ஸ்பெயினில் ஜூலை 23 இல் நடைபெறவுள்ள முன்கூட்டிய தேர்தலில், போர்-சார்பு கூட்டணியில் பொடெமோஸ் கட்சியானது சுமர் கட்சியுடன் இணைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

வெள்ளியன்று, பொடெமோஸ், அதன் சமீபத்தில் நிறுவப்பட்ட தேர்தல் போட்டியாளரான மூவிமியன்டோ சுமர் (ஐக்கிய இயக்கம்) மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான இஸ்குயர்டா யுனிடா (IU, ஐக்கியப்பட்ட இடது) ஆகியவை ஜூலை 23 இல் நடைபெறவுள்ள ஸ்பானிய தேர்தலில் ஒரு பொதுவான மேடைக்கு உடன்பட்டன. இந்த மேடையை சுமரின் தலைவரும், தற்காலிக துணைப் பிரதமரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான யோலண்டா டயஸ் வழிநடத்துவார்.

துணைப் பிரதமர் யோலண்டா டயஸ் [Photo by U.S. Department of Labor / CC BY 2.0]

பொடெமோஸ், சுமர் மற்றும் IU ஆகிய அனைத்தும், சோசலிஸ்ட் கட்சி (PSOE)-பொடெமோஸ் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகும், இது மே மாத பிராந்திய தேர்தல்களில் அதன் தோல்விக்குப் பின்னர் அதன் தலைவரான பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸால் சமீபத்தில் கலைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் PSOE-பொடெமோஸ் அரசாங்கத்தின் வெளிநாடுகளில் ரஷ்யா மீதான ஏகாதிபத்தியப் போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்கள் மீதான வர்க்கப் போர் கொள்கைகளைப் பின்பற்றும் பரிசோதிக்கப்பட்ட, நேட்டோ-சார்பு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படுகின்றனர். பொடெமோஸ், சுமர் மற்றும் IU ஆகியவை ஆட்சியில் செயல்படுத்திய வலதுசாரி கொள்கைகளைத் தொடரவும், அதனை தீவிரப்படுத்தவும் உறுதிமொழிகளின் அடிப்படையில் இயங்கும் என்பதை அவர்களின் பொதுவான தேர்தல் மேடை தெளிவாக சமிக்ஞை செய்கிறது.  

எல்லாவற்றிற்கும் மேலாக, பொடெமோஸ், சுமர் மற்றும் IU ஆகிய அனைத்தும் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரை தீவிரப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை நியாயப்படுத்த உத்தேசித்துள்ளன என்பது தெளிவாகிறது. இப்போது இறுதி செய்யப்பட்டு வரும் சுமர்-பொடெமோஸ்-IU கட்சிகளின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களில் இது பிரதிபலிக்கிறது. இந்த பட்டியலில் பின்வருவன அடங்குகின்றனர்:

  • யோலண்டா டயஸ், சுமரின் தலைவரும் தற்காலிக துணைப் பிரதமருமாவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமரை நிறுவுவதற்கு முன்பு, அவர் 2021 ஆம் ஆண்டில் பொடெமோஸ் நிறுவனர் பப்லோ இக்லெசியாஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் டயஸ் பொடெமோஸின் மிகவும் புலப்படும் தலைவராக இருந்தார். ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தம் உட்பட பொடெமோஸின் அதி-பிற்போக்குத்தனமான உள்நாட்டுக் கொள்கைகளை உருவாக்க சுமர் கட்சி உதவியது; அவைகள் பின்வருவன, ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதியில் 140 பில்லியன் யூரோக்களை ஸ்பானிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் உட்செலுத்துதல்; கோவிட்19 பெருந்தொற்று நோயில் 160,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்த உயிர்களுக்கு மேலாக இலாபத்திற்கான கொள்கை; ஆபிரிக்காவிலுள்ள ஸ்பானிஷ் பகுதியான மெலிலாவின் எல்லைகளில் 37 அகதிகளின் இழிபுகழ் பெற்ற படுகொலை உட்பட, புலம்பெயர்ந்தோர்களின் காட்டுமிராண்டித்தனமான சிறைவாசம் மற்றும் கொலை, மற்றும் வேலைநிறுத்தம் செய்த உலோகத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மீது வன்முறை ஒடுக்குமுறைகள் ஆகியவைகளாகும்.
  • ஸ்பானிஷ் ஏகாதிபத்தியத்தின் நீண்டகால பிரதிநிதியான ஐ.நா.வுக்கான ஸ்பெயினின் நிரந்தர பிரதிநிதி அகஸ்டின் சாண்டோஸ். முன்னதாக, பெய்ஜிங், லா ஹபானா, வாஷிங்டன், கான்பெரா மற்றும் பிரஸ்ஸல்ஸில் முக்கிய தூதரக பதவிகளை வகித்தார். ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனானில் ஸ்பெயின் தனது துருப்புக்களை நிலைநிறுத்துவதை அதிகரித்ததால், அவர் 2008-2011 வரை PSOE வெளியுறவு அமைச்சர் மிகுவேல் ஏங்கல் மொராட்டினோஸின் தலைமை அதிகாரியாக இருந்தார். லெபனானிலுள்ள UNIFIL மிஷனின் கட்டளையைப் பெற்ற மாட்ரிட்டில் அவரது பங்கிற்காக இராணுவம் அவருக்கு கிராண்ட் கிராஸ் ஆஃப் மிலிட்டரி மெரிட் (Grand Cross of Military Merit) என்ற உயர் இராணுவ விருதை வழங்கியது. 'ஸ்பெயினின் பெயரை மட்டுமல்ல, அதன் ஆயுதப் படைகளின் பெயரையும் உயர்த்துவேன்' என்று சாண்டோஸ் சூளுரைத்தார். 
  • எர்னஸ்ட் உர்டாசுன், சமீபத்தில் சுமரின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2014ல் இருந்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், பசுமைவாதிகள்-ஐரோப்பிய சுதந்திர கூட்டணியில் போர்-சார்பு ஜேர்மன் பசுமைக் கட்சியுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டில், அவர் பொடெமோஸ் வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷ்யா மீது போர் தொடுக்க நேட்டோவின் உக்ரேனிய பினாமிக்கு ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளை அனுப்ப வேண்டும் என்று உர்டாசுன் தீவிரமாக வாதிடுகிறார்.
  • பாப்லோ பஸ்டின்டுய், நாடாளுமன்றத்தில் பொடெமோஸின் முன்னாள் வெளியுறவு செய்தித் தொடர்பாளராக இருந்தார், 2019 இல் அமெரிக்காவில் ஒரு கல்விப் பதவிக்காக கட்சியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர் இப்பதவியில் இருந்தார். அமெரிக்காவை எதிர்கொள்ளுவதற்கு ஐரோப்பிய 'மூலோபாய சுயாட்சிக்கு' அவர் அழைப்பு விடுத்துள்ளார். 
  • சஹ்ராவி தேசியவாத ஆர்வலரும், சஹ்ராவி டுடே என்ற செய்தி சேனலின் நிறுவனருமான தேஷ் சிதி. ஸ்பெயினின் முன்னாள் காலனியான மேற்கு சஹாராவை ரபாத் இணைத்ததை அங்கீகரித்து PSOE-பொடெமோஸ் அரசாங்கத்திற்கும் மொராக்கோவிற்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கை குறித்து ஸ்பெயின் இராணுவத்தின் பிரிவுகளுக்குள் அதிகரித்து வரும் அதிருப்திக்கு மத்தியில் சிதியின் நியமனம் வந்துள்ளது. இந்த உடன்படிக்கை சஹ்ராவி-தேசியவாத போலிசாரியோ போராளிக் குழுவின் பிரதான ஆதரவாளரான எரிவாயு வளம் மிக்க அல்ஜீரியாவின் செலவில் செய்யப்பட்டது.
  • பொடெமோஸின் நிறுவனரான இனிகோ எர்ரெஜோன், அதனுடன் முறித்துக் கொண்டு மாஸ் மாட்ரிட் (More Madrid) மற்றும் மாஸ் பயஸ் (More Country) ஆகியவற்றை நிறுவினார். மார்க்சிச-எதிர்ப்பு 'இடது ஜனரஞ்சக' கோட்பாட்டாளரான சாண்டல் மௌஃபேவின் நண்பரான அவர், உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவதையும், மாஸ்கோவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தையும் ஆதரித்ததோடு, ரஷ்ய எரிவாயு இறக்குமதியை வெட்டுவதற்கு பிரஸ்ஸல்ஸ் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று கோரினார். அவரது கட்சி கடந்த ஆண்டு மாட்ரிட்டில் நடந்த நேட்டோ போர் உச்சிமாநாட்டை 'மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும்' வரவேற்றது. 
  • ஐயோன் பெலாரா, பொடெமோஸின் பொதுச் செயலாளர். ரஷ்யா மீதான நேட்டோ போரை முன்னெடுப்பதில் ஒரு முன்னணி பாத்திரம் வகிக்கும் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் அரசாங்கத்தில் அமர்ந்திருக்கும்போது, உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதற்கு எதிராக வெற்று போராட்டங்களை நடத்தி, அவர் ஒரு சிடுமூஞ்சித்தனமான பாத்திரத்தை வகித்துள்ளார். PSOE-பொடெமோஸ் அரசாங்கம் இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை ஆண்டுக்கு 27 பில்லியன் யூரோக்களாக உயர்த்துவதை அவர் ஆதரித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், பொடெமோஸ் அதன் உயர்மட்ட தலைவர்களை வாக்காளர் பட்டியல்களின் ஒரு பகுதியாக நீக்க கையெழுத்திட்டுள்ளது: சமத்துவத்திற்கான பதில் அமைச்சர் ஐரீன் மான்டேரோ மற்றும் அதன் பாராளுமன்ற செய்தித் தொடர்பாளர் பப்லோ எச்செனிக் ஆகிய இருவருமே வோக்ஸ் கட்சிக்கு நெருக்கமான அதிவலது பத்திரிகை பிரச்சாரங்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர். இருவரும் முன்னாள் பொடெமோஸ் தலைவரும் துணைப் பிரதமருமான பப்லோ இக்லெசியாஸுக்கு நெருக்கமானவர்கள், அவர் வாஷிங்டனில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர் சுமர் கட்சியால் வன்முறையாக தாக்கப்பட்டார்.

இந்த கேள்விக்குரிய தனிநபர்களை தங்கள் கூட்டுத் தேர்தல் பட்டியலின் தலைமையாக ஏற்றுக்கொள்வதன் மூலம், சுமர், பொடெமோஸ் மற்றும் IU ஆகியவை தங்கள் தேர்தல் தோல்விக்கு விடையிறுப்பாக இடது பக்கம் நகர எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. மாறாக, அவைகள் PSOE-பொடெமோஸ் அரசாங்கத்தை மதிப்பிழக்கச் செய்து ஸ்பெயினின் அதிவலது வோக்ஸ் கட்சியை வலுப்படுத்திய ஏகாதிபத்திய போர், சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறை கொள்கைகளை தீவிரப்படுத்தும். 

கடந்த மாதம் நடந்த தேர்தல்களில், பொடெமோஸ் மாட்ரிட், வலென்சியா, சரகோசா, டெனெரிஃப், புர்கோஸ், வல்லடோலிட், விகோ மற்றும் கொருனா ஆகிய இடங்களிலுள்ள அதன் அனைத்து கவுன்சிலர்களையும் இழந்தது. மாட்ரிட் பிராந்தியத்தில் 10 பிராந்திய சட்டமன்ற உறுப்பினர்களையும், வலென்சிய நாடாளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும் அது இழந்தது. பார்சிலோனாவில், யோலண்டா டயாஸின் சுமர் கட்சி போட்டியிடவில்லை, மாறாக எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் மேயர் பதவியை இழந்த மேயர் அடா கொலாவை ஆதரித்தது. மாட்ரிட் நகரில் எர்ரெஜோனின் மாஸ் மாட்ரிட் (More Madrid) ஏழு கவுன்சிலர்களை இழந்து, 12 ஆக குறைந்தது, அதே நேரத்தில் மாட்ரிட் பிராந்தியத்தில் அது 100,000 வாக்குகளை இழந்தது.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியபடி, பொடெமோஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் இந்த படுதோல்விக்கு விடையிறுக்கும் வகையில் வோக்ஸ் மற்றும் வலதுசாரி மக்கள் கட்சி (PP) ஆகியவற்றின் ஆதரவை மீண்டும் தங்கள் பக்கம் பெறுவதற்காக பிரச்சாரம் செய்வதன் மூலம் அல்ல, மாறாக மக்கள் கட்சி மற்றும் வோக்ஸிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்ட அடிப்படையில் வலதுசாரி பிரச்சாரத்தை நடத்துவதன் மூலம் பிரதிபலித்தனர். இந்த பிற்போக்குத்தனமான மூலோபாயத்தின் மையத்தில் இருக்கும் பொடெமோஸ், சுமர், IU மற்றும் ஸ்பெயினிலுள்ள முழு போலி-இடதுகளும் ரஷ்யாவுடனான நேட்டோ போருக்கு ஆதரவளிக்கின்றன.

கடந்த வாரங்களில், PSOE-பொடெமோஸ் அரசாங்கம் நிதிய பிரபுத்துவத்தின் கட்டளையின் பேரில் ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தை சூறையாடுவதை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த புதனன்று, அது ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு மீட்புத் திட்டத்திற்கு ஒரு சேர்க்கை இணைப்பை அனுப்பியது, இது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு விநியோகிக்க 94 பில்லியன் யூரோக்களைப் பெறுவதற்கு, வெகுஜன சிக்கன நடவடிக்கைகள் மூலம் நடத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசாங்கமானது ஏற்கனவே பிரஸ்ஸல்ஸுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான சமூக வெட்டுக்கள் மற்றும் வரி அதிகரிப்புகளில் 24 பில்லியன் யூரோக்களை செய்வதாக உறுதியளித்துள்ளது.

இராணுவ செலவின உயர்வும் தொடரும். PSOE-பொடெமோஸ் பாதுகாப்பு மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ், ஸ்பெயினை யார் ஆட்சி செய்தாலும், இராணுவத்தில் சாதனையளவிலான முதலீடு மாற்றப்படாது என்று இவ்வாறு கூறினார்: 'அதாவது ஆயுதப்படைகள் அனைத்து ஸ்பானியர்களுக்கும் சொந்தமானவை, அவை எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவை அல்ல.'

அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு பேரழிவுகரமான விரிவாக்கத்தை நிறுத்துவதற்கு சர்வதேச அளவில் சுமர், பொடெமோஸ் மற்றும் இதேபோன்ற போலி-இடது கட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் பிற்போக்கு கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் எதிர்ப்பைக் கண்டு பீதியடைந்துள்ள சுமர் கட்சியானது, மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொடெமோஸ் போன்ற வசதிபடைத்த மத்தியதர வர்க்கத்தின் போர்-சார்பு, போலி-இடது கட்சிகளுக்கு நேரடி எதிர்ப்பாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.