மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த புதன்கிழமை நடந்த ஆறு முக்கிய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேசிய வேலைநிறுத்தங்களில் 500,000 தொழிலாளர்கள் வரை பங்கேற்றுள்ளனர். இது, கன்சர்வேடிவ் கட்சி / தாராளவாத ஜனநாயகக் கட்சி கூட்டணியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக இரண்டு மில்லியன் மக்கள் ஈடுபட்டதான நவம்பர் 30, 2011 வேலைநிறுத்ததிற்கு பின்னைய மிகப்பெரிய ஒரு நாள் வேலைநிறுத்தமாகும்.
தேசிய கல்வி ஒன்றியம் (NEU) அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தத்தில் 23,000 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர் (அதாவது 10 பள்ளிகளில் 8 பள்ளிகளுக்கு அதிகமான பள்ளிகள் என்ற வீதத்தில் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன). அரசாங்க புள்ளிவிபரங்களின் படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 51.7 சதவீத பள்ளிகள் பகுதியளவில் அல்லது முழு அளவில் மூடப்பட்டன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஒன்றியத்தின் உறுப்பினர்களான 70,000 விரிவுரையாளர்களின் நடவடிக்கையின் காரணமாக வேலைநிறுத்தங்களால் ஒட்டுமொத்தமாக 150 பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. அடுத்த இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட 18 வேலைநிறுத்தங்களில் இதுவே முதலாவதாகும்.
ஸ்கொட்லாந்த் கல்வி நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மூன்றாவது வாரமாக சுழற்சி முறையில் வேலநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொது மற்றும் வணிக சேவைகள் சங்கத்தின் (PCS) உறுப்பினர்களாகவுள்ள 100,000 அரசு பணியாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களின் வேலைநிறுத்தம் வைட்ஹால் துறைகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பிற முகமைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் வேலை மையங்களின் பணிகளை பாதித்தது. இது, கடவுச்சீட்டுக்களை சரிபார்க்க அரசாங்கத்தால் இராணுவப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டது உட்பட எல்லைச் சாவடி பணிகளையும் பாதித்தது.
ASLEF மற்றும் இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து (RMT) தொழிற்சங்கங்களின் 12,500 இரயில் ஓட்டுநர் உறுப்பினர்கள் கூட்டு நடவடிக்கை எடுத்ததால், மூன்றில் ஒரு பங்கு சேவைகள் நெட்வேர்க்கில் இயங்குவதால் ரயில் பயணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
புதிய வேலைநிறுத்த தடைச்சட்டம் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை முன்னிட்டு வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. இது கோடையில் statue புத்தகங்களில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வேலைநிறுத்த (குறைந்தபட்ச சேவை வரம்புகள்-MSLs) மசோதா, வேலைநிறுத்தங்களின் போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் குறைந்தபட்ச சேவை வரம்புகளை (MSLs) சுமத்துவதற்கான அதிகாரங்களை அமைச்சர்களுக்கு வழங்குகிறது. இரயில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ‘நீல விளக்கு’ அவசர சேவைகளான மருத்துவ அவசர ஊர்தி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை முதலில் இந்த மசோதாவால் கட்டுப்படுத்தப்படும். மேலும், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வித் துறையின் அனைத்து வேலைநிறுத்தங்களுக்கும் இவை பொருந்தும்.
இலண்டனில் தொழிற்சங்க காங்கிரஸின் (TUC) முக்கிய ஆர்ப்பாட்டத்தில் 40,000 பேர் போர்ட்லாண்ட் பிளேஸில் இருந்து வைட்ஹால் வரை அணிவகுத்துச் சென்றனர். அங்கு டவுனிங் வீதி அருகே பேரணி நடைபெற்றது. பர்மிங்காம், ஷெஃபீல்ட், லீட்ஸ், பிரிஸ்டோல் மற்றும் மான்செஸ்டர் உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் இதர நகரங்களில் சில நூறு முதல் பல ஆயிரம் தொழிலாளர்கள் வரை பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன.
இந்த வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும், எந்த சலுகைகளையும் வழங்க மறுக்கும் கன்சர்வேடிவ் அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு எதிரான நீண்ட போராட்டத்தில் பங்கேற்றுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உறுதியை வெளிப்படுத்துகின்றன. அணிவகுப்பு மற்றும் பேரணிகளில் கலந்து கொண்டவர்களில், ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் செய்ய பெரும்பான்மையில் இப்போது வாக்களித்துள்ள தீயணைப்புப் பணியாளர்களும் அடங்குவர்.
இலண்டன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான ஜாக் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) இவ்வாறு கூறினார், “கல்விக்கான நிதி வெட்டுக்கள் எங்கள் ஒட்டுமொத்த பணியாளர்களையும் வெறுமனே முடக்கிப் போட்டதுடன், ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஊதியத்தைக் குறைத்துவிட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். போதுமான ஆசிரியர்களை எங்களால் கண்டறிய முடியவில்லை. இது டோரி அரசாங்கத்தின் நேரடி விளைவாகும். இது குழந்தைகள் பற்றியது, ஏனென்றால் அவர்களுக்கு சரியாக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் இல்லையென்றால், அவர்களால் முடிந்த அளவிற்கு அவர்கள் எப்படி முன்னேறப் போகிறார்கள் என்பதை நான் நினைக்கவில்லை. இப்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மட்டுமே ஒருபோதும் சிக்கனத்தை எதிர்கொள்ளவில்லை, எனவே நாங்கள் நிதி வெட்டுக்களை நிறுத்த முயற்சிக்கும் நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.”
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு பில்லியன் கணக்கில் செலவழிக்கப்படுவது பற்றி அவரிடம் கருத்து கேட்டபோது, ஆசிரியர் ஜாக் இவ்வாறு கூறினார், “டோரி அரசாங்கம், ‘இதற்கு எங்களால் நிதியளிக்க முடியாது’, ‘அதற்கு எங்களால் நிதியளிக்க முடியாது’, என்பதை சாக்குப்போக்காக முன்வைத்து, உக்ரேன் போரை பயன்படுத்தி வருகிறது. ஆனால் இந்த சிக்கல்களானது [கல்வி நிதி வெட்டுக்கள்] உக்ரேன் போருக்கு முன்பும் இருந்தன, இனி போருக்குப் பின்னும் இருக்கும். பிரிட்டன் எப்படி ஆளப்படுகிறது என்பதற்கு இது ஒரு அறிகுறியாகும்.
புதிய வேலைநிறுத்த மசோதாவை உத்தியோகபூர்வமாக இரத்து செய்வதாக தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்தது பற்றி ஜாக் இவ்வாறு கூறினார், ‘தொழிலாளர்களுக்காக ஏதாவது செய்ய கெய்ர் ஸ்டார்மரை நாம் எதிர்பார்த்து காத்திருந்தால், நாம் நெடுங்காலமாக காத்திருக்க வேண்டிருக்கும்!’
தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தங்களை குற்றப்படுத்துவதற்கும், முன்னோடியில்லாத வகையில் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முயன்றிருந்தால், வேலைநிறுத்தம் செய்பவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவினதாக இருந்திருக்கும். புதன்கிழமை நடந்த வேலைநிறுத்தங்கள், ஊதிய உயர்வு கோரியும், வேலை நிலைமைகள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலை எதிர்த்தும் தொடர்ந்து நடத்தப்பட்டன. சமீபத்திய வாரங்களில், நூறாயிரக்கணக்கான தேசிய சுகாதார சேவை செவிலியர்களும் ஆம்புலன்ஸ் துணை மருத்துவ பணியாளர்களும் வேலைநிறுத்தங்களில் ஈடுப்பட்டிருந்த போதிலும், புதன்கிழமை நடவடிக்கையில் ஒரு NHS ஊழியர் கூட பங்கேற்கவில்லை என்பதை சுகாதார தொழிற்சங்கங்கள் உறுதி செய்துள்ளன.
புதிய வேலைநிறுத்த மசோதா ஜனவரி 10 அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் இரண்டாம் கட்ட வாசிப்பு (ஜனவரி 16) மற்றும் மூன்றாம் கட்ட வாசிப்பு (ஜனவரி 30) முடிந்துவிட்ட நிலையில், இதற்கு எதிராக ஒரு வேலைநிறுத்தத்திற்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது இந்த மசோதா House of Lords இல் உள்ளது. செவ்வாயன்று அதன் முதல் கட்ட வாசிப்பு நடத்தப்படும்.
தொழிற்சங்க காங்கிரஸ், ‘வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாக்க’ அதன் சில தொழிற்சங்கங்களுக்கு பொதுவாக அழைப்பு விடுத்திருந்தாலும், மசோதா மீதான எதிர்ப்பை முடிந்தவரை அது குறைத்து காண்பிக்கிறது.
தொழிற்சங்க அதிகாரத்துவம், வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு ஏற்ப, இந்த மசோதாவிற்கு எதிரான பிரச்சாரத்தை டோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுவதோடு மட்டுப்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்காக தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் போல் நோவாக் இலண்டன் பேரணியின் முடிவில் மசோதாவிற்கு எதிரான முறையீட்டை டவுனிங் வீதியில் (பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் கருவூல அதிபர் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ள பகுதி) ஒப்படைத்தார்.
தொழிற்சங்கத் தலைவர்கள் மேலும் தொழில்துறை நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்காமல், தங்கள் உறுப்பினர்களையே விற்கக்கூடிய, பணவீக்கத்துக்கு கீழேயான 'நியாயமான' ஊதிய ஒப்பந்தத்திற்கு வருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். புதன்கிழமை தொழிற்துறை நடவடிக்கையைத் தவிர்க்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் கடைசி நிமிட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு மறுநாள், NEU இணைப் பொதுச் செயலாளர்களான மேரி பூஸ்டெட்டும் கெவின் கோர்ட்னியும் உற்சாகக் குறைவாக அழைப்பு விடுத்தனர். அதாவது, “இன்று, கல்விச் செயலாளருக்கு நாங்கள் அறிவிப்பு கொடுத்துள்ளோம். இங்கிலாந்துக்கான எங்கள் அடுத்த வேலைநிறுத்த நாளான பெப்ரவரி 28 வரை [ஒரு மாதம் உள்ளது], அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறினர்.
RMT தலைவர் மிக் லிஞ்ச், “நாங்கள் தொழிலாள வர்க்கம், நாங்கள் திரும்பிவிட்டோம்’ என்று அறிவித்து, தனது வழமையான ஆரவார உரையை நிகழ்த்தினார். ஆனால் அவர் தனது 40,000 உறுப்பினர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், அழுகிப்போன காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வதை ஒப்புக்கொண்டதன் பின்னரே அவ்வாறு செய்தார்.
ஆளும் உயரடுக்கின் இரண்டு பிரதான கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தை நசுக்க RMT மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் செய்வது தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் உணர்மைக்கு முரணானது என்பதை லிஞ்ச் அறிவார். பேரணியில் அவர் தொழிற்கட்சிக்கு பின்னால் தொழிலாளர்களின் கோபத்தை செலுத்த, தனது மிக வெளிப்படையான முயற்சியை மேற்கொண்டார். டோரி கட்சி சார்பாக இவ்வாறு அறிவித்தார், “பிரச்சினை என்னவென்றால் உங்கள் வறுமைக்கு அவர்களே காரணம், அவர்கள் தான் அதைத் தீர்க்க வேண்டும், அவர்களால் முடியவில்லை என்றால், அவர்கள் இப்போதே வெளியேற வேண்டும். ஒரு பொதுத் தேர்தலைப் பெறுவோம், நமது மக்கள் சார்பாக செயல்படும் [ஸ்டார்மர் தலைமையிலான] அரசாங்கத்தைப் பெறுவோம்.”
MSL மசோதாவிற்கு எதிராக ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கு அவ்வப்போது விடுக்கப்படும் அழைப்புகளையும், டோரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துவதையும் லிஞ்ச் ஒருங்கிணைக்கிறார். இந்த வாரம் அவர், “பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் அணுக வேண்டும்… இந்த மசோதா குறித்து டோரி கட்சியை பிளவுபடுத்துவோம்” என்று அறிவித்தார்.
லிஞ்சின் நிகழ்ச்சி நிரல் தொழிலாள வர்க்கத்தைத் தவிர அனைவரையும் அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. திங்கட்கிழமை மாலை அவரது இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜேர்மி கோர்பினுடன் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இது வெளிப்பட்டது.
இவர் போதும், போதும் என்ற பாடல் வரிகளை கூறி பூசி மெழுகினார், ஏனென்றால், “நாங்கள் மேற்கொண்டு வரும் இந்த விஷயத்தை, நான் தேவாலயங்கள், கிளை தேவாலயங்கள், கோவில்கள், குருத்வாராக்கள், மசூதிகள், நகர்ப்புற உள்ளூர் சமூக மையங்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளேன்…” என்று கூறினார்.
அவர் ஒவ்வொரு அரசியல் அயோக்கியர்களையும் பற்றி கூறுகையில், “நீங்கள் ஸ்கொட்டிஷ் தேசியவாதியாக இருந்தாலும் சரி, வேல்ஷ் தேசியவாதியாக இருந்தாலும் சரி, தாராளவாத ஜனநாயகவாதியாக இருந்தாலும் சரி நாம் அனைவரையும் அணிதிரட்ட வேண்டும்,” என்கிறார். மேலும், அவரது போலி-இடது வக்காலத்து வாங்குபவர்களை இழிவுபடுத்தும் வகையில், ‘நெவர்லாண்டில் இருந்து, நீங்கள் கடும்போக்கு சோசலிஸ்ட் என எதுவாக இருந்தாலும் சரி” என அறிவித்தார். ஸ்டார்மரும் பிளேரைட்டும் வலதுசாரிகளுடன் சமாதானத்திற்கு நேரடியாக முறையிட்டு, “நாம் நமது பிரிவுகளை கைவிடுவோம். வேறுபாடுகளை கைவிடுவோம்… இந்த இயக்கத்தில் புதைந்து கிடக்கும் வரலாற்றைக் கடந்திடுவோம். தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் திறனை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
லிஞ்சையும், தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்ற அனைத்து பிரிவுகளின் திவாலான அரசியலையும் நிராகரிப்பதே தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கிய வழியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியானது, ‘வேலைநிறுத்த தடைச்சட்டங்களை தோற்கடிப்பதற்கான ஒரு சோசலிச மூலோபாயம்’ என்ற அதன் அறிக்கையை போராட்டக் களத்தில் விநியோகித்தது. அதில் நாங்கள், “தொழிலாளர்கள் தங்கள் தலைவிதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். டோரி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான பொது வேலைநிறுத்தத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டம் தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையேயான பொதுவான நடவடிக்கைக்கு திட்டமிட தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படக்கூடிய சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை கட்டியெழுப்ப நாங்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். பெரும்பாலான தொழிலாளர்களும் அதைத்தான் கோருகின்றனர்” என போராட்டத்தில் விளக்கமளித்தோம்,
அனைத்து நாடுகளிலும் சுமத்தப்பட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான வெட்டுக்களுக்கு எதிராகவும், அணுவாயுதங்கள் கொண்டு நடத்தப்படும் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், முழு உலகத் தொழிலாளர்களின் ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச மூலோபாயத்தை பின்பற்றாமல், அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவை அனுபவிக்கும் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் தாக்குதலை தொழிலாளர்களால் எதிர்க்க முடியாது.
ஐரோப்பா முழுவதும் வெறுக்கப்படும் ‘செல்வந்தர்களின் ஜனாதிபதி’ மக்ரோனை எதிர்க்கும் மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்களை அணுகுவதன் மூலம், “போர்வெறியில் ஈடுபடும் அரசாங்கங்கள் மற்றும் உலகளாவிய பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவையனைத்துக்கும் சேவை செய்யும் நிதிய தன்னலக்குழுவை எதிர்த்து தோற்கடிக்கக்கூடிய சக்தியை உருவாக்க வேண்டும்” என்பதை நாங்கள் போராட்டத்தில் வலியுறுத்தினோம்.