ட்ரம்பின் இனச்சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி இஸ்ரேல் நகர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவிலுள்ள ஜபாலியாவில் இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழி தாக்குதலைத் தொடர்ந்து அழிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு அருகில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கான கூடார முகாம் அமைக்கப்பட்டுள்ளது, வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025 [AP Photo/Abdel Kareem Hana]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஸாவிலுள்ள ஒட்டுமொத்த மக்களையும் இடம்பெயர்த்து இனச் சுத்திகரிப்பு செய்ய அழைப்பு விடுத்த 48 மணி நேரத்திற்குள், இஸ்ரேலிய அரசாங்கம் ஜனாதிபதியின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வியாழனன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ட்ரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்யுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். அத்தோடு, “காஸாவில் இருந்து வெளியேற விரும்புவோருக்கு விரிவான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜனாதிபதி ட்ரம்பின் துணிச்சலான முயற்சியை நான் வரவேற்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “தரை வழிகள் ஊடாக வெளியேறுவதற்கான விருப்பங்களையும், கடல் மற்றும் வான் வழியாக புறப்படுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தைத் தயாரிக்க இஸ்ரேலிய இராணுவத்தை (IDF) நான் கேட்டுள்ளேன்” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கடந்த செவ்வாயன்று ட்ரம்ப், “காஸா பகுதியை மீண்டும் கட்டியெழுப்பி, அங்கு பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்ந்த அதே மக்கள், அங்கு குடியேறும் செயல்முறைக்கு உட்படுத்தப்படக்கூடாது” என்று அறிவித்தார். மேலும், “காஸாவில் வாழும் 1.8 மில்லியன் பாலஸ்தீனியர்கள், இறுதியில் குடியேற்றப்படும் பல்வேறு பகுதிகளை உருவாக்க இதர நாடுகளுக்கு” ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.

ட்ரம்பின் திட்டத்தால் அதிர்ச்சியும் சீற்றமும் அடைந்திருப்பதாக பாசாங்கு செய்துள்ள அமெரிக்க ஊடகங்கள், இந்த திட்டமானது கடைசி நிமிடத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகுவிடம் ட்ரம்ப் முன்வைத்த ஒரு அரைவேக்காட்டுத்தனமான யோசனையாக, தவறாக முன்வைக்கப்பட்டதாகவும், அவரது நிர்வாகத்தாலோ அல்லது இஸ்ரேலிய அதிகாரிகளாலோ இது பற்றி விவாதிக்கப்படவில்லை என்றும் பொய்யாக சித்தரித்துள்ளன.

பல இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகள் ஓராண்டிற்கும் மேலாக இதே திட்டத்திற்கு, அதே மொழியில் அழைப்பு விடுத்து வருவதால், இந்த அபத்தமான விளக்கக்காட்சி பொய்த்துப் போகிறது.

ஜனவரி 2024 இல், காஸா இனச்சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச், “நாங்கள் தன்னார்வத்துடன் புலம்பெயர்வதை ஊக்குவிக்க விரும்புகிறோம், மேலும் அவர்களை [பாலஸ்தீனர்களை] ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ள நாடுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று கூறினார். மேலும் “காஸா பகுதியில் குடியேறுவதை” நிராகரிக்க மறுக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

ஏறக்குறைய அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஸாவில் இடம்பெற்றுவரும் போர் “காஸா குடியிருப்பாளர்களின் புலம்பெயர்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை” வழங்குகிறது என்று கூறினார். இந்த நடவடிக்கை, “சரியான, நியாயமான, தார்மீக மற்றும் மனிதாபிமான தீர்வாகும்” என்று அழைத்தார்.

யதார்த்தத்தில், இது பைடென் மற்றும் இப்போது ட்ரம்ப் நிர்வாகங்களால் இயக்கப்பட்டு, நிதியளிக்கப்பட்டு மற்றும் ஆயுதபாணியாக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய அரசாங்கத்தின் உண்மையான கொள்கையை ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ட்ரம்பின் திட்டத்திற்கு பதிலளித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைப்பது இனச் சுத்திகரிப்புக்கு சமம்” என்று கூறினார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், ட்ரம்பின் அறிக்கைக்கு விடையிறுக்கையில், “இது அமெரிக்காவை போர் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதில் இருந்து நேரடியாக அட்டூழியங்களை செய்வதற்கு நகர்த்தும்” என்று கூறியது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் பின்வருமாறு குறிப்பிட்டது:

“சர்வதேச மனிதாபிமான சட்டமானது, ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்திலுள்ள மக்களை நிரந்தரமாக வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதைத் தடுக்கிறது. இத்தகைய கட்டாய இடப்பெயர்வு குற்றவியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டால், அது ஒரு போர்க்குற்றமாகும். அரசு கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில், அப்பாவி மக்கள் மீதான ஒரு பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதலின் பாகமாக இது நடத்தப்பட்டால், அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும்.”

இதற்கிடையில், ட்ரம்ப் வியாழனன்று தனது திட்டங்களை இரட்டிப்பாக்கினார். “சண்டையின் முடிவில் காஸா பகுதி இஸ்ரேலால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும்,” என்று கூறிய அவர், “உலகெங்கிலுமான மாபெரும் அபிவிருத்தி குழுக்களுடன் இணைந்து செயல்படும் அமெரிக்கா, பூமியில் இந்த வகையான மிகப்பெரிய மற்றும் மிகவும் கண்கவர் அபிவிருத்திகளில் ஒன்றாக ஆகக்கூடிய ஒரு பகுதியின் கட்டுமானத்தை மெதுவாகவும் கவனமாகவும் தொடங்கும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பை நசுக்கித்தள்ளும் என்பதால், எந்த துருப்புக்களும் தேவையில்லை என்று கூறி, ட்ரம்ப் முன்மொழிந்த திட்டத்திற்கு தனது ஆதரவை நெதன்யாகு மீண்டும் தெரிவித்தார். மேலும், “அது எங்கள் உறுதிப்பாடு, எங்கள் வேலை, நாங்கள் அதைச் செய்வதற்கு முற்றிலும் உறுதிபூண்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

ட்ரம்பின் திட்டத்தை “குறிப்பிடத்தக்கது” என்று அழைத்த நெதன்யாகு, “அதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் வெளியேறலாம், பின்னர் அவர்கள் திரும்பி வரலாம், அவர்கள் இடம்பெயர்ந்து திரும்பி வரலாம்...” “நான் கேள்விப்பட்ட முதல் நல்ல யோசனை இதுதான்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது (ICC), “அமெரிக்காவையும் நமது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலையும் குறிவைத்து சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக” குற்றம் சாட்டி, அதற்கு தடைவிதிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் வியாழனன்று கையெழுத்திட்டார்.

இஸ்ரேலிய போர்க்குற்றங்களை எளிதாக்குவதில் அமெரிக்க இராணுவத்தின் பாத்திரத்தை அங்கீகரிக்கும் வகையில், ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவு பின்வருமாறு அறிவிக்கிறது:

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது. இது, ஆயுதப்படைகளில் செயல்பட்டுவரும் சிப்பாய்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க பணியாளர்களை அம்பலப்படுத்தி, துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் சாத்தியமான கைதுக்கு ஆளாக்குவதன் மூலம், அவர்களை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகின்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் “இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் ஆகியோரை இலக்கில் வைத்து ஆதாரமற்ற கைது ஆணைகளை பிறப்பித்ததன் மூலமாக, அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக” வெள்ளை மாளிகை அறிவித்தது.

மே மாதம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் ஆகியோருக்கு கைது ஆணைகளுக்கு விண்ணப்பித்தார்.

காஸாவிலுள்ள பொதுமக்களை கூட்டாக தண்டிக்கும் ஒரு வழிமுறையாக, “பட்டினியை ஒரு போர் முறையாகவும், காஸா குடிமக்களுக்கு எதிரான பிற வன்முறைச் செயல்களாகவும் பயன்படுத்துவதற்கான பொதுவான திட்டத்தின் ஒரு பகுதியாக”, பாலஸ்தீனியர்களைக் “கொன்று அழிப்பதில்” இஸ்ரேலியத் தலைவர்கள் தலைமை தாங்குவதாக குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுனர் கரீம் கான் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை அறிவித்த அரசு வழக்கறிஞர், நெதன்யாகு மற்றும் கேலண்ட் மீது பின்வருமாறு குற்றம் சாட்டினார்:

பின்வரும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். அவையாவன: ஒரு போர் முறையாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றம்; வேண்டுமென்றே பெரும் துன்பத்தை ஏற்படுத்துவது, அல்லது உடலுக்கோ அல்லது ஆரோக்கியத்திற்கோ கடுமையான காயத்தை விளைவிப்பது ... அல்லது போர்க்குற்றமாக கொடூரமாக நடத்துவது; வேண்டுமென்றே படுகொலை செய்தல்... அல்லது போர்க்குற்றமாக கொலை செய்தல்; அழித்தொழிப்பு மற்றும்/அல்லது கொலை ... பட்டினியால் ஏற்படும் மரணங்களின் பின்னணி உட்பட அனைத்தும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகும்.

இன்றுவரை, 47,583 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கைகளின்படி, தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, இறப்பு எண்ணிக்கை 70,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.