அமெரிக்காவிற்கு வருகை தந்த நெதன்யாகு, மத்திய கிழக்கின் வரைபடத்தை "மீண்டும் வரைவதாக" உறுதியளித்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய அருங்காட்சியகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கைகுலுக்குகின்றனர்.  [AP Photo/Sebastian Scheiner]

காஸா மீதான இனச் சுத்திகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரை விரிவுபடுத்துவது குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த வாரம் ட்ரம்புடன் விரிவான தொடர் சந்திப்புகளுக்காக, இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு ஞாயிறன்று வாஷிங்டன் டி.சி.க்கு வந்தடைந்தார்.

வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் வரவேற்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகு ஆவார். வெளிநாட்டு பிரமுகர்கள் தங்கும் வாஷிங்டன் பிளேர் மாளிகையில் 14-வது முறையாக நெதன்யாகு தங்குகிறார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ஐ.சி.சி) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை.

அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்னதாக, நெதன்யாகு ஞாயிறன்று X தளத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், பாலஸ்தீன பிராந்தியங்கள் முழுவதையும் மற்றும் அண்டை நாடுகளின் கணிசமான பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு “அகன்ற இஸ்ரேலை” உருவாக்குவதற்கான அவரது அரசாங்கத்தின் திட்டத்தைக் குறிப்பிட்டு, மத்திய கிழக்கின் வரைபடத்தை “மறுவரைவு” செய்வதற்கு சூளுரைத்தார்.

அவரது அறிக்கையில், “போரில் நாங்கள் எடுத்த முடிவுகள் ஏற்கனவே மத்திய கிழக்கின் முகத்தை மாற்றியுள்ளன. நமது முடிவுகளும், நமது படையினர்களின் தைரியமும் வரைபடத்தை மாற்றி வரைந்துள்ளன. ஆனால், ஜனாதிபதி ட்ரம்புடன் நெருக்கமாக வேலை செய்வதன் மூலம் அதை மேலும் மாற்றியமைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று நெதன்யாகு அறிவித்தார்.

மத்திய கிழக்கின் “வரைபடத்தையே மாற்றி அமைக்கும்” நடவடிக்கைகள், காஸாவில் “70,000க்கும் அதிகமான இறப்புகளுக்கு” வழிவகுத்துள்ளதாக, கடந்த மாதம் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. முந்தைய ஆய்வின்படி இந்த இறப்புகள் 186,000 அல்லது அதற்கு மேலேயும் எட்டக்கூடும். லெபனான், சிரியா, ஈராக் மற்றும் ஈரான் உட்பட கிட்டத்தட்ட அனைத்து அண்டை நாடுகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் தொடங்கிய இனப்படுகொலை, ஆண்களை விட அதிகமான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கொன்றுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.பெண்கள், குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் இறப்பு எண்ணிக்கையானது, இஸ்ரேலின் நோக்கம் காஸா மக்களைப் படுகொலை செய்வதும், அப்பகுதியை இனச்சுத்திகரிப்பிற்கான தயாரிப்பில் தரிசு நிலமாக மாற்றுவதையும் தெளிவாக்குகிறது.

இப்போது, ட்ரம்ப் நிர்வாகத்தின் முழு ஆதரவால் உந்தப்பட்டு, நெதன்யாகு இப்பிராந்தியம் எங்கிலும், பெரிய போர் அலையைக் கட்டவிழ்த்து விட சூளுரைத்து வருகிறார்.

செப்டம்பர் 22, 2023 அன்று, அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் “புதிய மத்திய கிழக்கின்” ஒரு வரைபடத்தைக் காட்சிப்படுத்தினார். இது அமெரிக்காவுடன் இணைந்த மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, சூடான், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா உடனான புவிசார் அரசியல் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் அனைத்து பாலஸ்தீனிய பிரதேசங்களையும் உள்ளடக்கியது என்பதைக் காட்டுகிறது.

இனப்படுகொலை தொடங்கி ஓராண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் 27, 2024 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு மீண்டும் பேசிய போது, அவர் மீண்டும் “கடந்த ஆண்டு இங்கு நான் வழங்கிய வரைபடத்தை” குறிப்பிட்டு, “அமெரிக்க ஆதரவு மற்றும் தலைமையுடன், இந்த பார்வை மக்கள் நினைப்பதை விட, மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்,” என்று அறிவித்தார்.

கடந்த மாதம், ட்ரம்ப், காஸாவிலுள்ள அரபு குடிமக்களை “சுத்தப்படுத்த” இஸ்ரேலுக்கு அழைப்புவிடுத்து, இன சுத்திகரிப்புக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். “நீங்கள் அநேகமாக ஒன்றரை மில்லியன் மக்களைப் பற்றி பேசுகிறீர்கள், நாங்கள் அதை முழுவதுமாக சுத்தம் செய்யப்போகிறோம்” என்று ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்பின் அறிக்கை, நெதன்யாகு அரசாங்கத்தின் உண்மையான கொள்கையை அமெரிக்க அரசு பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதை குறிக்கிறது. இது, பாலஸ்தீன பிரதேசங்கள் அனைத்தையும் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாலஸ்தீன மக்களை காஸாவில் இருந்து முறையாக அழித்து அகற்றுவதாகும்.

கடந்த வாரம், டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் வார்த்தைகளில், “காஸாவின் மக்களை ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு அனுப்பும் ட்ரம்பின் யோசனை” குறித்து விவாதிக்க, ட்ரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் நெதன்யாகுவை சந்தித்தார். மில்லியன் கணக்கான காஸா மக்கள் எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு இடம்பெயர வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் தொடர்ச்சியான ஆலோசனையின்படி, காஸாவின் மக்களை இடம் மாற்றுவதற்கான சாத்தியமான வரையறைகளை விட்காஃப் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் விவாதித்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

காஸா மீது இன சுத்திகரிப்புக்கான ட்ரம்பின் அழைப்புகளுக்கு விடையிறுக்கையில், அதிவலது இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “ஜனாதிபதி ட்ரம்பின் இந்த பார்வை யதார்த்தமாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு செயல்பாட்டு திட்டத்தை தயாரிப்பதற்கும் நான் பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்” என்று குறிப்பிட்டார்.

நெதன்யாகுவின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக, ஸ்மோட்ரிச் மேற்குக் கரையை இணைப்பதற்கு அழைப்புவிடுத்தார். மேலும், “யூதேயா மற்றும் சமாரியாவில் [மேற்குக் கரை] தாயகத்தின் மீது நமது பிடியையும் இறையாண்மையையும் நாம் பலப்படுத்த வேண்டும்,” என்று அவர் அறிவித்தார்.

வாஷிங்டனுக்கு புறப்படுவதற்கு முன்னதாக தனது அறிக்கையில், நெதன்யாகு ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதலை விரிவாக்குவதாக அச்சுறுத்தினார். “இந்தக் கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் நமது பிராந்தியம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகள், ஹமாஸுக்கு எதிரான வெற்றி, நமது அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையை அடைதல் மற்றும் அதன் அனைத்து கூறுகளிலும் ஈரானிய பயங்கரவாத அச்சைக் கையாள்வது ஆகியவற்றை நாங்கள் கையாள்வோம்” என்று நெதன்யாகு அறிவித்தார்.

கடந்த டிசம்பரில், ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான சாத்தியமான வான்வழித் தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப்பின் இடைக்கால நிர்வாகக் குழு விவாதித்ததாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டது. ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற சில நாட்களுக்குப் பிறகு, வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்துக்களில், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள் குறித்து கருத்தை ட்ரம்ப் நிராகரிக்க மறுத்துவிட்டார்.

காஸாவை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான அவரது அழைப்புக்கள் நெதன்யாகு அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த வாரம் திட்டமிடப்பட்ட விவாதங்கள் குறித்த ஒரு அறிக்கையில், பைனான்சியல் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது:

இஸ்ரேலிய அரசாங்கத்தின் சிந்தனையை நன்கு அறிந்த ஒருவர், ட்ரம்ப்பின் கருத்துக்களில் “ஆச்சரியம் இல்லை” என்று கூறினார். “இது ட்ரம்புக்கு இப்போது வந்த யோசனை அல்ல” என்று அந்த நபர் கூறினார். “அவர் இதைச் சொல்லப் போகிறார் என்று இஸ்ரேலுக்குத் தெரியும். அவர்கள் [அமெரிக்காவும் இஸ்ரேலும்] இணைந்திருக்கிறார்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு பெயரளவிலான “போர் நிறுத்தம்” இருந்து வருகின்ற போதிலும், பாலஸ்தீனம் முழுவதும் இஸ்ரேல் தினசரி இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்கிறது. இதில் ஜெனின் நகரத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல் உட்பட, பொதுமக்களின் உள்கட்டமைப்பு பரவலாக அழிக்கப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை, காஸா பகுதியின் மையப் பகுதியில் உள்ள நுசைராத் முகாமில் இஸ்ரேலிய துருப்புக்கள் ஒரு தாக்குதலை நடத்தின, அதில் நான்கு பேர் காயமடைந்தனர்.

இப்பகுதி முழுவதும் இஸ்ரேல் தனது பிராந்திய இணைப்புகளை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, சிரியாவில் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு சிரியாவின் கோலன் குன்றுகளில் இஸ்ரேல் கைப்பற்றிய பிரதேசத்தில் இராணுவ புறக்காவல் நிலையங்களை உருவாக்கி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.