மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு உறுதியளிக்கும் உச்சிமாநாட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் செவ்வாயன்று கியேவில் சந்தித்தனர்.
உக்ரேனிய எதிர்-தாக்குதல் இரத்தம் தோய்ந்த தோல்விக்குப் பிறகும், போருக்கு நிதியளிப்பது குறித்து ஆளும் வட்டங்களுக்குள் பெருகிவரும் பிளவுகளுக்கு இடையேயும், இந்த உச்சிமாநாட்டில் முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை அடையாளம் காட்டியுள்ளன.
“ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள அனைத்து 27 உறுப்பு நாடுகளின் முதல் சந்திப்பிற்காக நான் இன்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களை கியேவில் கூட்டுகிறேன்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் X/Twitter இல் எழுதினார். போரெல் மேலும் கூறிகையில், “உக்ரேனின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்” உள்ளது. போருக்கு மேலும் 5 பில்லியன் யூரோக்கள் செலவழிக்க உச்சிமாநாடு ஒப்புக்கொண்டதாக பொரெல் அறிவித்தார்.
பொரலின் வார்த்தைகளை எதிரொலித்து, உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ட்வீட் செய்தார்: “உக்ரேனில் நடக்கின்ற வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி... வரலாற்றில் முதல் முறையாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய எல்லைகளுக்கு வெளியே, ஆனால் அதன் எதிர்கால எல்லைக்குள் சந்திப்பு இடம்பெறுகிறது” என்று அதில் குறிப்பிட்டார்.
உக்ரேனிய இராணுவம் அழிக்கப்பட்டு, 300,000 முதல் 400,000 உக்ரேனிய படையினர்கள் இறந்துள்ளதோடு, பலர் ஊனமுற்றுள்ளனர். இந்த நிலையில், இத்தகைய அறிக்கைகள் அணுவாயுத வல்லரசான ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த ஒரு பொறுப்பற்ற மற்றும் வரம்பற்ற உறுதிமொழிக்கு சமமாகும். ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன், பிரிட்டிஷ் அதிகாரிகள், உக்ரேனிய படையினர்களுக்கு ஆலோசனை வழங்க, பிரிட்டிஷ் துருப்புக்கள் நேரடியாக உக்ரேனுக்கு அனுப்பப்படலாம் என்று சுட்டிக்காட்டினர். உக்ரேனில் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை நிலைகொள்ள வைப்பதை அறிவிப்பதற்கான திட்டங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி மேம்பட்ட கட்டத்தில் உள்ளன.
உலகப் பொருளாதாரத்திற்கான கீல் இன்ஸ்டிடியூட்டின் படி, ஜூலை 2023 இன் இறுதிக்குள், 5.6 பில்லியன் யூரோ ஆயுதங்கள் உட்பட, 84.8 பில்லியன் யூரோக்களை கியேவுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் போரின் முக்கிய நிதியாளராக உருவெடுத்துள்ளது. ஜேர்மனி (20.87 பில்லியன் யூரோக்கள்), பிரிட்டன் (13.77 பில்லியன் யூரோக்கள்), நோர்வே (7.45 பில்லியன் யூரோக்கள்), போலந்து (4.27 பில்லியன் யூரோக்கள்) மற்றும் நெதர்லாந்து (4.08 பில்லியன் யூரோக்கள்) தலைமையிலான பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் செலவினங்களுடன் ஒப்பிடும்போது இது கூடுதலாகும். மேலும் இந்த புள்ளிவிவரங்களுடன் சேர்த்து, ஜேர்மனியில் இருந்து 17 பில்லியன் யூரோக்கள், பிரிட்டனில் இருந்து 6.6 பில்லியன் யூரோக்கள், நோர்வேயில் இருந்து 3.7 பில்லியன் யூரோக்கள், போலந்தில் இருந்து 3 பில்லியன் யூரோக்கள் மற்றும் நெதர்லாந்தில் இருந்து 2.5 பில்லியன் யூரோக்கள் ஆயுதங்களும் அடங்கும்.
கியூவில், ஜேர்மனிய வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் உக்ரேனை மேலும் ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “இந்த குளிர்காலத்திற்கு உக்ரேனை தயார்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் இப்போது மேலும் தீவிரப்படுத்த வேண்டும். செப்டம்பரில் நான் இங்கு இருந்தபோது, குளிர்காலத்திற்கு உக்ரேனுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தேவை என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தினேன்… இதில் வான் பாதுகாப்பு, ஜெனரேட்டர்கள் மற்றும் அதிகரித்த எரிசக்தி விநியோகங்களும் அடங்கும்” என்று அவர் கூறினார்.
இந்த உச்சிமாநாடு, போருக்கான நிதியுதவி மற்றும் திட்டமிடல் தொடர்பாக ஐரோப்பிய ஆளும் வட்டங்களில் பிளவுகள் பெருகி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் நடந்தது. கடந்த வாரம் வார்சோ உக்ரேனுக்கு எந்த புதிய ஆயுதக் கப்பல்களையும் அனுப்பப் போவதில்லை என்று அறிவித்த பிறகு, ஹங்கேரி மற்றும் போலந்தின் வெளியுறவு அமைச்சர்கள் கியேவ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
கியேவ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள், போரில் பங்கேற்பதில் எந்தக் குறைவையும் அனுமதிக்க மாட்டோம் என்று சமிக்ஞை செய்வதில் குறியாக இருந்தன. குறிப்பாக, “இந்த மோதலுக்கான சோர்வு, கியேவ் ஆட்சிக்கு முற்றிலும் அபத்தமான ஆதரவு காரணமாக சோர்வு, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் வளரும்” என்று கூறிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவுக்கு இதன் மூலம் அவர்கள் பதிலளித்தனர்.
கியூவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி கேத்தரின் கொலோனா ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு பிரான்சின் ஆதரவை உறுதியளித்தார். “உக்ரேன் வெற்றிபெறும் வரை, உக்ரேனுக்கு நமது வலுவான மற்றும் நீடித்த ஆதரவு இருக்கும், இது ரஷ்யாவிற்கு ஒரு செய்தியாகும், அது நமது சோர்வை எண்ணக்கூடாது, நீண்ட காலத்திற்கு நாம் அங்கேயே தங்குவோம்” என்று கியேவ் உச்சிமாநாட்டில் கொலோனா குறிப்பிட்டார்.
“ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கான ஆதரவில் ஐக்கியமாக உள்ளது... எந்த உறுப்பு நாடும் அதன் உறுதிப்பாட்டை கைவிடுவதை நான் காணவில்லை” என்று போரெல் மேலும் கூறினார்.
இந்த போரில் வாஷிங்டனுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டென்மார்க் வெளியுறவு மந்திரி லார்ஸ் லொக்கே ராஸ்முசென், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ஆதரிக்க, “உக்ரேனுக்கு ஆயுதம் வழங்க வேண்டும், ஆனால் நமது சொந்த மண்ணில் நடப்பது ஒரு பெரிய பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு விஷயம் என்பதற்கு வலுவான அட்லாண்டிக் சமிக்ஞையை அனுப்ப வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் யூனியனை கலைத்த அடுத்த ஆண்டு, ஒரு தடையற்ற சந்தை, சிக்கனச் சார்பு பொருளாதாரக் கூட்டு, ஆகியவற்றின் அடிப்படையில் 1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டது. ரஷ்யாவுடனான நேட்டோவின் போர், உலக அரங்கில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்தும் ஒரு இராணுவக் கூட்டணியாக வெளிப்படுவதை துரிதப்படுத்துகிறது. இது நவ-பாசிசக் கட்சிகளின் மறுவாழ்வு மற்றும் ஐரோப்பாவில் பொலிஸ்-அரசு ஆட்சிகளின் எழுச்சி ஆகியவற்றுடன் கைகோர்த்துச் செல்கிறது. இவை வேலைநிறுத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் போர்ச் செலவினங்களுக்கு நிதியளிக்கும் ஊதிய முடக்கங்களுக்கு எதிரான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்குகின்றன.
இந்த போரின் அரசியல் மற்றும் வர்க்க தன்மை கடந்த வாரம் அம்பலமானது. கனேடிய பாராளுமன்றம், இரண்டாம் உலக போரில், சோவியத் யூனியனுக்கு எதிராக போராடியதற்காக, உக்ரேனிய தேசபக்தர் என 98 வயதான உக்ரேனிய முன்னாள் நாஜி வாஃபென் SS ன் உறுப்பினரான யாரோஸ்லாவ் ஹுங்காவை ஒருமனதாக பாராட்டியது. ஐரோப்பிய யூதர்களின் படுகொலை, சோவியத் யூனியனுக்கு எதிரான ஹிட்லரின் அழிப்புப் போர் மற்றும் ஐரோப்பாவில் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான அடக்குமுறை ஆகியவற்றில் கிட்லரின் Waffen SS முக்கிய பங்கு வகித்தது.
இது நேட்டோவிற்கும் தீவிர வலதுசாரி உக்ரேனியப் படைகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை அம்பலப்படுத்துகிறது. இது நேட்டோவின் தற்போதைய உக்ரேனிய கைப்பாவை ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த கியேவில் 2014 நேட்டோ ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழிவகுத்த ரைட் செக்டர் இராணுவக்குழு போன்றது. அசோவ் பட்டாலியன் போன்ற மற்ற அதிதீவிர வலதுசாரி குழுக்களுடன், அது இப்போது கியேவ் ஆட்சிக்குள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. நாசிசத்துடன் உக்ரேனிய ஒத்துழைப்பின் தலைவரான ஸ்டீபன் பண்டேரா, உக்ரேனிய உயர் அதிகாரிகளால் தொடர்ந்து பாராட்டப்படுகிறார்.
நாஜிக்களின் வாஃபென்-எஸ்எஸ் உறுப்பினருக்கு கனேடிய பாராளுமன்றத்தின் அரசியல் குற்றவியல் கைதட்டலானது, முழு வெற்றி பெறும் வரை ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இராணுவவாதக் கூட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தை மறுவரையறை செய்வதன் தன்மை மற்றும் அரசியல் தாக்கங்கள் பற்றியும் பேசுகிறது.
“ஐரோப்பிய ஒன்றியம் மாறிவிட்டது. அது திரும்பப் போவது இல்லை. நாங்கள் எங்களுக்குப் பின்னால் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டோம், அடிப்படையில் ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது என்று டென்மார்க் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மார்கிரேத் வெஸ்டேஜர் மே 2023 இல், பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அறிவித்தார். “உக்ரேன், போரை நடத்துவது முற்றிலும் ஐரோப்பாவின் முதன்மையான முன்னுரிமையாகும். யுத்தத்தில் வென்று உக்ரேன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் வரை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகும் வரை நாங்கள் உக்ரேனுக்கு ஆதரவாக இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.
வெஸ்டேஜரின் கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான மோதல்களை ரஷ்யப் போர் முறியடித்தது என்று போரலின் உயர்மட்ட ஆலோசகர்களை கார்டியன் மேற்கோளிட்டுள்ளது. “ஐரோப்பிய திட்டம் முதலில் பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையே ஒரு புதிய மோதலைத் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தது. இது பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மூலம் உள்-ஐரோப்பிய உறவுகளை அமைதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று பாரிஸில் உள்ள அறிவியல்-அரசியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜக்கி லாய்டி எழுதினார்.
ஆனால் இப்போது, ஜாக் டெலோர்ஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த நிக்கோல் க்னெசோட்டோவின் கூற்றுப்படி, ரஷ்யாவுடனான போர் ஐரோப்பாவில் உள்ள உள் மோதல்களை சமாளிக்க உதவுகிறது என்றும் “ஒரே இரவில், ரஷ்யா 1956 முதல் அனைத்து ஐரோப்பிய தத்துவங்களையும் கொன்றது” என்றும் அவர் கூறினார்.
ரஷ்யாவுடனான போரின் மூலம் ஐரோப்பிய முதலாளித்துவத்தில் வரலாற்று ரீதியாக வேரூன்றிய முரண்பாடுகளை, ஐரோப்பிய ஒன்றியம் முறியடிக்கும் என்ற கூற்றுக்கள், பொறுப்பற்ற, பாசிச மனநிலைகள் ஆளும் வர்க்கத்தை கைப்பற்றுவதற்கு சாட்சியமளிக்கின்றன. உண்மையில், கியேவில் ஹங்கேரிய மற்றும் போலந்து அதிகாரிகள் இல்லாத நிலையில், கண்டம் முழுவதும் உள்ள ஆளும் வட்டங்களில் பிளவுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், கிழக்கு ஐரோப்பாவை விட ஆப்பிரிக்காவில் ஏகாதிபத்திய வெற்றிக்கு வரலாற்று ரீதியாக அதிக கவனம் செலுத்திய பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை உக்ரேனுக்காக தங்கள் வடக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளை விட (முறையே €1.69 பில்லியன், €1.29 பில்லியன் மற்றும் €900 மில்லியன்) குறைவாகவே செலவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
போரை நிறுத்த தொழிலாள வர்க்கம் சுதந்திரமாக தலையிட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ள பேரழிவை எச்சரிக்க, முதலாளித்துவ வர்க்கத்திற்குள் உள்ள மோதல்களை தொழிலாளர்கள் நம்பியிருக்க முடியாது. ஐரோப்பாவையும் உலகையும் அணுவாயுதப் போரை நோக்கி அச்சுறுத்தும் ரஷ்யாவுடனான நேட்டோ போரில் ஐரோப்பிய முதலாளித்துவம் அனைத்தையும் முன்வைக்கிறது என்ற உண்மையின் அடிப்படையில், அவர்கள் அதன் கொள்கையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கத்தில், இது தீவிர வலதுசாரி அரசியல் மற்றும் ஆட்சி வடிவங்களை சட்டப்பூர்வமாக்குகிறது என்ற பரந்த விழிப்புணர்வு உள்ளது.
இந்த வசந்த காலத்தில், ரஷ்யாவுடனான போருக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் ஊதிய சிக்கனம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தங்களின் சக்திவாய்ந்த இயக்கம் வெடித்தது. ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் நடந்த வெகுஜன போராட்டங்களின் போது, பெரும்பான்மையான தொழிலாளர்கள் பொருளாதாரத்தை முடக்கும் மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை வீழ்த்துவதற்கான பாரிய வேலைநிறுத்தங்களுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர். இந்த வெடிக்கும் நிலையில உள்ள எதிர்ப்பு, ஏகாதிபத்தியப் போருக்கும் அதைத் தோற்றுவிக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கமாக நனவுடன் வளர்க்கப்பட வேண்டும்.