மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோவின் போர் ஐரோப்பா எங்கிலும் வெடிக்க அச்சுறுத்தி வரும் நிலையில், மூலோபாயம் பற்றி விவாதிக்க ஐரோப்பிய அதிகாரிகள் ஸ்பெயினின் கிரனாடாவில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் உச்சிமாநாடுகளை நடத்தினர்.
கடந்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனால் தொடங்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவின் எல்லையோர நாடுகளின் கூட்டமான ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு, கடந்த வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஒரு உச்சிமாநாட்டிற்காக கூடியது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது மற்றும் உக்ரேன் போரால் முன்வைக்கப்படும் மூலோபாய பிரச்சினைகள் குறித்து அழைப்பு விடுக்கப்பட்ட உச்சிமாநாடுகளின் கவனம் ரஷ்யாவுடனான போர் மீது இருந்தது. நேட்டோவின் உக்ரேனிய கைப்பாவை ஆட்சியின் தலைவரான உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரெனடாவிற்கு அழைத்தனர். உக்ரேன் போரை நடத்துவது குறித்து வாஷிங்டனில் அதிகரித்து வரும் பிளவுகள் மற்றும் நெருக்கடிக்கு மத்தியில், பைடென் நிர்வாகம் அதற்கான நிதியைப் பெற போராடி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மேலும் போரை தீவிரப்படுத்துவதற்கான தங்கள் உறுதியான ஆதரவை சமிக்ஞை செய்தனர்.
ரஷ்யாவுடன் முழு அளவிலான போரை நடத்துவதன் மூலம் மட்டுமே அமைதியை பாதுகாக்க முடியும் என்ற ஐரோப்பிய ஒன்றிய எரியூட்டு வெறியர்களால் முன்வைக்கப்பட்ட போருக்கான ஓர்வெல்லியன் வாதத்தை செலன்ஸ்கி மிக நேரடியாக முன்வைத்தார்.
உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவது, 'ஒரு ஆளில்லா விமானம், டாங்கி அல்லது வேறு எந்த ரஷ்ய ஆயுதமும் ஐரோப்பாவில் வேறு யாரையும் தாக்காது' என்பதை உறுதி செய்கிறது என்று செலன்ஸ்கி கூறினார். 'ஐரோப்பாவின் சக்தியை அழிப்பதற்காக உலகின் வேறு எந்த பகுதிகளையும் மற்றும் எங்கள் கூட்டாளிகளையும் சீர்குலைக்க புட்டினை அனுமதிக்கக்கூடாது ... ரஷ்யாவோ, அதன் இராணுவமோ அல்லது பினாமிகளோ வேறு எந்த நாட்டின் நிலப்பரப்பிலும் இருப்பது நம் அனைவருக்கும் ஒரு அச்சுறுத்தலாகும். ரஷ்யாவை மற்ற நாடுகளின் எல்லையிலிருந்து வெளியேற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உண்மையில், நேட்டோ நாடுகள் ரஷ்யாவை எதிர்த்துப் போராட நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை உக்ரேனுக்குள் பாய்ச்சும்போது, போரானது ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் வேகமாக வெடிக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் பிரிட்டிஷ் துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்ப முன்மொழிந்த பின்னர், இது பிரிட்டிஷ் துருப்புக்களை ரஷ்ய படைகளின் இலக்குகளாக மாற்றும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர், இதன் பின்னர், உலகம் ஒரு முழுமையான மோதலுக்குள் மூழ்குவதற்கு ஒரு சில முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டிய தொலைவில் உள்ளது என்பது தெளிவாகிறது.
ஆனாலும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் போரின் விரிவாக்கத்தை வலியுறுத்தி வந்தனர். ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே போருக்கு செலவிட்டுள்ள 85 பில்லியன் யூரோக்களுக்கு மேல், கூடுதலாக 70 பில்லியன் யூரோ உதவி பொதியை தயாரித்து வருகிறது என்றார். மக்ரோன் செலென்ஸ்கியை சந்தித்து ரஷ்யாவுடனான போருக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்: 'மிகவும் ஆழமான, மிகவும் வலுவான அர்ப்பணிப்பு உள்ளது, ஏனென்றால் நாம் ஐரோப்பாவைப் பற்றியும் எங்கள் கண்டத்தில் நீடித்த அமைதிக்கான சாத்தியக்கூறு பற்றியும் பேசுகிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்' என்று குறிப்பிட்டார்.
உக்ரேனில் மேலும் அமெரிக்க விரிவாக்கம் தாமதமாவது குறித்தும், வாஷிங்டனின் நெருக்கடி குறித்தும் ஐரோப்பிய அதிகாரிகளும் தங்கள் கவலையையும் அதிருப்தியையும் சமிக்ஞை செய்தனர். 'அமெரிக்காவுடனான நிலைமை ஆபத்தானது, இது ஒரு கடினமான காலம்' என்று செலன்ஸ்கி கூறினார். எவ்வாறெனினும், நேட்டோவின் விரிவாக்கம் இறுதியில் தொடரும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறிய அவர், 'அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரேனுடன் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், இந்த நெருக்கடியில் இருந்து நாம் ஒன்றாக வெளியேறுவோம்' என்று தெரிவித்தார்.
உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவும், (அது நிச்சயமாக, அவர்களுக்கு கிடைக்கும், நாங்கள் அதை அதிகரிப்போம்) அமெரிக்காவின் ஆதரவும் தேவை என்று கூறிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல், 'நிச்சயமாக ஐரோப்பாவால் அமெரிக்காவை பிரதியீடு செய்ய முடியாது' என்று குறிப்பிட்டார்
வாஷிங்டனும் முக்கிய ஐரோப்பிய சக்திகளும் போரை தீவிரப்படுத்த துடிக்கின்றன. வெள்ளியன்று ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் வெள்ளை மாளிகைக்கு மேற்கொண்ட ஒரு அவசர விஜயத்தின் போது, ஜேர்மனிய அரசுத் தலைவரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனும் கியேவுக்கு இராணுவ ஆதரவை பராமரிக்கவும் விரிவுபடுத்தவும் பரஸ்பரம் உறுதியளித்தனர். 'உக்ரேனியர்களை ஆதரிப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் மையமாக எங்கள் கூட்டணி உள்ளது' என்று ஜேர்மன் ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்தது.
பொதுமக்களிடமிருந்து தனிமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னதாக, வெள்ளை மாளிகை கூறுகையில், 'பல முக்கியமான பிரச்சினைகளில் நேட்டோ கூட்டாளிகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பு' முக்கிய அம்சம் என்றது. ஜேர்மனியும் அமெரிக்காவும் 'ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ளும் உக்ரேனின் துணிச்சலான மக்களுடன் தொடர்ந்து இணைந்து நிற்கும்' என்று அது மேலும் தெரிவித்தது.
கூர்மையான எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஏகாதிபத்திய சக்திகள் சவுக்கால் அடிக்கின்றன மற்றும் முழு அளவிலான போருக்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றன.
கிரெனடா உச்சிமாநாட்டின் ஒரு முக்கிய அம்சம், ரஷ்ய கூட்டமைப்பையே சுற்றி வளைத்து உடைப்பதற்கான தயாரிப்பாக, ரஷ்யாவுக்கு அருகிலுள்ள நாடுகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கையாகும்.
வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கான தனது ஆரம்ப அறிக்கையில் ஷோல்ஸ் கூறுகையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உறுதியின்படி இறுதியாக 'மேற்கு பால்கன் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வரவேற்க கூடியதாக இருக்க வேண்டும்' என்றார். 'மால்டோவா மற்றும் உக்ரேனுடனும், நீண்ட கால அடிப்படையில், ஜோர்ஜியாவுடனும்' இது திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்
ஷோல்ஸின் கருத்துக்கள் வெள்ளிக்கிழமை அல்பேனியாவின் தலைநகரான திரானாவில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேர்போக்கினால் எதிரொலிக்கப்பட்டது. 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மேற்கு பால்கன்களில் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை ஒரு புவிசார் அரசியல் தேவையாக ஆக்குகிறது' என்று செர்பியா, கொசோவோ, வடக்கு மாசிடோனியா, மொண்டினீக்ரோ, போஸ்னியா-ஹெஸ்ரகோவினா மற்றும் அல்பேனியாவைச் சேர்ந்த தனது சகாக்களுடன் அவர் பேசியதாக கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை அவர் எழுப்பிய பின்னர், ஷோல்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒருமித்த முடிவுகள் தேவை என்ற கோட்பாட்டை அகற்றுமாறு வாதிட்டார். 'வெளியுறவுக் கொள்கை அல்லது வரிக் கொள்கை விஷயங்களில் ஒருமித்த கருத்தைப் பேணுவது சாத்தியமில்லை ... ஐரோப்பிய ஒன்றியத்தின் இறையாண்மை மற்றும் செயல்படும் திறனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தகுதிவாய்ந்த பெரும்பான்மையுடன் முடிவுகளை எடுக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
பெரும்பான்மை ஆட்சியைத் திணிப்பதன் மூலம் பேர்லின், பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவை, போர், மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் அவற்றுக்கு நிதியளிப்பதற்குத் தேவையான அபார சமூகத் தாக்குதல்கள் ஆகியவற்றுடன் இன்னும் தீர்க்கமாக முன்னோக்கிச் செல்கின்றன.
கிரெனடாவில், கியேவுக்கு ஷோல்ஸ் மற்றொரு பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை வழங்குவதாக அறிவித்தார் மற்றும் குளிர்காலத்திற்கு மேலும் இராணுவ உதவியை வழங்குவதற்கு உறுதியளித்தார். ரஷ்யாவிற்குள் ஆழமாக சென்றடையக்கூடிய டாரஸ் ஏவுகணைகளை வழங்குவதை அவர் நிராகரிக்கவில்லை.
முன்னதாக, ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் உக்ரேனுக்கு மற்றொரு 400 மில்லியன் யூரோ இராணுவ தொகுப்பை அறிவித்தார்: 'மிருகத்தனமான ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான தற்காப்புப் போராட்டத்தில் உக்ரேனுக்கு மிகவும் தேவையான கூடுதல் வெடிமருந்துகளை நாங்கள் வழங்குகிறோம். குறிப்பாக, வெடிகுண்டுகள், மோட்டார் குண்டுகள், ராக்கெட்டுகள், பாதுகாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் கண்ணிவெடி அகற்றும் அமைப்புகளுக்கு நாங்கள் உதவுவோம்' என்று அவர் மேலும் கூறினார்.
உலகப் பொருளாதாரத்திற்கான கீல் இன்ஸ்டிடியூட்டின் கூற்றுப்படி, ஜேர்மனி இதுவரை கியேவுக்கு 17 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதனை முன்னணியில் நிறுத்தி உள்ளது.
ஜேர்மனி கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ துருப்புக்களை குவித்து வருகிறது. கடந்த வாரம் பால்டிக் நாடுகளில் பயணம் செய்த பிஸ்டோரியஸ், ரஷ்யாவை 'தடுப்பதில்' ஜேர்மனியின் முக்கிய பங்கு குறித்து பெருமையடித்துக் கொண்டார். 'இதற்கு ஜெர்மனி பொறுப்பேற்கிறது, ஜேர்மனி ஒரு முன்னணி பாத்திரத்தை எடுத்து வருகிறது,' என்று இந்த சமூக ஜனநாயகவாதி எஸ்டோனிய தலைநகரான டாலினில் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் கூறினார். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், பெர்லின் லித்துவேனியாவில் 4,000ம் துருப்புக்களை கொண்ட போருக்குத் தயாராக இருக்கும் படைப்பிரிவை நிறுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
ஏற்கனவே 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு தடவை ரஷ்யாவை அடிபணிய வைக்க முயன்ற ஜேர்மன் ஏகாதிபத்தியம், நேட்டோ தாக்குதலை வழி நடத்துகிறது என்பது ஐரோப்பிய ஒன்றிய போர்க் கொள்கையின் உண்மையான தன்மையைக் எடுத்துக் காட்டுகிறது. இது 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயகம்' போன்ற 'ஐரோப்பிய மாண்புகள்' பற்றியது அல்ல, மாறாக புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பற்றியது. ஜேர்மன் அரசாங்க மூலோபாய ஆவணங்கள் உக்ரேனில் போர் 'இரும்பு, டைட்டானியம் மற்றும் லித்தியம் போன்ற 'மூலப்பொருட்களுக்கான போராட்டம்' என்று பகிரங்கமாக அறிவிக்கின்றன, அவற்றில் சில இப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன' என்கிறது.
கிரெனாடா உச்சிமாநாடு ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்துகிறது. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கும் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்திற்கும், அதன் அனைத்து பிரிவுகளும் போர் மற்றும் பாசிசத்தை நோக்கி அதிகரித்தளவில் வெளிப்படையாக திரும்புவதன் மூலம் விடையிறுக்கின்றன.
உச்சிமாநாட்டில் மற்றொரு முக்கிய பிரச்சினை அகதிகள் கொள்கையை கடுமையாக்குவது பற்றியதாகும். சமூக-ஜனநாயக PSOE மற்றும் போலி-இடது பொடெமோஸ் கட்சியின் ஸ்பானிய அரசாங்கத்தால் வரையப்பட்ட 'அவசரகால நெருக்கடி ஆணை' மூலம், ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறையில் அதிவலது வேலைத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் நடவடிக்கைகள் அகதிகளை எல்லையைத் தாண்டிய பின்னர் வதை முகாம் போன்ற இழிவான இடங்களில் தடுத்து வைக்க வகை செய்கின்றன. இந்த முகாம்களில், ஒருவருக்கு அடைக்கலம் வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை, மூன்று மாதங்களில் அதிகாரிகள் முடிவு செய்வர். இல்லையெனில், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.
அகதிகள் மீதான தாக்குதல்கள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் குறிவைக்கின்றன. ஆளும் வர்க்கம் இராணுவவாதம் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளை எவ்வளவு தீவிரமாக முன்னெடுக்கிறதோ, அந்த அளவிற்கு அது உள்நாட்டில் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை நசுக்க முயல்கிறது. இந்த பிற்போக்குத்தனமான தாக்குதலை முறியடிக்க, தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த சுயாதீனமான போராட்ட அமைப்புகளும் ஒரு சோசலிச தலைமையும் முன்னோக்கும் தேவை.
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் முன்னோக்கிற்காக, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள், வெகுஜன மரணம் மற்றும் போர் ஆகியவற்றை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும் என்று ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) அடுத்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களுக்கான அறிக்கையில் எழுதுகிறது. SGP பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் துருக்கியில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடனும், உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள ஆதரவுக் குழுக்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் போட்டியிடுகிறது.
'வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராமல் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது, உயிர்களைக் காப்பாற்ற முடியாது மற்றும் ஊதியங்களை பாதுகாக்க முடியாது. ஒருவருக்கொருவர் சுடுவதற்கு பதிலாக, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களும், அதே போல் ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இந்த முன்னோக்குடன் தங்கள் சொந்த நாட்டில் உள்ள போர் வெறியர்களை எதிர்த்துப் போராட வேண்டும்.'