மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) அதன் சிக்கன உறுதிப்பாடுகளுக்கு ஏற்ப, ஸ்பெயினின் புதிய சோசலிஸ்ட் கட்சி - சுமர் (PSOE-Sumar) அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலும் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தின் மத்தியிலும், தொழிலாள வர்க்கத்திற்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சமூகச் சலுகைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
2020 தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் பெருந்தொற்று பரவியிருந்தபோது, 1930களுக்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை ஐரோப்பிய முதலாளித்துவம் எதிர்கொண்டது. வைரஸ் பரவலைத்த தடுப்பதற்கு பிரதான தொழிற்சாலைகளை பூட்டிய தொழிலாளர்கள் ஆரம்ப முடக்கத்தை (lockdown) நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கங்களை கட்டாயப்படுத்தியதால், ஐரோப்பிய அதிகாரிகள் 800 பில்லியன் யூரோ அடுத்த தலைமுறை ஐரோப்பிய பிணை எடுப்பு நிதியை Next Generation EU bailout fund) வடிவமைத்தனர். மாட்ரிடுக்கு (Madrid) 2019ன் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 11 சதவீதத்திற்கு சமமான 140 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தாலிக்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரும் பெறுநராக ஸ்பெயினை மாற்றியிருந்தது.
இந்த நிதி முக்கியமாக பெருநிறுவனங்களுக்கு கையூட்டுகளாகவும், பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துதல் மேலும் பெரும் கோடீஸ்வரர்களின் செல்வத்தை உயர்த்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் ஆளும் வர்க்கம் சமூக கிளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக தொழிலாளர்களுக்கு ஊதிய மானியங்கள், மின்சாரம், வீட்டு வசதிகள் மற்றும் வரிக் குறைப்புகள் போன்றவற்றை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஸ்பெயினில், PSOE-Sumar அரசாங்கத்திற்கு முன்னோடியாக இருந்த PSOE-Podemos அரசாங்கம் (2019-2023) ஸ்பெயினின் தொழிலாளர்கள் தொகுப்பில் 3 மில்லியன் தொழிலாளர்களுக்கான பகுதி வேலையின்மை திட்டத்தின் கீழ் (furlough scheme) ஊதியம் வழங்கியிருந்தது. இது தொழிலாளர் தொகுப்பில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
அதைத் தொடர்ந்து, உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போருக்கு விடையிறுக்கும் வகையில், பெருகிவரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கு அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் இயலாமையால் திகிலடைந்த PSOE-Podemos கூட்டணி, (Podemos உடன் இணைந்த தொழிலாளர் ஆணையங்கள் (CCOO), சமூக-ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கம் -UGT) 2022ல் 8.3 சதவீதமாக உச்சத்தை எட்டிய பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு ஒரு தொகை தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மின்சாரச் சந்தையில் விலை உச்சவரம்பை அமல்படுத்துதல், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வாடகைக் கட்டுப்பாடுகளின் நீட்டிப்பு, பொதுப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்தல், தற்காலிக சொத்து வரி விதிப்பு மற்றும் வங்கி மற்றும் ஆற்றல் கூட்டு நிறுவனங்களின் அதிகமான லாபத்தின்மீது வரிகளை விதித்தல் (windfall taxes) ஆகியவை இதில் அடங்கும்.
அதே நேரத்தில், அரசாங்கம் ஓய்வூதியச் சீர்திருத்தத்துக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட நீண்டகாலமாக வாழ்க்கை தரத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம் பணி ஒய்வு 67 வயதாக ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் வேலைத்தளத்தில் தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்புகள் கொண்ட தொழிலாளர் சட்டத்தை நீக்குவதையும் கொண்டிருக்கிறது. பணவீக்கத்தின் கீழ் சம்பள உயர்வுகளை திணிப்பதற்கு தொழிற்சங்க அதிகாரத்துடன் இணைந்து பணியாற்றியது.
PSOE-Sumar அரசாங்கம் இப்போது முந்தைய அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெறவும், சிக்கன நடவடிக்கைகளில் பில்லியன் கணக்கான யூரோக்களை சுமத்தவும் தயாராகி வருகிறது.
கடந்த டிசம்பரில், ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார அமைச்சர்கள் நிரந்தரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்தை (Stability and Growth Pact) மீண்டும் செயல்படுத்த ஒப்புக்கொண்டனர். தற்போதைய விதிகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதத்திற்கும் குறைவான அரசாங்கப் பற்றாக்குறையையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் குறைவான பொதுக் கடனையும் நாடுகள் பராமரிக்க வேண்டும். இந்த விதிகள் பெருந்தொற்றுநோய்க் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறை தலைமைக்கு ஸ்பெயினால் முன்மொழியப்பட்டு மற்றும் ஜேர்மனி மற்றும் பிரான்சினால் சீல் வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, 90 சதவீதத்திற்கும் அதிகமான கடன் விகிதங்களைக் கொண்ட நாடுகளை ஆண்டுதோறும் ஒரு சதவீத புள்ளியால் கடனைக் குறைக்க அனுமதிக்கிறது. 60 சதவீதத்திற்கும் 90 சதவீதத்திற்கும் இடையில் கடன் விகிதங்களைக் கொண்ட உறுப்பு நாடுகளுக்கு, தேவையான குறைப்பு ஆண்டுக்கு 0.5 சதவீதமாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏகாதிபத்திய சக்திகள் இராணுவமயமாக்கலை நோக்கிய தங்கள் பாதையைத் தொடர்வதை உறுதிசெய்ய, புதிய விதிகள் உறுப்பு நாடுகளுக்கு இராணுவச் செலவினங்களுக்கு விடுப்பு அளிக்கும். அவர்கள் பாதுகாப்பு ஆயுதத் தொழில்களில் முதலீடு செய்தால், ஒரு நாடு அதன் பொதுக் கணக்குகளைச் சமன் செய்ய வேண்டிய காலம் நான்கில் இருந்து ஏழு ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
“விதிகள் மிகவும் யதார்த்தமானவை, அவை தொற்றுநோய்க்கு பிந்தைய யதார்த்தத்திற்கு பதிலளிக்கின்றன, மேலும் அவை பெரும் நிதி நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் உள்ளடக்கியிருக்கிறது” என்று ஸ்பெயினின் பொருளாதார அமைச்சர் நாடியா கால்வினோ (Nadia Calvino) இந்த ஒப்பந்தத்தை கொண்டாடினார்.
உண்மை என்னவெனில், 2008 உலக முதலாளித்துவ நெருக்கடிக்குப் பின்னர் ஐரோப்பா முழுவதும் சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு பக்கம் திரும்புவதற்குப் பதிலாக, இந்த ஒப்பந்தத்தின் அர்த்தம் வரி உயர்வுகள் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் செலவினக் குறைப்புக்கள் மூலம் அடையப்படும் காட்டுமிராண்டித்தனமான சிக்கனத்தை உள்ளடக்கியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (€1.5 டிரில்லியன்) 109.9 சதவிகிதம் தற்போதைய கடனுடன் இருக்கும் ஸ்பெயினுக்கு, இந்த ஆண்டு 1 சதவிகிதம் குறைப்பு செய்யும்போது €15 பில்லியனுக்கு சமமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டிலும் இதே வெட்டுக்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவும், நிதிப் பற்றாக்குறை ஆண்டுதோறும் 1.5 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும் இருக்கும்.
கூட்டத்தைத் தொடர்ந்து, பெருந்தொற்றுநோய் காலத்தில் செயல்படுத்து வேண்டிய கட்டாயத்தில் இருந்த சில தற்காலிக சலூகைகளில் திரும்பப்பெறுவதற்கு ஸ்பெயின் தொடங்கியிருக்கிறது. ஏப்ரல் 2024 இலிருந்து 5 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக எரிவாயு மீதான பெறுமதி சேர் வரியை (VAT) மாற்றியமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. மின்சாரத்தின் மீதான பெறுமதி சேர் வரி, 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக ஏறும், மேலும் எரிவாயு மீதான ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணம் [Regulated Tariff (TUR)] சராசரியாக 8.19 சதவீதம் உயரும்.
சிறுவர்கள் மற்றும் இளையவர்களுக்கான பொதுப் போக்குவரத்து மானியங்கள் உட்பட சில மானியங்களை அரசாங்கம் நீட்டித்துவைத்துள்ளது, மேலும் பிரதான உணவுகள் (ரொட்டி, மாவு, பால், வெண்ணைக்கட்டி மற்றும் முட்டைகள் போன்றவை) மற்றும் எண்ணெய் மற்றும் பாஸ்தா மீதான பெறுமதி சேர் வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யூன் மாதம் இவைகளும் நீக்கப்படும் என்று பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்த மானியங்களில் பெரும்பகுதியை முழுமையாக திரும்பப்பெற்றால், 2024 இல் பற்றாக்குறை வரம்பை மட்டுமே ஸ்பெயின் கடைப்பிடிக்கும் என்று ஸ்பெயினின் நிதிநிலை கட்டுப்படுத்தும் AIReF ஏற்கனவே எச்சரித்துள்ளது.
உணவு வரிகளைத் திரும்பப் பெறுவது மக்களை வறுமைக்குள் தள்ளும், இது ஏற்கனவே கடந்த ஆண்டில் உணவு விலைகளில் 15.7 சதவீத உயர்வை எதிர்கொண்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் 55.6 சதவீதமாக அதிகரித்துள்ளது, சர்க்கரை 50.2 சதவீதமும், மாவு 37.6 சதவீதமாகவும். வெண்ணெய் கட்டி 34.5 சதவீதமும், பால் 30.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இதர பிரதான உணவுகளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன: முட்டைகள் 27.1 சதவீதம் அதிக விலை; தயிர் 25.6 சதவீதம்; உருளைக்கிழங்கு 20.5 சதவீதம், வெண்ணெய் கட்டி 20.3 சதவீதம்; மற்றும் கோழி இறைச்சி 16.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எரிசக்தி நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்தால், லாபத்தின்மீது வரியை ஈடுகட்ட அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இத்தகைய நிலைமகளின் கீழ் எரிசக்தி நிறுவனங்கள் உலகளாவிய சந்தையில் போட்டிபெறுவதற்கு எப்படியாவது இந்த பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ளும், இதன் அடிப்படையாக இருப்பது சில ஸ்பெயினின் பெருநிறுவங்கள் வரிக்குறைப்பைப் பெறும் என்பதைக் குறிக்கிறது.
எரிசக்தி நிறுவனங்களுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட Ibedrola, Endesa, Naturgy மற்றும் Repsol, 2022 இல் €12.5 பில்லியன் ($13.8 பில்லியன்) சாதனை லாபத்தைப் பெற்றன, இது முந்தைய ஆண்டை விட 41 சதவீதம் அதிகம். அதே காலகட்டத்தில் எரிசக்தி விலைகளில் 88 சதவீதம் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த மக்களின் பெருகிவரும் கோபத்தை நிவர்த்தி செய்ய அந்த நிறுவனங்களின் லாபத்துக்கு அதிகமான வருவாய்மீது வரிவிதிக்க (windfall tax) முயன்றது.
மாட்ரிட் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக பெரும் தொழிலாளர் சீர்திருத்தங்களின் தொடக்கத்தையும் அறிவித்துள்ளது. இத்தகைய சமீபத்திய மாற்றங்களானது, பதிவிலிருந்து நீக்கப்பட்ட அல்லது வேலையின்மை நலன்களுக்கு தகுதியற்ற நீண்ட கால வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் பற்றியதாகும். ஏறக்குறைய 759,900 தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட பாதி அல்லது 361,600 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
இதுவரை, அவர்கள் அதிகபட்சமாக 30 மாதங்கள் வரை, தலா ஒரு மாதத்திற்கு 480 ($523) யூரோக்களை பெற்றார்கள். இனிமேல் 45 வயதுக்கு கீழ் உள்ள வேலையில்லாதவர்கள் இந்த மானியத்தை அணுக முடியும், மற்றும் 52 வயதிற்குட்பட்டவர்களுக்கு, அவர்களின் கொடுப்பனவு முதல் ஆறு மாதங்களுக்கு 570 ($622) யூரோக்கள் ஆகவும், ஆறு மாதங்களுக்கு 540 யூரோக்கள் ஆகவும் ($590) அதிகரிக்கும். 12 மாதங்களுக்குப் பிறகு, அது 480 யூரோக்களாக ($523) குறைந்துவிடும். எவ்வாறாயினும், இந்த சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம் அதிக எண்ணிக்கையிலான மானியம் பெறும் 52 வயதுக்கு மேல் உள்ள நீண்ட கால வேலையில்லாதவர்களை பாதிக்கிறது. அவர்கள் மீண்டும் 480 யூரோக்களை பெறுபவர்களாக மட்டும் இருப்பார்கள் மற்றும் ஓய்வூதிய அமைப்பிற்கான அவர்களின் பங்களிப்புகள் 25 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இதனை விளைவாக, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் குறைக்கப்படும்.
இத்தகைய தாக்குதல்கள் தற்போதைய தொடக்கம் மட்டுமே ஆகும். “ஆறு மாதங்களுக்குள், நீண்ட கால வேலையில்லாத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பிற்கான உலகளாவிய உத்தியை சமூக உரையாடல் கட்டமைப்பிற்குள் [வணிகங்களுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையில்] அரசாங்கம் […] உருவாக்கும், இது தொழிலாளர் சந்தையில் அவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதை ஊக்குவிப்பது அல்லது அதை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டது” என்று சமீபத்திய அரசின் சீர்திருத்தத்தின் வாசகம் கூறுகிறது.
பில்லியன் கணக்கான யூரோக்கள் சிக்கன நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஏற்கனவே வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள தொழிலாள வர்க்க எதிர்ப்பின் தீப்பிழம்புகளுக்கு எண்ணெயை வீசும். கடந்த மாதத்தில், 30க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் மற்றும் உலகளாவிய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் செவிலியர்கள், விமான சேவை கையாளும் தொழிலாளர்கள், அமேசான் தொழிலாளர்கள் மற்றும் ஹொட்டல் வரவேற்புத் தொழிலாளர்கள் உள்ளனர்.
இது மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளை மேலும் மோசமாக்கும் மற்றும் அதிகமான தொழிலாளர்களை அரசு மற்றும் PSOE-Sumar அரசாங்கத்துடன் நேரடி மோதலுக்கு கொண்டு வரும். ஸ்பெயினில் 12.3 மில்லியன் மக்கள் வறுமை மற்றும் ஒதுக்கீட்டின் அபாயத்தில் இருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன. இது அதன் மக்கள்தொகையில் 26 சதவீதமாகும். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அல்லது சுமார் 4.2 மில்லியன் மக்கள், தீவிர வறுமையில் வாழ்கின்றனர் மற்றும் மாதத்திற்கு 560 யூரோக்களுக்கும் குறைவாக வாழ்கின்றனர். இது 52 வயதிற்குக் கீழே உள்ளவர்களுக்கு நீண்டகால வேலையின்மை நலனில் பரவலாக ஊக்குவிக்கப்பட்ட அதிகரிப்பைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஸ்பானிய குடிமக்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர்கள், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர், அதே சமயம் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வருடத்திற்கு ஒரு வார விடுமுறையை கொடுக்க முடியாது. இதற்கிடையில், ஸ்பெயினின் Ibex35 பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் 35 பெரிய நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டு 22 சதவீதமாக, அதாவது 2009 முதல் சிறந்த எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது.