மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இனப்படுகொலை எதிர்ப்பாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்தம் புதன்கிழமை 10வது நாளாக தொடர்ந்தது. UCLA மற்றும் UC Davis இன் கல்வித்துறை தொழிலாளர்கள் செவ்வாயன்று அழைப்பு விடுக்கப்பட்டதில் இருந்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) லோக்கல் 4811 உறுப்பினர்களின் வேலைநிறுத்தம் ஒரு முக்கிய அபிவிருத்தி ஆகும். ஏனென்றால் போருக்கு எதிரான மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கம் அடிப்படை சக்தியாக வெளிப்பட வேண்டியதன் அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது. இது, “இனப்படுகொலை” ஜோ பைடெனை ஆதரிக்கும் ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கம் (UAW) அதிகாரத்துவத்தின் முட்டுக்கட்டை போடும் முயற்சிக்கு எதிராக சாமானிய தொழிலாளர்கள் எடுத்த முன்முயற்சியின் விளைவாகும்.
ஆரம்பத்தில் UAW ஆனது வேலைநிறுத்தத்தை 10-பல்கலைக்கழக வளாகங்கள் கொண்ட UC அமைப்பில் இருந்து UC Santa Cruz என்ற ஒரேயொரு பல்கலைக்கழக வளாகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தியது. ஆனால் வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களை வேலையில் வைத்திருக்க முடியாது என்பது தெளிவாகிய பின்னர், சாமானிய தொழிலாளர்களின் கோபம், வேலைநிறுத்தத்தை இன்னும் இரண்டு பல்கலைக்கழக வளாகங்களுக்கு விரிவுபடுத்த ஒப்புதல் வழங்க ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தை (UAW) நிர்பந்தித்தது.
“Santa Cruz, UCLA மற்றும் Davis இருந்து இப்போது வெளியேறிவிட்டனர் என்பது மிகவும் நம்பிக்கைக்குரியது என்று நான் நினைக்கிறேன், ஆனால் எங்களுக்கு 48,000 பேரும் தேவை” என்று ஒரு UCLA மாணவர் கூறினார். “மற்றய பல்கலைக்கழக வளாகங்கள் விரைவில் கோரப்படும் என்று நான் நம்புகிறேன்.”
அனைத்து 10 பல்கலைக்கழக வளாகங்களுக்கும் வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்த சாமானிய தொழிலாளர் வேலைநிறுத்த குழுக்களை உருவாக்குமாறும், ஒரு விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையுடன் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் முயற்சிகளை எதிர்க்குமாறும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. இது தொழிலாள வர்க்கத்தின் மற்றய பிரிவுகளை, குறிப்பாக வாகனத் தயாரிப்பு ஆலைகள் மற்றும் ஆயுதத் தளவாட ஆலைகளில் இருக்கும் UAW உறுப்பினர்களை ஈர்க்கும் ஒரு பரந்த இயக்கத்திற்கான தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்.
இனப்படுகொலைக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட உரிமை மீதான தாக்குதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நிர்பந்திக்க, போர்-ஆதரவு கட்சிகள் மற்றும் பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இரண்டிற்கும் எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டும்.
இதற்கிடையில், கலிபோர்னியா முழுவதிலுமான பல்கலைக்கழக வளாகங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகின்றன. UC Santa Barbara இல் ஒரு மாணவர் குழு செவ்வாயன்று பல்கலைக்கழக வளாக உணவருந்தும் அறையை தங்கள் வசம் எடுத்துக் கொண்டது, ஏனென்றால் அவர்கள் “பள்ளியின் பணத்தை குண்டுகள் அல்லது போர் ஆராய்ச்சிக்கு கொடுப்பதை விட மாணவர்களுக்கு உணவளிக்க விரும்புகிறார்கள்” என்று பல்கலைக்கழக வளாக செய்தித்தாள் டெய்லி நெக்ஸஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழனன்று, ஒரு மாணவ போராட்டக்காரர், அவரது செயல்பாட்டு நடவடிக்கைக்காக பல்கலைக்கழக வளாகத்திற்கு ஒரு “ஆபத்து” என்ற போலியான சாக்குபோக்கின் பேரில் கைது செய்யப்பட்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். “இது ஒரு அபத்தமான கூற்று, குறிப்பாக கடந்த பல மாதங்களாக பாலஸ்தீனிய ஆதரவு மாணவர்கள் வேறு வழியின்றி எதிர்கொள்ளும் பல வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை எதிர்கொண்டுள்ள நிலையில்,” இது நடந்துள்ளது என்று ஒரு மாணவர் குழு அறிவித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், காஸா இனப்படுகொலைக்கு எதிரான உள்ளிருப்பு போராட்டத்தை பொலிஸ் தடுத்த பின்னர் 18 ஸ்டான்போர்ட் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஸா மீது வீசப்பட்ட குண்டுகளின் உதிரிப் பாகங்கள் தெற்கு கலிபோர்னியா தயாரிப்பு ஆலையுடன் தொடர்புடையவை
புதனன்று பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கட்டுரைகள், ஞாயிறன்று கூடார அகதி முகாமில் டசின் கணக்கான பொதுமக்களைக் கொல்ல இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்பதைக் கண்டறிந்தன. GBU-39 சிறிய விட்டம் கொண்ட குண்டுகள் (SDB- small diameter bombs) போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் அவைகளின் உதிரிப் பாகங்கள் ஒரு தொடர் இலக்க எண்ணின் வழியாக வுட்வார்ட் HRT (Woodward HRT) உடன் இணைக்கப்பட்டன என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
போஸ்ட்டின் கருத்துப்படி, அமெரிக்க வெளிவிவகாரத்துறையானது அத்தகைய குண்டுகள் 1,000க்கும் மேற்பட்டது இஸ்ரேலுக்கு கடந்த மாதம்தான் அனுப்புவதற்கு ஒப்புதல் கொடுத்தது. காஸாவில் நடத்தும் இனப்படுகொலையின் விளைவுகளில் இருந்து இஸ்ரேலிய ஆட்சியை பைடென் நிர்வாகம் வெறுமனே பாதுகாக்கவில்லை என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாறாக, அமெரிக்கா இந்தப் படுகொலையில் நேரடியாக பங்கெடுத்துள்ளது.
ஒரு ஆயுத நிபுணர் செவ்வாய்க்கிழமை இரவு CNN இடம் GBU-39 “மூலோபாய ரீதியாக முக்கியமான இலக்குகளைத் தாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் குறைந்த இணை சேதத்தை விளைவிக்கும் என்றும் கூறினார். ஆனால், “எந்தவொரு வெடிகுண்டும், இந்த அளவைக் கொண்டிருந்தால், எப்போதும் ஆபத்தை சந்திக்க நேரிடும்” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
UCLA வளாகத்திற்கு வடக்கே வெறும் 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள கலிபோர்னியாவின் சாண்டா கிளாரிட்டாவில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் வெடிகுண்டு உதிரிப்பாகங்கள் ஏறத்தாழ நிச்சயமாக தயாரிக்கப்பட்டன.
புதனன்று, UCLA இல் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களை இந்த ஆலைக்கு சென்று ஆலையில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவை வென்றெடுக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வலியுறுத்தியது.
சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வினவிய போது, UCLA மாணவர் பின்வருமாறு கூறினார், “நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் இறுதியில் நமக்குத் தேவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் எல்லாவற்றையும் மூட வேண்டும். பல்கலைக்கழக வளாகங்கள் மட்டுமல்ல, பணியிடங்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்புத் துறையும் ஆகும். சாண்டா கிளாரிட்டாவில் உள்ள வுட்வார்ட் வரை செல்வது ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இங்கு நடந்து கொண்டிருப்பது வெறுமனே போர் பற்றியது மட்டுமல்ல, மாறாக பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். யார் வேண்டுமானாலும் இந்த பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து இஸ்ரேல் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு மத்தியில் எழுந்து நின்று மேலும் பல பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்று நம்புவதாக கூறலாம், ஆனால் அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொல்வது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று நீங்கள் கூறும் தருணம், இஸ்ரேலிய அரசாங்கத்தை பொறுப்பாக்குவது பற்றி கூட எதுவும் கூறாமல், கொலை செய்வது தவறு என்று கூறினால், நீங்கள் ஒழுங்குமுறையை மீறியதற்காக வெளியேற்றப்படுவீர்கள்.”
பாதிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு மாணவர்களுக்கு ஆதரவளிக்க தொழிலாளர்கள் முன்வருவது முக்கியம் என்று வேதியியல் துறையில் ஒரு பட்டதாரி ஆசிரியர் இவ்வாறு கூறினார். “நான் இந்த காரணத்தை ஆதரிக்க இங்கு வந்துள்ளேன். அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழகம் பழிவாங்கியது சரியல்ல, அவர்களைத் தாக்கிய உண்மையான நபர்களை எதுவும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டார்.
“இது பல்கலைக்கழகத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. எங்களையும் எங்கள் குடும்பங்களையும் ஆதரிக்க போதுமான பணம் இல்லை. ஆனால் அதில் பெரும்பகுதி கலிபோர்னியா பல்கலைக்கழகம் இஸ்ரேலை ஆதரிப்பதுடன் தொடர்புடையது, அதனால் தான் அவர்கள் ஒரு இனப்படுகொலைக்கு நிதியளிப்பதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று தெரிவித்தார்.
“இவை அனைத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் பாத்திரம் குறித்து நான் மிகவும் அதிருப்தி அடைகிறேன். அமெரிக்காவின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் இந்த இனப்படுகொலை எப்போதோ தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.