மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரை யை இங்கே காணலாம்
பெப்ரவரி 28 அன்று நடந்த டெம்பி ரயில் விபத்தில் ஏற்பட்ட 57 பேரின் மரணம் குறித்த கோபத்தின் எழுச்சிக்கு மத்தியில், புதன்கிழமை கிரேக்கத்தில் லட்சக்கணக்கானோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுத்துறை பொது வேலைநிறுத்தத்தின் போது கிரேக்கத்தில் பிரதான நிலப்பகுதியிலும் பல தீவுகளிலும் குறைந்தது 80 நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய பழமைவாத, புதிய ஜனநாயக அரசாங்கம் 2019ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 2008ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தினாலும், சர்வதேச நாணய நிதியத்தினாலும் காட்டுமிராண்டித்தனமான சிக்கனத்தை சுமத்துவதற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு சமமான அளவில் இவை நடந்தன. Press Project இணையதளம் அதன் அறிக்கையின் தலைப்புச் செய்தியில், “முழு நாடும் தெருவில் உள்ளது” என்று வெளியிட்டது.
நூறாயிரக்கணக்கான மக்கள் ஏதென்ஸ், தெசலோனிகி, பட்ராஸ், பிரேயுஸ் மற்றும் லாரிசா ஆகிய மிகப்பெரிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏதென்ஸில் 100,000 இற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரத்தின் பெயர் ரிவிட்டரில் பிரபலமாக உள்ளது. வழக்கமாக போராட்டங்களின் அளவைக் குறைத்துக்காட்டும் பொலிசார் கூட, தலைநகரில் 60,000 எண்ணிக்கையானோர் கலந்துகொண்டதாக அறிவித்தனர். தெசலோனிகியில் குறைந்தது 30,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.(கீழே உள்ள ட்வீட்டைப் பார்க்கவும்)

ஏதென்ஸுக்கும் தெசலோனிக்கிக்கும் இடையே, லாரிசா நகருக்கு அருகிலுள்ள டெம்பி பள்ளத்தாக்கில், 62 பயணிகளுடன் தெசலோனிகி நோக்கிச் சென்ற விரைவு ரயிலும், தெற்கு நோக்கிச் சென்ற சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் நாட்டின் வரலாற்றில் மிகக் கொடிய விபத்து ஏற்பட்டது.
மறுநாள் இரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து, பொது வேலைநிறுத்தமாக வாரம் முழுவதும் நீடித்தது.
பொது வேலைநிறுத்தத்தின் போது குறைந்தது 26 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகள் நாடு முழுவதும் ஈடுபட்டு இருந்தன. ரயில் விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களும், பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் தெசலோனிகி பல்கலைக்கழக மாணவர்களுமாவர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ஏதென்ஸுக்குள் செல்ல அனுமதிக்க சுரங்கப்பாதை சேவைகள் பல மணி நேரம் இயங்கின. அதிகாரிகள் எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயன்றனர். காவல்துறை முக்கிய மத்திய நகர மெட்ரோ நிலையங்களை மூடியது. ஏதென்ஸின் முக்கிய சின்டாக்மா, ஓமோனியா மற்றும் கிளாஃப்த்மோனோஸ் சதுக்கங்களுக்குள் ஏராளமான மக்கள் வெள்ளம் திரண்டு நகரத்தின் வழியாக அணிவகுத்து செல்வதை இது நிறுத்தவில்லை.
மிட்ராக்கிஸ் அரசாங்கம் பொறுப்பைத் தவிர்ப்பதற்கும், லாரிசாவில் ஒரு தனித்த ரயில் நிலைய ஊழியரின் 'மனிதத் தவறு' மீது பழி சுமத்துவதற்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. 2017ல் சிரிசா (தீவிர இடதுசாரிகளின் கூட்டணி) அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இரயில் வலையமைப்பை குறைத்தல், பணிநீக்கம் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றால்தான் விபத்து ஏற்பட்டது என்பதை அறிந்த உழைக்கும் மக்களும் இளைஞர்களும் இந்த மோசடியை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை.
தேசிய அளவில் பேரழிவைத் தடுக்கும் தானியங்கி கணினி அமைப்பு இல்லாததால் ரயில்வே பாதுகாப்பற்றதாக உள்ளது. ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ரயில் நிலைய நிர்வாகி அளித்த சாட்சியத்தின் போது, விபத்து நடந்த இரவு ஒரு கட்டத்தில், மத்திய கிரேக்கத்தில் 20 நிமிடங்களுக்கு முழு ரயில் போக்குவரத்து நடவடிக்கைக்கும் அவர் பொறுப்பாக இருந்தார் என்பது தெரியவந்தது.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் புதன் கிழமை சொந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட பதாகைகளை கொண்டு வந்து, “எங்கள் உயிர் முக்கியம், மூடிமறைக்க கூடாது”, “கொலைகாரர்கள்!”, “நாம் அனைவரும் ஒரே வண்டியில் இருக்கிறோம்” மற்றும் “நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கை எல்லாவற்றிற்கும் மேலானது” போன்ற அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
ஏதென்ஸ் ஓமோனியாஸ் சதுக்கத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், 'இறந்தவர்களின் குரலாக மாறுவோம், புதிய தலைமுறை உங்களை மன்னிக்காது', 'அரசின் அலட்சியம் கொல்லும்', 'நாங்கள் மறக்க மாட்டோம், நாங்கள் மன்னிக்கவில்லை' என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவர்களின் முழக்கங்களில், 'இலாபம் மாணவர்களின் ரத்தத்தில் தோய்ந்துள்ளது' என்பதும் இருந்தது.
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நகரமான லாரிசாவில், எதிர்ப்பாளர்கள், 'எங்கள் உயிரினால் இலாபம் அடையாதே!', 'துக்கம் மற்றும் ஆத்திரம்', மற்றும் 'எமது மரணத்தில் அவர்களுடைய இலாபம்' என்று கோஷமிட்டனர்.
Press Project “பத்ராஸின் முக்கிய வீதிகளில் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதார மற்றும் உள்ளூர் அரசு ஊழியர்கள், அமைப்புகள், கூட்டுப் பணியாளர்கள் போன்றோர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் பேரணியை பற்றி தெரிவித்து, அங்கு கடைகள் இரண்டு மணி நேரம் மூடப்பட்டிருந்தன'என அறிவித்தது.
ஹெராக்லியோன் மற்றும் சானியாவில் பெரிய பேரணிகளுடன் கிரேக்கத்தின் மிகப்பெரிய தீவான கிரீட்டாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விபத்திற்குப் பிறகு நடந்த பல போராட்டங்களைப் போலவே, அதிக ஆயுதம் ஏந்திய கலகத் தடுப்புப் போலீஸார் திரட்டப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கண்ணீர்ப்புகை, சத்தமெழுப்பும் கையெறி குண்டுகள் மற்றும் தடியடி பயன்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வுகள் ட்விட்டரில் #Tempi ஹேஷ்டேக்குகளுடன் பரவலாகப் பின்பற்றப்பட்டன. ஒரு ட்வீட், தெசலோனிகியில் வெகுஜன அணிதிரட்டலின் புகைப்படத்துடன், 'கிரேக்கத்தில் வரலாற்றுப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மக்களுக்கு தெரியும், மக்கள் உணர்கிறார்கள், மக்கள் புரிந்துகொள்கிறார்கள். தெம்பியில் நடந்தது மனித தவறு மட்டுமல்ல. இது அரசின் அலட்சியம் மற்றும் புறக்கணிப்பின் விளைவு' என எழுதியது.

தொழிலாள வர்க்கம் முழுவதும் கோபம் பொங்கி எழுவது தேசிய ஜனநாயகக்கட்சி அரசாங்கத்திற்கு இருப்பிற்கே நெருக்கடியாகும். விபத்திற்கு முன்னர், ஆட்சியில் இருந்தபோது சிக்கனக் கட்சியாக தன்னை நிரூபித்த சிரிசாவின் மதிப்பிழப்பின் காரணமாக அரசாங்கம் சுமார் 10 புள்ளிகள் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்தது. அது ஜூலைக்கு முன் நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்தல்களுக்கான திகதியை ஏப்ரலில் அறிவிக்கத் தயாராகி வந்தது. இந்த திட்டங்கள் இந்த பாரிய இயக்கத்தால் சிதைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு 40 நாட்கள் நினைவேந்தல் நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று, Mega TV, தேர்தல் குறித்து திட்டமிடப்பட்ட வெள்ளிக்கிழமை அறிவிப்பை அரசாங்கம் இரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், ஜூலை 2 ஆம் தேதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவுடன், முதல் சுற்று தேர்தலை மே 21 க்கு மிட்சோடாகிஸ் தள்ளி வைத்துள்ளார் என அறிவித்தது.
டெம்பியில் நடந்த சோகம் மற்றும் அதற்கான பழிவாங்கல் கோரிக்கை கிரேக்கத்தில் பெரும் எதிர்ப்புகளுக்கு ஊக்கியாக இருந்தது. இத்தகைய பயங்கரமான நிகழ்வு ஒரு அழுகிய அமைப்பின் விளைவு என்பதை மில்லியன் கணக்கானவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தேசிய ஜனநாயகக்கட்சி(ND), சமூக ஜனநாயக பாசொக் (PASOK) மற்றும் சிரிசா (SYRIZA) ஆகியவற்றால் நடத்தப்பட்ட வெகுஜன சிக்கன நடவடிக்கையின் ஒரு விளைவுதான் கிரேக்கத்தின் இரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்பின் மோசமான நிலைக்கு காரணம். கிரேக்கத்தின் உள்கட்டமைப்பின் பரந்த பகுதிகள், அரசு நடத்தும் TrainOSE வலையமைப்பு உட்பட, ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தது. இது பின்னர் தனியார்மயமாக்கப்பட்டு, உலகளாவிய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு, பெரும் இலாபம் ஈட்டப்பட்டது.
கிரேக்க நாளிதழான Kathimerini செவ்வாய்கிழமையன்று ஹெலனிக் வர்த்தகம் மற்றும் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (INEMY ESEE) வர்த்தகம் மற்றும் சேவைகள் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டது.
தொடர்ச்சியான சிக்கன-சார்பு அரசாங்கங்கள் வெறுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய -சர்வதேச நாணய நிதிய-ஐரோப்பிய மத்திய வங்கி 'முக்கூட்டால்' கோரப்பட்ட மிருகத்தனமான வரவு செலவுத் திட்டங்களைத் திணித்த பின்னர், வாழ்க்கைத் தரங்கள் திகைப்பூட்டும் வகையில் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
2008 இல் மூன்றில் ஒரு பங்கு கிரேக்க குடும்பங்கள் மாத வருமானம் €2,200 ஐக் கொண்டிருந்தாலும், இப்போது 18.52 சதவீதமானோர் மட்டுமே இந்த வருமான வகையைச் சேர்ந்துள்ளனர்.
2008ல் இருந்து 10 ஆண்டுகளில், 'மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டன, நடுத்தர வருமானம் பெறும் வகுப்பினரில் பெரும்பாலோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதே நேரத்தில் செல்வம் 2009க்கு முந்தைய காலத்தை இருந்ததை விட மிகக்குறைவானவர்களிடமே குவிந்தது.'
INEMY ESEE ஆய்வில் இருந்து Kethimerini பின்வருமாறு குறிப்பிட்டது. “2008 இல் சராசரி மாத வருமானம் €750 வரை உள்ள குடும்பங்கள் மொத்தம் 4,072,175 இல் 193,747 ஆக இருந்தது. 2018 ஆம் ஆண்டுக்குள் அவை இருமடங்காக அதிகரித்து, 521,223ஐ எட்டியது. இப்போது சிக்கன நடவடிக்கை முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டபோது இது 404,966 ஆக உள்ளது.
ஐரோப்பா முழுவதும் நடாத்தப்படும் கொள்கைகளுக்கு முதலாளித்துவ வர்க்கத்தால் கிரேக்கம் பரிசோதனைப் களமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்றுவரை தொடரும் ஒரு தாக்குதலில், கண்டம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், வங்கிகளினதும் பெருநிறுவனங்களினதும் இலாப நலன்களுக்குக்காக அவர்களது ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள் வெட்டப்பட்டதையும், வேலை நிலைமைகள் அழிக்கப்படுவதையும் கண்டுள்ளனர்.

டெம்பியில் இறந்தவர்களுக்கான நீதிக்காக கிரேக்கத்தில் நடக்கும் போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் பரந்த ஐரோப்பிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த வாரம் மட்டும், பிரான்சில் மில்லியன் கணக்கானவர்கள் 'பணக்காரர்களின் ஜனாதிபதி' மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்துமாறு வலியுறுத்தினர். கிரேக்கத்தில் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கியபோது இத்தாலியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. நெதர்லாந்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தம் புதன்கிழமை தொடங்கியது. மற்றும் பொதுச் சேவைகளுக்கு குறைவான நிதியுதவியளிப்பதற்கு எதிராக பெல்ஜியத்தில் மார்ச் 9 அன்று பொதுத்துறை ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன.