மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
காஸாவுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைப் போருக்கு எதிராக ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஸ்பெயினின் நவாந்தியா கப்பல் கட்டுமானத் தளத் தொழிலாளர்கள் இப்போது இஸ்ரேல் மற்றும் காஸா கடற்கரையில் ரோந்து செல்லும் அமெரிக்க தலைமையிலான போர்க் கப்பல் குழுவில் ஸ்பானிய போர்க் கப்பல்களை அனுப்புவதை கண்டித்துள்ளனர். நவாந்தியாவில் கட்டப்பட்ட போர்க் கப்பல்கள் உடனடியாக திருப்பி வர வேண்டும் என்றும், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நவந்தியாவிலுள்ள அராஜகவாத தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் ஒரு உள்ளூர் கிளையினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, போலி-இடது பொடெமோஸ் கட்சியை அம்பலப்படுத்துகிறது. இந்தக் கோடைகால தேர்தல்களில் இருந்து, இந்த போர்க் கப்பல்கள் காஸாவுக்கு எதிராக பயணிக்க உத்தரவிட்ட ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியுடன் (PSOE) இணைந்து செயல்படும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது காஸாவில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் இனப்படுகொலை போரை எதிர்ப்பதற்கான பொடெமோஸ் கட்சியின் பாசாங்குத்தனமான நிலைப்பாட்டை முற்றிலுமாக அம்பலப்படுத்துகிறது.
ஸ்பானிஷ் போர்க் கப்பல் மெண்டெஸ் நுனேஸ் (Méndez Núñez) மற்றும் இராணுவ விநியோகக் கப்பலான பதினோ (Patiño) ஆகியவை யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford ) விமானம் தாங்கிக் கப்பலின் போர்க் குழுவின் ஒரு பகுதியாகும் என்று CGT தொழிற்சங்க உள்ளூர் கிளை அறிக்கை குறிப்பிட்டது. காஸா மீதான இஸ்ரேலிய போருக்கு அமெரிக்க ஆதரவு மற்றும் லெபனான், சிரியா, ஈராக் அல்லது ஈரானானது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு (IDF) எதிராக காஸாவிற்கு உதவ இராணுவரீதியாக தலையிட விரும்பும் படைகளுக்கு அமெரிக்க அச்சுறுத்தல்களின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் தற்போது கிழக்கு மத்திய தரைக்கடலில் பயணித்துக் கொண்டு வருகிறது. ஃபெர்ரோலிலுள்ள நவாண்டியாவில் CGT உள்ளூர் கிளை கூறியதாவது:
இது அவமானத்திற்குக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் காரணமாக செத்துப்போன கடிதமாக இருக்கும் ஒரு தீர்மானத்திற்கு (போர் நிறுத்தத்தை ஆதரித்து) ஸ்பெயின் அரசு ஐ.நா.வில் வாக்களித்தால் மட்டும் போதாது. ஆறு மாதங்களில் அமைதி மாநாட்டை நடத்த அரசு முன்மொழிந்தால் மட்டும் போதாது. இப்பொழுதே இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்.
மெண்டெஸ் நுனேஸ் மற்றும் பதினோ இரண்டும் எங்கள் தொழிற்சாலையில் கட்டப்பட்டன. ஆனால் தொழிலாளர்கள் ஒரு இனப்படுகொலைக்கு ஒத்துழைப்பதற்காக அவற்றைக் கட்டமைக்கவில்லை.
இந்த அரசாங்கம் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்று கோருவதற்கு நவாந்தியா-ஃபெரோலின் தொழிலாளர்களாக நாம் எம்மை அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என்பது பணிக் குழுவில் முன்மொழிவாக இவைகள் இருக்கும் என்று CGT நம்புகிறது:
1.மெண்டெஸ் நுனேஸ் மற்றும் பதினோவின் உடனடியாகத் திரும்ப வர வேண்டும்.
2. இஸ்ரேலிய வணிகங்களுடன் நவாந்தியாவின் அனைத்து ஒத்துழைப்பையும் இரத்து செய்ய வேண்டும்.
3. இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும்.
இந்த அறிக்கையும், கலேகோவிலுள்ள நவாந்தியாவில் CGT உள்ளூர் கிளையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றொரு அறிக்கையும் ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் காஸா இனப்படுகொலையைத் தடுப்பதற்கான பெரும் ஆற்றலை சுட்டிக்காட்டுகிறது. இது ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலுள்ள தேசிய தொழிற்சங்க கூட்டமைப்புகளை மீண்டும் அம்பலப்படுத்துகிறது. அவர்களின் செயலற்ற தன்மையின் மூலம், CGT உள்ளூர் கிளை அறிக்கை காட்டுவது போல், காஸாவில் நடக்கும் இனப்படுகொலையில் அவர்கள் உடந்தையாக உள்ளனர்.
நவாந்தியா-ஃபெரோலிலுள்ள CGT உள்ளூர் கிளை தொடர்பாக, நவாந்தியா நிர்வாகத்திற்கு பணிக் குழுவிற்குள் வைக்கப்படும் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். காஸாவுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்துவதற்கான முக்கியமான கேள்வியாக இருப்பது, இனப்படுகொலைக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையில் ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை சக்தியை அணிதிரட்டுவதாகும்.
இந்த அறிக்கையானது, மற்றொரு முக்கிய அரசியல் உண்மையையும் விளக்குகிறது: அத்தகைய போராட்டத்தை பொடெமோஸ் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), ஜேர்மனியின் இடது கட்சி, பிரிட்டனின் ஜெர்மி கோர்பின் அல்லது பிரான்சில் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சி போன்ற போலி-இடது கட்சிகளுக்கு எதிராக மட்டுமே நடத்த முடியும். இக்கட்சிகள் எப்போதாவது யுத்தம் குறித்து வாய்மொழி விமர்சனங்களை முன்வைத்தாலும், உண்மையில் அவைகள் காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் முதலாளித்துவ அரசுகள் மற்றும் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன.
காஸா இனப்படுகொலையைக் கண்டித்து மாட்ரிட், பார்சிலோனா, சான் செபாஸ்டியன், சாண்டியாகோ டி கம்போஸ்டெலா மற்றும் பிற ஸ்பானிய நகரங்களின் தெருக்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்துச் சென்றபோது, பொடெமோஸ் போர் மோதலின் எதிர்ப்பாளர் என்று காட்டிக்கொள்வதன் மூலம் பெருகிவரும் வெகுஜன சீற்றத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றது. ஆனால் அதே நேரத்தில், PSOE-பொடெமோஸ் அரசாங்கம் தனது போர்க் கப்பல்களை காஸாவுக்கு எதிராக அனுப்பியது. இப்போது காஸாவுக்கு எதிராக அனுப்பப்படும் பல அமெரிக்க போர்க் கப்பல்களை ரோட்டாவிலுள்ள கடற்படைத் தளத்தில் தரித்து நிற்பதற்கான ஒரு பிரபலமற்ற ஒப்பந்தத்திற்கு உடன்பட்டதன் மூலம் காஸா மீதான போரில் அது மேலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
இது பொடெமோஸ் தலைவரும் சமூக உரிமைகள் தற்காலிக அமைச்சருமான இயோன் பெலாராவின் வாதங்களை அம்பலப்படுத்துகிறது, அவர் இனப்படுகொலையை வாய்மொழியாக விமர்சித்து மீண்டும் மீண்டும் எக்ஸ் / ட்விட்டரில் பதிவிட்டார். போரின் தொடக்கம் குறித்த ஒரு ட்வீட்டில், அவர் வீடியோவில் இவ்வாறு அறிவித்தார்:
பொடெமோஸில், பாலஸ்தீன மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்து வரும் கொடூரமான துன்பங்களைப் பற்றி நாங்கள் அலட்சியமாக இல்லை. காஸா பகுதியில் இஸ்ரேல் அரசு திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தி வருவதைக் கண்டித்து இன்று நாம் குரல் கொடுக்க விரும்புகிறோம். ... அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வேறு வழியில் பார்க்கவில்லை அல்லது நடுநிலையான முறையில் செயல்படவில்லை, அவைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறும் இனவெறி மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கையில் இஸ்ரேல் அரசை ஊக்குவிக்கின்றன.
மற்றொரு ட்வீட்டில், பல வாரங்களுக்குப் பிறகு, பெலாரா எக்ஸ் / ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் கூறினார்:
காஸாவில் இந்த நரக இரவுக்குப் பிறகு, ஐரோப்பிய தலைவர்களுக்கு நான் ஒரு எளிய ஆனால் மிக முக்கியமான செய்தியை வைத்திருக்கிறேன்: அதாவது இனப்படுகொலைக்கு எங்களை உடந்தையாக்க வேண்டாம். எங்கள் சார்பாக செயல்படாதீர்கள்.
பெலாராவும் பொடெமோஸில் உள்ள பிற முதலாளித்துவ அரசாங்க அதிகாரிகளும் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க கோபம் குறித்து மிகவும் அக்கறையும் பயமும் கொண்டுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அப்பட்டமாகச் சொல்வதானால், காஸாவில் இப்போது அரங்கேறிவரும் அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடூரமான வெகுஜன படுகொலைகளுக்கு மத்தியில், அவர்களின் உணர்வுகளும் நோக்கங்களும் குறைவான முக்கியத்துவம் கொண்டிருப்பதை அது குறிக்கிறது. காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையைத் தூண்டும் ஒரு அரசாங்கத்திற்குள் அமர்ந்திருப்பதன் மூலம், பொடெமோஸ் அதிகாரிகள் தங்களை இனப்படுகொலைக்கு உடந்தையாக ஆக்கிக் கொண்டுள்ளனர் என்பதே அரசியல் யதார்த்தமாக இருக்கிறது.
பொடெமோஸ் உறுப்பினர்கள், மனோன் ஆப்ரி உள்ளிட்ட LFI உறுப்பினர்கள் மற்றும் போர்த்துகீசிய இடது கூட்டின் (Left Bloc) ஜோனா மோர்டகுவா ஆகியோரால் விநியோகிக்கப்படும் சமாதானத்திற்கான கூட்டு மனுவின் அரசியல் மோசடியையும் இது அம்பலப்படுத்துகிறது. இது இனப்படுகொலையை நிறுத்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு உண்மையான போராட்டத்தின் ஒரு பகுதி அல்ல. மாறாக, காஸா இனப்படுகொலையில் தங்கள் அரசியல் உடந்தையை மறைக்க முயற்சிக்கும் ஊழல்பிடித்த, போலி-இடது கட்சிகளின் அடுக்கின் அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.
காஸா இனப்படுகொலைக்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கும் தொழிலாளர்கள் இவ்வாறு விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்: அதாவது அவர்கள் காஸாவின் நண்பர்கள் என்று காட்டிக் கொண்டாலும், பொடெமோஸ் அமைச்சர்கள் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிரிகளாக இருக்கிறார்கள். கோவிட்-19 க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள், நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் மற்றும் காடிஸில் உலோக மற்றும் விண்வெளி தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பாரிய வேலைநிறுத்தம் ஆகியவற்றிற்காக வேலைநிறுத்தம் செய்யும் எஃகு தொழிலாளர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்க அவர்கள் போலீஸை அனுப்பியிருந்தனர். காஸாவைப் பாதுகாப்பதற்கான ஒரு வேலைநிறுத்த இயக்கத்தின் கடுமையான எதிரிகளாக அவர்கள் நிரூபிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அனைத்திற்கும் மேலாக, ஸ்பெயினின் பிரதான தொழிற்சங்க அதிகாரத்துவங்களான சமூக ஜனநாயக தொழிலாளர் பொது ஒன்றியம் (UGT) மற்றும் ஸ்ராலினிச தொழிலாளர் ஆணையங்கள் (CCOO) ஆகியவைகள் முறையே PSOE மற்றும் பொடெமோஸ் ஒரு கட்சியாக இருக்கும் சுமர் (Sumar) தேர்தல் கூட்டணியுடன் அரசியல் ரீதியாக இணைந்துள்ளன. உண்மையில், UGT மற்றும் CCOO அதிகாரத்துவங்கள் காஸாவில் நடந்த இனப்படுகொலை மற்றும் PSOE மற்றும் பொடெமோக்களின் உடந்தைக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு எதிர்பார்த்தபடி எதுவும் செய்யவில்லை.
ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ பப்லோவாத சக்திகளின் கூட்டணியான பொடெமோஸ் போன்ற வசதியான மத்தியதர வர்க்கத்தின் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி மூலம் மட்டுமே காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட முடியும். இஸ்ரேலுக்கு பொருட்களின் விநியோகங்கள் மற்றும் இராணுவ உதவிகள் செல்வதைத் தடுப்பதற்கும் பாரிய படுகொலையை நிறுத்துவதற்கும், சர்வதேச அளவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலைக்கு எதிரான ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஸ்பெயினின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தில் சாமானிய குழுக்களை கட்டியெழுப்புவது இதற்கு அவசியமாகும்.