மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 15 மேற்கு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள், முன்னாள் பிரெஞ்சு மேற்கு ஆபிரிக்க காலனி நாடான நைஜருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதனன்று இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில், அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தினர், ஜனாதிபதி மொஹமட் பாஸூமை ஒரு வாரத்திற்குள் மீண்டும் பதவியில் அமர்த்தாவிட்டால், அவர்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் 15 உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதார சமூகம் (ECOWAS - Economic Community of West African States) மற்றும் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார மற்றும் நாணய ஒன்றியத்தின் தலைவர்கள், நைஜீரிய தலைநகர் அபுஜாவில் நடந்த நெருக்கடி உச்சிமாநாட்டிற்குப் பிறகு தங்கள் அச்சுறுத்தலை வெளியிட்டனர். நைஜர் அதிபர் பாஸும் மீண்டும் பதவியில் அமர்த்தப்படாவிட்டால் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள உதவி மற்றும் இராணுவ ஆதரவுகள் குறைக்கப்படும் என்ற இந்த நாடுகளின் அச்சுறுத்தல்கள், நைஜரில் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் பிரான்சின் முந்தைய அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வந்துள்ளது.
நைஜரில் “ஜனநாயக ஆட்சியை மீட்டெடுக்க பலத்தை பயன்படுத்துதல் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்” எடுப்பதாக ECOWAS கூறியுள்ளது. அதில் நைஜர் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் நீண்டகால தலைவரும், ஒரு இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக தன்னை அறிவித்தவருமான ஜெனரல் அப்துரஹ்மானே டிசியானி தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியவர்கள் மீது நிதித் தடைகளை விதிப்பது ஆகியவையும் அடங்கும்.
“இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நைஜீரியர்களுக்கும், நைஜருக்கும் மற்றும் முழுப் பிராந்தியத்திற்கும் முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் ஆழமான ஆபத்தானது” என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். பிரான்ஸ் 2021 இல் மாலியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, பிரான்சின் மிகப்பெரிய பிராந்திய தளத்தைக் கொண்ட நாட்டிற்கு 2022 இல் சுமார் 120 மில்லியன் யூரோ ($130 மில்லியன்) மதிப்புள்ள அனைத்து மேம்பாட்டு உதவி மற்றும் பட்ஜெட் ஆதரவை கடந்த சனிக்கிழமையன்று அது நிறுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியம் (EU) 2021-24 காலகட்டத்தில் 503 மில்லியன் யூரோக்கள் ($554 மில்லியன்) மதிப்புள்ள அனைத்து பட்ஜெட் ஆதரவு மற்றும் பாதுகாப்பு உதவிகளையும் துண்டித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், பாஸூமின் உடனடி விடுதலைக்கு அழைப்பு விடுத்து வாஷிங்டனின் “அசைக்க முடியாத ஆதரவை” வழங்கினார். நைஜருடன் அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் எச்சரித்தார். 2012 ஆம் ஆண்டு முதல் நைஜருக்கான அமெரிக்க உதவி மொத்தம் $500 மில்லியன் ஆகும், இதில் அகாடெஸிலிருந்து 5 கிமீ தென்கிழக்கே $100 மில்லியன் விமானத் தளம் உள்ளது, இதன் மூலம் நைஜரை மேற்கு ஆபிரிக்காவில் அதிக அமெரிக்க உதவி பெறும் நாடாக மாற்றியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஆப்பிரிக்க ஒன்றியமானது, இராணுவம் முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும் 15 நாட்களுக்குள் ஜனாதிபதியை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டது,
பாஸூம் இராணுவ உயரதிகாரிகளை மாற்ற முயன்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தலைநகர் நியாமியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவரது குடும்பத்தினருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர் பிளிங்கன் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். 1960 இல் பிரான்சில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து நான்கு இராணுவ சதிகளைக் கண்ட நைஜரில், 2021 இல் அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதானது, நைஜரில் முதல் ஜனநாயக அதிகார மாற்றத்தைக் குறித்தது.
வெள்ளிக்கிழமை அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய டிசியானி, “நாட்டில் படிப்படியாக சரிந்துவரும் மற்றும் தவிர்க்க முடியாத அழிவைத் தடுக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதாகவும், தாயகத்தின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சிலின் தலைவர் பொறுப்பை” தான் எடுப்பதாகவும் அவர் அறிவித்தார். “எல்லாம் நன்றாக நடக்கிறது என்று மக்களை நம்ப வைக்க பாஸூம் முயற்சித்த அதே வேளை, … கசப்பான உண்மை என்பது, இறப்புகள், இடப்பெயர்வுகள், அவமானம் மற்றும் விரக்தியின் குவியலே” நாட்டில் இருந்தது என்று அவர் கூறினார். இன்று “பாதுகாப்பு அணுகுமுறையில் கடுமையான தியாகங்கள் இருந்தபோதிலும், நாட்டிற்கு பாதுகாப்பைக் கொண்டுவரவில்லை” என்று பிரான்சின் இராணுவ ஆதரவை நைஜர் நம்பியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.
நைஜரின் எல்லைகளை இராணுவம் மூடிவிட்டதாகவும், நாடு தழுவியளவில் ஊரடங்கு உத்தரவை அறிவித்து, நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களையும் இடைநிறுத்தியதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு இராணுவ செய்தித் தொடர்பாளர் கேர்னல் அமடூ அப்த்ரமானே கூறினார். “எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தலையீடும் நமது மக்களுக்கு பேரழிவு மற்றும் கட்டுப்படுத்த முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டிற்கும் எதிராக அமடூ எச்சரிக்கை விடுத்தார்.
“பிரெஞ்சு குடிமக்கள், இராணுவம், இராஜதந்திரிகள் மற்றும் பிரெஞ்சு நலன்களை யாராவது தாக்கினால், அவர்கள் பிரான்ஸ் உடனடி மற்றும் தீர்க்க முடியாத முறையில் பதிலளிப்பதைக் காண்பார்கள்… குடியரசுத் தலைவர் பிரான்சிற்கும் அதன் நலன்களுக்கும் எதிரான எந்த தாக்குதலையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்” என்று பிரெஞ்சு அதிபர் அலுவலகம் அறிவித்தது. பதிலுக்கு, இராணுவ சதிப்புரட்சி ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு தூதரகத்திற்கு தீ வைக்க முயன்றனர், பாஸூமை விடுவிக்க கிரெம்ளின் அழைப்பு விடுத்த போதிலும், ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டினுக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர்.
பெய்ஜிங்கிற்கு எதிராக மட்டுமின்றி வாஷிங்டனுக்கும் எதிராக பிரான்சின் நலன்களை மீண்டும் வலியுறுத்தும் முயற்சியில், பசிபிக் பகுதியில் உள்ள பிரான்சின் முன்னாள் காலனித்துவ நாடுகளான வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியாவிற்கு மக்ரோன் விஜயம் செய்தார்.
ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நைஜரின் முன்னாள் காலனித்துவ எஜமானரின் அச்சுறுத்தல்களுக்குப் பின்னால், பிரான்சின் நிதிய உயரடுக்கின் நலன்களுக்கான ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதில் எந்தக் கவலையும் இல்லை. இந்த ஆட்சிக்கவிழ்ப்பானது, இப் பிராந்தியத்தில் அவர்களின் சூறையாடும் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கணிசமான அச்சம் உள்ளது.
வளம் மிகுந்த, ஆனால் ஏழ்மையான ஆபிரிக்க சஹேல் பிராந்தியத்தில் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு நாடான நைஜர், இஸ்லாமிய கிளர்ச்சிகளை அடக்குவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சிகளுக்கு பெருகிய முறையில் முக்கியமான கூட்டாளி நாடாக மாறியுள்ளது. குறிப்பாக அருகிலுள்ள மாலி மற்றும் புர்கினா பாசோவில் ஆளும் இராணுவத் தலைவர்கள், தோல்வியுற்ற பர்கேன் மற்றும் சபேர் இராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு அவர்களின் துருப்புக்களை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்தனர். 2020 முதல் கினியாவில் ஒன்று மற்றும் புர்கினா பாசோ மற்றும் மாலியில் தலா இரண்டைத் தொடர்ந்து, ஆபிரிக்காவின் பெரிய சஹேல் பகுதியில், இந்த சமீபத்திய ஆட்சிக்கவிழ்ப்பு ஆறாவது முறையாக நடந்துள்ளது. நைஜரின் அண்டை நாடான மாலி, ரஷ்யாவின் வாக்னர் குழுவிற்கு ஆதரவாக 2021 இல் பிரெஞ்சுப் படையினர்களை நீக்குமாறு பிரான்சை கட்டாயப்படுத்தியது. இதன் மூலம், பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் சஹேலியன் அரசுகளுடன் மோசமடைந்து வரும் உறவுகளை வாக்னர் குழு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இந்த இராணுவ சதியை ஆதரித்த வாக்னர் குழுவின் தலைவர் எங்ஜினி பிரிகோஜின், கடந்த வியாழன் அன்று “நைஜரில் நடந்தது காலனித்துவவாதிகளுக்கு எதிரான அதன் மக்களின் போராட்டம். … இது திறம்பட சுதந்திரம் பெறுகிறது” என்று குறிப்பிட்டார்.
நைஜரில் கோபால்ட், வைரம், பிளாட்டினம் மற்றும் யுரேனியம் போன்ற உலகின் மிகப்பெரிய கனிமவள இருப்புக்கள் உள்ளன. கஜகஸ்தான் மற்றும் ரஷ்யாவை விட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு யுரேனியம் வழங்குவதில் இந்த நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. 1968 ஆம் ஆண்டு முதல், பிரெஞ்சு அரசுக்கு சொந்தமான 45 சதவீதமான ஆரானோ (முன்னாள் அரேவா) நிறுவனம், நாட்டின் வடக்கே உள்ள பாலைவன நகரமான அர்லிட்டைச் சுற்றி யுரேனியத்தை வெட்டி எடுத்து வருகிறது. பிரான்சின் அணுசக்தி உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும், பல பில்லியன் டாலர் உரிமம் கொண்டுள்ள நிறுவனத்தின் மொத்த உலகளாவிய யுரேனியம் உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கை வெறும் இரண்டு சுரங்கங்கள் மட்டுமே கொண்டுள்ளன, இது பிரான்சின் அணுசக்தி, நாட்டின் 70 சதவீதமான மின்சாரத்துக்கு மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட ஐரோப்பாவின் பெரும்பகுதிக்கு வழங்கப்படுகிறது.
ஒரானோ நிறுவனத்தின் சுரங்கச் சலுகை நாட்டிற்குக் கடன்கள் வடிவில் வழங்கப்பட்ட உதவியுடன் மலிவாக வாங்கப்பட்டது. இது, பிராந்தியத்தின் நீர் வளங்களை (சில உள்ளூர் மக்களுக்கு தண்ணீர் உள்ளது) அழித்து வருவதுடன், மில்லியன் கணக்கான டன் கதிரியக்க கழிவுகளை உற்பத்தி செய்து நைஜரை உலகின் செல்வ அட்டவணையில் அடிமட்டத்தில் வைத்துள்ளது. நைஜரின் 24 மில்லியன் மக்கள்தொகையில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக 17 சதவீதம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. நைஜர் அரசாங்கத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் பொதுவாக ஒரானோவின் வருடாந்த வருவாயில் ஒரு பகுதியே ஆகும்.
மாலியில் இருந்து பிரான்ஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, நைஜர் இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது மற்றும் அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு மற்றும் போகோ ஹராம் போன்ற “இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு” எதிரான போரின் கீழ் உளவுத்துறை மற்றும் விமான வளங்களை வழங்குவதை பிரான்சின் இராணுவ ஆதரவு உள்ளடக்கியிருந்தது.
ஏகாதிபத்தியவாதிகளின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்பது ஒரு மோசடியாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நேட்டோ ஆகியவை இதே குழுக்களைப் பயன்படுத்தி லிபியாவிலும் குறிப்பாக சிரியாவிலும் தங்கள் பினாமி போர்களை நடத்துகின்றன. 2011 இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ தலைமையிலான போரில் சண்டையிட்ட பிறகு, அல்-கொய்தா மற்றும் பிற இஸ்லாமிய குழுக்கள் சஹேல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் தஞ்சம் புகுந்தன. இந்தப் போர்களை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜேர்மனி போன்ற ஏகாதிபத்திய சக்திகள் ஆப்பிரிக்காவின் வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. அக்டோபர் 2021 இல், மாலியின் பிரதம மந்திரி சோகுவேல் கோகல்லா மைகா, நாட்டில் மோதலைத் தூண்டுவதற்கும் பிரெஞ்சு இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதம் வழங்குவதாக பிரெஞ்சு அரசாங்கம் மீது குற்றம் சாட்டினார்.
உலகின் பல ஏழ்மையான நாடுகளை உள்ளடக்கிய ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இரத்தக்களரியானது, இப்பிராந்தியத்தின் மீது பிரான்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலான நவ காலனித்துவ போரின் விளைவாக இருந்து வருகிறது. மாலி, நைஜர், புர்கினா பாசோ மற்றும் பிற நாடுகளில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஏகாதிபத்தியவாதிகள் பல இன மற்றும் பழங்குடியினரால் வகைப்படுத்தப்படும் பிராந்தியத்தின் மீது கட்டுப்பாட்டைத் தக்கவைத்து கொள்வதற்காக, இனக் கலவரங்கள் மற்றும் இரத்தக்களரி படுகொலைகளைத் தூண்டும் கொள்கைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நைஜரில் இடம்பெற்றுவரும் கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் தொடர்ச்சியான மோதல்களினால், மார்ச் மாத இறுதியில் கிட்டத்தட்ட 380,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அதே நேரத்தில் இந்த நாடு 700,000 க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. பெரும்பாலும் மோதல் மற்றும் வறுமையிலிருந்து தப்பிக்க, மாலி மற்றும் நைஜீரியா மற்றும் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து வடக்கே ஐரோப்பாவிற்குச் சென்று குடியேறுபவர்களுக்கு ஒரு போக்குவரத்து பாதையாக நைஜர் இருந்து வருகிறது.