மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று வாஷிங்டனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஸா பகுதியை முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யவும், அதன் அனைத்து கட்டிடங்களையும் தரைமட்டமாக்கவும், அமெரிக்கா அந்தப் பகுதியை இணைத்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
காஸா பகுதியில், “பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்ந்த அதே மக்களால் மீண்டும் காஸா கட்டியெழுப்பப்பட்டு வசிப்பதற்கான செயல்முறைக்கு அனுமதிக்க கூடாது” என்று ட்ரம்ப் கூறினார். “காஸாவில் வசிக்கும் 1.8 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இறுதியில் வசிப்பதற்கான பல்வேறு இடங்களை உருவாக்க” ட்ரம்ப் “இதர நாடுகளுக்கு” அழைப்பு விடுத்தார். “இது பல இடங்களாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய இடமாகவும் இருக்கலாம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும் அவர், “காஸா பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும், அதனுடன் இணைந்து நாங்களும் செயல்படுவோம். நாங்கள் அதை சொந்தமாக்குவோம்” என்று தெரிவித்தார். “அமெரிக்கா காஸாவை “நிலைப்படுத்தி, வரம்பற்ற எண்ணிக்கையிலான வேலைகளை வழங்கும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்” என்று ட்ரம்ப் கூறினார்
காஸாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா துருப்புகளை அனுப்புமா என்று கேட்டதற்கு, ட்ரம்ப், “தேவைப்பட்டால், நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம், அதை அபிவிருத்தி செய்யப் போகிறோம், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போகிறோம்” என்று தெரிவித்தார்.
உலக சோசலிச வலைத் தளம், காஸா இனப்படுகொலை குறித்த அதன் ஆய்வுகள் முழுவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் “பாலஸ்தீன பிரச்சினைக்கான இறுதித் தீர்வை” நாடுகிறது என்று விளக்கியுள்ளது. இப்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெட்கம்கெட்ட குரலான ட்ரம்ப், இந்த “இறுதித் தீர்வு” என்னவாக இருக்கும் என்பதை துல்லியமாக உச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் முன்மொழிவு பாலஸ்தீன மக்களுக்கு ஒரு சாவு மணியாக இருக்கப் போகிறது. ட்ரம்ப் தனது முடிவை எடுத்தால், காஸா மக்கள் பாலைவனங்கள் மற்றும் தரிசு நிலங்களில் உள்ள சித்திரவதை முகாம்களில் சிதறடிக்கப்படுவார்கள். அதேவேளையில், லெவண்டைன் கடற்கரையில் உள்ள அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்துவந்த தாயகமானது, ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவின் அடிவருடிகளால் ஓய்வு விடுதிகளாகவும் சூதாட்ட விடுதிகளாகவும் மாற்றப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது.
ட்ரம்பின் உரை, நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பார்த்திராத காட்டுமிராண்டித்தனம் மற்றும் குற்றகரத்தன்மையின் மட்டத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்து வருவதைக் குறிக்கிறது.
போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாரிய படுகொலைகளுக்காக ஒரு டசினுக்கும் அதிகமான நாஜி தலைவர்கள் இடிபாடுகளுடன் இருந்த நியூரம்பெர்க் நகரில் தூக்கிலிடப்பட்ட எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, யூத இனப்படுகொலையில் கையாளப்பட்ட வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்ல, மாறாக உலகின் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசின் தலைவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும் வருகின்றன.
இரத்தத்தை உறைய வைக்கும் அவரது உத்தரவாணைகளை வெளியிட்டபோது, ட்ரம்ப் வெளிப்படையாக மகிழ்ச்சியுடன் பேசினார். பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளின் அரைகுறையாக புதைக்கப்படாத சடலங்களின் மேல் கட்டப்பட்ட பரந்த கோல்ஃப் மைதானங்கள் மற்றும் பளபளக்கும் சூதாட்ட விடுதிகளின் காட்சிகளைப் பார்ப்பது போல, “மத்திய கிழக்கின் உல்லாச கடற்கரையை” விவரித்து, ரியல் எஸ்டேட் ஒப்பந்த பேரங்கள் குறித்து அவர் நடைமுறையில் எச்சில் வடித்துக் கொண்டிருந்தார்,
ட்ரம்பைப் புகழ்ந்த நெதன்யாகு, “புதிய யோசனைகளுடன் சிந்திப்பதற்கு நீங்கள் விருப்பம் காட்டுவது இந்த இலக்குகளை அடைய எங்களுக்கு உதவும், மேலும் நீங்கள் இதை பல முறை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். நீங்க இப்போது நேரா விஷயத்துக்கு வந்துட்டீங்கள்” என்று குறிப்பிட்டார்.
நெதன்யாகுவின் வார்த்தைகள் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். ட்ரம்ப் உண்மையில் “நேரடியாக விஷயத்திற்கு” வந்துவிட்டார். அக்டோபர் 7 ஆம் தேதி, நடந்த நிகழ்வுகளைக் கைப்பற்றி, காஸா பகுதியை இடித்து தரைமட்டமாக்கி, முடிந்தவரை பல பாலஸ்தீனியர்களைக் கொன்று, அந்தப் பகுதியை மக்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக மாற்றி, அதன் இனச் சுத்திகரிப்புக்கான சாக்குப்போக்கை உருவாக்குவதே நெதன்யாகு அரசாங்கத்தின் உண்மையான கொள்கை என்று ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறினார்.
பைடென் நிர்வாகம், பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, “இரண்டு-அரசு தீர்வுக்கு” அழைப்பு விடுத்த அதேவேளையில், ஒட்டுமொத்த நகரத் தொகுதிகளையும் நாசம் செய்த குறைந்தபட்சம் 2,000 பவுண்டு எடை கொண்ட 10,000ம் குண்டுகள் உட்பட நகரத்தை அழிக்கும் ஆயுதங்களின் ஒரு பரந்த ஆயுதக்கிடங்கை இஸ்ரேலுக்கு வழங்கியதன் மூலமாக நனவுபூர்வமாகவும் வேண்டுமென்றே இந்த கொள்கையை கடைப்பிடித்தது.
காஸாவின் மக்கள் தொகையை விவரிக்க ட்ரம்ப் 1.8 மில்லியன் மக்கள் என்ற எண்ணிக்கையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, வேறு எந்த உத்தியோகபூர்வ வெளியீட்டிலும் வெளிவராத ஒரு புள்ளிவிவரமாகும். போருக்கு முந்தைய காஸாவின் மக்கள் தொகை 2.2 மில்லியனாக இருந்தது. ட்ரம்ப் இப்போது உத்தியோகபூர்வமாக காஸாவின் மக்கள்தொகையை 1.8 மில்லியன் என்று கணக்கிடுகிறார் என்றால், இஸ்ரேலிய இனப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூறாயிரக் கணக்கில் இருக்கும் என்று அவரது நிர்வாகம் மதிப்பிடுகிறது என்ற உண்மையை அது பிரதிபலிக்கிறது.
காஸாவை இனரீதியில் சுத்திகரிப்பதற்கான தனது அழைப்பை நியாயப்படுத்துவதற்காக, ட்ரம்ப் “நகரங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன” என்று அறிவித்து, கடந்த காலத்தில் அதிகாரமற்ற குரலிலும் பேசினார். ஆனால், ட்ரம்பின் முன்னோடி கொடுத்த குண்டுகளைப் பயன்படுத்தி, ஒரு நனவான கொள்கையாக காஸாவை இடித்து தரைமட்டமாக்கிய நபருக்கு அருகில் ட்ரம்ப் நின்று கொண்டிருக்கிறார்.
ட்ரம்பின் அறிக்கைகள் உண்மையில் பைடென் நிர்வாகத்தின் உண்மையான கொள்கையின் ஒரு வெளிப்பாடு ஆகும். நெதன்யாகு என்ன செய்ய முனைகிறார் என்பதை அது முழுமையாக அறிந்திருந்தது. மேலும், வேண்டுமென்றே நனவுபூர்வமாக அதை ஆயுதபாணியாக்கி, நிதியளித்ததும், பாதுகாத்தும் வந்தது.
உண்மையில், ட்ரம்ப் இந்த இனப்படுகொலையை ஒரு “பொருளாதார அபிவிருத்தி பரிவர்த்தனையாக” பார்க்கிறார். இது அவர் பதவியேற்பு விழாவில் கையிலெடுத்த “வெளிப்படையான தலைவிதியின்” ஒரு வடிவமாகும். ஆனால், ட்ரம்பைப் பொறுத்தவரை, முந்தைய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளைப் போலல்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “வெளிப்படையான தலைவிதி” அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுடனோ அல்லது அமெரிக்காவுடனோ கூட நின்றுவிடப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்டு போர்ப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியப் போரின் இந்த இரத்தந்தோய்ந்த வெடிப்பில், பாலஸ்தீனியர்கள் ஒரு தியாக பலிகடாவாக இருப்பார்கள்.
ட்ரம்பின் அறிக்கைகள் நீண்டகால முக்கியத்துவம் கொண்டவை. அமெரிக்காவின் கடல்கடந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒட்டுமொத்த வரலாறு முழுவதிலும், அது எப்போதும் தன்னை “சுதந்திரம்,” “ஜனநாயகம்” மற்றும் சுய-ஆட்சியைப் பரப்புவதாகக் காட்டிக் கொண்டு, அதன் போட்டியாளர்களை பாசாங்குத்தனமாக ஏகாதிபத்தியவாதிகளாகவும் காலனித்துவ எஜமானர்களாகவும் கண்டனம் செய்து வந்திருக்கிறது.
ட்ரம்ப், இந்த வாய்வீச்சை முற்றிலுமாக கைவிட்டுள்ளார். உலகம் பற்றிய அவரது பார்வை காட்டின் சட்டமாகும். அதில் அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் பரந்த இராணுவ தளவாடங்களுடன், தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, வழியில் குறுக்கிடும் எவரையும், மில்லியன் கணக்கில் கூட கொன்று குவித்த வருகிறது.
உலகை வெல்வதற்கான ட்ரம்பின் வெறித்தனமான திட்டத்திற்கு காஸா இனப்படுகொலையின் மூல கர்த்தாக்களான ஜனநாயகக் கட்சியினர் உதவி வருகிறார்கள். ட்ரம்பின் கருத்துக்களை தழுவிக் கொண்ட செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன் நடைமுறையளவில் “இது ஒரு உரையாடலின் ஒரு பகுதி, அங்குதான் நாம் இருக்கிறோம்” என்று அறிவித்தார்.
செனட் சிறுபான்மை தலைவர் சக் சூமர், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், பைடென் மற்றும் கமலா ஹாரிஸ் உட்பட ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சி தலைமையும் செவ்வாய்கிழமை இரவு ட்ரம்பின் கருத்துக்கள் குறித்து மௌனமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.