பொதுத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் போது, ஸ்பெயின் முழுவதும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த மாதம் நடந்த உள்ளூர் மற்றும் பிராந்திய தேர்தல்களின் தோல்விக்குப் பிறகு, சோசலிஸ்ட் கட்சி (PSOE)- பொடமோஸ் அரசாங்கம், அழைப்பு விடுத்துள்ள திடீர் தேர்தல்களுக்கு முன்னதாக ஸ்பெயின் முழுவதும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன. நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈர்த்துள்ள இந்த, வேலைநிறுத்தங்கள் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் ஒரு பரந்த வேலைநிறுத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இதே கோரிக்கைகளை எழுப்பிவரும் தொழிலாளர்கள், பொலிஸ் அடக்குமுறை மற்றும் நீதித்துறை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

வேலைநிறுத்தம் செய்யும் ஸ்பானிய சேவை ஊழியர்கள் [Photo: Servicios CCOO]

ஸ்பெயினில் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பானது, உக்ரேனில் போரை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களைக் குறைக்கும் என்று பயமுறுத்துகிறது. அத்தோடு, 24 பில்லியன் யூரோ வெட்டுக்கள் மற்றும் வரி அதிகரிப்புகளை 2024 வரை சுமத்திய PSOE-பொடமோஸ் அரசாங்கம், ஜூலை 23ம் திகதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உள்நாட்டில் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கும் வெளிநாடுகளில் போரை தீவிரப்படுத்துவதற்கும் வலதுசாரி மக்கள் கட்சி (PP) மற்றும் பாசிச வோக்ஸ் கட்சிக்கு அதிகாரத்தை ஒப்படைக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் உண்மையான ஊதிய வெட்டுக்களை திணிப்பதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அரசு நிதியுதவி பெற்ற கார்ப்பரேட் சார்பு கருவிகளாக அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் இது வருகிறது.

கடந்த வாரம், கலீசியாவின் பொன்டெவேட்ராவில் உள்ள உலோகவியல், கடற்படை, வாகன உற்பத்தியாளர் மற்றும் வானூர்தித் தொழில்களில் 33,000ம் தொழிலாளர்கள் பிராந்தியம் முழுவதும் தொழில்துறை நடவடிக்கைகளை முடக்கினர். வடக்கு ஸ்பெயினை போர்த்துக்கலுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையான AP-9 நெடுஞ்சாலையையும் தொழிலாளர்கள் மறித்து, ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

கடந்த வாரம், ஊதிய உயர்வு மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான வேலைநிறுத்தம் ஜூன் 15 வியாழன் அன்று தொடங்கப்பட்டு, இரண்டு நாட்களாக தொடர்ந்தன. இந்த வேலைநிறுத்தம், மாகாண உலோக கூட்டு ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3,700 நிறுவனங்களையும் உள்ளடக்கி இருந்தது.

CIG, CCOO மற்றும் UGT ஆகிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், சாமானிய தொழிலாளர்களின் கோபத்தின் காரணமாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. 

2022 ஆம் ஆண்டில் பணவீக்கம் 8.4 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பணவீக்கம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. தொழிற்சங்கங்கள் இப்போது 2023, 2024 மற்றும் 2025 இல் 4 சதவிகித அதிகரிப்பைக் கோருகின்றன, அதே நேரத்தில் உலோகத் தொழில் அதிபர்கள் 2023 இல் 0.5 சதவிகிதம் மற்றும் 2024 மற்றும் 2025 க்கு 2 சதவிகிதம் என்று அபத்தமான அதிகரிப்பை முன்மொழிகின்றனர். இவை ஊதியங்களில் ஆழமான வெட்டுக்களைக் கொண்டுள்ளன.

இந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்த, சலுகை ஒப்பந்தத்தை திணிப்பதற்கு இயன்றவரை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் செயல்படுகின்றன. அவர்கள் வெவ்வேறு நாட்களில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஸ்பெயின் முழுவதும் உள்ள இதர உலோகத் தொழிலாளர்கள் அல்லது அதே பிராந்தியத்தில் உள்ள இதர வேலைநிறுத்தக்காரர்களின் போராட்டங்களுக்கு அதிகாரத்துவங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அத்துடன், 500 காலிசியன் தீயணைப்புபடை வீரர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்காக வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால், தொழிற்சங்கங்கள் உலோக முதலாளிகளுடன் 'சமரசத்துக்கான' வழியைத் தேடுகின்றன, இது தவிர்க்க முடியாமல் பணவீக்கத்திற்குக் கீழே ஊதிய உயர்வுகளை ஏற்படுத்தும்.

இடைக்கால PSOE-பொடமோஸ் அரசாங்கம், இரக்கமற்ற முறையில் இப்போராட்டங்களுக்கு பதிலளித்தது. நூற்றுக்கணக்கான பொலிசாரை குவித்து, ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தடியடிகளை மேற்கொண்டு, ஒரு டசினுக்கும் அதிகமானவர்களை காயப்படுத்தியது. உலோகவியல் மற்றும் உலோக வேலைத் துறைக்கான முன்னணி தொழிற்துறை கண்காட்சியான Mindtech-ல் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை உலோகத் தொழில் மற்றும் தொழில்நுட்பங்கள் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடத்தும் இஃபீவி மாநாட்டு மையத்தின் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

CIG தொழிற்சங்கம் 'குழப்பங்கள், தடியடிகள், ரப்பர் தோட்டாக்கள்' மற்றும் ஒரு இளைஞன் மீது 'பொலிஸ் தாக்கியதன் காரணமாக அவரது தோள்பட்டை சிதைந்தது' என்று அறிவித்தது. கலகத்தடுப்பு போலீசாரின் நடவடிக்கையானது 'வேறுபாடின்றி மிகவும் மோசமானது' என்று அது விவரித்தது. ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் புதிய வேலைநிறுத்தங்களுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

நாட்டின் இதர எஃகுத் தொழிலாளர்களும், ஊதிய உயர்வுக்கான போராட்டத்தில் குதித்துள்ளனர். பிற்போக்குத்தனமான தொழிற்சங்க கட்டமைப்பின் மாகாண அளவிலான-பேச்சுவார்த்தை 'கூட்டு ஒப்பந்தங்களை', இந்தப் போராட்டங்கள் தூக்கியெறிந்துவிடக்கூடும் என்று பயந்து, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இதர எஃகுத் தொழிலாளர்களின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர விரைவாக செயற்பட்டுள்ளன.

வலென்சியாவில், முன்னதாக இந்த வாரம் மூன்று நாட்கள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த தொழிற்சங்கங்கள், 85,300 தொழிலாளர்களை உள்ளடக்கிய புதிய மாகாண எஃகுத் கூட்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இது 2023, 2024 மற்றும் 2025 இல் 3 சதவிகிதம் மற்றும் 2026 இல் 2.5 சதவிகிதம் பணவீக்கத்திற்குக் கீழே ஊதிய உயர்வுகளை உள்ளடக்கி இருந்தது. பலேரிக் தீவுகளில் தொழிற்சங்கங்கள், போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 4 சதவிகித அதிகரிப்புக்கு ஒப்புக்கொண்டன, இதனால் 42,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில்லறை விற்பனைத் துறையில், 100க்கும் மேற்பட்ட கடைகளைச் சேர்ந்த 4,000ம் கடை உதவியாளர்கள் கடந்த புதன்கிழமை சுவீடன் நாட்டைச் சேர்ந்த புடவைக் கடையான H&Mல் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்கள் யூன் 26 அன்று, மீண்டும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். அதிக லாபம் தரும் கோடைகால விற்பனை சீசன் மீண்டும் தொடங்க உள்ளதால், தொழிற்சங்கங்கள் ஜூலை தொடக்கத்தில், கூடுதலாக இரண்டு வேலைநிறுத்த நாட்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து போராட்டத்தை கலைக்க முயற்சிக்கின்றன.

H&M இன் முக்கிய போட்டியாளரான, பில்லியனர் அமான்சியோ ஒர்டேகா தலைமையிலான Inditex, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 20 சதவீத இலாப உயர்வைக் கண்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் பல மாதங்களாக நடைபெற்ற ஊதிய விவாதம் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, கடை உதவியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முக்கிய கோரிக்கையானது, சுகவீன விடுப்பு அல்லது ஓய்வு விடுப்பு காரணமாக ஏற்படும் காலியிடங்களை H&M ஈடுசெய்ய வேண்டும் என்பதாகும். இது இவர்களுக்கு வேலை சுமையை ஏற்படுத்துவதுடன், மேலும் ஒப்பந்த நேரம் பகுதி நேரத்துக்கு அப்பால் நீட்டிக்கப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பகுதி நேர ஒப்பந்தங்களையே கொண்டுள்ளனர். 

நிலைமைகளின் சீரழிவில் ஆழமாக உட்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், 2021 இல், 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததையும், மேலும் 170 பேருக்கு வேலை நேரத்தைக் குறைப்பதையும், சண்டை என்ற பாசாங்கு இல்லாமல் ஏற்றுக்கொண்டன.

வாகனத்துறை தொழிற்சங்கத்தின் பேச்சுவார்த்தையாளர்கள் 6,000க்கும் மேற்பட்ட மிச்செலன் டயர் தொழிலாளர்களை விற்றுத் தள்ளினார்கள். கடந்த வாரம், அவர்கள் 2023ல் 5 சதவிகிதம், 2024ல் 3 சதவிகிதம் மற்றும் அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 2 சதவிகிதம் உயர்வு என்ற ஒப்பந்தத்தை, ஏற்க மறுத்த ஸ்பெயினின் கடைசி மிச்செலன் தொழிற்சாலையான Lasarte-Oriaவில் வேலைநிறுத்தம் செய்யும் 900 தொழிலாளர்கள் மீது அவர்களது கூட்டு ஒப்பந்தத்தை திணித்துள்ளனர். நிறுவனத்தின் லாபத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தினால், தொழிலாளர்களின் வாங்கும் சக்திக்கு உத்தரவாதம் இல்லை.

தொழிற்சங்கங்கள் ஏற்கனவே விட்டோரியா, அராண்டா டி டியூரோ, வல்லாடோலிட் ஒய் அல்மேரியாவில் உள்ள மற்ற மிச்செலன் ஆலைகளிலும் இதே ஒப்பந்தத்தை திணித்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறையில், ஸ்பெயினின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமான ஏர் ஐரோப்பாவில் (Air Europa), கடந்த திங்கட்கிழமை மூன்றாம் சுற்று வேலைநிறுத்தங்களை ஸ்பெயினின் விமானிகள் சங்கம் தொடங்கியுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

PSOE-பொடமோஸ் அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான, குறைந்தபட்ச சேவைகளை சுமத்தி வேலைநிறுத்தத்தை உடைக்க முயற்சித்து வருகிறது. கேனரி மற்றும் பலேரிக் தீவுகளுக்கு 90சதவீதமான விமானங்களும், ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவிற்கு 65 சதவீதமான விமானங்களும் வேலைநிறுத்தத்தின் போது தமது சேவைகளை தொடர வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சகம் கோரியுள்ளது.

இந்த கொடூரமான கோரிக்கைகளுக்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக பாரிய வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய விமான ஊழியர்களுக்கு முறையிடுவதற்கு பதிலாக, SEPLA தொழிற்சங்கமானது, ஐபீரியாவின் Air Nostrum என்ற விமானத்தின் விமானிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஏர் நாஸ்ட்ரம் விமானிகள் பிப்ரவரியில் இருந்து இடைவிடாத வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது.

கடந்த வெள்ளியன்று, SEPLA தொழிற்சங்கம் எந்த சலுகையும் இல்லாமல், பேச்சுவார்த்தைகளில் 'முன்னேற்றம்' எனக்கூறி வேலைநிறுத்தத்தை முடித்து வைத்தது.

நீதித்துறையில், ஏப்ரலில் தொடங்கிய இடைவிடாத வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கடந்த வாரம் வரை தொடர்ந்தன. சுமார் 45,000 அரசு ஊழியர்கள் PSOE-பொடமோஸ் அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், 350 முதல் 450 யூரோக்கள் வரையான ஊதிய உயர்வுகளை அவர்கள் கோருகின்றனர். 80 சதவீத ஊழியர்களின் வேலைநிறுத்தம்,  அறிவிப்புகள், சம்மன்கள், தோற்றங்கள், விசாரணைகள், பறிமுதல்கள், வெளியேற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் வரை மில்லியன் கணக்கான நீதித்துறை நடவடிக்கைகளை இடைநிறுத்த அவர்களை தூண்டியுள்ளது.

இந்த வேலைநிறுத்த அலையானது PSOE-பொடமோஸ் அரசாங்கத்தை, ஏகாதிபத்திய போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகின்ற பிற்போக்குத்தனமான அரசாங்கம் என்று அம்பலப்படுத்துகிறது. குறிப்பாக வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் பாசிசக் கட்சியின் கூட்டணி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையிலும், PSOE மற்றும் பொடமோஸ் அரசாங்கம் உடனடித் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்ததுக்கான காரணத்தை இது துல்லியமாக வெளிப்படுத்துகிறது. PSOE மற்றும் Podemos ஆகியவை போர், சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ்-அரச அடக்குமுறைக்கு, அதன் இடது புறத்தில் இருந்து கட்டுப்பாடில்லாமல் வெடிக்கும் பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கண்டு பீதியடைந்துள்ளன.

தொழிலாள வர்க்கம் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சாராமல், சாமானிய நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக, அத்தகைய அமைப்புகளால் மட்டுமே ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் போர், பணவீக்கம் மற்றும் மோசடியான ஜூலை 23 தேர்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முடியும். அத்தகைய அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும், சுமர் மற்றும் பொடெமோஸ் போன்ற நடுத்தர வர்க்க போர் ஆதரவுக் கட்சிகளுடனும் அரசியல் முறிவு அவசியமாக தேவைப்படுகிறது.