மக்கீவ்கா ஏவுகணை தாக்குதலும் ரஷ்யாவில் அரசியல் நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புத்தாண்டு தினத்தன்று டொன்பாஸில் உள்ள இராணுவ முகாம் மீது உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ரஷ்ய சிப்பாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அப்போதிருந்து, கிரெம்ளின் எந்தப் பொறுப்பையும் மறுக்கும் முயற்சியில் அதன் சொந்த படையினர்களைக் குற்றம் சாட்டியுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் சேர்ஜி செர்டியுகோவ், ஜனவரி 4 அன்று ஒரு வீடியோ செய்தியில், இராணுவ விதிமுறைகளுக்கு மாறாக சிப்பாய்கள் தங்கள் செல்போன்களைப் பயன்படுத்தியதால் மட்டுமே உக்ரேனிய துருப்புக்களால் இருக்கும் முகாம்களைத் தாக்க முடிந்தது என்று கூறினார். ஒரே ஏவுகணைக்கு குறைந்தது 89 சிப்பாய்கள் பலியாகியதற்கு இதுவே 'முக்கிய காரணம்' - ரஷ்யாவிற்கு இராணுவ அவமானம், இது சம்பந்தப்பட்ட சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு பேரழிவு என்று அறிவித்தார்.

ஒரு படைப்பிரிவின் துணைத் தளபதியும் உட்பட கிரெம்ளினின் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க குறைப்பு என்று பரவலாக நம்பப்படுகிறது, ஏனெனில் இப்போது சமதளமான முன்னாள் பள்ளி கட்டிடத்தில் சுமார் 600 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஒரு வெடிமருந்து கிடங்கின் மேல் படையினர் இருந்ததால், அழிவின் அளவு குறிப்பாக மிகப்பெரியதாக இருந்தது.

குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த ஒரு படையினரின் மனைவி பத்திரிகையாளர்களிடம் தனது கணவர் 'இறைச்சி, இரத்தம் தோய்ந்த சதைகளால்' சூழப்பட்டதாக கூறினார். ஆரம்பத்தில் வெறும் 63 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கையை, பாதுகாப்பு அமைச்சகம் மேல்நோக்கித் திருத்த வேண்டியிருந்தது, அந்த எண்ணிக்கை தவறானது என படையினரின் உறவினர்களால் கண்டனம் செய்யப்பட்டது.

எண்ணற்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், கிரெம்ளின் இன்னும் இறந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை. 400 ரஷ்ய துருப்புகளைக் கொன்றதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் கியேவ் கூறுகிறது. இவர்களில் பெரும்பாலோர் சமீபத்தில் கட்டாய சேர்ப்புகள் என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்களில் சிறப்புப் படைகளும் இருந்திருக்கலாம். இராணுவ சேவைக்காக கட்டாயப்படுத்தப்பட்ட பலர் சென்ற சமாரா நகரம், அதன் மருத்துவமனைகளில் மட்டும் 60-70 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவித்தது.

சில சிப்பாய்களின் மனைவிகள் சமாராவில் உள்ள பத்திரிகைகளிடம், தங்கள் வாழ்க்கைத் துணைகளின் தலைவிதியைப் பற்றி அதிகாரிகளால் ஒருபோதும் தொடர்பு கொள்ளப்படவில்லை, மாறாக அவர்களை தாங்களே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது என்று கூறினர். மற்றவர்கள் இன்னும் தகவலுக்காக காத்திருக்கிறார்கள்.

ஒரு கிரெம்ளின் சார்பு பத்திரிக்கையாளரான அனஸ்தேசியா கஷேவரோவாவின் கூற்றுப்படி, தப்பிப்பிழைத்தவர்கள் மீண்டும் போருக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது 'தூரத்திற்கு வேறு எங்காவது' அனுப்பப்படுவார்கள். மற்றவர்கள், இந்த நிகழ்வை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். 'தயவுசெய்து தன்னுடைய பெயரைக் கூட எழுத வேண்டாம்' என்று ஒரு பெண் தனது கணவரைக் குறிப்பிட்டு பத்திரிகைகளிடம் கூறினார். 'நான் பயப்படுகிறேன்,' என்று அவர் கூறினார், அவர் உயிர் பிழைத்து 'அரை நிர்வாணமாக' ரோஸ்டோவில் உள்ள மருத்துவமனைக்கு நடந்து சென்றார் என்று விளக்கினார். தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் “தேவையற்ற சாட்சிகள் என்று என்று எழுதி வைக்கப்படுகிறார்கள்' என்று உறவினர் ஒருவர் கூறினார்.

உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணை ஒரே அடியில் நூற்றுக்கணக்கான ரஷ்யப் படையினர்களைக் கொன்றது என்ற செய்திக்கு வாஷிங்டன் தனது பங்கிற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் பதிலளித்தது. கடந்த வியாழக்கிழமை பேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூலோபாய தகவல்தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜோன் கிர்பி, ரஷ்ய எண்ணிக்கையில் 'தனது கைகளை பிசையமாட்டேன்' என்று அறிவித்தார், மேலும் வாஷிங்டன் உக்ரேனுக்கு ஹிமார்ஸ் உட்பட, 'அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான அமைப்புகள் மற்றும் உதவிகளை தொடர்ந்து வழங்குவேன்” என்றும் கூறினார்.

புட்டின் அரசாங்கம் ஒருபுறம் இறந்த மற்றும் காயமடைந்தவர்களை சம்பவத்திற்கு பொறுப்பாக அறிவித்து, மறுபுறம் அவர்களை ஹீரோக்கள் என்று அறிவிப்பதன் மூலம் தனது தோல்வியை மூடிமறைக்கவும் பின்விளைவுகளை சமாளிக்கவும் முயற்சிக்கிறது. இராணுவத்தினர் தொலைபேசி அழைப்புகள் மூலம் தங்கள் இருப்பிடங்களை எதிரிகளுக்கு கொடுத்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறிய மறுநாள், ரஷ்ய ஜனாதிபதி தாக்குதலில் தப்பியவர்களுக்கு சிறப்பு அரசு விருதை அறிவித்தார்.

எவ்வாறாயினும், அமெரிக்கா வழங்கிய ஹிமார்ஸ் ஏவுகணையின் உதவியுடன் ரஷ்யாவிற்கு இவ்வளவு அதிக ஒரு முறை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய உக்ரேனின் திறன் ரஷ்ய இராணுவத் திட்டமிடலின் தோல்வியில் சிறியது அல்ல என்பது தெளிவாகிறது. இது கடந்த 11 மாதங்களில் பலவற்றில் ஒன்றாகும். ஒரு செய்தி அறிக்கையின்படி, துருப்புக்களின் செல்போன் பயன்பாடு உக்ரேனிய இராணுவத்திற்கு படைகளின் இருப்பிட தொலைவுகளை வழங்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும், அதற்குக் காரணம் ஜனாதிபதி புட்டினின் புத்தாண்டு உரையைப் பார்க்க சிப்பாய்கள் ஒன்றுகூடியதே ஆகும்.

மக்வீவ்காவின் இல் ஏற்பட்ட இரத்தக்களரி எண்ணிக்கை கிரெம்ளின் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது. கடந்த ஆண்டு 'பகுதி அணிதிரட்டலில்' புட்டினால் அழைக்கப்பட்ட பல கட்டாய இராணுவத்தினரின் மரணங்கள், போரின் விலை மற்றும் ரஷ்ய அரசாங்கம் கொண்டு வந்த முட்டுச்சந்து குறித்து பரந்த மக்களிடையே அச்சத்தை மட்டுமே ஆழப்படுத்த முடியும்.

கட்டாய இராணுவ சேவையின் தீவிர செல்வாக்கற்ற தன்மையை அறிந்த கிரெம்ளின், கட்டாய சேர்ப்பை நீட்டிக்க விரும்பவில்லை என்று வலியுறுத்துவதில் சிரமப்பட்டு வருகிறது. 'சிறப்பு இராணுவ நடவடிக்கை' மீதான அனைத்து விமர்சனங்களும் தடைசெய்யப்பட்டு மற்றும் மீறுபவர்களுக்கு பெரிய அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சூழ்நிலையில் கூட, வழக்கமான செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளில், தப்பியோடியது, கட்டாய இராணுவ சேர்க்கை மற்றும் துருப்புக்களின் மோசமான நிலை குறித்து எதிர்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், பணவீக்கம், கொடுக்கப்படாத ஊதியம் மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பின் பரவல் ஆகியவை உண்மையான வருமானத்தை பாதிக்கின்றன.

கிரெம்ளினை விமர்சிக்கும் ரஷ்ய கருத்துக் கணிக்கும் நிறுவனமான லெவாடா மையத்தின்படி, டிசம்பர் 2022 நிலவரப்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 41.2 சதவீதம் பேர் நிச்சயமாக போரை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர், இது பிப்ரவரி 2022 இலிருந்து சுமார் 7 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 11 மாதங்களில், பதிலளித்தவர்களில் சுமார் 20 சதவீதம் பேர், உக்ரேனில் கிரெம்ளினின் நடவடிக்கைகளுடன் ஏதாவது ஒரு அளவில் உடன்படவில்லை என்று தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரேன் மீதான ரஷ்ய அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புக்கான மக்கள் ஆதரவு, புட்டின் அரசாங்கம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒருவித உண்மையான போராட்டத்தை நடத்துகிறது என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் ரஷ்ய-விரோதக் கொள்கைகளின் மூர்க்கத்தனம், —இது புட்டின் தனது உரைகளிலும் அறிக்கைகளிலும் திரும்பத் திரும்ப குறிப்பிடுவது— உண்மையானது. மேலும் சோவியத் ஒன்றியத்தை வரைபடத்தில் இருந்து துடைத்தழிக்கும் நாஜிகளின் முயற்சியில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்த மக்களிடமிருந்து அது மறையவில்லை.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் வெற்றியின் சோகம் மற்றும் வீரத்தில் இருந்து உருவான மறைந்திருக்கும், தெளிவுபடுத்தப்படாத ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை, அதன் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவை வென்றெடுக்க பயன்படுத்திக் கொள்ள கிரெம்ளின் முயற்சிக்கிறது. இது அந்த நாட்டின் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கும், ரஷ்ய முதலாளிகளின் 'தங்கள் சொந்த' மக்களை சுரண்டும் உரிமையை பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்ராலினின் கீழும் அதற்குப் பின்னரும், ரஷ்ய ஆளும் உயரடுக்கு எப்போதுமே பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு ரஷ்ய தேசிய போராட்டமாக, 'தேசிய பாதுகாப்புக்கான” போராட்டமாக பொய்யாக சித்தரித்து வருகிறது.

எவ்வாறாயினும், புட்டின் அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்றால், சோவியத் வெகுஜனங்கள், அதன் ரஷ்ய பகுதி உட்பட, முதலாளித்துவத்தை அல்லது 'ரஷ்ய தேசத்தை' பாதுகாக்க பாசிசத்தை எதிர்த்துப் போராடவில்லை. ஸ்ராலினின் குற்றங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் சோசலிசப் புரட்சியை அல்லது அதில் எஞ்சியிருப்பதை பாதுகாக்க பாசிசத்தை எதிர்த்துப் போராடினார்கள். இன்றைய ஆளும் உயரடுக்கு சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்துக்கான போராட்டம் சாதித்த அனைத்தையும் வெகு காலத்திற்கு முன்பே கலைத்து விட்டது, எனவே ரஷ்ய தேசியவாதத்தை அது இன்னும் அதிகமாகப் பற்றிக் கொண்டுள்ளது.

1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் சோவியத் ஒன்றியத்தை கலைத்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவம் கூறிய மையக் கூற்றுகளில் ஒன்று ஏகாதிபத்தியம் என்பது ஒரு கட்டுக்கதை என்றும் சோவியத் கோளத்தின் மக்கள் தங்கள் புதிய முதலாளித்துவ நண்பர்களைப் பற்றி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதுதான். பல தசாப்தங்களாக உலகெங்கிலும் தொழிலாள வர்க்கப் புரட்சியை நசுக்கப் பணியாற்றிய ஸ்ராலினிஸ்டுகள், பனிப்போரின் முடிவு சமாதானத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று மிக்கையில் கோர்பச்சேவ் திரும்பத் திரும்பக் கூறியது போல் வலியுறுத்தினர். சந்தையை மீட்டெடுப்பதன் மூலமும், சோவியத் ஒன்றியத்தை உலக முதலாளித்துவ அமைப்பில் ஒருங்கிணைப்பதன் மூலமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கான அவர்களின் தேடலில், உயரடுக்கு சோவியத் தொழிலாள வர்க்கத்தையும் அது 80 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தியாகம் செய்து கட்டியெழுப்பிய பொருளாதார மற்றும் சமூக வளங்கள் அனைத்தையும் சூறையாடியது.

ஜனாதிபதி புட்டின் ஒரு பிரதிநிதியாக இருக்கும் இந்த பேரழிவின் வாரிசுகள், இப்போது ஒரு முட்டுச்சந்துக்குள் உள்ளனர். ஏகாதிபத்தியம் உண்மையில் ஒரு கட்டுக்கதை அல்ல, ரஷ்யா அதன் கொடூரமான தர்க்கத்தின் முடிவில் உள்ளது என்பதை பல ஆண்டுகளாக தங்கள் 'மேற்கத்திய கூட்டாளர்களை' சென்றடைந்த பின்னர் கண்டுபிடித்துள்ளனர். உக்ரேன் படையெடுப்புடன், கிரெம்ளின் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் ஒருவித தீர்வை கட்டாயப்படுத்த முடியும், அது ரஷ்ய அரசை உயிர்வாழ அனுமதிக்கும் என்று நினைத்தது. மாறாக, போர் அதிகரித்துவிட்டது, வரவிருக்கும் காலத்தின் சிக்கலான சூழ்நிலைகள் மற்றும் திருப்பங்கள் எதுவாக இருந்தாலும், வெளியேற வழி இல்லை. தேசிய பாதை ஒரு முட்டுச்சந்துக்கு மட்டுமே இட்டுச் சென்றுள்ளது.

புத்தாண்டு தின இராணுவத் தோல்வியும், கடந்த 11 மாதங்களில் நடந்த அனைத்து முந்தைய தோல்விகளும், ரஷ்ய தேசிய கட்டுக்கதையையும் அதனுடன் புட்டின் அரசாங்கத்திற்கு இருக்கும் பலவீனமான ஆதரவையும் தகர்க்க அச்சுறுத்துகிறது. மக்கீவ்கா மரணங்களுக்கு நாட்டின் வலதுசாரி தேசியவாதிகளின் விரக்தியும் கோபமுமான பதில் இது தொடர்பாக வெளிப்படுத்தப்படுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு சேவைகளின் முன்னாள் உறுப்பினரும், டொன்பாஸில் ரஷ்ய சார்பு போராளியுமான இகோர் ஸ்ட்ரெல்கோவ், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான துருப்புக்களை ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதற்கான தெளிவான முட்டாள்தனத்திற்காக பாதுகாப்பு அதிகாரிகளை கண்டித்தார்.

'இது எந்த நேரத்திலும் மீண்டும் நிகழலாம்,' என்று அவர் திங்களன்று டெலிகிராமில் எச்சரித்தார். 'ஹிமார்ஸ் ஏவுகணைத் தாக்குதல் மண்டலத்தில் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களின் இத்தகைய (மிகவும் அடர்த்தியான) நிலைநிறுத்தம் இது ஒன்றுமட்டுமல்ல' என்று ஸ்ட்ரெல்கோவ் எழுதினார், உக்ரேனுக்கு வாஷிங்டன் வழங்கிய ராக்கெட் ஏவுகணைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

'மக்கீவ்காவில் நடந்தது ஒரு குற்றவியல் அலட்சியம்' என்று 2014 ஆம் ஆண்டு தொடங்கி டொன்பாஸில் ரஷ்ய சார்பு படைகளுடன் போராடிய பாவெல் குபேரேவ் அதே சமூக ஊடக தளத்தில் எழுதினார். 'இவை 2022 வசந்த-கோடையின் தவறுகள்,' என்று அவர் கூறினார், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தைச் சுற்றியுள்ள ரஷ்ய துருப்புக்கள் ஹிமார்ஸ் தாக்குதல்கள் மற்றும் அவர்களின் எல்லைகளுக்குப் பின்னால் உள்ள பிற தாக்குதல்களால் பெருகிய முறையில் பாதிக்கப்படுகின்றன.

டெலிகிராமில் எழுதுகையில், பத்திரிகையாளரும் மாஸ்கோ டுமா உறுப்பினருமான ஆண்ட்ரி மெட்வெடேவ் கருத்துத் தெரிவிக்கையில், 'புத்தாண்டு தினத்தன்று, உக்ரேனிய ஆயுதப்படைகளும் அவர்களின் பாதுகாப்பு சேவையும் எங்களுக்கு பாதிப்புகள் உள்ள இடங்களில் தாக்குதல் செய்ய முயற்சிக்கும் என்பது அனைவருக்கும் முன்கூட்டியே தெளிவாக இருந்தது. நம்மை காயப்படுத்த எதிரிக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது? இந்த முறையில் பணியாளர்களை அனுப்ப முடிவு செய்தது ஏன்? யாரால் முடிவு செய்யப்பட்டது?”

“ஒவ்வொரு சிப்பாயும், அதிகாரியும் முக்கியமானவர்கள். ஒவ்வொரு இராணுவ வீரரின் உயிரும் விலைமதிப்பற்றது. ‘பெண்கள் புதிய குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள்’ என்ற அணுகுமுறையுடன் நாம் வெற்றி பெற மாட்டோம் என்பது மட்டுமல்லாமல், எங்கள் வாய்ப்புகளும் இருண்டதாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

உயர்நிலை இராணுவ அதிகாரிகளை 'எதிரிகளுக்கு நேரடி உதவி' என்று அவர் குற்றம் சாட்டினார். மற்றவர்கள், துருப்புக்களை புத்திசாலித்தனமாக நிலைநிறுத்தத் தவறியதன் காரணமாக மக்கீவ்கா நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடப்பது 'தேசத்துரோகமாக' மட்டுமே கருதப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Loading