மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க பிரஜையும் சவூதி அரசியல் அதிருப்தியாளருமான ஜமால் கஷோகியின் கொலை வழக்கு விசாரணையில் இருந்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைக் காப்பாற்றும் வகையில், செவ்வாய்கிழமை, அமெரிக்க வெளியுறவுத் துறை அவருக்குச் சட்ட விலக்கு அளித்தது.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக பைடென் நிர்வாகம் கூறுவது — உக்ரேன் போரிலும் உலகம் முழுவதிலும் அதன் தலையீட்டிற்கான நியாயப்பாடாக கூறப்படும் இது — ஒரு அப்பட்டமான பொய் என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த மே மாதம் பைடென் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்திருந்த போது, துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்திற்குள் கஷோகி கொல்லப்பட்டு உடல் துண்டுதுண்டாக சிதைக்கப்பட்டதைக் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர், பைடென் அதை அலட்சியப்படுத்தும் வகையில், “நீங்கள் ஏன் முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது? முக்கியமான ஒரு கேள்விக்கு பதிலளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்,” என்றார். இது தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டவட்டமான, ஆணவமான குரல்.
பின் சல்மானை அந்த படுகொலைக்குக் கணக்கில் கொண்டு வரும் முயற்சியாக, கஷோகியைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த ஹேடிஸ் செங்கிஸூம் கஷோகி நிறுவிய ஒரு மனித உரிமைகள் குழுவும் தொடுத்த சிவில் வழக்கை விசாரிக்கும் பெடரல் நீதிபதியின் ஓர் உத்தியோகப்பூர்வ விசாரணைக்கு வெளியுறவுத் துறை விடையிறுப்பைக் காட்டியது. பின் சல்மானுக்கு இறையாண்மை சட்ட விலக்கு உள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்து இந்த வழக்கில் தலையிடுமாறு அமெரிக்க நீதித்துறைக்கு அது அறிவுறுத்தல்களை வழங்கியது, 'அரசு தலைவர்கள், அரசாங்க தலைவர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பதவியில் இருக்கும் போது, அமெரிக்காவில் எந்த நிர்வாகமாக இருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து இதை வழங்கி உள்ளது,” என்றது குறிப்பிட்டது.
சவூதி ஆட்சியுடன் ஒருமித்து செயல்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது, சவூதி வழக்கப்படி பிரதம மந்திரி பதவியை மன்னர் வகித்து வந்தார், அவர் மகன் துணை பிரதம மந்திரியாக இருந்தார், மன்னரான அவர் தந்தையால் செப்டம்பரில் பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி நியமனத்தால் அமெரிக்காவின் சட்டக் கடப்பாடுகளில் இருந்து சல்மான் இப்போது விலக்கீட்டுரிமைக்குத் தகுதி அடைந்துள்ளார். 2018 இல் கஷோகி படுகொலைக்குப் பின்னர், சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, பின் சல்மான் ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ பயணம் மேற்கொள்ளவில்லை.
கஷோகி படுகொலைக்காக சவூதி அரேபியாவை உலக அரங்கில் 'அன்னிய' படுத்துவேன் என்று பைடென் 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும், படுகொலைகள் மற்றும் அவற்றை மூடிமறைப்பதில் பெரும் அனுபவம் கொண்ட சிஐஏ இன் மதிப்பீடு ஒன்றை வெளியிட்டார் — அது பின் சல்மான் தான் கஷோகியைப் படுகொலை செய்ய உத்தரவிட்டார் என்றாலும், அவருடைய பிரத்யேக பாதுகாப்புத் துறைத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டதாக அது குறிப்பிட்டது.
மத்தியக் கிழக்கு மற்றும் குறிப்பாக சவூதி முடியாட்சியைக் குறி வைத்து, கஷோகி வழக்கமாக பொது தலையங்க கட்டுரை எழுதி வந்த வாஷிங்டன் போஸ்டின் வெளியீட்டாளர் ஃபிரெட் ரியான் ஓர் அறிக்கையில் வெளியுறவுத் துறையைக் கண்டித்தார், “ஜனாதிபதி பைடென் அமெரிக்காவின் மிகவும் மகத்துவமான மதிப்புகளை நிலைநிறுத்த தவறி வருகிறார். உலகின் மிகவும் மோசமான மனித உரிமை துஷ்பிரயோகவாதிகளில் ஒருவருக்குக் கொலை செய்வதற்கான உரிமம் வழங்குகிறார்,” என்றவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் இரத்தந்தோய்ந்த கொடுங்கோல் முன்வரலாறு கஷோகி மீதான கொடூரமான படுகொலையைக் கடந்து அதற்கு அப்பால் நீள்கிறது. அந்த முடியாட்சி ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கில் அதன் சொந்த மக்களையே கொல்கிறது, முக்கியமாக பொது இடங்களில் தலையைத் துண்டிப்பது மற்றும் தூக்கில் இடுவது மூலம் செய்கிறது, அது பிரதானமாக எண்ணெய் வளம் மிக்க கிழக்கு மாகாணத்தில் வாழும் அந்நாட்டின் ஷியா சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களைக் குறிப்பாக இலக்கு வைக்கிறது. மிகவும் சமீபத்தில் கும்பலாக நடத்தப்பட்ட படுகொலையில், கடந்த மார்ச் மாதம், பின் சல்மான் உத்தரவின் பேரில் 81 பேரின் தலை துண்டிக்கப்பட்டது.
அரேபிய தீபகற்பத்திலும் மற்றும் ஈரானுக்கு எதிராகவும், பாரசீக வளைகுடா நெடுகிலும் அது வகிக்கும் முக்கிய இராணுவப் பாத்திரத்தைப் பலப்படுத்த, அது பெரும் விலைகொடுத்து, முக்கியமாக அமெரிக்க உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது மற்றும் உலகச் சந்தையில் சவூதியின் எண்ணெய் வினியோகம் ஆகியவற்றுடன் இந்த விஷயங்கள் எதுவும் ஒப்பிடப்படுவதில்லை. பைடென் அவரின் பிரச்சார வாய்சவுடால்களுக்காக பின் சல்மானுக்குப் பரிகாரம் செய்ய மே மாதம் ரியாத்துக்குப் பயணித்தார், அங்கே அவர் உக்ரேன் போர் விளைவாக ரஷ்ய எண்ணெய் வினியோகங்கள் குறைந்திருப்பதை ஈடு கட்ட உற்பத்தியை அதிகரிக்குமாறு, நடைமுறையளவில் சவூதி ஆட்சியாளராக விளங்கும் அவரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு மாறாக, அமெரிக்க வெளியுறவுத் துறையின் கடந்த வார அறிவிப்பு உட்பட வெளிப்படையாகவே இன்னும் அதிகமான அமெரிக்க விட்டுக்கொடுப்புகளுக்குக் கட்டாயப்படுத்த முயலும் வகையில், பின் சல்மான் சமீபத்தில் சவூதி உற்பத்தியைக் குறைக்குமாறு உத்தரவிட்டார்.
பின் சல்மானுடனான பைடெனின் நல்லுறவு ஒரு பரந்த வடிவத்தின் பாகமாகும், இதில் வாஷிங்டன் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்க உலகெங்கிலும் எதேச்சதிகாரிகள் மற்றும் கொலைகாரர்களின் ஒரு வலையமைப்பை வளர்க்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐ.நா சபையின் COP27 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பைடென் எகிப்துக்குச் சென்றார். 2013 இல் வளர்ந்து வந்த ஒரு புரட்சிகர இயக்கத்தை ஒடுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஆயிரக் கணக்கான எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் படுகொலை செய்து அந்த இரத்தக்கறைப் படிந்த அந்நாட்டின் இராணுவ சர்வாதிகாரி, ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியால் அங்கே அவர் கை குலுக்கி வரவேற்கப்பட்டார்.
காசாவில் எல்-சிசி வகிக்கும் பாத்திரத்தைப் பைடென் பாராட்டினார், அங்கே பொலிஸ் வேலைகள் செய்தும் எகிப்தை ஒட்டிய அந்த சிறு நிலப்பகுதியின் எல்லையை நடைமுறையளவில் மூடியும், இந்த இராணுவ ஆட்சி கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய ஆதிக்கத்திற்கு முட்டுக்கொடுத்து உதவுகிறது. “நாம் எல்லா வகையிலும் நெருக்கமாகவும் பலமாகவும் இருக்கிறோம் என்றும் கூட கூற முடியும்,” என்று நம்பிக்கை வெளிப்படுத்தி, “நம் பலமான பாதுகாப்புத் துறை பங்காண்மையை' பாதுகாக்க அவர் உறுதி அளித்தார்.
இந்த வாரம், பைடெனின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரைச் சந்திக்கிறார், இவர் அந்நாட்டின் ஒரு சர்வாதிகார ஆட்சியாளராக அவர் தந்தை வகித்த பாத்திரத்தை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கில் செயல்பட்டு வருபவர். தாய்லாந்தில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், ஞாயிற்றுக்கிழமை ஹாரிஸ் மணிலாவுக்குச் சென்றார்.
பாங்காக்கில், அவர் தாய்லாந்து இராணுவ ஆட்சியாளர் பிரயுத் சான்-ஓ-சாவுடன் ஒரு சுமூகமான உரையாடலை நடத்தினார், இவர் முடியாட்சி சார்பாகவும், பெரிய நிதிய நலன்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குச் சார்பாகவும் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளை ஒடுக்குபவர். அந்தக் கூட்டத்தின் உத்தியோகப்பூர்வ வாசிப்பு அறிக்கையின்படி, அவ்விரு தலைவர்களும் 'எங்களின் பாதுகாப்பு கூட்டுறவையும் … மற்றும் ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக்கை நாங்கள் ஊக்குவிப்பதால், எங்கள் மக்களுக்கு எங்கள் கூட்டணி வழங்கும் நலன்களைக் குறித்தும் விவாதித்தோம்,” என்று குறிப்பிட்டது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளுடன் தாய்லாந்து அணிவகுத்து நிற்பதற்கு இவை இராஜாங்க வார்த்தைகள் ஆகும்.
ஹாரிஸ் 'அமெரிக்காவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீடித்த பங்காண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார், இது பொதுவான மதிப்புகளில் வேரூன்றியுள்ளது, மேலும் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதித்தோம்' என்று வாசிப்பு அறிக்கை குறிப்பிட்டது. தாய்லாந்தின் இராணுவ ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல்களில் மோசடி செய்துள்ளதுடன், எதிர்க்கட்சிகளுக்குத் தடை விதித்து, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக நசுக்கி உள்ளனர். 'பொதுவான மதிப்புகள்' என்று கூறுவதில் ஓர் அச்சுறுத்தும் வளையம் உள்ளது.
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டு கட்சியினது செனட்டர்களும் அந்த வெளியுறவுத் துறை அறிக்கைக்கு ஆதரவாகப் பேசியதுடன், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நலன்களைக் கைவிடப்பட்டுள்ள விஷயமாக மேற்கோளிட்டனர். வேர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர் கூறுகையில், “சவூதி அரேபியா ஈரானுக்கு எதிரான ஓர் அரணாக உள்ளது என்பதை உணர, நாம் ஒரு யதார்த்தவாதியாக இருந்தால் போதுமானது. அது உலகின் மிகவும் குழப்பமான பகுதியில் ஒரு தலைவராக விளங்குகிறது,” என்றார்.
குடியரசுக் கட்சி செனட்டர் டாம் காட்டன் இன்னும் அப்பட்டமாக இருந்தார். “ஃபாக்ஸ் நியூஸ் சன்டே” நிகழ்ச்சியின் ஒரு நேர்காணலில் அந்தப் பிரச்சினையைப் பற்றி கேட்ட போது, அவர் கூறுகையில், “கவனியுங்கள், நம்முடைய அரசியல் அமைப்புமுறை, நம் கலாச்சார மற்றும் சமூக உணர்வுகளை எப்போதும் பகிர்ந்து கொள்ளாத கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள் நம்மிடையே இருக்கக் கூடாது என்றால், நம்முடன் எந்த கூட்டாளிகளும் பங்காளிகளும் இருக்க மாட்டார்கள். சவூதி அரேபியா 80 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறினார், “உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் பற்றி மிகவும் முக்கியமானது என்னவென்றால், அவை ஜனநாயகம் அல்லது ஜனநாயகமற்றதா என்பது விஷயமல்ல, அவை அமெரிக்க-சார்பா அல்லது அமெரிக்க-எதிர்ப்பா என்பது தான் விஷயம். எளிமையான உண்மை என்னவென்றால், சவூதி அரேபியா 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஓர் அமெரிக்க பங்காளியாக இருந்து வருகிறது.”
கஷோகியின் படுகொலையாளரைப் பைடென் நிர்வாகம் அரவணைத்ததில் மற்றொரு விஷயமும் உள்ளது, இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் சவூதி ஆட்சி வகிக்கும் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கை விட முக்கியமானதாக இருக்கலாம். அந்த வெளியுறவுத் துறை அறிக்கை கூறியது போல, 'எந்த நிர்வாகமாக இருந்தாலும், அவை பதவியில் இருக்கும் போது அரசாங்க தலைவர்களுக்குச் சட்ட விலக்கு வழங்குவது அமெரிக்காவின் உடைக்க முடியாத நடைமுறையாக உள்ளது — இதை மற்ற அரசாங்கங்களும் அமெரிக்காவுக்காகச் செய்ய வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
முன்னாள் வெளியுறவுத் துறை வழக்கறிஞர் பிரையன் ஃபினுகேன் வாஷிங்டன் போஸ்டுக்குக் கூறுகையில், போர் குற்றங்கள் மற்றும் பிற குற்றங்களுக்காக வெளிநாட்டு நீதிமன்றங்களில் அமெரிக்க அதிகாரிகள் வழக்கில் இழுக்கப்படுவது குறித்து ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகத்திற்கும் கவலை இருப்பதாகக் குறிப்பிட்டார். 'பரஸ்பர கவலைகள் இந்த விதியின் மையத்தில் உள்ளன,' என்றவர் அப்பத்திரிகைக்குக் கூறினார்.
படுகொலை மற்றும் பிற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் என்று வரும் போது, பின் சல்மான், எல்-சிசி மற்றும் மார்கோஸ் ஜூனியர் ஆகியோரை ஓர் அமெரிக்க ஜனாதிபதிக்கு நிகராகக் கூட ஒப்பிட முடியாது. அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு, “இலக்கு வைத்து கொல்வது,” மற்றும் பொருளாதார முற்றுகைகள் (ஈராக், ஈரான், வட கொரியா) ஆகியவற்றால் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிட்லரின் ஜேர்மனிக்குப் பின்னர் இந்தளவுக்கு வேறெந்த அரசும் படுகொலைகள் செய்ததில்லை. ஆகவே ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் சட்டரீதியான விளைவுகளைக் குறித்து அஞ்சுகிறார்கள்.
இதனால் தான், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரண்டு கட்சிகளது ஜனாதிபதியின் கீழும், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இணைய மறுக்கிறது என்பதோடு, நெதர்லாந்து ஹேக் தீர்ப்பாணயத்தின் முன்னால் எந்தவொரு அமெரிக்கர் கொண்டு வரப்பட்டாலும் அவரை மீட்க அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கும் சட்டமசோதாவைக் கூட காங்கிரஸ் சபை நிறைவேற்றியது.
மிகவும் பலம் வாய்ந்த ஏகாதிபத்திய சக்தியின் தலைவர்களாக, பைடென் குழுவினர், இந்தச் சட்ட விலக்கீட்டைக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பல்லில்லா இயந்திரத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் எதிர்க்க முடியும், அத்துடன் பின் சல்மான் போன்ற கைக்கூலிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் இரத்தந்தோய்ந்த குற்றங்களையும் பூசிமொழுக முடியும். அவர்களின் வீழ்ச்சி முதலாளித்துவ இராஜாங்க அமைப்புகள் மூலம் வராது, மாறாக ஒட்டுமொத்தமாக இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தில், அமெரிக்க மற்றும் உலக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக ஏற்படும்.