையும் மற்றும் பிணையெடுப்புகளுக்குப் பணம் செலுத்த 2024 இல் வெட்டுக்கள் மற்றும் வரி உயர்வுகள் மூலம் 24 பில்லியன் யூரோவை திரட்ட புரூசெல்ஸிற்கு வாக்குறுதி அளித்திருப்பதையும் சுமர் தெளிவுபடுத்தி உள்ளது. தற்காலிக துணை பிரதம மந்திரி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் யொலன்டா டயஸ் தலைமையில் அது செயல்படுகிறது. குறைவூதியங்களை விரிவாக்குவதிலும் மற்றும் வெகுஜன மரணங்களுக்கு வழி வகுக்கும் விதத்தில் பெருந்தொற்றின் போது அத்தியாவசியமல்லாத வேலையிடங்களை மீண்டும் திறந்து விடுவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த தொழிலாளர் துறை சீர்திருத்தங்களை யொலன்டா டயஸ் நிறைவேற்றியவர் ஆவார். தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் ஒவ்வொரு முக்கிய பிரச்சினையிலும், வொக்ஸ் கட்சி என்ன நிலைப்பாடு கொண்டுள்ளதோ அதே அடிப்படை நிலைப்பாட்டை சுமர் கொண்டுள்ளது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் தேவையான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். சிக்கன நடவடிக்கைகள், எதேச்சதிகாரவாதம், பாசிசம் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு, இவற்றுக்கு காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் இந்த திவாலான அமைப்புமுறையைப் பாதுகாக்கும் அனைத்து கட்சிகளுக்கும் எதிரான போராட்டம் அவசியம் தேவைப்படுகிறது என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வலியுறுத்தலை, பிராங்கோயிசவாதிகளின் மீள்வருகை ஊர்ஜிதப்படுத்துகிறது. சோசலிசத்திற்கான போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க, ட்ரொட்ஸ்கிச மாற்றீடாக, ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்பது அவசியமாகும்.