பிரிட்டனில் வேலைநிறுத்த தடைச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்குச் செல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டனின் புதிய வேலைநிறுத்தத் தடை சட்டங்கள் இந்தக் கோடையில் சட்ட சாசனத்தில் இடம் பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றன. இவை உலகிலேயே மிகவும் கடுமையான சில சட்டங்களாக இருக்கின்றன.

வேலைநிறுத்தங்கள் (குறைந்தபட்ச சேவை வரம்புகள்) மசோதா பிரபுக்கள் சபைக்கு நகர்த்தப்படுவதற்கும் முன்னர், அதன் மீதான அடுத்த வாக்கெடுப்பு ஜனவரி 30 இல் நடைபெறும். பொதுத்துறை மற்றும் தனியார்துறை என முக்கிய தொழில்துறைகளை உள்ளடக்கிய ஆறு துறைகளில், தொழிலாளர்கள் மீது குறைந்தபட்ச சேவை வரம்புகளை (MSLs) விதிக்க இந்த மசோதா அரசாங்கத்தை அனுமதிக்கும். இந்த சட்ட மசோதாவின் கீழ் அவசர முதலுதவி, தீயணைப்பு/மீட்புத்துறை மற்றும் இரயில் சேவைகள் முதலில் கொண்டு வரப்பட உள்ளன. பின்னர் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை சேவைகள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் அணுசக்தித்துறையை நிறுத்துதல் ஆகியவையும் இச்சட்டத்திற்குள் கொண்டு வரப்படும்.

ஜனவரி 23, 2023 அன்று ஷெஃபீல்டில் வேலைநிறுத்தம் செய்யும் அவசர முதலுதவி சேவை ஊழியர்கள்

பொருளாதாரத்தின் முக்கியப் பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களில் ஒரு கணிசமான விகிதத்தினர் (சுமார் 20 சதவீதம் பேர்) தொழில்துறை வேலைநிறுத்த நடவடிக்கையின் போதும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் செயலூக்கத்துடன் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். இது வடக்கு அயர்லாந்தைத் தவிர ஐக்கிய இராஜ்ஜியத்தின் எல்லா நாடுகளுக்கும் பொருந்துவதாக இருக்கும்.

ஆரம்பத்தில் 130,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த சட்டத்திற்கு உட்படுவார்கள். ஆனால் பின்னர் அது 5 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை உள்ளடக்க விரிவுபடுத்தப்படும். இவர்களில் கல்வித் துறையில் 2.5 மில்லியன் பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையில் சுமார் 2.5 மில்லியன் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கான வெகுஜன போக்குவரத்துடன் தொடர்புடைய துறைகளில் உள்ள 310,000 தொழிலாளர்கள் உள்ளடங்கலாக போக்குவரத்துத் துறையில் 650,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் இருப்பார்கள்.

2016 தொழிற்சங்கச் சட்டமே இந்தத் துறைகளை 'அத்தியாவசிய     பொதுச் சேவைகள்' என்று வரையறுத்த முதல் பிரிட்டன் சட்டமாக இருந்தது, 'தீயணைப்பு சேவைகள்' என்பதுடன் 'மீட்பு' என்பதும் சேர்க்கப்பட்டது, “கல்விச் சேவைகள்' என்பது '17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கல்வி' என்று வரையறை விரிவாக்கப்பட்டது.

அது வேலைநிறுத்தங்களுக்கான வாக்களிப்பதில் வரம்புகளைத் திணித்ததுடன், முக்கிய தொழில்துறைகளில் நடத்தப்படும் வேலைநிறுத்தங்களுக்கு மிகவும் கடுமையாக இருந்தது. 2016 சட்டம் புதிய குறைந்தபட்ச வாக்குப்பதிவு உச்ச வரம்பை அறிமுகப்படுத்தியது. அதன்படி தொழில்துறை நடவடிக்கை மேற்கொள்ள வாக்களிக்கத் தகுதியானவர்களின் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குப்பதிவை அது அவசியமாக்கியது. முக்கிய பொதுச் சேவைகளுக்குக் கூடுதல் உச்ச வரம்புகள் விதிக்கப்பட்டது, அதன்படி வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்களில் குறைந்தபட்சம் 40 சதவீதத்தினர் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு வாக்குகளை வழங்கி இருக்க வேண்டும்.

அப்போது, தொழிற்கட்சி வார்த்தைகளில் மட்டுமே சொற்புரட்டு செய்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வரையறுக்கும் 'அத்தியாவசிய சேவைகளில்' பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இந்த 40 சதவீத வாக்குப்பதிவு வரம்பு பொருந்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஒரு தோல்விகரமான திருத்தத்தை மேசையில் வைத்தது. “மக்களின் ஒரு பகுதியினருக்கோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ, உயிருக்கோ, தனிநபர் பாதுகாப்புக்கோ அல்லது ஆரோக்கியத்திற்கோ ஆபத்து விளைவிக்கும் வகையில் தொந்தரவூட்டும்' சேவைகளை சர்வதேச தொழிலாளர் அமைப்பு “அத்தியாவசிய சேவைகள்' என்று வரையறுக்கிறது.

அந்தப் புதிய சட்டத்தின் கீழ், வேலைநிறுத்தங்களின் போது அரசாங்கம் நிர்ணயித்த சேவைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு சட்டப்பூர்வ வாக்கெடுப்பில் வேலைநிறுத்தம் செய்வதாக வாக்களித்த பின்னரும் கூட, நடைமுறையளவில் கட்டாயப்படுத்தும் விதத்தில், நிறுவனங்கள் வேலை செய்ய வேண்டிய தொழிலாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு அறிவுறுத்தும். தற்போது பொலிஸ் அதிகாரிகள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் சில சிறை அதிகாரிகள் மட்டுமே வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தச் சட்டங்களுக்கு இணங்கத் தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேலை செய்வதற்கான அறிவிப்புகளுக்குத் தொழிலாளர்கள் இணங்கி இருப்பதைத் தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்த 'உரிய நடவடிக்கைகள்' எடுக்காவிட்டால், பாதிப்புகளுக்காக அவற்றின் மீது முதலாளிகளால் சட்டரீதியாக நஷ்டஈடு வழக்கு தொடர முடியும். இத்தகைய செலவுகளுக்கான உச்ச வரம்பு 1 மில்லியன் யூரோ வரை கடந்தாண்டு உயர்த்தப்பட்டது.

தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் உறவுகள் (ஒருங்கிணைப்பு) சட்டம் 1992 இல் குறிப்பிடப்பட்டுள்ள நியாயமற்ற பணிநீக்கம் மீதான பாதுகாப்புகளை இந்த மசோதா முடிவுக்குக் கொண்டு வருகிறது. இந்தச் சட்டத்தைக் குறித்து மக்களவை நூலகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது, “தொழில்துறை நடவடிக்கையில் பங்கேற்றதற்காக பணிநீக்கம் செய்வதை தன்னியல்பாக நியாயமற்றதென ஆக்கியும், அவர்கள் பங்கெடுக்கும் தொழில்துறை நடவடிக்கைக்குப் பாதுகாப்பு வழங்கியும் (அதாவது தொழிற்சங்கம் எல்லா சட்ட நிபந்தனைகளுக்கும் இணங்கி உள்ளது என்பதே இதன் அர்த்தம்) அத்தகைய பணிநீக்கத்திற்கு எதிராக பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.”

இந்தப் புதிய மசோதாவில் உள்ள ஒரு திருத்தம், 'ஒரு பணியாளரை அடையாளப்படுத்தி வேலை செய்யக் கோரி முதலாளியிடம் இருந்து வந்த செல்லுபடியான ஒரு பணி அறிவிப்புக்கு முரணாக அந்தப் பணியாளர் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவருக்கான இந்தப் பாதுகாப்பு கிடைக்காது,” என்று குறிப்பிடுகிறது.

இந்தப் புதிய சட்டம், வேலைக்கு வர வேண்டுமென்ற அறிவுறுத்தலை மீறும் தொழிலாளரைப் பணிநீக்கம் செய்ய அனுமதிப்பது மட்டுமில்லை. குறிப்பிட்ட தொழிலாளர்கள் பணி அறிவிப்புகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய ஒரு தொழிற்சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கருதப்பட்டால், வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யவும் அது அனுமதிக்கிறது.

மக்களவை குறிப்பு விவரிக்கிறது, “புதிய பிரிவு 234E(b) இன் கீழ் தொழிற்சங்கம் 'உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால்' தொழிலாளர்களை வேலைநிறுத்தங்களில் பங்கேற்கத் தூண்டும் செயல்கள் பிரிவு 219 இன் கீழ் இழப்பீடு கோரத்தக்க குற்றங்களுக்கு எதிராக இனி பாதுகாக்கப்படவில்லை என்பதால், அத்தகைய வேலைநிறுத்தங்களில் பங்கேற்கும் தொழிலாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பணி அறிவிப்புகளுக்கு இணங்கி இருந்தாலும் கூட, பிரிவு 238A இன் கீழ் அத்தகைய வேலைநிறுத்தங்களில் பங்கேற்கும் தொழிலாளர்கள் பணிநீக்கப்படுவதிலிருந்து அவர்களின் பாதுகாப்பை இழப்பார்கள்,” என்று குறிப்பிடுகிறது.

ஜனவரி 2023, கிளாஸ்கோவில் உள்ள நைட்ஸ்வுட் பள்ளியில் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள்

மில்லியன் கணக்கான தொழிலாளர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது, இப்போது கல்வித்துறை மற்றும் தேசிய சுகாதார சேவையின் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய வேலைநிறுத்த அலையைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மையமாக உள்ளது. ஜனவரி 30 இல், 33,000 க்கும் அதிகமான தீயணைப்புத்துறை பணியாளர்கள் சங்க உறுப்பினர்களின் தொழில்துறை நடவடிக்கைக்கான ஒரு வாக்கெடுப்பு முடிவடையும்போது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவான வாக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே அது சம்பந்தப்பட்ட வேலைநிறுத்த வாக்கெடுப்பு நடந்திருந்தாலும் கூட, இந்தச் சட்டம் இயற்றப்பட்ட மறுநாளிலிருந்தே எந்தவொரு வேலைநிறுத்தத்திற்கும் எதிராகவும் குறைந்தபட்ச சேவை விதிமுறைகளைப் பயன்படுத்துவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

பாராளுமன்றத்தில் டோரிகளின் பெரும்பான்மை இருப்பதால் அந்தச் சட்டம் வெறும் சம்பிரதாயமாகவே நிறைவேற்றப்படும் என்பதை அறிந்து, தொழிற்கட்சி அதற்கு எதிராக வாக்களிக்க உறுதியளித்தது. ஆனால் மார்கரெட் தாட்சர் நிறைவேற்றிய இப்போதிருக்கும் பெருமளவிலான வேலைநிறுத்த தடைச் சட்டம், 1997 இல் இருந்து 2010 வரை, தொழிற்கட்சியின் பெரும்பான்மை இருந்த போதும் கூட பிளேயர்-பிரௌன் அரசாங்கம் அதன் பதவிக் காலம் முழுவதும் பேணி வந்த நிலையில், அதைக் குறித்து தொழிற்கட்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தான் இந்த சட்டமசோதாவை அது எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாகும். 

இன்னும் அடிப்படையாக, பெருவணிகத்துடனும் அரசாங்கத்துடனும் தொழிற்சங்க அதிகாரத்துவம் நெருக்கமாக இணைந்து செயல்படும் வகையில் ஒரு பெருநிறுவன ஏற்பாட்டைக் கட்டியெழுப்புவதன் மூலம் வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதில் தொழிற்சங்கங்களை நம்பியிருக்க வேண்டும் என்று தொழிற்கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர் வாதிடுகிறார்.

இந்தச் சட்டமசோதாவை எதிர்ப்பதில், தொழிற்கட்சி துணைத் தலைவர் அங்கேலா ரேனெர் வாதிடுகையில், இந்தச் சட்டத்தின் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில், இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அங்கே 'பிரிட்டனை விட வேலைநிறுத்த நாட்கள் அதிகளவில் குறைவாக உள்ளன. அவர்களின் அரசாங்கங்களிடமோ அல்லது தொழிற்சங்கங்களிடமோ பேசி, அவர்களிடம் இருந்து ஏதேனும் உண்மையான பாடங்களைக் கற்றுக் கொள்ள போக்குவரத்து அமைச்சர் சிறிது நேரம் ஒதுக்குவாரா?” என்றார்.

தொழிற்சங்கங்கள் இந்த மசோதாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மட்டுமே எடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. தொழிற்சங்க காங்கிரஸோ (TUC) அல்லது அதனுடன் இணைந்த 48 தொழிற்சங்கங்களோ அதை எதிர்த்து தொழில்துறை நடவடிக்கையை ஒழுங்கமைக்க எதுவும் செய்யவில்லை. TUC பொதுச் செயலாளர் பௌல் நோவாக் கூறுகையில், அது ஒருமுறை நிறைவேற்றப்பட்டு விட்டால், எதிர்காலத்தில் பதவிக்குவரும் தொழிற்கட்சி அரசாங்கம் அதை நீக்கும் வரை காத்திருக்கும் அதேவேளையில், தொழிற்சங்கங்கள் அதன் வழிவகைகளுக்கு இணங்கி இருக்கும் என்று உறுதியளித்தார்.

தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் பால் நோவாக் CWU பேரணியில் பேசுகிறார்

தொழிற்சங்கங்கள் இந்த மசோதாவை எதிர்க்குமாறு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் முறையிடவில்லை, மாறாக இதை முன்னெடுத்து வரும் ஆளும் கட்சியின் டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட முறையிடுகிறார்கள்.

அதன் திட்டங்களைச் சட்டப்பூர்வமாக்க முற்படுகையில், அரசாங்கமோ பின்வருமாறு வாதிட்டது, 'உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் பாதுகாவலனாக விளங்கும், TUC அதுவே கூட அதில் நன்கொடையாளராக உள்ள நிலையில், இந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு, பரந்தளவில் மக்களைப் பாதுகாக்க வேண்டியிருப்பதால் இந்த குறைந்தபட்ச சேவை வரம்புகள் வேலைநிறுத்த உரிமையைச் சமநிலைப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான வழியாக உள்ளன,” என்றது.

குறைந்தபட்ச சேவைகளின் தேவைகள் உட்பட வேலைநிறுத்தங்கள் மீதான பல கட்டுப்பாடுகளை உண்மையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அங்கீகரிக்கிறது.  உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அழுகிய தன்மையும் மற்றும் சர்வதேச அளவில் ஆளும் வர்க்கம் நடத்தி வரும் கொடூரமான வர்க்க போர் தாக்குதலுக்கு முன்னால் அது தொழிலாளர்களை நிராயுதபாணியாக ஆக்குவதும் இதற்கு சாட்சியம் அளிக்கிறது.

உலக சோசலிச வலைத் தளம், கடந்த டிசம்பர் முன்னோக்கு கட்டுரையில், அப்போது அரசாங்கம் ஏற்படுத்தி கொண்டிருந்த இந்தச் சட்டமசோதாவின் பாதிப்புகளைக் குறித்தும், அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கத்திற்கு எதிராக ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்கான அதன் அறிவிக்கப்பட்ட நோக்கம் குறித்தும் எச்சரித்தது.

'குறைந்தபட்ச சேவைகள் சட்டம் ஏற்கனவே ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் 2008 உலகளாவிய நிதியச் சரிவுக்குப் பின்னர் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த அவை நேரடி அரசு அடக்குமுறைக்குத் திரும்பியுள்ளன' என்று நாங்கள் குறிப்பிட்டோம்.

ஆளும் உயரடுக்குகள் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளை எந்தளவுக்குச் சார்ந்துள்ளன என்பதற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் கூடி அவை கடைபிடிக்கப்படுகின்றன என்பதற்கும் மக்களவை குறிப்புகள் பல எடுத்துக்காட்டுக்களை வழங்குகின்றன.

ஸ்பெயினில், “23 செப்டம்பர் 2010 க்கு ஆறு நாட்களுக்குப் பின்னர் நடக்க இருந்த பொது வேலைநிறுத்த நடவடிக்கையின் போது குறைந்தபட்ச சேவை வழிவகைகளை ஒழுங்கமைக்க, முதல் முறையாக [சோசலிஸ்ட் கட்சி] அரசாங்கத்திற்கும் இரண்டு முக்கிய தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஒரு கூட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டது. மற்ற எல்லா துறைகளிலும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால், அந்த ஒப்பந்தம் முக்கியமாக போக்குவரத்து துறையை உள்ளடக்கி இருந்தது,” என்று அது குறிப்பிடுகிறது. 

ஸ்டார்மர், ரெய்னர் மற்றும் இந்தக் கம்பெனிகள் இப்போது என்ன தான் பொய் சொன்னாலும், ஒரு தொழிற்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், அதன் பிளேயரிச (Blairite) முன்னோடிகள் டோரி வேலைநிறுத்த தடைச் சட்டங்களின் கடைசி சுற்றை நிறைவேற்றியதைப் போலவே, இதனை பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.